Thursday, November 15, 2012

சூரியதிசை


சூரியதிசை

     நவ கிரகங்களின் தலைவனாக விளங்க கூடிய சூரிய பகவான் தனது தசா காலத்தில் 3,6,10,11 ஆகிய ஸ்தாங்களில் ஜெனன ஜாதகத்தில் அமையப் பெற்றாலும், ஆட்சி அல்லது உச்சம் பெற்று அமைந்திருந்தாலும் நல்ல அதிகார பதவியினை அடையும் யோகத்தை உண்டாக்குவார். சூரிய திசையானது மொத்தம்  6வருடங்கள் நடைபெறும். நவகிரகங்களின் தசா  காலங்களிலேயே சூரிய திசை காலங்கள் மட்டும் தான் மிகவும் குறுகிய காலமாகும். சூரியன் பலம் பெற்று பலமான இடத்தில் அமைந்து திசை நடைபெற்றால் சமுதாயத்தில் மற்றவர்களால் பாராட்டப்பட கூடிய அளவிற்கு ஒரு நல்ல நிலையும், பல பெரிய மனிதர்களின் தொடர்பும், பொருளாதார ரீதியாக மேன்மைகளும், பல சமுதாய நலப் பணிகளில் ஈடுபடக்கூடிய யோகம் உண்டாகும்.

    சூரியன் பலம் பெறுவது மட்டுமின்றி தனக்கு நட்பு கிரகங்களான சந்திரன் செவ்வாய் குரு போன்றவர்களின் சேர்க்கைப் பெற்றிருப்பதும், அக்கிரகங்களின் வீடுகளின் இருப்பதும், அக்கிரகங்களின் சாரம் பெற்றிருப்பதும் சிறப்பான பலனை உண்டாகும்.சூரியன் சிம்மத்தில் ஆட்சியும், மேஷத்தில் உச்சமும், துலாத்தில் நீசம் பெறுவார்

      சூரியன் துலாத்தில் நீசம் பெறுவதும்,  மகரம், கும்பம் போன்ற சனியின் வீடுகளில் அமையப் பெறுவதும்,8,12 ஆகிய  வீடுகளில் அமையப் பெறுவதும், சனி, ராகு போன்ற கிரகங்களின் சேர்க்கை மற்றும் சாரம் பெறுவதும் நல்லதல்ல. சூரியனுக்கு மிக அருகில் அமையப்பெறும் கிரகங்கள் அஸ்தங்கம் அடைந்து பலம் இழந்து விடுகின்றன. ஆனால் சூரியனையே பலமிழக்க வைக்க கூடிய தன்மை ராகுபகவானுக்கு மட்டுமே உண்டு.மேற்கூறியவாறு சூரியன் அமையப்பெற்று அதன் திசை நடைபெறுமேயானால் உடலில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்பு, கண்களில் பாதிப்பு இருதய சம்மந்தப்பட்ட பாதிப்பு, அரசாங்க வழியில் தண்டனை அடையக்கூடிய சூழ்நிலை போன்றவை உண்டாகும். சூரியன் பலமிழுந்து சூரியதிசை நடைபெறும் காலங்களில் அனுகூலமற்ற பலன்களை அடைய நேரும்.

     சூரியன் தந்தை, ஆத்மா, பல்,வைத்தியம்,ஒற்றை தலைவி,மாணிக்கம், ஏகவாதம், யானை, கோதுமை,பால்,மிளகு,பகல் காலம் வெளிச்சம், சிவவழிபாடு போன்றவற்றிற்கு காரகனாகிறார்.

    கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில்  பிறந்தவர்களுக்கு முதல் திசையாக சூரிய திசை வரும். ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் பலமாக அமையப் பெற்று குழந்தை பருவத்தில் சூரிய திசை நடைபெறுமேயானால் குழந்தையின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குழந்தையின் தந்தைக்கு உயர்வுகள் உண்டாகும். இளமை பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் மேன்மை, பெரியோர்களின் ஆசிர்வாதம், நோயற்ற வாழ்க்கை தந்தைக்கு மேன்மை உண்டாகும். மத்திம பருவத்தில் நடைபெற்றால் நல்ல ஆரோக்கியம், அரசு சார்ந்த துறைகளில் உயர்பதவி, அறிவாற்றல் பேச்சாற்றல் எதிலும் சுறுசுறுப்பாக ஈடுபடும் அமைப்பு உண்டாகும். முதுமை பருவத்தில் நடைபெற்றால் சிறப்பான உடலமைப்பு, கௌரவமான பதவிகளைவகுக்கும் யோகம் பொருளாதார ரீதியாக உயர்வுகள் சமுதாயத்தில் புகழ், பெயர் கௌரவம் உயரக்கூடிய வாய்ப்பு கொடுக்கும்.  அதுவே சூரியன் பலமிழந்திருந்து குழந்தை பருவத்தில் சூரியதிசை நடைபெற்றால் ஜீரம், தோல் வியாதி, தந்தைக்கு கண்டம் ஏற்படும். இளம் பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் மந்த நிலை தந்தையிடம் கருத்து வேறுபாடு உண்டாகும். மத்திம பருவத்தில் நடைபெற்றால் சோம்பேறி தனம்,  அரசு வழியில் பிரச்சனை நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படும்.  முதுமை பருவத்தில் நடைபெற்றால் இருதய கோளாறு கண்களில் பாதிப்பு பொருளாதார நெருக்கடி உண்டாகும்.


                              சூரிய திசை சூரிய புக்தி

    சூரிய திசை சூரிய புக்தியின் காலங்களில் 3&ம் மாதம் 18&நாட்களாகும்.  

சூரிய திசையின் சுய புக்தி காலங்களில் ஜெனன ஜாதகத்தில்  சூரியன் ஆட்சி, உச்சம் நட்பு, மற்றும் கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றிருந்தால் அரசு மூலம் நல்ல அனுகூலங்கள் உண்டாகும். வாழ்க்கை துணை, மற்றும் பிள்ளைகளால்  நேசிக்கப்படும் யோகம், மனநிம்மதி, ஆடை ஆபரண சேர்க்கை, தெய்வதரிசனங்களுக்காக பயணம் செய்யும் அமைப்பு, திருமணம், சிறப்பான புத்திரபாக்கியம், பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் தந்தையால் சாதகப்பலன்கள், மற்றும் கணக்கு, கம்பியூட்டர் கல்வியில் உயர்வு உண்டாகும் வம்பு வழக்குகளில் வெற்றிகிட்டும்.

    அதுவே சூரியன் பலமிழந்து அமைந்திருந்தால் சொந்தங்களால் தொல்லை, பணக்கஷ்டம், கடன்களால் அவதி, வாழ்க்கை துணை மற்றும் பிள்ளைகளால் பாதிப்பு, இருக்கும் இடத்தை விட்டே செல்ல வேண்டிய நிலை, ஜாதகரின் தந்தைக்கு கண்டம் உண்டாகும். தலைவலி, வயிற்றுவலி, இருதய நோய்கள், கண்களில் பாதிப்பு, வீரம், அக்கினி பயம் பகைவர்களின் தொல்லை அதிகரிக்க கூடிய நிலை ஏற்படும்.

                              சூரிய திசையில் சந்திர புக்தி
     
            சூரிய திசையில் சந்திர புக்தி காலங்கள் 6 மாதமாகும்.

  சந்திரன் ஜென்ம லக்னத்திற்கு கேந்திர  திரிகோணத்திலோ, ஆட்சி உச்சம் பெற்றோ அமைந்திருந்து, சுபர் சேர்க்கை சுபர் சாரம் பெற்று தசாநாதனுக்கு, 5,9&ல் இருந்தால் அணுகூலமான நற்பலன்களைப் பெறமுடியும். திருமண சுபகாரியங்கள் நடைபெற்று, புத்திர பாக்கியம் அமையும், பெண்களால் யோகம் தனலாபம் உண்டாகும். வண்டி வாகனம், ஆடை ஆபரண சேர்க்கை, தோப்பு துறவு பூர்விக சொத்துக்களால் லாபம் கிட்டும்.

    சந்திரன் பலமிழுந்து நீசமாகி பாவிகளுடன் சம்மந்தமாகி சனி, செவ்வாய் சேர்க்கைப் பெற்று திசா நாதனுக்கு 6,8,12&ல் அமையப் பெற்று இருந்தால் மனதில் பயம், குழப்பம், விரோதம், பிரிவு மரணபயம், சிறுநீரக பிரச்சனை, ஜலத்தால் கண்டம், வயிற்று போக்கு வயிற்று வலி,  சோம்பல் போன்றவை உண்டாகும். சிறுநீரக கோளாறு ஏற்படும். வயிற்று பிழைப்பிற்கே அல்லாட நேரிடம்.


சூரிய திசையில் செவ்வாய் புக்தி

சூரிய திசையில் செவ்வாய் புக்தியானது 4&மாதம் 6நாட்கள் நடைபெறும். 

செவ்வாய் பகவான் லக்னத்திற்கு கேந்திர திரிகோண ஸ்தானங்களிலோ, ஆட்சி அல்லது உச்சம் பெற்றோ அமைப்பெற்றால் பூமி மனை சேர்க்கை வண்டி வாகன சேர்க்கை, ஆடை ஆபரண சேர்க்கை புத்திரர் மற்றும் சகோதரர்களால் அனுகூலம், பகைவரை வெற்றி கொள்ளும் ஆற்றல், மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் அமைப்பு, வியாதிகள் குணமாகி செல்வம் செல்வாக்குடன் வாழும் யோகம் போன்ற நற்பலன்கள் யாவும் உண்டாகும்.

    அதுவே செவ்வாய் சூரியன்  சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கைப் பெற்றோ, பகை, நீசம் பெற்றோ செவ்வாய் புக்தி நடைப்பெற்றாலும் 8,12&ல் அமைந்து  புக்தி நடைபெற்றாலும், பகைவர்களால் கலகம், வண்டி வாகனம் பழுதடையும் நிலை, பூமி மனை போன்றவற்றால் வம்பு வழக்குகள் ஏற்படும் சூழ்நிலை, மரணத்திற்கு சமமான கண்டம், வெட்டு காயம் படும்நிலை, ஜீரத்தினால் உபாதை, திருடர் மற்றும் பகைவரால் பிரச்சனை, நெருப்பினால் கண்டம், எடுத்த காரியங்கள் தடைப்படும் நிலை, அரசு வழியில் தண்டனை போன்ற கெடுபலன்கள் ஏற்படும்.

                          
                             சூரிய திசை ராகு புக்தி

     சூரிய திசையில் ராகுபுக்தியானது 10 மாதம் 24 நாட்கள் நடைபெறும். 

  சூரியனுக்கு ராகு பகைவர் என்பதால் பொதுவாகவே பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்றாலும் ராகு நின்ற வீட்டதிபதி பலம் பெற்று ராகு சுபர் சேர்க்கைப் பெற்று சுப கிரகங்களின் பார்வைப் பெற்று, சுப கிரகங்களின் சாரம் பெற்றிருந்தால் மட்டுமே நல்ல ஆரோக்கியமும் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் உண்டாகும்.

     அதுவே ராகு லக்னத்திற்கு 8,12ல் அமைய பெற்று பாவிகள் சேர்க்கை, பார்வை பெற்றிருந்தால் பகைவர்களால் பிரச்சனை, கணவன் மனைவியிடையே பிரச்சனை, பணவிரயம் ஏற்படகூடிய நிலை விபத்தினால் கண்டம், எப்பொழுதும் துக்கம் உண்டாக கூடிய சூழ்நிலை, அரசு வழியில் பிரச்சனை, எடுக்கும் காரியங்களில் தடை ஏற்படும். தேவையற்ற அவமானங்களையும் சந்திக்க நேரிடும்.

                  சூரிய திசையில் குரு புக்தி

     சூரிய திசையில் குரு புக்தியானது 9&மாதம் 18&நாட்கள் நடைபெறும். 

குரு பகவான் கேந்திர திரிகோணங்களில், ஆட்சி உச்சம் பெற்று நட்பு வீட்டிலிருந்து சுபர் சேர்க்கை பெற்றருந்தாலும் குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும் அமைப்பு, சிறப்பான புத்திர பாக்கியம், பொருளாதார நிலையில் உயர்வு, சமுதாயத்தில் செல்வம் செல்வாக்கு, பெயர் புகழ் உயரக் கூடிய யோகம், தெய்வீக சிந்தனை, தான தர்ம காரியங்களில் ஈடுபட்டு மற்றவர்களுக்கு உதவி செய்யும் அமைப்பு, பெரிய மனிதர்களின் தொடர்பு போன்ற அற்புதமான நற்பலன்கள் உண்டாகும்.

