Thursday, October 4, 2012

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்     இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் பத்தாவது இடத்தை பெறுவது மகம் நட்சத்திரமாகும். இதன் அதிபதி கேது பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. மகம் சிம்ம ராசிக்குரிய நட்சத்தரமாகும். இது உடலில் இதயம், முதுகு, இருப்பின் மேல் பகுதி போன்ற பாகங்களை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் ம,மி,மு,மெ ஆகியவை. தொடர் எழுத்துக்கள் மா, மீ,மு ஆகியவைகளாகும்.

குணஅமைப்பு;

     மகத்தில் பிறந்தவர்கள் ஜெகத்தை ஆள்வார்கள் என்று பழைய நூல்களில் குறிப்பிட்டிருந்தாலும் எல்லாருக்கும் அந்த யோகம் அமைவதில்லை. எதிலும் தனித்தன்மை கொண்டவர்களாகவும், சுதந்திரத்தை விரும்புபவர்களாகவும் இருப்பார்கள். தங்கள் விஷயங்களில் மற்றவர்கள் தலையிட்டு செய்வதை விரும்ப மாட்டார்கள் வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வேட்கை மிக்கவர்கள். எப்பொழுதும் உண்மையே பேசுபவர்கள். கோபமிருக்கும் இடத்தில் தான் குணமிருக்கும் என்பதற்கேற்கேற்ப நியாமான கோபமும், குணமும் இருக்கும் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டேயிருப்பார்கள். தனக்கு கீழ் படிந்தவர்களை எந்த துன்பத்திலிருந்தும் காக்கும் இவர்கள் எதிரிகளை ஒட ஒட விரட்டியடிக்காமல் ஒயமாட்டார்கள். மனதில் ஒன்று, வெளியில் ஒன்று வைத்து பேச தெரியாதவர்கள். அனுபவ அறிவு அதிகமிருக்-கும். நேரம் காலம் பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவி செய்வார்கள்.

குடும்பம்;

     எதையும் முன் கூட்டியே அறியும் திறமை கொண்டவர்கள் என்பதால் குடும்ப வாழ்வில் அனுசரித்து செல்வார்கள். காதலித்து திருமணம் செய்து  கொள்வதையே விரும்புவார்கள். இளமையிலேயே சுக்கிர திசை வருவதால் திருமண வாழ்க்கை விரைவில் அமையும். சிற்றின்ப வேட்கை அதிக முடையவர்கள். இவர்களுக்கு ஆண் குழந்தை பாக்கியமே அதிகம். வாழ்க்ககையில் செல்வம் செல்வாக்கு அதிக மிருந்தாலும் எப்பொழுதும் எதையாவது மனதில் போட்டு குழப்பி கொண்டேயிருப்பார்கள். தவறு என மனதிற்கு பட்டால் பிறரிடம் மன்னிப்பு கேட்க தயங்க மாட்டார்கள். உற்றார் உறவினர்களிடம் கூட வலிய சண்டைக்கு போக மாட்டார்கள். வந்த சண்டையையும் விட மாட்டார்கள். இவர்களிடம் உதவி பெற்று வாழ்பவர்கள் கூட முன்னால் முகஸ்துதி பாடி விட்டு பின்னால் தூற்றிக் கொண்டிருப்பார்கள். மனைவி பிள்ளைகள் மேல் அதிக பாசமிருக்கும்.

தொழில்;
     
மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எவ்வளவு கஷ்டமான பணியை எடுத்துக் கொண்டாலும் அதை பாடுபட்டு செய்து முடித்து பெரும் பணம் சம்பாதிக்க ஆசைபடுவார்கள். பரந்த மனப்பான்மையும், நல்ல நிர்வாகம் திறனும் உடையவர்கள். பிறரிடம் கைகட்டி அடிமையாக வேலை செய்ய விரும்ப மாட்டார்கள். எந்த பணியிலும் தானே முதன்மையாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். இவர்கள் மருந்து, மாந்திரீகம், ஜோதிடம், சரித்திரம், தர்க்க சாஸ்திரம், புரண, இதிகாசம் ஆகியவற்றில் புகழ் பெற்று விளங்குவார்கள். பழம் பெரும் கலை, கலைகளை ஆராய்ச்சி செய்வதை விரும்புவார்கள். உளவியல் நிபுணர்களாகவும் இருப்பார்கள் பலர் பேராசியர், நடிகர், நடிகை, ஆடை வடிவமைப்பு, விளம்பர மாடல் போன்ற துறைகளிலும் ஈடுபடுவார்கள். வண்டி வாகனங்கள் மீது அதிக விருப்பமும் உண்டு. 26 வயதிலிருந்து 33 வயதுக்குள் சொந்த வீடு  யோகமும் 46 வயதிலிருந்து 52 வயதுக்குள் பெயர் புகழம் உயரும்.

நோய்கள்;

     இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடலின் பின்புறம் வலி ஏற்படும். சிறு நீரக பிரச்சனையும் இருதய சம்மந்தப்பட்ட பிரச்சனையும் தண்டு வட ஜவ்வு காய்ச்சலும் ஏற்பட கூடிய வாய்ப்புகள் அதிகம்.

திசை பலன்கள்;

     மக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக கேது திசை வரும். இதன் மொத்த வருட காலங்கள் 7 ஆகும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா காலங்களை அறியலாம். இத்திசை காலங்களில் உடல் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள், கல்வியில் மந்தநிலை, தாய்க்கு ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் குடும்பத்தில் சற்று குழப்பங்கள் உண்டாகும்.
     
இரண்டாவது திசையாக வரும் சுக்கிர திசை மொத்தம் இருபது வருடங்கள் நடை பெறும் இளம் வயதிலேயே சுக்கிர திசை வருவதால் திருமண வாழ்க்கையும் இளம்வயதிலேயே நடைபெறும். சுக்கிரன் பலம் பெற்று அமைந்திருந்தால் செல்வம் செல்வாக்குடன் வாழும் யோகம் உண்டாகும். சுக்கிரன் பலமிழந்திருந்தால் இல்வாழ்க்கை போராட்டகரமானதாக இருக்கும்.
     
மூன்றாவதாக வரும் சூரிய திசை காலங்களில் சூரியன் பலமாக  இருந்தால் தந்தை வழியில் அனுகூலங்களை பெற முடியும். சூரியன் பலமிழந்திருந்தால் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகளும் தந்தைக்கு கெடுபலன்களும் உண்டாகும். 

நான்காவதாக வரும் சந்திர திசை மொத்தம் பத்து வருடங்கள் நடைபெறும் இக்காலங்களில் ஏற்ற இறக்கமான பலன்களை பெற முடியும் தேவையற்ற மன குழப்பங்கள் தோன்றி மறையும். குடும்பத்தில் நிம்மதி குறையும். 
     
ஐந்தாவதாக வரும் செவ்வாய் திசையின் மொத்த காலங்கள் 7 வருடங்களாகும். மக நட்சத்திரம் கேதுவின் சாரம் என்பதால் செவ்வாய் திசை மாரக திசையாகும். இதனால் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் செவ்வாய் பலம் பெற்றிருந்தால் செல்வம் செல்வாக்கு உயரும். பூர்விக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்.
     
மக நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் ஆலமரமாகும். இந்த மரத்தினை வழிபாடு செய்வதினால் நற்பலனை அடைய முடியும். இந்த நட்சத்திரத்தை பிப்ரவரி மாதம் இரவு  பன்னிரண்டு மணியளவில் உச்சி வானத்தில் காண முடியும்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்
     
மக நட்சத்திரத்தில் திருமணம், தாலிக்-கு பொன் உருக்குவது, வாகனம் வாங்குவது, வேத விரதங்களை பூர்த்தி செய்வது, வாஸ்து படி வீடு கட்ட ஆரம்பிப்பது, ஆயிதம் பயிலுவது, களஞ்சியத்தில் தானியம் சேமிப்பது போன்றவற்றை தொடங்கலாம்.

வழிபாட்டு ஸ்தலங்கள்

திருவாலங்காடு;
     கும்பகோணம் மயிலாடுதுறை பாதையிலுள்ள வடா ரணீயேஸ்வரர் ஆலயம்

திருக்கச்சூர்;
     காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல் பட்டிலிருந்து வடக்கே 12.கி.மீ தொலைவிலுள்ள தாததில் திருமால் ஆமை வடிவில் ஈசனை வழிபட்டதால் கச்சர் என பெயர் கொண்டது. கூர்ம தீர்த்தமானது புனிதமானது

கிமுப்பழுபூர்;
     அரியலூர் மாவட்டத்திற்கு தெற்கே 10.கி.மீ தொலையில் ஆலந்துறை நாதராக ஈஸ்வரனும், அருந்தவ நாயகியும் அருள் புரியும் ஸ்தலம் இக்கோயில்களில் வழிபாடு செய்யலாம்.

கூற வேண்டிய மந்திரம்

     ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
     பாஸஹஸ்தாய தீமஹி
     தன்னோ ஸீர்ய ப்ரசோதயாத்

மக நட்சத்திரற்க பொருந்தாத நட்சத்திரங்கள்

     அஸ்வினி, ஆயில்யம், கேட்டை, மூலம், ரேவதி ஆகிய ஆண் பெண் நட்சத்திர காரர்களை திருமணம் செய்ய கூடாது.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001  

5 comments:

Anonymous said...

ரேவதி நட்சத்திரம் பொருந்தி நல்லதா போய்ட்டு இருக்கு.பத்து வருஷமா

Anonymous said...

நிதர்சனமான உணண்மையே உங்கள் வாழ்க்கையில் நல்ல பல முன்னேற்றம் பெற வாழ்த்துக்கள்.....

Anonymous said...

நான் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்து உள்ளேன் எனக்கு மகம் நட்சத்திரம் இதற்கு ஏதும் பரிகாரம் உண்டா இல்லை தீமை காரியங்களை பற்றி எடுத்துரைக்கவும்

Anonymous said...

Yes undau

Anonymous said...

Ayya Nan Sima raasi Magan natchatiram Nan veliyoruku velaiku pogalama kadal thandi