Thursday, April 26, 2012

மிதுனம் லக்னமும் தொழில் அமைப்பும்

மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவன ஸ்தானாதிபதி குரு பகவானாவார். குரு பகவான் ஆட்சி பெற்று வலுப்பெற்றால் செல்வம், செல்வாக்கு, உயர் பதவிகளை வகிக்க்கூடிய யோகம் மற்றும் மற்றவர்களை வழி நடத்துவதிலும் ஆலோசனை கூறுவதிலும் கைதேர்ந்தவர்களாக விளங்கக்கூடிய அமைப்பும் உண்டாகும். வங்கியில் பணிபுரியும் அமைப்பு, மக்களுக்கு சேவை செய்யக்கூடிய இடங்களில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும். தனக்காரகன் குரு என்றாலும் மிதுன லக்னத்திற்கு குரு பாதகாதிபதி என்பதால் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது.

இது மட்டுமின்றி கூட்டுத் தொழிலில் ஈடுபடாமல் தனித்து செயல்பட்டால்தான் லாபத்தை பெற முடியும். 10ம் அதிபதி குரு பகவான், சூரியன், செவ்வாய் சேர்க்கைப் பெற்றாலும் 10ல் சூரியன். செவ்வாய் அமையப் பெற்று திக் பலம் பெற்றாலும் அரசு, அரசு சார்ந்த துறைகளில் கௌரவமானப் பதவிக¬ள் வகிக்கக்கூடிய யோகம், சிறந்த நிர்வாகியாக விளங்கி பலரை வழி நடத்தும் அமைப்பு உண்டாகும். சனி பகவானும் பலம் பெற்றிருந்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர் பதவிகளை வகிக்கும் உன்னத அமைப்பு உண்டாகும். 10ல் அமையக்கூடிய சூரியன், செவ்வாயுடன் புதன் சேர்க்கைப் பெற்றால் பொறியியல் துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு கம்ப்யூட்டர் துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய அமைப்பு உண்டாகும்.

குரு பகவான் செவ்வாய் சேர்க்கை பெற்று பலமாக இருந்தால் பூமி மனை, ரியல் எஸ்டேட் துறைகளில் அனுகூலங்கள் உண்டாகி சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். அதிகாரமிக்க பதவிகளை அடையும் வாய்ப்பும் உண்டாகும். குரு சந்திரனுடன் சேர்க்கைப் பெற்றால் ஏஜென்ஸி, கமிஷன், உணவு வகைகள், ஜல தொடர்புடைய தொழில்களில் பணிபுரியும் வாய்ப்பு ஏற்படும். குருவுடன் சந்திரன் இணைந்து உடன் புதன் அல்லது செவ்வாய் இருந்தால் கடல் சார்ந்த துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு, உணவகம் நடத்தும் வாய்ப்பு அமையும்.

குரு பகவான் புதனுடன் சேர்க்கை பெற்று பலமாக இருந்தால் சிறந்த அறிவாற்றலுடன் பள்ளி, கல்லூரிகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு, மற்றவர்களை வழி நடத்தக்கூடிய உன்னத திறன், வழக்கறிஞராகக் கூடிய அமைப்பு, பத்திரிகை துறை, எழுத்துத் துறைகளில் பணியாற்றும் வாய்ப்பு உண்டாகும்.

குரு சுக்கிரனுடன் சேர்க்கை பெற்று 10ல் இருந்தால் ஆடை, ஆபரணத்தொழில்கள், கலை சம்பந்தப்பட்ட பொருட்களை வியாபாரம் செய்வது, பெண்கள்  உபயோகிக்கக்கூடிய பொருட்கள் விற்பனை போன்றவற்றின் மூலம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். குரு சுக்கிரனுடன் சனியும் சேர்க்கை பெற்றால் வண்டி, வாகனங்கள், டிராவல்ஸ் தொடர்புடைய தொழில், வெளியூர்,  வெளிநாட்டு தொடர்புடைய தொழில்களால் அனுகூலங்கள் உண்டாகும். குரு சுக்கிரனுடன் புதன் அல்லது சந்திரனும் சேர்க்கைப் பெற்றால் கலைத்துறை, சினிமாத்துறை, சினிமா சார்ந்த  உட்பிரிவுத் துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு, ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்கள் செய்து அதன் மூலம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். வீடு, பங்களாக்களை கட்டி விற்பனை செய்யும் வாய்ப்பு உண்டாகும். செவ்வாய், ராகு அல்லது கேது சேர்க்கைப் பெற்றால் நவீனகரமான பொருட்களை வியாபாரம் செய்வது, தகவல் தொடர்புத்துறை, மருந்து கெமிக்கல், இராசாயணம் தொடர்புடைய தொழில்களில் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

குரு பகவான் பலவீனமாக இருந்து சனி, ராகு போன்ற பாவகிரகங்களின் சேர்க்கை பெற்றால் நிலையான வருமானங்களை அடையக்கூடிய தொழில்கள் அமையாமல் கஷ்ட ஜீவனம் அடைய நேரிடும். சனி ராகு சேர்க்கை 10ம் வீட்டில் அமைந்து சுபர் பார்வையின்றி இருந்தால் சட்ட சிக்கல்கள் நிறைந்த தொழில்கள் மூலம் சம்பாதிக்க நேரிடும்.


ஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001


Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001




No comments: