Wednesday, January 4, 2012

நவ கிரகங்களில் சூரியனும் பரிகாரமும்


நம்முடைய வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு செயலுக்கும் நம்மை ஆளுமை செய்யும் நவக்கிரகங்கள்தான் முக்கிய காரணமாகும். ஜோதிடக் கலையான காலக் கண்ணாடியில் நம் வாழ்க்கை முறையைப் பற்றி அறிந்து கொள்ளவும், செழுமையாக வாழ்வதற்கும் நவக்கிரகங்கள் உதவுகின்றன. நம்முடைய ஜெனன  ஜாதகத்தில் எந்த கிரகங்கள் எங்கெங்கு உள்ளன? அதன் காரகத்துவங்கள் என்னென்ன? அவற்றால் நற்பலன் என்னென்ன போன்றவற்றைத் தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்ளமுடியும்.

ஜோதிடக் கலையின் முக்கிய பங்கே பரிகாரம் கூறுவதுதான். ஒருவடைய கிரக அமைப்புகளை ஆராய்ந்து, நடக்கப் போகும் சுப பலன்களையும், நெருங்கிக் கொண்டிருக்கும் அசுப பலன்களையும் எடுத்துக் கூறி  அவற்றிற்கு உரிய பரிகாரங்களையும் எடுத்துரைப்பதுதான் ஜோதிடக் கலைக்கு உள்ள சிறப்பு.

ஜாதக ரீதியாக நற்பலன்கள் நடைபெற்றால் கவலைப்பட வேண்டியதில்லை. அதுவே பிரச்சினை மேல் பிரச்சினைகளையும் சோதனைகளையும் சந்திக்க நேர்ந்தால் நல்ல ஜோதிடராக பார்த்து நம்முடைய ஜாதகப் பலனை அறிந்து கொள்வது மிகவும் அவசியமானதாகும்.

பரிகாரம் என்ற சொல்லுக்கு கேடு நீங்கும் வழி, பிராயச்சித்தம் என பெயர்களுண்டு. கிரகதோஷ சாந்தி, கிரகதோஷ நிவர்த்தி என்றும் கூறுவதுண்டு.

தேவையற்ற மனபயத்தை உருவாக்கிக் கொள்ளாமல் தன்னம்பிக்கையுடன் செயல்படக்கூடிய எளிய பரிகார முறைகளைக் கையாள்வதன் மூலம் போலிகளைக் கண்டு ஏமாறவேண்டியதில்லை. பரிகாரம் கூறுபவர்களை வெறும் வழிகாட்டியாக எடுத்துக் கொண்டு அவரவர்க்குரிய பரிகாரங்களை அவரவர்களே செய்வது தான் நல்லது. பரிகாரத்தின் முக்கிய விஷயமே நம்பிக்கைதான். தன்னம்பிக்கையுடனும், பக்தியுடனும் செய்யும் பரிகாரங்களால் மட்டுமே பலன் உண்டாகும். பசித்தவன் சாப்பிட்டால்தான் வயிறு நிறையும். துன்பப்படுவபவன் பரிகாரம் செய்தால்தான் பலன் கிட்டும். இனி நவகிரகங்களைப் பற்றியும் அவற்றிற்குரிய எளிய பரிகாரங்களைப் பற்றியும் பார்ப்போம்.

சூரியன்

இந்த உலகிற்கே ஒளியினைத் தருபவர் சூரியன். அவரின்றி இங்கே ஒரணுவும் அசையாது. உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் சுபிட்சமாக வாழ்வதற்கு முக்கிய காரணமாக விளங்குபவர் சூரியன். சூரிய ஒளி இல்லாவிட்டால் இருள் மட்டுமே நிறைந்திருக்கும். இந்த பூமியில் ஒரு புல் பூண்டுகூட முளைக்காது. கதிரவன், ரவி, ஆதவன், உதயன், என பல பெயர்களுடன் அழைக்கப்படும் சூரியனின் ஒளியைக் கொண்டுதான் இரவெது, பகலெது என நம்மால் பிரித்துணர முடிகிறது.

எத்தனையோ கிரகங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானத்தை தன் பக்கம் நெருங்க விடாத அளவிற்கு நெருப்பு கோளமாகக் காட்சி தருபவர் சூரியன். சூரியனின் அருகில் யாராலும் செல்ல முடியாதே தவிர, அவரால் உண்டாகக்கூடிய நன்மைகளைப் பற்றி உணர முடியும்.

நவகிரகங்களில் அரசனாக விளங்குபவர் சூரியன். ஜோதிட ரீதியாக சூரியனைப் பற்றி ஆராயும் போது அவர் ஒரு ஆண் கிரகமாகக் கருதப்படுகிறார்.

சூரியனின் சொந்த வீடு சிம்மமாகும். உச்ச வீட மேஷம். நீச வீடு துலாம். விருச்சிகம், தனுசு, மீனம், கடகம் சம வீடுகள், ரிஷபம், மகரம், கும்பம் பகை வீடுகளாக கருதப்படுகிறது. சூரிய திசை 6 வருடங்கள் நடைபெறும்.

சூரிய பகவான் ஒரு ராசி கட்டத்தில் ஒரு மாதம் விகிதம் 12 ராசிகளில் ஒரு வருட காலம் சஞ்சாரம் செய்வார். சூரியனின் சஞ்சாரம் சித்திரை மாதம் மேஷத்தில் தொடங்கி பங்குனி மாதம் மீனத்தில் முடிவடையும்.

சூரியன் பரணி நட்சத்திரம் 3ம் பாதம் முதல் ரோகிணி நட்சத்திரம் 2ம் பாதம் முடிய சஞ்சரிக்கும் காலத்தை கத்தரி காலம் என்கிறோம். இக்காலங்களில் சூரியனின் உஷ்ணம் பூமியில் அதிகமாக இருக்கும். இக்காலங்களில் புது வீடு கட்டுதல், புது வீடு புகுதல்   போன்ற சுபகாரியங்கள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

சூரிய பகவான் மகர ராசியில் தை மாதம் தொடங்கி மிதுன ராசியில் ஆனி மாதம் வரை சஞ்சரிக்கும் காலம் உத்தராயண புண்ய காலம் எனப்படுகிறது. கடகராசியில் ஆடி மாதம் தொடங்கி தனுசு ராசியில் மார்கழி மாதம் வரை சூரியன் சஞ்சரிக்கும் காலம் தக்ஷிணாயன புண்ய காலம் எனப்படுகிறது. நட்சத்திரங்களில் கிருத்திகை, உத்திரம் உத்திராடம் ஆகியவை சூரியனின் நட்சத்திரங்களாகும்.

சூரியனும், சந்திரனும் இணைந்திருக்கும் நாளை அமாவாசை என்கிறோம், சூரியனும் சந்திரனும் ஒன்றுக்கொன்று நேர் எதிராக வரும் நாளை பௌர்ணமி என்கிறோம்.

சூரியனுக்கு சந்திரன், செவ்வாய், குரு  ஆகிய முவரும் நண்பர்கள். 

சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய நால்வரும் பகைவர்கள்.

சூரியனின் லிங்கம் ஆண். 

வடிவம் - சமன். 

பாஷை - சமஸ்கிருதம், 

நிறம் - சிவப்பு. 

ஜாதி - ஷத்திரியன். 

குணம் - குருரர். 

பிணி - பித்தம். 

திசை - கிழக்கு. 

ரத்தினம் - மாணிக்கம். 

தான்யம் - கோதுமை. 

புஷ்பம் - செந்தாமரை. 

வாகனம் - தேர். 

சுவை - காரம். 

உலோகம் - தாமிரம்.

தேவதை - சிவன். 

வஸ்திரம் - சிப்பு. 

ஷேத்திரம் - ஆடுதுறை. 

கிழமை - ஞாயிறு 

சூரியனின் காரகத்துவங்கள்

தந்தையார், ஆத்மா, பல், வலதுகண், வைத்தியம், ஒற்றை தலைவலி, தலை சம்மந்தமான நோய்கள், ஜுரம், பைத்திய சரீரம்,  கெட்ட ஸ்தீரிசகவாசம், சௌகர்யம், பிரதாபம், தைரியம், அரசாங்க உத்தியோகம், சிவ வழிபாடு யோக வழிமுறைகளில் நாட்டம், பஞ்சலோகம், மாணிக்க ரசவாதம் யானை, கோதுமை, பால் வெளியூர் பயணம், மிளகு, பகற்காலம், வெளிச்சம் ஆகிய அனைத்திற்கும் சூரியனே காரகனாவார்.

சூரியனால் உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள், காய்ச்சல், வயிற்றுக் கோளாறு, மூலம், இருதய நோய், தோல் வியாதி, நெருப்பால் கண்டம், எதிரிகள் விஷயத்தில் கண்டம், கண்நோய், மரம் மற்றும் திருடர்களால் கண்டம் உண்டாகும்.

சூரியன் ஒரு ஆண் கிரகம் என்பதால், ஒரு ஆணின் ஜாதகத்தில் வலுப்பெற்றால் ஆண்மை எனும் ஆற்றலில் சிறந்து விளங்குவார். பெண்கள் ஜாதகத்தில் வலுப் பெற்றால் சிறந்தவளாக விளங்குவார்.
சூரியபகவான் கோட்சார ரீதியாக ஜென்ம ராசிக்கு 3,6,11 ல் சஞ்சாரம் செய்யும் காலங்களில் எல்லா வகையிலும் ஏற்றம் உயர்வு ஏற்படும். அதுபோல ஜென்ம லக்னத்திற்கு 3,6,10,11 ல் சஞ்சாரம் செய்யும் காலங்களில் எல்லா வகையிலும் ஏற்றம் உயர்வு ஏற்படும். அதுபோல ஜென்ம லக்னத்திற்கு 3,6,10,11 ல் அமைந்து திசையோ, புக்தியோ நடைபெற்றால் பல்வேறு வகையில் முன்னேற்றம் மற்றும் அரசு, அரசு சார்ந்த துறைகளில் உயர்வு, அரசியலில் ஏற்றம் உண்டாகும். அதுவே 2,8,12 ல் அமைந்து திசையோ, புக்தியோ நடைபெற்றால் உஷ்ண சம்பந்தப்பட்ட உடல் நிலை பாதிப்பு தந்தைக்கு கெடுதி அரசு வழியில்  தொல்லைகள் உண்டாகும்.

நவகிரகங்களில் அரசனாக விளங்கும் சூரியனை காலையில் தினமும் வணங்கி வழிபட்டால் ஆன்மிக பலமும், ஆத்ம பலமும் பெருகும். நமது கண்களுக்கு சூரியன் அதிபதியாவார். தினமும் சூரியனை நமஸ்காரம்  செய்வதின் மூலம் கண்பார்வை சிறப்பாக அமையும். ஜெனன ஜாதக ரீதியாக சூரிய திசையோ, புக்தியோ ஒருவருக்கு நடைபெறுமேயானால் மாணிக்க கல் கொண்ட மோதிரத்தை அணிந்து கொள்வது நல்லது.

சூரியனால் உண்டாகக்கூடிய யோகங்கள்

சுபவேசியோகம், பாபவேசியோகம், சுபவாசி யோகம், உபயசரி யோகம்.

சுபவேசியோகம்

சூரியனுக்கு 2ம் வீட்டில் சுபகிரகம் இருப்பது. இதனால் பெயர், புகழ், பெருமை யாவும் உயரும்.

சுபவாசியோகம்

சூரியனுக்கு 12ம் வீட்டில் சுபகிரகம் இருப்பது. இதனால் செல்வாக்கு உயரும். எழுத்தாற்றல், பேச்சாற்றல் உயரும்.

உபயசரி யோகம்

சூரியனுக்கு இருபுறமும் சுபர் இருப்பது. இதனால் செல்வாக்கு, சுகவாழ்வு, சொகுசு வாழ்வு அமையும்.

பாபவேசியோகம்

சூரியனுக்கு 2ம் வீட்டில் அசுப கிரகங்கள் அமையப் பெற்றிருப்பது, அதிர்ஷ்டமற்ற வாழ்க்கை அமைந்து வாழ்க்கையே போராட்டகரமாக இருக்கும்.

சூரிய ஓரையில் செய்யக்கூடியவை பெரிய அதிகாரிகளை சந்திக்க, அரசு வழியில் லாபம் பெற, வியாபாரம் தொடங்க, பதவியேற்க, உயில் எழுத, மருந்து உட்கொள்ள, சூரிய ஓரை நல்லது.


சூரிய கிரகணம் அமாவாசையன்று ஏற்படும். சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

சூரியனும் அஸ்தங்க தோஷமும்

நவக்கிரகங்களில் தலைமைக் கிரகமாக விளங்கும் சூரியன் மிகவும் சக்தி வாய்ந்த உஷ்ணகிரகமாகும். ஒரு மாதத்திற்கு ஒரு ராசி என ராசி மண்டலத்தை ஒரு முறை சுற்றிவர ஒரு வருடம் எடுத்துக் கொள்ளும். சூரியன் தனக்கு அருகில் வரும் கிரகங்களின் பலத்தை குறைத்துவிடுகிறார். அதைத்தான் அக்கிரகத்தின் அஸ்தங்க காலம் என்கிறோம். சூரியனுக்கு அருகில் செல்லும் கிரகங்கள் தன்னடைய முழு பலத்தை இழக்கிறது.

சூரியனுக்கு முன்பின் 12 டிகிரிக்குள் சந்திரன் வரும் போது அஸ்தங்கம் அடைந்து அமாவாசை உண்டாகிறது.

சூரியனுக்கு 17 டிகிரிக்குள் செவ்வாய் வரும்போது அஸ்தங்கம் அடைகிறார். இக்காலத்தில் பிறப்பவர்களுக்கு சகோதரதோஷம், ரத்த சம்பந்தப்பட்ட உடல்நிலை பாதிப்புகள் உண்டாகிறது.

சூரியனுக்கு 14 டிகிரிக்குள் புதன் வரும்போது அஸ்தங்கம் அடைகிறார். இக்காலத்தில் பிறப்பவர்களுக்கு கல்வியில் தடை, தாய் மாமனுக்கு தோஷம் உண்டாகிறது.

சூரியனுக்கு 11 டிகிரிக்குள் குரு அமையப்பெற்றால் அஸ்தங்கம் உண்டாகிறது. இக்காலத்தில் பிறந்தவர்களுக்கு புத்திர தோஷம், பணப் பிரச்சினை, வாழ்வில் முன்னேற்றமற்ற நிலை உண்டாகும்.

சூரியனுக்கு 8 டிகிரிக்குள் சுக்கிரன் அமையப் பெற்றால் சுக்கிரன் அஸ்தங்கம் அடைவார். இக்காலத்தில் பிறந்தவர்களுக்கு பால்வினை நோய், இல்வாழ்வில் ஈடுபாடற்ற நிலை ஏற்படும். கோட்சாரத்தில் சுக்கிரன் அஸ்தங்கம் பெற்ற காலத்தில் திருமண சுபகாரியங்களை செய்யக்கூடாது.

சூரியனுக்கு 15 டிகிரிக்குள் சனி அமையப் பெற்றால் அஸ்தங்கம் உண்டாகிறது. இக்காலத்தில் பிறந்தவர்களுக்கு ஆரோக்கிய பாதிப்பு, தந்தைக்கு கண்டம் உண்டாகும்.

எல்லா கிரகங்களையும் செயல் இழக்க வைக்கும் சூரியன் ராகுவுக்கு அருகில் வரும்போது தானே பலமிழக்கிறார். இதனால் சூரிய கிரகணம் உண்டாகிறது.

அஸ்தங்கம் பெற்ற கிரகங்கள் தங்களின் காரகத்துவ ரீதியாக பாதிப்புகளை உண்டாக்கும் என்றாலும் ஜெனை ஜாதகத்தில் பரிவர்த்தனை பெற்றிருந்தால் தோஷம் நீங்கி நற்பலன்கள் உண்டாகும்.

நவகிரகங்களால் ஏற்படுகின்ற தீமைகளையும், பாதிப்புகளையும் நீக்குவதற்கு நவகிரகங்களே உதவுகின்றன. அந்த கிரகங்களுக்குரிய பரிகார ஸ்தலங்களுக்கு சென்று பரிகாரங்கள் செய்வதன் மூலம் கிரக தோஷங்கள் விலகுகின்றது.

சூரிய பகவானுக்கு உகந்ததாக தமிழகத்தில் மூன்று திருத்தலங்கள் உள்ளன. அவை

1. சூரியனார் கோவில் 2. திருகண்டியூர் வீரட்டம், 3. திருப்புறவார் பனங்காட்டூர்.

சூரியனார் கோவில்

இக்கோவில் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் மாயவரம் இருப்பு பாதையில் ஆடுதுறை இரயில் நிலையத்திலிருந்து வடக்கே சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இது கி.பி. 1070ம் ஆண்டு முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. சூரியனார் கோவில் மேற்கு நோக்கி இருக்கிறது. கருவறையில் சூரிய பகவானின் திருவுருவமும் அவருக்கு இரண்டு பக்கங்களிலும் உஷா, பரத்யஷா என்னும் இரு தேவியர் உள்ளனர். இக்கோவில் சூரிய பகவானை  கண் குளிர தரிசித்து நம் வினைகள் எல்லாவற்றையும் போக்கிக் கொள்ளலாம்.

திருக்கண்டியூர் வீரட்டம்

இது சூரிய பகவானுக்குரிய இரண்டாவது திருத்தலமாகும். தஞ்சையிலிருந்து திருவையாறு போகும் வழியில் ஆறாவது மைலில் உள்ளது. குடமுருட்டியாற்றுக்கும், காவிரிக்கும் நடுவில் இத்தலம் உள்ளது.

திருப்புறவர் பனங்கரட்டூர்

இது சூரியபகவானுக்குரிய மூன்றாவது ஸ்தலமாகும். விழுப்புரத்திலிருந்து வடக்கே ஐந்தரைகல் தொலைவில், முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து 2 கல் தொலைவில் இத்தலம் உள்ளது. இத்தலத்தில் சித்திரை மாதம் முதல் தேதியிலிருந்து 7ம் தேதி வரை நாள்தோறும் சூரியன் உதயமாகும் போது காலையில் சூரியனின் ஒளி முதலில் ஸ்வாமி மீதும் பிறகு அம்பாள் மீதும் விழும்.

இந்தியாவில் ஒரிஸ்ஸாவிலும் சூரியனுக்கு திருத்தலம் உள்ளது.

ஒரிஸ்ஸாவில் கோனார்க் என்னும் இடத்தில் ஒருபுறம் சந்திரபாக நதியும், மறுபுறம் வங்க கடலும் இருக்க இடையிலேமிக அழகாக இந்த ஆலயம் அமைந்துள்ளது. சூரிய கிரகணத்தின்போது அதன் முழு பலமும்இந்த இடத்தில் விழுவதாக பல ஆராய்ச்சிகள் நடைபெற்றுள்ளன.

சூரியனை வழிபடும் முறை

சூரிய தசா, புக்தி காலங்களில் நமக்கு நன்மை தரவேண்டிய சூரியனை வணங்கும் முறைகள்

ஞாயிற்றுக்கிழமைகளில் வெல்லம், கோதுமை போன்றவற்றை தானம் செய்தல்,

உபவாசம் இருத்தல், சூரியனின் அதிதேவதையான சிவனை வணங்குதல்,
பிரதோஷகால விரதங்கள் மேற்கொள்ளுதல், தினமும் சூரிய நமஸ்காரம் செய்தல்,

சந்தியாவதனம், உபயானம் செய்தல், காயத்திரி மந்திரம்,

ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்தல், ஞாயிறு அன்று ருத்ராபிஷேகம் செய்தல்,

1 முகம் அல்லது 12 முகங்கள் கொண்ட ருத்ராட்சம் அணிதல்,

மாணிக்க கல் பதித்த மோதிரம் அணிதல்,

ஓம் ஹ்ரம் ஹ்ரௌம்ச சூரியாய நமஹ 

என்று சூரியனின் மூல மந்திரத்தை தினமும் 150 முறை வீதம் 40 நாட்களுக்குள் 6000 தடவை சொல்லி வருதல்

செந்தாமரை பூவால் அர்ச்சனை செய்தல்,

கையில் சிவப்பு நிற கைகுட்டை வைத்திருந்தல் ஏலக்காய் மென்று வருதல்

எருக்கு சமித்தால் ஹோமம் செய்தல் போன்றவை ஆகும்.

செந்தாமரை மலர்களால் சூரியனுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.


ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண்  0091 72001 63001 

No comments: