Sunday, April 8, 2012

தொழிலில் வெற்றி அடைய எளிய ஆலோசனைகள


சொந்தமாக தொழில் செய்து சம்பாதிக்கக்கூடிய யோகம் என்பது எல்லோருக்குமே அமைந்து விடுமா? தொழில் செய்வதற்கென்றே சில விதிமுறைகள் உள்ளன. ஒருவர் தொழிலில் சம்பாதிக்க 10ம் வீடும் 10ம் அதிபதியும் பலமாக அமைந்திருந்தால் சொந்தத் தொழில் செய்யலாம். அப்படி 10ம் அதிபதி 6,8,12 ல் மறைந்திருந்தாலும், ஜென்ம லக்னத்திற்கு பாதக ஸ்தானத்தில் இருந்தாலும், பாதகாதிபதியின் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் பாதகாதிபதியின் நட்சத்திரத்தில் அமையப் பெற்றிருந்தாலும் சொந்த தொழில் செய்யக்கூடாது. அப்படி தொழில் செய்தே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்படுமேயானால், முதலில் அவர்களின் ஜனன ஜாதகத்தை தெளிவாக ஆராய்ந்து வேறு எந்த கிரகம் பலம் பெற்றிருக்கிறதோ, அந்தக் கிரகத்தின் காரகத்துவத்துக்கேற்ற நபரை உதவியாக வைத்துக் கொண்டு தொழில் செய்தால் ஓரளவுக்கு முன்னேற்றங்களை அடைய முடியும். 

உதாரணமாக, ஒரு ஆண் ஜாதகத்தில் 7ம் வீடும், சுக்கிரனும் பலமாக இருந்தால் மனைவியுடன் சேர்ந்து மனைவி பெயரில் தொழில் செய்வதும் 3,11 ம் வீடுகள் பலம் பெற்று செவ்வாயும் பலமாக இருந்தால் உடன்பிறப்புகளோடும் சேர்ந்து தொழில் செய்வது நல்லது.

ஒருவரின் ஜனன ஜாதகத்தில் தொழில் ஸ்தானம் பலமாக இருந்து தொழில் செய்தாலும் சில கிரகங்கள் சாதகமின்றி அமைந்துவிட்டால், தொழில் ரீதியாக பல இன்னல்களை சந்திக்க நேரிடும். உதாரணமாக ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் நீசம் பெற்றிருந்தாலோ, சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் சூரியனின் வீடான சிம்மத்தில் அமையப் பெற்றிருந்தாலோ, அரசு வழியில் சிக்கல்கள், தொழில் ரீதியாக சட்ட சிக்கல்கள் போன்றவற்றை  எதிர்கொள்ள நேரிடும்.  பலமிழந்த கிரகங்களின் தசாபுக்தி நடைபெறும் போது தேவையற்ற சிக்கல்களையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால், அக்காலங்களில் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. பேச்சைக் குறைத்து கொள்வது பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது உத்தமம்.

குரு பகவான் நீசம் பெற்றோ, பாதக ஸ்தானத்தில் அமையப் பெற்றோ, பகை பெற்றோ, அஸ்தங்கம் பெற்றோ ஒருவரின் ஜாதகத்தில் அமையப் பெறுமேயானால், பண விஷயங்களைக் கையாளும் போது, தனித்து செயல்படாமல் நம்பிக்கைக்குரியவர்களை முன் வைத்து செயல்படுவதும் மற்றவர்களுக்கு பணம், கொடுக்கல்&வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனமுடன் நடப்பதும் நல்லது. 
தொழில் செய்பவர்களுக்கு வேலையாட்கள் என்பது இன்றியமையாத ஒன்றாகும். தொழிலுக்கு காரகனாகவும், வேலையாட்களுக்கு காரகனாகவும் விளங்கும் சனி பகவான் பகை நீசம் பெற்று அமைந்திருந்தால், அவருக்கு வேலையாட்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படாது.  அவர்கள் மூலம் வீணான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். நல்ல  வேலையாட்கள் அமையாமல் தொழிலில் முன்னேற்றத் தடைகள் உண்டாகும். இப்படி அமையப் பெற்றவர்கள் வேலையாட்களிடம் மிகவும் எச்சரிக்கையுடனிருப்பது நல்லது. 
பொதுவாக ஒருவருக்கு கிரக நிலைகள் பலமாக அமையப்பெற்று சாதகமான தசாபுக்திகள் நடைபெறுவது மட்டுமின்றி கோட்சார ரீதியாகவும் சாதகமான கிரக நிலைகள் இருந்தால் தொழிலில் நல்ல முன்னேற்றமும் லாபமும் அடைய முடியும். அப்படி கிரக நிலைகள் சாதகமின்றி சஞ்சரிக்கும் காலங்களில் ஜாதகர் எதிலும் கவனமுடன் சிந்தித்துச் செயல்படுவது மிகவும் நல்லது. குறிப்பாக அஷ்டமச் சனி, ஏழரைச் சனி காலங்களில் மிகவும் எச்சரிக்கை தேவை. பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை அபிவிருத்தி செய்வதையும் தவிர்ப்பது நல்லது.
தொழில் செய்யும் இடங்களில் அவரவரின் இஷ்ட தெய்வங்களின் புகைப்படங்களை மாட்டி வைப்பது, தினந்தோறும் ஊதுபத்தி ஏற்றி, பூமாலை போட்டு, பூஜை செய்து, கற்பூரம் ஏற்றுவது நல்லது. பசுவின் கோமியம் கிடைக்குமேயானால் அதை தொழில் செய்யும் இடங்களில் தெளித்தால் நல்ல லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும் என்பது ஐதீகம். வாரம் தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சாம்பிராணி புகை போட்டு பூஜை செய்வது மிகவும் உத்தமம். இது மட்டுமின்றி புதிதாக எந்தவொரு முயற்சிகளை மேற்கொள்ளும் போதும் நல்ல நேரம் பார்த்து தொடங்குவது மூலம் வெற்றியும் லாபமும் பெருகும்.
சனி, சுக்கிரன் பலமாக இருந்தால் தொழில் விஷயங்களில் பல்வேறு ஏற்றங்களை அடைய முடியும். சுக்கிரனை வெள்ளிக்கிழமைகளில் வெள்ளைநிற வஸ்திரம் சாற்றி வெள்ளை நிற பூக்களால் பூஜிப்பது, சனி பகவானை சனிக்கிழமைகளில் நீல நிற சங்கு பூக்களால் அர்ச்சனை செய்வது போன்றவற்றின் மூலம் நவகிரகங்களின் அருளை பெற முடியும். தொழிலில் நல்ல  லாபம் ஈட்ட முடியவில்லையே என கவலைப்படுபவர்கள் சுதர்சன ஹோமம் செய்வது, சுதர்சன எந்திரத்தை வைத்து வழிபாடு செய்வது உத்தமம். 

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001

No comments: