Tuesday, April 24, 2012

ரிஷபம் லக்னமும் தொழில் அமைப்பும்

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவன ஸ்தானாதிபதி சனி பகவானாவார். சனி 9,10 க்கு அதிபதியாகி தர்மகர்மாதிபதி என்பதாலும், லக்னாதிபதி சுக்கிரனுக்கு நட்புக் கிரகம் என்பதாலும் மிகச்சிறந்த யோககாரகனாவார். ரிஷப லக்னகாரர்களுக்கு சனி ஆட்சி உச்சம் பெற்றோ, திரிகோண ஸ்தானங்களில் அமையப்பெற்றோ, திரிகோண ஸ்தானங்களில் அமையப்பெற்றோ இருந்தால், கொரவமான பதவிகளை  வகிக்கும் யோகம், அதன் மூலம் நிலையான வருமானம் உண்டாகும். சனி பலம் பெற்று சுக்கிரன், புதன் போன்ற நட்புக் கிரகங்களின் சேர்க்கையுடனிருந்தால் சொந்தத் தொழில்  செய்யக்கூடிய யோகம், நிலையான வருமானம், ஒரு சிறந்த முதலாளியாகி பலருக்கு வேலை கொடுக்கும் யோகம் உண்டாகும்.

மேற்கூறிய கிரகங்களில் ஏதாவது ஒரு கிரகத்தின் திசை நடைபெற்றால் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு சம்பாதிக்கும் வாய்ப்பு, சுகமான வாழ்க்கை வாழக்கூடிய யோகமும் உண்டாகும். 10ம் அதிபதி சனி என்பதனால் இரும்பு சம்பந்தப்பட்ட தொழில், எந்திரங்கள், வேலையாட்களை வைத்து தொழில்  செய்யும் அமைப்பு, பழைய பொருட்களை வாங்கி விற்பதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும்.

சனி பகவான் சுக்கிரனின் சேர்க்கையைப் பெற்றால் வண்டி வாகனங்கள் மூலமும், டிராவல்ஸ் போன்றவற்றிலும், பெண்கள் உபயோகிக்கும் அழகு சாதனப் பொருட்கள் விற்பனை, கட்டிடத் துறைகளில் சாதிக்கும் அமைப்பு உண்டாகும். ரிஷப லக்னாதிபதி சுக்கிரன் சந்திரனின் சேர்க்கை பெற்று இந்த இரு கிரகங்களில் ஒரு கிரகம் ஆட்சிப் பெற்றாலும் பரிவர்த்தனை பெற்றாலும் கலை, இசை, சங்கீதம், சினிமா போன்ற துறைகளில் தங்களை ஈடுபடுத்தி சாதிக்கக்கூடிய அமைப்பு உண்டாகும்.  நல்ல வருவாய் அமையும்.

சனி பகவான் புதன் சேர்க்கைப் பெற்றிருந்தால் சொந்தமாக வியாபாரம் செய்யக்கூடிய அமைப்பு, சிறந்த வியாபாரியாக செயல்பட்டு வாழ்வில் முன்னுக்கு வரக்கூடியவாய்ப்பு உண்டாகும். இது மட்டுமின்றி கணிதம், கம்ப்யூட்டர், பங்குச் சந்தை போன்ற துறைகளிலும் ஈடுபாடு உண்டாகும். புதன் 10 ல்  அமையப் பெற்று குரு சேர்க்கை பெற்றால் சிறந்த அறிவாளியாக விளங்கி, மற்றவர்களை வழி நடத்துவது, ஆலோசனை கூறுவது, தாங்கள் கற்றதை பிறருக்கு கற்றுக் கொடுக்கும் தொழில் போன்றவற்றின் மூலம் சம்பாதிக்கும் வாய்ப்பு அமையும். சனி பகவான் குரு சேர்க்கையுடனிருந்தால் ஏஜென்ஸி, கமிஷன் சார்ந்த வியாபாரம், கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் ஈடுபட்டு, சம்பாதிக்கும் யோகம் உண்டாகும்.

சனி பகவான் செவ்வாய் சேர்க்கையுடனிருந்தால் கூட்டுத் தொழில் செய்யும் அமைப்பு, பூமி, மனை போன்றவற்றால் சம்பாதிக்கும் வாய்ப்பு, அதிலும் சுக்கிரனுடன் இருந்தால் கட்டிடங்களை கட்டி விற்கும் துறை, கட்டிட வல்லுநராக விளங்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். சனி, செவ்வாய் இணைந்து  உடன் சந்திரன் அல்லது  ராகு இருந்தாலும் அல்லது ரிஷப லக்னத்திற்கு 9,12 ல் ராகு பகவான் அமையப் பெற்றாலும் வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய தொழில், கடல் கடந்து அயல்நாடுகளுக்குச் சென்று சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். சனி பகவான் ராகு சேர்க்கை பெற்று சாதகமான ஸ்தானங்களில் அமையப் பெற்றால், எதிர்பாராத திடீர் யோகங்கள் அதிலும் குறிப்பாக பல்வேறு மறைமுகத் தொழில்களில்  ஈடுபட்டு கோடி கோடியாக சம்பாதிக்கும் யோகம் உண்டாகும். அதுவே பலஹீனமாக அமைந்து விட்டால் ஒரு நிலையான வருமானம் இல்லாமல் கஷ்டப்பட வேண்டியிருக்கும். அடிமையாக வேலை செய்யக்கூடிய அனுகூலமற்ற சூழ்நிலை உண்டாகும்.

பத்தாம் அதிபதி சனி பகவானுக்கு சூரியன், செவ்வாய் போன்றோர் பகை கிரகங்கள் என்பதனால் அரசுத்துறை யில் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும். கும்பராசியில் (10 ம் வீடு) அமையும் சூரியன்,  செவ்வாய், ராகுவின் நட்சத்திரமான சதயத்தில் அமைந்து விடாமல்  செவ்வாயின் நட்சத்திரமான அவிட்டத்திலோ, குருவின் நட்சத்திரமான பூராட்டத்திலோ அமைந்து இருந்தால் அரசு, அரசு சார்ந்த  துறைகளில் பணிபுரியக்கூடிய அமைப்பு, அதிலும் குரு பார்வையுடன் அமைந்து இருந்தால் உயர் பதவிகள், அரசு துறையில் பதவி வகிக்கும் யோகம் உண்டாகும். சூரியன், செவ்வாய், சனியுடன் சேர்க்கை பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களில் இருந்தாலும் அரசு வழியில் நல்ல பணியினை அடைய முடியும். சூரியன், செவ்வாய் பலம் பெற்று உடன் சந்திரனோ, ராகுவோ இருந்தால் மருத்துவத்துறையில் சாதிக்கும் வாய்ப்பு உண்டாகும்.



ஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001


Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001



1 comment:

Anonymous said...

Rishabha lagnam 12la sani guru.10th la sevvai and Kethu. 5 la sukran 6la pudhan. Meena rasi. Marriage and job details ..plz female horos