    குரு பாவகிரகங்களின் சேர்க்கை பெற்றோ, நீசம் மற்றும் அஸ்தங்கம் பெற்றோ, திசாநாதனுக்கு 6,8,12&ல் அமையப் பெற்றோ, இருந்தால் மனைவி பிள்ளைகளுக்கு ஆரோக்கிய பாதிப்பு, குடும்பத்தில் கலகம், தேவையற்ற அவமானங்கள், உற்றார் உறவினர்களிடம் பிரச்சனை, இடம் விட்டு இடம் சென்று  அலையும் நிலை, அரசாங்கத்தால் பிரச்சனை போன்ற அனுகூலமற்றப் பலன்கள் உண்டாகும்.

                          சூரிய திசையில் சனி புக்தி

     சூரிய திசையில் சனி புக்தியானது 11 மாதம் 12 நாட்கள் நடைபெறும்.

  சனி பகவான் ஜென்ம லக்னத்திற்கு கேந்திர திரி கோணங்களில் அமைந்திருந்தாலும் 3,6,10,11&ல் இருந்தாலும் தனக்கு நட்புகிரகங்களின் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் ஆட்சி உச்சம், பெற்றிருந்தாலும் எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல் வேலையாட்களால் அணுகூலம், விவசாயத்தால் அதிக லாபம், குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும் வாய்ப்பு, உற்றார் உறவினர்களின் ஆதரவுகளால் அனுகூலம், ஆடை ஆபரணம், வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம், செய்யும் தொழில் உத்தியோகத்தில் உயர்வு, எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூட கூடிய வாய்ப்பு உண்டாகும். அசையா சொத்துகளால் அணுகூலம் ஏற்படும்.

    சனி பலமிழந்து பகை நீசம் பெற்று பாவிகளின் சேர்க்கையுடன் இருந்தால் உடல் நலபாதிப்புகள் மனதில் சஞ்சலம், நீசர்களுடன் சகவாசம், அரசு வழியில் பிரச்சனை, நண்பர்கள் மற்றும் தொழிலாளர்களிடையே பகை இடம் விட்டு இடம் பெயருதல், பங்காளிகளுடன் வம்பு  வழக்கு கலகம் உண்டாகும். வாதம், எலும்பு சம்பந்தபட்ட நோய், உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் கண்டங்கள் ஏற்படும்.

                            சூரிய திசை புதன் புக்தி
    
      சூரிய திசையில் புதன் புக்தியானது 10 மாதம் 6 நாள் நடைபெறும்.

 புதன் பகவான் ஆட்சியோ உச்சமோ பெற்றிருந்தாலும், சுபர் சேர்க்கை பார்வையுடனிருந்தாலும், நல்ல தைரியம் துணிவு, பேச்சாற்றல், எழுத்தாற்றல், தெய்வபக்தி, குருபக்தி, தாய் தந்தை மீது பக்தி தொழில் வியாபாரத்தில் ஈடுபாடு உண்டாகும். அரசு வழியில் ஆதரவு, மனைவி பிள்ளைகளால் அனுகூலம் ஏற்படும். கணிதம், கம்பியூட்டர் போன்றவற்றில்  அதிக ஈடுபாடு கொடுக்கும். ஆடை ஆபரணம் சேரும். பெண் குழந்தை யோகம் கிட்டும். பொருளாதாரம் உயரும்.

     புதன் பகவான் லக்னத்திற்கு 6,8,12&ல் அமைந்தோ, பகை நீசம் பெற்றோ, பாவிகளின் சேர்க்கை பெற்றோ இருந்தால் மனநிலை பாதிப்பு, நரம்பு சம்மந்த பட்ட நோய், எதையும் சிந்திக்க முடியாத நிலை, ஞாபக சக்தி குறையும் நிலை ஏற்படும். தொழில் உத்தியோகத்தில் கெட்ட பெயர் எடுக்கும் நிலை, தாய் வழி மாமனுக்கு பிரச்சனை ஏற்படும். கடன்கள் அதிகரிக்கும் வீண் வம்பு வழக்குகளில் சிக்கி கொள்ள நேரிடும். மனைவி பிள்ளைகளாலும் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.

                               சூரிய திசையில் கேது புக்தி

    சூரிய திசையில் கேது புக்தியானது 4 மாதங்கள் 6 நாட்கள் நடைபெறும்.

  கேது பகவான் 3,6,11&ம் இடத்திலும், லக்னாதிபதி சேர்க்கையும் பெற்றிருந்தாலும்,  சுபகிரகங்களின் சேர்க்கை பார்வை சாரம் பெற்று கேந்திர திரிகோணத்திலிருந்தாலும் தெய்வ பக்தி மிகுதியாகும் கேது நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தால் புண்ணிய ஆலயங்களுக்கு செல்லும் வாய்ப்பும், புகழ் பெருமையும் உயரும். பகைவர்களை வெல்லும் அமைப்பு, ஆடை ஆபரண சேர்க்கை, கைவிட்டு போன பொருட்கள் திரும்ப கிடைக்கும் வாய்ப்பு உண்டாகும். புராண கதைகளை வாசிக்கும் யோகும் கிட்டும்.

    கேது 2,8&ல் இருந்து பாவிகள் சேர்க்கை பார்வை பெற்றால் பணவிரயம், தந்தைக்கு கண்டம், தலையில் நோய், சீறுநீரக பிரச்சனை, மனைவி பிள்ளைகளுக்கு சோதனை, அரசாங்கத்தால் அவமானங்கள், தேவையற்ற குழப்பம் மற்றும் மனநிலை பாதிப்பு, விஷத்தால் கண்டம் வயிற்று வலி பிரச்சனை, வண்டி வாகனத்தால் வீண் செலவு எதிர்பாராத விபத்து போன்றவை உண்டாகும். குடும்பத்தில் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.

                                
                      சூரிய திசையில் சுக்கிர புக்தி

      சூரிய திசையில் சுக்கிர புக்தி 1வருட காலம் அதாவது 12மாதங்கள் நடைபெறும்.

  சுக்கிர பகவான் ஜென்ம லக்னத்திற்கு கேந்திர,திரிகோணத்திலோ, 2,11&ம் இடங்களிலும் ஆட்சி உச்சம் நட்பு பெற்று சுபர் வீடுகளில் அமையப் பெற்றாலும் அரசாங்க வழியில் அனுகூலம் வண்டி வாகன சேர்க்கை ஆடை ஆபரண  மற்றும் அசையா சொத்துக்களின் சேர்க்கை, சுபகாரியங்கள் கைகூடும் அமைப்பு, பெண் குழந்தை யோகம், குடும்பத்தில் பூரிப்பு, ஒற்றுமை, உடல் ஆரோக்கியத்தில் மேன்மை, நல்ல கட்டில் சுகம், சுகபோக, ஆடம்பரமான வாழ்க்கை அமையும் பெண்களால் முன்னேற்றம் உண்டாகும்.

     சுக்கிரன் பலமிழந்து லக்னத்திற்கு 6,8,12&ல் மறைந்து, பகை நீசம் பெற்று, பாவிகளின் சேர்க்கையுடனிருந்தால் சர்க்கரை வியாதி, மர்மஉறுப்புகளில் நோய்கள், கணவன் மனைவியிடையே இல்லற வாழ்வில் பிரச்சனை, திருப்தியற்ற நிலை, திருமண சுபகாரியம் நடைபெற தடை, மனநிம்மதி குறைவு, வண்டி வாகனங்கள் பழுதுபடுதல், எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாது சுகபோக சொகுசு வாழ்விற்கு தடை உண்டாகும்.


சூரியனை வழிபடும் முறை பரிகாரங்கள்

    ஞாயிற்று கிழமைகளில் வெல்லம், கோதுமை போன்றவற்றை தானம் செய்தல், உபவாசம் இருத்தல் சூரியனின் அதி தேவதையான சிவனை வணங்குதல் பிரதோஷ கால விரதங்கள் மேற்கொள்ளுதல், தினமும் சூரிய நமஸ்காரம் செய்தல், சந்தியா வதனம், உபாயனம் செய்தல், காயத்ரி மந்திரம் மற்றும் ஆதித்ய ஹருதயம் பாராயணம் செய்தல் 1 அல்லது 12 முகங்கள் கொண்ட ருத்ராட்சம் அணிதல், மாணிக்க கல் பதித்த மோதிரம் உடலில் படும்படி அணிதல். செந்தாமரை மலர்களால் சூரியனுக்கு அர்ச்சனை செய்தல் போன்றவை சூரியதிசை, சூரியபுக்தி காலங்களில் செய்ய வேண்டிய பரிகாரங்களாகும்.


Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 please call  me at  Cell - 0091 - 7200163001,   9383763001
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.


No comments: