Friday, February 10, 2012

கல்வி யோகம்


ஒரு குழந்தையானது பூமியில் பிறந்தவுடன், அக்குழந்தையின் தாய், தந்தையருக்கு குழந்தையை வளர்த்தெடுக்கும் கடமையானது தொடங்கிவிடுகிறது. நம் குழந்தை என்னவாக ஆகவேண்டும் என கனவு காண ஆரம்பிக்கிறார்கள். அந்த குழந்தை உயர்ந்த நிலையை அடைய முதல் அடிப்படைத் தேவையாக கல்வி அமைகிறது.

பழங்காலங்களில் நெல் மணியை தரையில் கொட்டி அ, ஆ எழுத சொல்லிக் கொடுத்தவர்கள், அடுத்து கரும்பலகைகளில் எழுதி படிக்கக் கற்று கொடுத்தார்கள். வலது கையை தலைக்கு மேல் கொண்ட வந்து இடது காதை தொட்டால்தான் பள்ளியில் சேர்த்துக் கொள்ளும் நிலைகள் போய் பால் மணம் மாறாத பச்சிளங் குழந்தைகளை இரண்டரை வயது முதலே பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து, இவன் டாக்டராக வேண்டும், வக்கீலாக வேண்டும், எஞ்சினியராக வேண்டும் என குழந்தைகளின் எதிர்காலம் பற்றியே பெற்றோர்கள் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். 10ம்  வகுப்பு வரை சமமாக செல்லும் காலங்கள், 11ம் வகுப்பு வரும் முதலே எதிர்கால வாழ்க்கையை அமைத்துக் கொள்ள கல்வியை தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. அப்படி கஷ்டப்பட்டு தன் மகனை என்ன படிக்க வைக்கலாம், எதில் கொண்டு சென்றால் இவன் முன்னேற்றமடைவான் என ஆராயும் பெற்றோர்களுக்கு இதே சில டிப்ஸ்.

நவகிரகங்களில் கல்வி காரகன் புதன் பகவானாவார். ஒரு குழந்தையானது தனது அடிப்படை ஆரம்ப கல்வியில் காலடி எடுத்து வைக்க அக்குழந்தையின் ஜெனன ஜாதகத்தில் 2ம் வீடானது பலமாக இருத்தல் அவசியம். 2ம் வீடானது பலமாக இருந்தால் குழந்தை எந்த தடைகளும் இன்றி அடம்பிடிக்காமல் அழாமல் பள்ளிக்கு செல்லும். அதுவே 2ம் வீட்டிற்கு பாவ கிரக சம்மந்தம் ஏற்பட்டிருந்தால் குழந்தை அடிப்படை கல்வியிலேயே பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

அதுபோல ஜென்ம லக்னத்திற்கு 4ம் வீட்டைக் கொண்டு அந்தக் குழந்தையின் மேல்நிலைக் கல்வியைப் பற்றி அறியலாம். 4ம் வீடானது பலமாக இருந்து விட்டால் அக்குழந்தையின் மேற்கல்வியில் தடைகள் இல்லாமல் இருக்கும். அதுவே 4ம் வீட்டிற்கு பாவகிரக சம்மந்தம் ஏற்பட்டிருந்தால் கல்வியை  பாதியில் நிறுத்த வேண்டிய சூழ்நிலை, கல்வியில் ஈடுபாடற்ற நிலை போன்றவற்றால் கல்வி நிலை பாதிப்படையும். 5ம் வீடானது உயர்கல்வி, பட்டயக் கல்வி பற்றி குறிப்பிடக்கூடிய ஸ்தானம் என்பதால் 5ம் வீடானது பலமாக இருந்தால் ஏதாவது ஒரு துறையில் சாதனைகள், ஆராய்ச்சிகள் செய்யக்கூடிய யோகம் அமையும்.

ஒரு குழந்தை பிறந்து வளர்ந்து, அதன் கல்வியும் தரமானதாக, சிறப்பாக அமைய, அக்குழந்தையின் ஜெனன ஜாதகத்தில் 2,4,5 ஆகிய வீடுகள் பலம் பெற்றிருப்பது மிகவும் அவசியமாகும். அதுபோல  கல்வி காரகன் புதனும் பலமாக இருத்தல் மிகமிக அவசியம்.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001

Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001

No comments: