Wednesday, February 1, 2012

சொந்தத்தில் திருமணம்

ஒருவருக்கு அமையக்கூடிய வாழ்க்கைத் துணை யானது சொந்தத்தில் அமையுமா, அந்நியத்தில் அமையுமா என்பது திருமண வயதை அடைந்தவர்களின் மிகுந்த எதிர்பார்ப்பாகும். அக்காலங்களில் சொந்தங்கள் விட்டு போய்விடக்கூடாது என்பதற்காகவும், சொத்துக்கள் கைமாறி வெளியில்  சென்றால் பிறர் அனுபவிப்பார்கள், அதைவிட நம் சொந்தங்கள் அனுபவிக்கட்டுமே என்பதற்காகவும் ஒன்றுக்குள் ஒன்றாகவே சொந்தத்தில் திருமணத்தை செய்து முடிப்பார்கள். ஆனால் மருத்துவ ரீதியாக சொந்தங்களில் திருமணம் செய்தால் பிறக்கும் குழந்தைகள் ஊனமாக பிறக்கும் என கண்டுபிடிக்கப்பட்டு விட்டதால் சொந்தத்தில் திருமணம் செய்வதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. என்றாலும் தூரத்து சொந்தங்களில் திருமணம் செய்து வைக்கிறார்கள். சரி ஜோதிட ரீதியாக ஒருவருக்கு அமையக்கூடிய வாழ்க்கை துணையானது சொந்தத்தில் அமையுமா, அந்நியத்தில் அமையுமா என்பதைப் பற்றி பார்ப்போம்.

ஜென்ம லக்னத்திற்கு களத்திர ஸ்தானமான 7ம் வீடும்,  களத்திரகாரகன் சுக்கிரனும் சுபகிரக சேர்க்கை, பார்வை மற்றும் சுபநட்சத்திரங்களில் அமையப் பெற்று இருந்தால் மனைவியானவள் நல்ல ஒரு கௌரவமான இடத்திலிருந்து அமைந்து மகிழ்ச்சியான வாழ்க்கை உண்டாகும்.

ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீடும், சுக்கிரனும் சொந்த பந்தங்களைக் குறிக்க கிரகங்களின் சேர்க்கை பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் உறவில் திருமணம் நடைபெறக்கூடிய உன்னதமான அமைப்பு உண்டாகும். நவகிரகங்களில் முதன்மை கிரகமாக விளங்கக்கூடிய சூரியன் தந்தை காரகனாவார். ஜென்ம லக்னத்திற்கு 9ம் இடம் தந்தை ஸ்தானமாகும். 9 க்கு 9 இடமாக, 5 ம் வீடு தந்தை வழி மூதாதையர் பற்றியும் பூர்வ புண்ணியத்தை பற்றியும் குறிப்பிடும் ஸ்தானமாகும். ஒருவரின் ஜாதகத்தில் 5,9 ல் சுபகிரகங்கள் அமையப் பெற்று 7ம் அதிபதியும், சுக்கிரனும் சூரியன் சேர்க்கை அல்லது சூரியனின் நட்சத்திரங்களான கிருத்திகை, உத்திரம், உத்திராடம் போன்றவற்றில் அமையப் பெற்றோ 5,9 க்கு அதிபதிகளுடன் 7ம் அதிபதியும். சுக்கிரனும் அமையப் பெற்றோ இருந்தால் திருமணமானது தந்தை வழி உறவில் அமையும்.

நவக்கிரகங்களில் தாய்காரகன் சந்திரனவார். தாய்மாமனை குறிக்கக்கூடிய கிரகம் புதன் பகவான் ஆவார். 4ம் வீட்டில் வளர்பிறை சந்திரனும், புதன் பகவானும் சுபர் பார்வை பெற்றாலும் 7ம் அதிபதி சுபராக இருந்து வளர்பிறை சந்திரன் புதன் சேர்க்கைப் பெற்றாலும், சுக்கிரனும் சந்திரன் புதன் சேர்க்கை பெற்றாலும்,  நட்சத்திரங்களான ரோகினி, அஸ்தம், திருவோணம், ஆயில்யம், கேட்டை, ரேவதி போன்றவற்றில் அமையப்பெற்றாலும் தாய் வழி உறவில் அல்லது மாமன் மகளை மணம் முடிக்கக்கூடிய அமைப்பு, பெண் என்றால் மாமன் மகனை மணம் முடிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

ஜென்ம  லக்னத்திற்கு 3ம் இடமானது இளைய உடன் பிறப்பையும், 11 ம் இடமானது மூத்த உடன் பிறப்புகளையும் பற்றி குறிப்பிடக்கூடிய ஸ்தானமாகும். நவக்கிரகங்களில் செவ்வாய் சகோதர காரகனாவார். ஒருவரது ஜாதகத்தில் 7ம் அதிபதியும், சுக்கிரனும் 3,11 க்கு அதிபதிகளுடன் சேர்க்கைப் பெற்று, சுபர்சாரம் மற்றம் சுபர்சேர்க்கை பெற்று, செவ்வாயின் சம்மந்தம் ஏற்பட்டிருந்தால் உடன் பிறந்தவர்களின் உறவினர்களின் வழியில் மண வாழ்க்கையானது அமையும்.

ஆக ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீடும் சுக்கிரனும் பந்தங்களை குறிக்கக்கூடிய கிரகங்களான சூரியன், சந்திரன் செவ்வாய், புதன் குரு தொடர்புடன் அமைந்தால் நெருங்கிய உறவில் திருமணம் நடைபெறும். என்றாலும் 7ம் அதிபதியோ, சுக்கிரனோ சனி, ராகு, கேது சேர்க்கை அல்லது சாரம் பெற்றிருக்கும் பட்சத்தில் நெருங்கிய உறவில் அமையாமல், தூரத்து உறவில் அந்நியத்தில் திருமணம் கைகூடும். சுபகிரகங்களின் ஆதிக்கம் 7ம் வீட்டிற்கும், 7ம் அதிபதிக்கும் இருக்குமேயானால் ஜாதி மத வேறுபாடுமின்றி பிறந்த குலத்திலேயே திருமணம் செய்யும் வாய்ப்பு உண்டாகும்.

ஒருவரது ஜாதகத்தில் 7ம் வீட்டில் சனி அமையப் பெற்றாலோ, 7ம் அதிபதி சனி சேர்க்கை பெற்றாலோ உறவுகளில் இல்லாமல் அந்நியத்தில் திருமணம் நடக்கும். சனிபகவானனவர் சுபகிரக சம்மந்தத்துடனிருந்தால் அந்நியத்தில் ஓரளவுக்கு நல்ல இடத்தில் வாழ்க்கை அமையும். 7ல் அமையும் சனி ராகு அல்லது கேது சேர்க்கை பெற்றாலும்,5ல் சனி ராகு அல்லது கேதுயுடன் இனைந்தாலும் சனி,ராகு இனைந்து 7ம்    அதிபதியின் சேர்க்கை அல்லது சுக்கிரனின் சேர்க்கை பெற்றிருந்தாலும்  கலப்பு திருமணம், மதம் மாறி திருமணம், செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001
 Astrologer Murugubalamurugan Astro Ph.D research scholar -0091 72001 63001

No comments: