Monday, February 13, 2012

அதிர்ஷ்டத்தை அள்ளி தரும் கேந்திர திரிகோண ஸ்தானங்கள்

அதிர்ஷ்டத்தை அள்ளி தரும் கேந்திர திரிகோண ஸ்தானங்கள்
மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்க்கையில் முன்னேற்றமடைவதற்கும், சுக வாழ்க்கையை வாழ்வதற்கும அல்லும் பகலும் அயராது பாடுபடுகிறார்கள். தற்போதைய மக்கள் தொகை பிரச்சினைகளால் எல்லாப் பொருட்களின் விலை உயர்ந்து இருப்பதால், அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்வதற்குக்கூட அரும்பாடு பட வேண்டி இருக்கிறது. சேமிப்பு என்பது இயலாத காரியமாகவே உள்ளது.  இந்த நிலையில்  செல்வச் செழிப்போடு வாழக்கூடிய யோகம் என்பது எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. ஒருவர் செல்வச் செழிப்போடு வாழ்வதற்கும் ஒரு அதிர்ஷ்டம் வேண்டும். பிறக்கும்போதே  வசதியுள்ளவராய் பிறந்து விட்டால் பூர்வீக வழி புண்ணியங்களால்  சொகுசான வாழ்க்கை அமைகிறது. அதுவே சுயமாக சம்பாதித்து வாழ்வதற்கும் சேமிப்புகளை வைத்திருப்பதற்கும் அவரவரின் ஜனன ஜாதக கிரக நிலைகள் பலமாக இருந்தால் மட்டுமே முடிகிறது.
ஜனன ஜாதகத்தில் உள்ள  ஸ்தானங்களில் சில ஸ்தானங்கள் யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் ஏற்படுத்தக்கூடிய ஸ்தானமாக விளங்குகிறது. ஒருவரது ராசிக்கட்டத்தில் 1,4,7,10 ம் வீடுகள் கேந்திர ஸ்தானங்களாகவும் 1,5,9ம் வீடுகள் திரிகோண ஸ்தானங்களாகவும் விளங்குகிறது. கேந்திர ஸ்தானங்களான  1,4,7,10 ல் 1 ஐ விட 4ம், 4 வை விட 7ம் 7ஐ விட 10ம் பலம் வாய்ந்ததாக உள்ளது. அதுபோல திரிகோண ஸ்தானங்களான 1,5,9 ல் 1ஐ விட 5ம், 5 ஐ விட  9ம் பலம் வாய்ந்த ஸ்தானங்களாக உள்ளது.
மேற்கூறிய ஸ்தானங்களில் கேந்திர ஸ்தானங்களில் பாவ கிரகங்கள் பலம் பெறுவது சிறப்பு. சுப கிரகங்கள் கேந்திர ஸ்தானங்களில் அமையப் பெறும்போது அந்த வீடானது, அந்த கிரகத்தின் சொந்த வீடாக இல்லாமல் இருப்பது சிறப்பு. ஏனென்றால் அங்கே கேந்திராதிபதி தோஷம் உண்டாகி நற்பலன்களை அடைவதற்கு இடையூறு உண்டாகிறது. ஸ்தானங்களிலேயே திரிகோண ஸ்தானங்கள் பலம் மிக்கதாகும். திரிகோண ஸ்தானங்களில் கிரகங்கள் அமையப் பெறுவதே சிறப்பான அமைப்பாகும்.
ஒருவரது வாழ்வில் யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் அடைவதற்கு கேந்திராதிபதியும், திரிகோணாதிபதியும் இணைவது சிறப்பு. கேந்திர திரிகோண ஸ்தானாதிபதிகள் இணைந்து கேந்திர ஸ்தானத்திலோ, திரிகோண ஸ்தானத்திலோ அமைவது மிகவும் சிறப்பு.
கேந்திர ஸ்தானங்களான 1,4,7,10 க்கு அதிபதிகளும், திரிகோண ஸ்தானங்களான 1,5,9 க்கு அதிபதிகளும் ஒருவருக்கொருவர் இடம் மாறி பரிவர்த்தனை பெற்று கொள்வதும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்வதும் சிறப்பான அமைப்பாகும். மேற்கூறியவாறு கேந்திர திரிகோணாதிபதிகளின் சேர்க்கை உண்டாகி. அக்கிரகங்களின் திசை அல்லது புக்தி நடைபெற்றால் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை அடைந்த செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் போன்றவற்றுடன் சிறப்பாக வாழக்கூடிய யோகம் உண்டாகும்.

மேற்கூறிய கிரகச் சேர்க்கைகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தது 9,10 க்கு அதிபதிகளின் சேர்க்கையாகும். ஒருவர் ஜாதகத்தில் 9,10 க்கு அதிபதிகள் அத்துடன் 4 அல்லது 5 க்கு அதிபதி இணைவது மிகவும் சிறப்பாகும். அதுபோல 4,5 க்கு அதிபதிகள் இணைந்து பலம் பெறுகின்றபோது சகலவிதமான அதிர்ஷ்டங்களையும்அடையும் யோகம் உண்டாகும்.
கேந்திர திரிகோணதிபதிகள் இணைகின்ற போது அந்த கிரகங்களாக  நட்பு கிரகங்களாக அமைந்து விட்டால் அந்த கிரக சேர்க்கையால் உண்டாகக்கூடிய யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் வர்ணிக்கவே முடியாது.

1 comment:

NM said...

வணக்கம்,கேந்திர கோண அதிபதிகள் அனைத்தும் இணைந்து இருந்தால் என்ன பலன் கிட்டும்