Tuesday, November 22, 2011

நினைத்ததை முடிக்கும் 3ம் எண் காரர்கள்


                 மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகளே. திருவள்ளுவரே அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று வகையாகப் பிரித்து திருக்குறளை இயற்றியுள்ளார். முத்தமிழ் என்பது இயல், இசை, நாடகமாகும். எனவே மூன்று என்ற எண்ணும் நம் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் குருவின் ஆதிக்கத்திற்குரியவர். மூன்றாம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் இ, எ, ஃ, கு ஆகியவை. 3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்கள் 3ம் எண்ணுக்குரியவர்கள் ஆவார்கள்.

திருமண அமைப்பு

               மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் குருவின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள் என்பதால் நல்லொழுக்கமும் உயர்ந்த பண்புகளையும் பெற்றிருப்பார்கள். நல்ல பேச்சாற்றல், எழுத்தாற்றல் யாவும் அமைந்திருக்கும். தாம் கற்றதை பிறருக்கும் கற்றுக் கொடுக்கக் கூடிய ஆற்றல் பெற்றவர்கள். நல்லவர்களிடத்தில் சுமூகமாக பழகும் குணமும் அத்துமீறி நடப்பவர்களை கண்டிக்கத்தக்க தைரியமும் உடையவர்கள். தன்னை சார்ந்தவர்களாக இருந்தால் தவறுகளை மன்னிக்கும் சுபாவம் இருக்கும். எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் அதை செய்து முடிக்கும் ஆற்றலும் கொண்டவர்கள். மிகவும் சுறுசுறுப்பும், எதையும் எளிதில் கிரகிக்கக் கூடிய தன்மையும் இவர்களுக்கு உண்டு. சுயநலம் பாராமல் உதவி செய்யக் கூடிய குணமிருப்பதால் இவர்களிடம் எதையும் எளிதில் சாதித்துக் கொள்ளலாம். முகஸ்துதிக்கு அடிமையாவார்கள். உண்மையை பேசி நீதி நியாயத்தை வாழ்வில் கடைபிடிப்பார்கள். பெரிய கருத்தரங்குகளிலும் மணிக்கணக்கில் பேசக் கூடிய திறமை இருக்கும். எவ்வளவு வேகமாக பேசினாலும் சொற்கள் அழுத்தம் திருத்தமாக வந்து விழும். தாம் செய்த பெரிய சாதனைகளைப் பற்றி பெருமையடித்துக் கொள்ளும் தற்பெருமை மிக்கவர்கள். பிறருடைய குற்றம் குறைகளையும் சில நேரங்களில் பழித்து பேசுவார்கள். இவர்களிடம் இருந்து வரக் கூடிய கண்டன வார்த்தைகள் வில்லில் இருந்து விடுபடும் அம்பு போல கடுமையானதாக இருக்கும். முன் கோபக்காரர்கள் ஆனாலும் கோபம் தனிந்த பின் உண்மையை உணர்ந்து கொள்வார்கள். எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் கள்ளம் கபடமின்றி உள்ளன்புடன் அனைவரிடமும் மனம் திறந்து பேசுவதால் இவர்களிடம் ரகசியங்கள் தங்காது. மற்றவர்களுக்கு உதவி செய்யக் கூடிய பண்பு இருந்தாலும் அடிமைத்தொழில் செய்வது அறவே பிடிக்காது. பல்வேறு பொதுக் கரியங்களில் ஈடுபடக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். ஆன்மீக தெய்வ பணிகளில் அதிக ஈடுபாடுடையவர்கள்.
உடலமைப்பும் ஆரோக்கியமும்
                           மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் நடுத்தரமான உயரத்தை உடையவர்கள். நீண்ட கழுத்தும், திரண்ட புஜங்களும் கூரிய மூக்கும் நல்ல நிறமும் இருக்கும். இவர்கள் குரலில் அதிகாரமும் கட்டளையிடுவது போல கண்டிப்பும் பிரதிபலிக்கும். தலையில் சீக்கிரமே வழுக்கை விழும். சாதாரணமாக சரும நோய் தோன்றும். நரம்பு தளர்ச்சி, மூட்டு வாதம் முதலியவை உண்டாகும். சரியான நேரத்திற்கு உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாவிட்டால் குடலில் புண்களும் ஏற்படும். இருதய பலவீனம் உண்டாகும். இவர்கள் அதிக சிந்தனைகள் செய்வதால் தலைவலி ஏற்படவும் வாய்ப்புண்டு. குளிர்ச்சியான பொருட்களை தவிர்ப்பது நல்லது.
குடும்ப வாழ்க்கை
              மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் குடும்ப வாழ்வில் எவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதனை சுலபமாக சமாளித்து விடுவார்கள். காதல் விவகாரங்களில் ஈடுபட்டாலும் ஒரு சிலருக்கு காதல் திருமணம் கைக்கூடும். பலருக்கு பெரியவர்கள் பார்த்து நிச்சயிக்கும் திருமணமே நடைபெறும். இவர்களுக்கு அமையும் வாழ்க்கை துணை நல்ல தெய்வ நம்பிக்கை மிக்கவராகவும் கணவன் மனைவி இருவரும் விட்டுக் கொடுத்துச் செல்லக் கூடிய மனப்பக்குவம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஒருவரின் வாழ்க்கைக்கு மற்றொருவர் ஏணியாக இருப்பார்கள் என்று கூறினால் மிகையாகாது. உற்றார் உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கே அமையும். சில நேரங்களில் அவர்களுடன் ஒத்துப்
போக முடியாத சூழ்நிலையும் உண்டாகும்.
பொருளாதாரம்
               மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் பெரும்பாலும் செல்வந்தர்களாகவே இருப்பார்கள். எதிர்பாராத வகையில் திடீர் தன வரவுகளையும் கிடைக்கப் பெறுவார்கள். சுக வாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் இருகுகாது. வாழ்க்கையில் பண முடை இருக்காது. பல்வேறு பொதுக் காரியங்களுக்கும் ஆன்மீக, தெய்வீக காரியங்களுக்கும் செலவு செய்யக் கூடிய வாய்ப்பு அமையும்.
தொழில்
                   மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் மிகுந்த புத்திசாலிகள் என்பதால் இவர்களுக்கு ஏற்ற தொழில் என பார்க்கும் போது பல பேருக்கு கல்வி சொல்லித் தரக்கூடிய ஆசிரியர் பணி, தலைமை ஆசிரியர் பொறுப்பு யாவும் அமையும். நீதிபதிகள், வக்கீல்கள் முதலான சட்ட தொடர்புடைய தொழில்களும் முன்னேற்றம் கொடுக்கும். நல்ல வியாபாரிகளாகவும், கோயிலில் பணி புரிபவர்களாகவும் இருப்பார்கள். 3ம் எண் குருவின் ஆதிக்கத்தில் இருப்பதால் ஜோதிடக் கலையிலும் ஆர்வம் இருக்கும்.
நண்பர்கள்  பகைவர்கள்
                 கள்ளம் கபடமின்றி வெள்ளை உள்ளத்துடன் பழகக் கூடிய இவர்கள் பிறருக்கு சுயநலமில்லாமல் உதவி செய்வார்கள். நன்றிக்கு உதாரணமாக இருப்பார்கள். தனக்கு பிடிக்காதவர்களைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள். 1, 2, 9ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களுக்கு நட்பாக இருப்பார்கள். 5, 6ம் எண்ணில் பிறந்தவர்களுடன் இவர்களால் ஒத்துப் போக முடியாது.
குருவுக்குரிய காலம்
                        நவம்பர் மாதம் 22ம் தேதி முதல் டிசம்பர் 21ம் தேதி வரையிலான ஒரு மாத காலமும், மற்றும் பிப்ரவரி 19ம் தேதி முதல் மார்ச் 20ம் தேதி வரையிலான காலமும் குருவை சேர்ந்தவை. பகல் இரவு இரண்டும் குருவுக்கு பலமான காலங்கள். வியாழக் கிழமை குருவுக்கு உகந்த நாள்.
குருவுக்குரிய திசை
                            குருவுக்குரிய திசை வடகிழக்கு மூலையைக் குறிப்பிடக் கூடிய ஈசானிய மூலையாகும். 3ம் எண்ணுக்குரியவர்கள் எந்த சுப காரியத்தையும் ஈசானிய மூலையில் தொடங்கினால் நற்பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட கல்
     குருவுக்குரிய ரத்தினம் புஷ்பராகம். புஷ்பராகக் கல் பதித்த மோதிரம், சங்கிலி போன்றவற்றை அணிந்து கொள்வதால் எல்லா வகையிலும் மேன்மைகளையும் வெற்றிகளையும் அடையலாம்.
பரிகாரங்கள்
       குரு பகவானுக்கு வியாழக் கிழமை நெய் தீபமேற்றி, முல்லை மலர்களால் அலங்கரித்து மஞ்சள் நிற வஸ்திரம் அணிவித்து அர்ச்சனை செய்வது உத்தமம். குருவுக்கு ப்ரீதியாக தட்சிணாமூர்த்தியையும் வழிபடலாம். ஸ்ரீராமனுடைய சிறப்பைக் கூறும் பாடல்களையும் பாராயணம் செய்யலாம்.
தேவாநாஞ்ச ரீஷீணாஞ்ச
 குரும் காஞ்சாந ஸந்நியம்
பக்தி பூதம் த்ரிலோகேஸம்
 தம் நமாமி ஒருஹஸ்பதிம்
இந்த ஸ்லோகத்தை தினமும் கூறி வருவது உத்தமம்.
அதிர்ஷ்டம் அளிப்பவை
   அதிர்ஷ்ட தேதி  3, 12, 21, 30. நிறம்  பொன்நிறம், மஞ்சள், திசை  வடக்கு, கிழமை  வியாழன், கல்  புஷ்பராகம், தெய்வம்  தட்சிணாமூர்த்தி.

No comments: