Wednesday, January 4, 2012

நவ கிரகங்களில் குருவும் பரிகாரமும்


பொன்னவன் என போற்றப்படக்கூடிய குரு பகவான் நவகிரகங்களில் முதன்மையான சுபகிரகமாவார். மனிதனின் வாழ்வில் பல்வேறு உன்னதமான உணர்வுகளை உண்டாக்கக்கூடிய ஆற்றல் குருபகவானுக்கு உண்டு. ஒருவரின் ஜெனன ஜாதகத்தில் குரு பலமாய் அமைந்திருந்தால் மட்டுமே வாழ்க்கை சுபிட்சமாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்கும். தனக்காரகனாகவும், புத்தி காரகனாகவும் விளங்கும் குரு பகவான் மங்களகாரகனாகவும், புத்திர காரகனாகவும் இருக்கிறார். இறை வழிபாட்டிற்கும் ஞானத்திற்கும் குரு பகவானே காரகனாகிறார்.

அது மட்டுமின்றி ஒழுக்கம், மற்றவர்களுக்கு உதவி செய்யும் மன நிலை, சுகவாழ்வு, புத்திரர்கள், பேரன்கள், பெருந்தன்மையான குணம், தூய்மை, புனிதமான நீர், இறை வழிபாடு, அறிவு, செல்வம், செல்வாக்கு, இறைவழிபாடு, மதகுருமார்கள், பெரியோர்கள் கல்வித்துறை, குதிரை, யானை, அழகிய வீடு, பிரம்மா, ஞானம், யோகப்பியாசம், ஆசிரியர் தொழில், அஷ்டம் சித்திகளை அடைதல், புரோகிதம், மதிநுட்பம், பெரியோர்களின் ஆசி, அரசாங்க அனுகூலங்கள், பாராட்டுகள், விருதுகள் ஏற்படுதல், சாந்தமான கபாவம், கண்கள், வாக்கு பலிதம், ஆண்டியாதல், ரிஷி உபதேசம் பெற்றல், தேன் கடலை, சீரகம் ஆகியவற்றிற்கெல்லாம் குரு காரகனாவார்.

குருவால் உண்டாகும் நோய்கள்,

குரு பகவானால் ஞாபகமறதி, காதுகளில் பாதிப்பு, குடல் புண், பூச்சிகளால் பாதிப்பு, பிராமணர்கள் மற்றும் பெரியோர்களின் சாபத்தால் உடல் பாதிப்பு, கோவில் விவகாரங்களில் ஈடுபடுவதால் உடல்நிலை பாதிப்பு, வறுமையால் உடல்நிலை பாதிப்பு போன்றவை உண்டாகும்.

சூரியனுக்கு 11 டிகிரி முன் பின் குரு பகவான் சஞ்சரிக்கும் போது அஸ்தங்கம் பெற்று பலஹீனமடைகிறார். சூரியனுக்கு 9வது ராசியில் குரு வருகின்ற போது (245 டிகிரி) வக்ரம் பெற்று 5வது ராசிக்கு வருகின்றபோது வக்ர நிவர்த்தி (115 டிகிரி) அடைகிறார்.

குருவின் கோத்திரம் ஜாதி பிராமணர், சமித்து நவதானியம் கடலை, திசை ஈசான்ய மூலை வடக்கு, கல் புஷ்பராகம், அங்கம் வயிறு, சுவை இனிப்பு, நிறம் பொன்னிறம், மஞ்சள், குணம் சத்வ குணம், பாஷை சமஸ்கிருதம், வாகனம் யானை, தேவதை பிரம்மா.

குரு ஆண் கிரகமாவார். குருவுக்கு சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகியவை நட்பு கிரகங்களாகும். புதன், சுக்கிரன் பகை, சனி, ராகு, கேது சமம். குரு, தனுசு, மீனத்தில் ஆட்சியும், கடகத்தில் உச்சமும், மகரத்தில் நீசமும் பெறுகிறார்.

குரு ஒரு ராசியில் 1 வருட காலம் சஞ்சரிப்பார். குரு திசை மொத்தம் 16 வருடங்கள் நடைபெறும். ஜென்ம லக்னத்திற்கு கேந்திர திரிகோண ஸ்தானங்களிலோ 2,11 ஆகிய ஸ்தானங்களிலோ குரு கிரக சேர்க்கை உடன் அமையப் பெற்று திசை நடைபெற்றால் சகல விதங்களிலும் நன்மையான பலன்கள் உண்டாகும். குரு, துதியை, சப்தமி, ஏகாதசி, சதுர்தசி ஆகிய திதிகளில்
சூன்ய தோஷம் அடைகிறார்.

குருபகவான் தான் இருக்கும் இடத்திலிருந்து 5,7, 9 ஆகிய இடங்களை பார்வை செய்கிறார். குரு நின்ற வீட்டில் அதிக நற்பலன்களை கொடுப்பதில்லை என்றாலும், பார்வை செய்யும் இடங்கள் ஏற்றமான நிலையை பெறுகிறது. குரு பார்க்க கோடி புண்ணியம் என்பது நம் ஆன்றோர் வாக்கு. எத்தகைய தோஷம் இருந்தாலும் குரு பார்த்தால் விலகிவிடும்.

குரு கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கும் போது 12 வருடத்திற்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி பூ பூக்கிறது. சிம்மத்தில் சஞ்சரிக்கும் போது மாசி மகாமகம் கொண்டாடப்படுகிறது. கும்ப ராசியில் சஞ்சரிக்கும் போது
கும்பமேளா கொண்டாடப்படுகிறது.

குரு திசை ஒருவருக்கு நடைபெற்றால் ராஜாவின் திசை நடப்பதாக கூறுவார்கள். வலுபெற்று அமைந்த குரு திசை ஒருவருக்கு இளமையில் நடைபெற்றால் கல்வியில் சாதனை மேல் சாதனை செய்யும் அமைப்பு உண்டாகும். திருமண வயதில் நடைபெற்றால் சிறப்பான மண வாழ்க்கை, தொழில் ரீதியாக மேன்மை, பொருளாதார உயர்வுகள் போன்ற யாவும் உண்டாகும். இறுதி காலத்தில் நடைபெற்றால் புத்திரர்களால் உயர்வு, சமுதாயத்தில் பெயர், புகழ் உயரக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

பிரஸ்பதி என்றும், மேதாவி என்றும் அழைக்கப்படும் குரு பொன்னிறமானவர். எனவே தான் பொன்னவன் என போற்றப்படுகிறார். குரு கோட்சார ரீதியாக 2,5,7,9,11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் பொருளாதார மேன்மை, திருமண சுபகாரியங்கள் கைகூடக்கூடிய அமைப்பு, தொழிலில் மேன்மை, புத்திர பாக்கியம் போன்ற யாவும் சிறப்பாக அமையும்.

பலமிழந்து அமையப் பெற்ற கிரகங்களுக்கும் குரு பார்வை இருந்தால், அதிலுள்ள தோஷங்கள் விலகி பலமுள்ளதாக மாறிவிடும். குரு தனித்து இருப்பது நல்லதல்ல. குரு நின்ற இடம் பாழ் என்பார்கள். அதுவே குரு கிரகச் சேர்க்கையுடன் அமைந்தால் அந்த இடம் பலம் வாய்ந்ததாக மாறிகிறது.

குரு பகவானால் உண்டாகக்கூடிய யோகங்கள்,

கெஜகேசரி யோகம்,, ஹம்ச யோகம், குரு சந்திர யோகம், குரு மங்கள யோகம், கோடீஸ்வர யோகம், சண்டாள யோகம், சகடையோகம்.

கெஜகேசரி யோகம்,

சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு அமையப் பெறுவது. இதனால் பல யானைகளுக்கு மத்தியில் வாழும் ஒரு சிங்கம் போன்ற வலிமை உண்டாகும். புகழ், பெருமை, செல்வம், செல்வாக்கு போன்ற  யாவும் உயரும்.

ஹம்ச யோகம்,

குரு ஆட்சியோ, உச்சமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானத்தில் அமையப் பெறுவது. இதனால் நீண்ட ஆயுள், சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை உயரும் அமைப்பு, செல்வம், செல்வாக்கு போன்ற யாவும் சிறப்பாக அமையும்.

குரு மங்கள யோகம்,

குரு செவ்வாய்க்கு கேந்திரத்தில் அமையப் பெறுவது. இதனால் பூமி, மனை சேர்க்கை அதிகரிக்கம்.

கோடீஸ்வர யோகம்,

குரு, கேது சேர்க்கை பெற்றாலும், கேதுவை பார்வை செய்தாலும் உண்டாவது. இதனால் பெரிய மனிதர்களின்  நட்பு ஆன்மிக, தெய்வீக காரியத்தில் ஈடுபாடு, செல்வம், செல்வாக்க போன்றவை யாவும் சிறப்பாக அமையும்.

சண்டாள யோகம்,

குரு, ராகு சேர்க்கை பெற்றிருப்பது (அ) ராகுவை பார்வை செய்வது. இதனால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.

சகடையோகம்,

சந்திரனுக்கு 6,8,12 ல் குரு இருந்தால் உண்டாவது. இதனால் வாழ்வில் ஏற்றத் தாழ்வுள்ள பலன்களே உண்டாகும. வாழ்க்கை வண்டி சக்கரம் போல சாண் ஏறினால் முழம் சறுக்கும்.

குரு ஓரையில் செய்யக்கூடியவை.

குரு ஓரையில் எல்லா சுபகாரியங்களையும் செய்யலாம். செல்வந்தர்கள் மற்றும் குருமார்களை சந்திக்க, ஆடை, ஆபரணங்கள் வாங்க, கடன்பெற, இறைவழிபாடு செய்ய நல்லது.

குருபகவானை வியாழபகவான் என்றும் பிரகஸ்பதி என்றும் அழைப்பதுண்டு.
குரு பகவான் தமிழகத்தில் மூன்று ஸ்தலங்களுக்கு சென்று ஈஸ்வரனை பூஜித்து பேறு பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. அவை தென்குடி திட்டை, திருவலிதாயம், ஆலங்குடி ஆகும்.

தென்குடி திட்டை,

இந்த ஸ்தலம் மாயவரத்திற்கும் தஞ்சைக்கும் இடையில் உள்ளது. ரயில் நிலையத்தின் பெயரும் திட்டைதான். திருஞான சம்பந்தர் இங்கே ஷேத்ர மூர்த்தயான பசுபதி நாதரையும், உலக நாயகியையும் பாடி பேறு பெற்றிருக்கிறார்.

திருவலிதயம்,

இந்த ஸ்தலம் சென்னைக்கு அருகே பாடி என்ற இடத்தில் உள்ளது.குரு பகவான் இந்த ஸ்தலத்திற்கு வந்து ஸ்தல மூர்த்தியை வணங்கி, பூஜித்து பெருமை பெற்றதாக வரலாறுகள் கூறுகின்றன.

ஆலங்குடி,

இங்கு குரு எனப்படும் தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கிறார். கும்பகோணத்திலிருந்து 18 கி.மீ. தொலைவில் மன்னார்குடி போகும் வழியில் ஆலங்குடி அமைந்துள்ளது.

குருவை வழிபடும் முறைகள்,

வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து,மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடவும். தானம் போன்றவற்றை காலைப் பொழுதிலும் (வியாழக் கிழமைகளில்) மந்திர ஜெபங்களை மாலைப் பொழுதிலும் செய்யவும்.

5 முக ருத்ராட்சம் அணியவும். குரு எந்திரம் வைத்து வழிபடுவது நல்லது.

சிவனை வணங்கி ருத்ரம் ஜெபிக்கவும். ருத்ராபிஷேகம் செய்யவும்.
அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்யவும்.

மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, கைகுட்டை உபயோகிப்பது, மஞ்சள் நிற பூக்களை அணிவது நல்லது.

வெண் முல்லை மலர்களால் குருவுக்கு அர்ச்சனை செய்வது.

ஓம் ஜீரம் ஜரிம் ஜீரௌம் சகுரவே நமஹ என்ற குரு மந்திரத்தை 40 நாட்களில் 16000 தடவை துதிக்கவும். மஞ்சள் புஷ்பராக கல்லை மோதிரத்தில் பதித்து அணிந்து கொள்ளவும்.


ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001 


1 comment:

Unknown said...

amazing article sir keep writing...