Wednesday, January 4, 2012

நவ கிரகங்களில் கேதுவும் பரிகாரமும்

செம்பாம்பு, ஞானகாரகன், மோட்ச காரகன் என கேதுவை அழைக்கிறோம். கேதுவும் ராகுவைப் போலவே இடமிருந்து வலப்புறம் சஞ்சரிக்கிறார். கேதுவுக்கும் வக்ரமோ, அஸ்தங்கமோ கிடையாது. மோட்ச காரகனாகிய கேது 12 ம் வீட்டில் அமையப் பெற்றால் மறுபிறவி இல்லை எனக் கூறப்படுகிறது. கேது ஒரு ராசியை கடக்க ஒன்றரை வருடம் எடுத்துக் கொள்கிறார். சரியாக ஒரு பாதம் கடந்து செல்ல 2 மாதம் ஆகிறது.
கேதுவிற்கு சொந்த வீடு கிடையாது. எந்த வீட்டில் இருக்கிறாரோ அந்த கிரகத்தின் பலனை ஏற்படுத்துவார். கேதுவின் நட்சத்திரங்கள் அஸ்வினி, மகம், மூலம், திசா ஆண்டுகள் 7.

சூனியம், கஷ்டம், ஏமாற்று வேலைகள், தற்கொலை எண்ணம், தெய்வீகம் ஞானம், மோட்சம், பிராமணர் ஜீரம், மாயவித்தைகள், முக்தி நிலை, தொழிலாளர் உறவு, எதிரிக்கு தொல்லை, சுபிட்ச வாழ்வு, கொலை செய்தல், மந்திரம் செய்தல், கடுமையான பேச்சு, டாக்டர், மருந்து கடை தொழில், ஞானிகள், புனிதப் பயணம்  அனைத்து செல்வங்கள் சேரும் நிலை போன்றவற்றிற்கு கேது காரகம் வகிக்கிறார்.

அதுபோல குடலில் பூச்சிகள், காய்ச்சல், செவிடு, குறைந்த ரத்த அழுத்த நோய்கள், ஊமை, குஷ்டம்,  இல்லற வாழ்வில் ஈடுபாடு குறைவு, பூசாரி மற்றும் பிராமணர்களால் தொல்லை -ஏற்படும். கேது தான் இருக்கும் இடத்திலிருந்து 7ம் வீட்டை பார்வை செய்கிறார். 3,10 போன்ற வீடுகளுக்கு கேது பார்வை உண்டு என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. கேதுவின் அதி தேவன் பிரம்மன், தேவதை இந்திரன், பாலினம் அலி, திசை வடகிழக்கு, குணம் தாமசம், தானியம் கொள்ளு, மலர்கள் செவ்வல்லி, ரத்தினம், வைடூரியம், நிறம் சிவப்பு, சமித்து தர்வை புல், வாகனம் சிங்கம், ஆடை பால வண்ணம்.

கேந்திரத்தில் கேது அமைவது நற்பலனே.  கேது சனி, செவ்வாயைவிட முதல் பாவ கிரகமாக கருதப்படுகிறது. கேது 1,4,7,10 போன்ற இடங்களில் இருப்பது நற்பலனே. 2,7,8,12 ல் இருப்பது நற்பலன் என்று கூறமுடியாது. 11ம் வீட்டில் அமையப் பெற்றால் விதவைப் பெண் மூலம் பெரும் யோகம் உண்டாகும். கேது 9,10,11 ம் வீடுகளில் இருந்தால் டாக்டருக்கு படிக்கும் யோகம் உண்டாகும். புத்திர ஸ்தானமான 5 ல் கேது இருந்தால் புத்திர தோஷம் உண்டாகிறது.

கேதுவால் உண்டாகும் யோகங்கள், கால சர்ப யோகம், கோடீஸ்வர யோகம்.

காலசர்ப யோகம்,

ஜெனன ஜாதகத்தில் ராகு கேதுவுக்கு இடையில் எல்லா கிரகங்களும் அடைபட்டிருப்பது கால சர்ப யோகமாகும். இந்த யோகம் பெற்றவருக்கு வாழ்க்கையில் தாமதமாகத்தான் முன்னேற்றம் உண்டாகிறது.

கோடீஸ்வர யோகம்,

கேதுவும் குருவும் சேர்க்கை பெற்றிருந்தாலும், கேதுவுக்கு குரு பார்வை இருந்தாலும் கோடீஸ்வர யோகம் உண்டாகும். இதனால் எதிர்பாராத அதிர்ஷ்டம், பெரிய மனிதர்களின் தொடர்பு, ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு போன்ற நற்பலன்கள் உண்டாகின்றன.
கேதுவுக்குரிய ஸ்தலம்

கீழப்பெரும் பள்ளம்,

வாணகிரி என அழைக்கப்படும் இத்திருத்தலத்தில் கேது பகவான் கூப்பிய கரங்களுடன் சிவன் நாகநாத சுவாமியை வணங்கும் விதமாக அமைந்துள்ளார். கேதுவால் பாதிக்கப்பட்டோர் இத்திருத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்வது உத்தமம். இத்தலம் திருவெண்காட்டிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது.

கேதுவை வழிபடும் முறைகள்,

தினமும் விநாயகரை வழிபடுவது,

பிற கேது மந்திரங்களையும் கூறுவது,

 ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ என்ற பிஜ மந்திரத்தை 40 நாட்களில் 7000 தடவை கூறிவருவது. செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது.

9 முக ருத்ராட்சம் அணியவும். சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்  கூறுவது.
வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது,

கருப்பு எள், வண்ண மயமான போர்வை, வெள்ளி புள்ளிகள் உடைய பழுப்பு நிற பசுநாய் போன்றவற்றை  ஏழை மனிதனுக்கு தானம் தருவது.
வைடூரிய கல்லை மோதிரத்தில் பதித்து அணிவது.நவகிரகங்களுக்கு அவற்றிற்குரிய ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது சிறப்பு தரும் என்ற வழிபாட்டு முறையும் வழக்கத்தில் உள்ளது.

சூரியன்  சூரியனார் கோவில்

சந்திரன்  திருப்பதி வெங்கடாசலபதி ஆலயம்

செவ்வாய்  பழனி முருகன் ஆலயம் (திருஆவினன்குடி)

புதன்  மதுரை மீனாட்சி சொக்கநாதனர் ஆலயம்


குரு   திருச்செந்தூர் முருகப் பெருமாள்

சுக்கிரன் ஸ்ரீரெங்கநாதன் ஆலயம்

சனி   திருநள்ளாறு

ராகு கேது  கால ஹஸ்தி சிவன் கோவில்


ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001 

2 comments:

Raja said...

அருமையான பதிவு ஐயா. ஜோதிடக்கலை வாழவைப்பதில் தங்கள் பணி அளப்பரியது. பணி தொடர எனது வாழ்த்துக்கள். அஷ்டவர்க்கம் மற்றும் ஜோதிடத்தின் இதர பகுதிகள் தொடர்பாகவும் எழுதுவீர்கள் என்று நம்புகிறோம் நன்றி

Unknown said...

Super 🙏