Thursday, March 29, 2012

விளையாட்டுத்துறையில் சாதிப்பவர் யார்?

மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவருமே ஏதோ ஒருவிதத்தில் எதையாவது சாதிக்க வேண்டும் என்றே எண்ணுகிறோம். அதற்கேற்றவாறு இன்று பலவிதமான கலைகளும், துறைகளும் பெருகிக்கொண்டே வருகிறது. நம்மை ஊக்குவிக்கவும், உற்சாகப்படுத்தவும் பெற்றோர்களும், பெரியோர்களும் ஏன் அரசாங்கம் கூட பலவகையில் உதவிகரமாக அமைகின்றது. சிலருக்குப் படிப்பில், சிலருக்கு கலை, இசை துறைகளில் ஈடுபாடு கொடுக்கிறது. சிலருக்கு விளையாட்டுத்துறைகளில் ஈடுபாடு கொடுக்கிறது. 

நம்நாட்டில் பலவிதமான விளையாட்டுக்கள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விளையாட்டுக்களில் ஈடுபாடு உண்டாகும். அதன் மூலம் பரிசுகளும், பாராட்டுகளும் சமுதாயத்தில் ஓர் உயர்வான அந்தஸ்தும் கிடைக்கிறது. பொதுவாக எல்லோரின் விருப்பமும் எல்லா வகையிலும் பூர்த்தியாகி விடுவதில்லை. அதற்கு நம்முடைய ஜனன ஜாதகத்தில் கிரக நிலைகள் பலமாக அமைய வேண்டும். குறிப்பாக 5ம் பாவம் பலம் பெற்று, 5ம் வீட்டு அதிபதியும் சுபக்கிரகசேர்க்கைப் பார்வை பெற்றிருந்தால், விளையாட்டுத்துறைகளில் ஈடுபாடும் முன்னேற்றமும் கொடுக்கும். ஒருவருக்கு 5ம் வீட்டில் வலுவான கிரகங்கள் அமைகின்றபோது, விளையாட்டுத் துறைகளில் மேன்மையான பலன்களை உண்டாக்குகிறது.

ஜென்ம லக்னத்தைக் கொண்டு விளையாட்டு, கேளிக்கை, பொழுதுபோக்குகளைப் பற்றி விரிவாக அறியலாம். ஒருவருக்குத் தைரியம், துணிவு இருந்தால் மட்டுமே விளையாட்டுத் துறையில் சாதிக்க முடியும். நவக்கிரகங்களில் தைரியம், துணிவு போன்றவற்றிற்கு காரகனாக விளங்கக்கூடிய கிரகம் செவ்வாய் பகவானாவார். செவ்வாய் ஒருவர் ஜாதகத்தில் ஆட்சி உச்சஸ்தானங்கள் அமையப் பெற்றோ வலிமையாக இருந்தால்தான், எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். 

ஒருவருக்கு ஆத்ம சக்தி உடல் வலிமை, நல்ல ஆரோக்கியம், சிறப்பான கண்பார்வை போன்றவைகள் அமைய சூரியன் பலம் பெற வேண்டும். அதுபோல எதையும் சாதிப்பதற்கு மனவலிமை வேண்டும். அதற்கு மனோகரகன் சந்திரன் பலம் பெற வேண்டும். விளையாட்டுத் துறையில் ஈடுபட்டு வெற்றிபெற நல்ல புத்திகூர்மை வேண்டும். அதற்குப் புத்திகாரகன் புதன் பலம் பெற வேண்டும். ஆக விளையாட்டுத் துறையில் சாதிக்க செவ்வாய், சூரியன், சந்திரன், புதன் போன்ற கிரகங்கள் பலமாக அமைவது சிறப்பான பலனைத் தரும்.

ஜென்ம லக்னத்திற்கு 5ம் பாவத்தைக் கொண்டு விளையாட்டைப் பற்றி அறிய முடியும் என்பதால், 5ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருப்பது, கேந்திரதிலோ, திரிகோணத்திலோ நட்பு வீட்டிலோ அமைவது சிறப்பு. 5ம் அதிபதி நீசம் பெற்றோ பலஹீனமாக இருப்பதோ நல்லதல்ல.
5ம் பாவத்தைக் கொண்டும், 5ல் அமையக்கூடிய கிரகங்களை வைத்தும் எந்த விளையாட்டில் ஈடுபாடு உண்டாகும் என்பதைப் பற்றி தெளிவாக  அறியலாம். விளையாட்டில் பலவிதம் உண்டு. கிரங்களின் தன்மைக்கேற்ப விளையாட்டுத்துறையில் ஈடுபாடு உண்டாகும். 

குறிப்பாக ஓட்டப்பந்தயம் போன்றவற்றில் ஈடுபாடு ஏற்பட கால்களில் செயல்பாடு கண்டிப்பாக தேவை. 12ம் வீடு கால்களைப் பற்றிக் குறிக்கும் ஸ்தானமாகும்.  சனி பகவான் எலும்பு மண்டலத்திற்கு அதிபதியாவார். சனி, செவ்வாய் பலம் பெற்று 5ம் பாவமும் பலம் பெறுவதுடன், 12ம் பாவமும் பலம் பெற்றிருந்தால் ஓட்டப்பந்தயம் போன்றவற்றில் ஈடுபாடு உண்டாகும். அதுமட்டுமின்றி 3ம் பாவமும் பலம் பெற்றிருந்தால் விடா முயற்சியுடன் எதிலும் செயல்படக்கூடிய ஆற்றலைத் தரும். 3, 12 பாவமும் சிறப்பாக அமையப் பெற்றால் கைப்பந்து, கல்பந்து, மட்டைப் பந்து போன்றவற்றில் சாதிக்க முடியும்.

புத்திகாரகன் புதன் பலம் பெற்று 5ம் பாவமும் பலம் பெற்றிருந்தால் செஸ், கேரம் போன்றவற்றில் ஈடுபாடு உண்டாகும். புதனுடன், சனி, ராகு போன்ற பாவகிரக சேர்க்கைப் பெற்றால் சூதாட்டத்தில் ஈடுபடக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.

நவகிரகங்களில் நீர்க் கிரகங்கள் சந்திரன், சுக்கிரன் ஆகும். குறிப்பாக 5ம் வீட்டில் சந்திரன், சுக்கிரன் வலிமையாக அமையப் பெற்றிருந்தால், நீச்சல் துறையில் சாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். 

இது போல விளையாட்டுக்களில் பல துறைகள் நீண்டது. அவற்றைப் பற்றி குறிப்பிடுவதென்றால் இப்புத்தகமே போதாது. எனவே சிலவற்றைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.


ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001


Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001


No comments: