Thursday, August 30, 2012

தீர்க்க சுமங்கலி
தீர்க்க சுமங்கலி

தாலி என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் பாதுகாப்பு வேலியாக உள்ளது. நம்முடைய தமிழ்நாட்டு கலாச்சாரத்தில் மட்டுமே தாலி கட்டும் முறை உள்ளது. என்றாலும், அவரவர் சம்பிராயப்படி பெண்ணையும், ஆணையும் சேர்த்து வைக்கும் முறைகள் மாறுபடுகின்றன. எந்தவொரு மதமாக இருந்தாலும் கணவனுடன் சேர்ந்து வாழும் பெண்களை சுமங்கலியாக கருதுகிறார்கள். சடங்குகளில் கூட தீர்க்க சுமங்கலி பவ என்றுதான் வாழ்த்துவார்கள்.
சுமங்கலியாக இருப்பவர்களுக்கு சமுதாயத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டு. நம் நாட்டு பெண்கள் குளித்து மஞ்சள் பூசி, நெற்றி திலகமிட்டு நடப்பதே மிகவும் அழகுதான். பார்ப்பதற்கே மங்களகரமாக இருக்கும். வயதாகியும் சுமங்கலியாய் இருப்பவர்களை எந்தவொரு மங்களகரமான சுபகாரியங்களிலும் முதன்மையாக நிறுத்தி சுப காரியங்களைத் தொடங்குவார்கள்.
ஒரு ஆண் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு ஒரு பெண்ணின் ஜாதக ரீதியாக மாங்கல்ய ஸ்தானம் பலம் பெற்றிருக்க வேண்டும். 8ம் பாவம் பலமாக அமைந்து விட்டால் ஆணுக்கும் நீண்ட ஆயுள் உண்டாகும். அதனால்தான் திருமண பொருத்தங்கள் பார்க்கும் போது மாங்கல்ய பாக்கியம் பலமாக உள்ளதா என ஆராய்ந்த பிறகே ஒரு பெண்ணை தேர்ந்தெடுக்கிறார்கள். ஒரு பெண்ணுக்கு களத்திர ஸ்தானமான 7ம் இடம் எப்படி பலமாக இருக்க வேண்டுமோ அது போல 8ம் இடமான மாங்கல்ய ஸ்தானமும் பலமாக இருத்தல் வேண்டும். 8ம் வீட்டதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும், 8ம் வீட்டை குரு போன்ற சுபகிரகங்கள் பார்வை செய்தாலும் கணவருக்கு நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் உண்டாகி பெண்ணுக்கு நீண்ட சுமங்கலி யோகம் உண்டாகிறது.

எல்லா பெண்களுமே தீர்க்க சுமங்கலியாய் வாழ்வதையே விரும்புவார்கள். அப்பொழுதுதான்  இந்த சமுதாயத்தினரால் புறக்கணிக்கப்படாமல் வாழமுடியும். ஆனால்  சில பெண்களுக்கு நீண்ட சுமங்கலி பாக்கியம் உண்டாவதில்லை. வயதாகி கணவரை இழக்கும் பெண்களை பரவாயில்லை நன்றாக வாழ்ந்தாகிவிட்டது என ஏற்றுக்கொள்ளும் இ வ்வுலகம், இளம் வயதில் கணவரை இழந்தவர்களை தீண்டத் தகாதவர்களாக கருதி ஒதுக்கியும் வைக்கிறார்கள். தன்னுடைய பிரச்சினைகளை வெளியே  சொல்லவும் முடியாமல் மனம் விட்டு அழவும் முடியாமல் எத்தனை பெண்கள் வீட்டுக்குள் அடங்கி கிடக்கிறார்கள் தெரியுமா?

ஏன் இந்த இளம் வயதிலேயே இப்படி ஒரு அவலநிலை என ஜோதிட ரீதியாக ஆராயும்போது, தோஷமுள்ள பெண்ணிற்கு தோஷமுள்ள வரனாக அமைத்து கொடுக்காததுதான். தோஷமுள்ள ஜாதகம் என பார்க்கின்றபோது 7,8 ம் வீட்டில் சனி, செவ்வாய், சூரியன், ராகு, கேது அமையப் பெற்று சுபபார்வையின்றி இருந்தாலும் 7,8 ம் அதிபதிகள் மேற்கூறிய கிரகங்களின் சேர்க்கை பெற்றிருந்தாலும், மாங்கல்ய தோஷம் உண்டாகி கணவருக்கு கண்டத்தை  ஏற்படுத்துகின்றது.

7,8 ம் அதிபதிகள் நீசம் பெற்றிருந்தாலும், நீசம் பங்கம் பெற்றிருந்தால் முதல் வாழ்க்கை தவறினாலும் இரண்டாவதாக ஒரு வாழ்க்கை அமையக்கூடிய வாய்ப்பு உண்டாகும். 7, 8ம் வீட்டிற்கு  இருபுறமும் பாவிகள் அமைவதும் 7,8 ம் அதிபதிகள் அமைந்த வீட்டிற்கு இருபுறமும் பாவிகள் இருப்பதும் மாங்கல்ய தோஷமாகும். அது போல மாங்கல்ய ஸ்தானமான 8ம் வீட்டிற்கு சமசப்தமஸ்தானமான 2ல் பாவிகள் அமைவதும் மாங்கல்ய தோஷமாகும். களத்திரகாரகன் என வர்ணிக்கக்கூடிய செவ்வாய், சுக்கிரன் ஆகியோர் சனி, ராகு போன்ற பவ கிரக சேர்க்கைப் பெற்றிருப்பதும் 8ம் வீட்டை சனி, செவ்வாய் ஆகிய பாவகிரகங்கள் பார்வை செய்வதும் மாங்கல்ய தோஷமாகும்.

எனவே ஆண்களின் ஆயுளை அதிகரிக்க கூடிய பலம் பெண்களின் ஜாதகத்திற்கு உள்ளதால் 7,8 ம் பாவங்களை நன்கு ஆராய்ந்து திருமணம் செய்வது நல்லது. இதனால் பெண்களுக்கும் தீர்க்க சுமங்கலி பாக்கியம் உண்டாகும்.

பெண்களுக்கு மறு மணம் என்பது கனவாக இருந்த காலங்கள் மாறி கைம்பெண்களுக்கும் நல்ல ஒரு வாழ்க்கையை அமைத்து தரக்கூடிய நல்ல மனதுள்ள ஆண்ஙகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். எனவே பெண்களே சென்றதை நினைத்தே உங்களை வருத்திக் கொள்ளாமல் ஒரு வாசல் மூடினால் மறுவாசல் திறக்கும் என்பதை மனதில் வையுங்கள்.ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001

No comments: