Wednesday, December 11, 2013

புத்தாண்டு பலன் 2014 கன்னி ;


புத்தாண்டு பலன்  2014  கன்னி ;
கன்னி ; உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2,ம் பாதங்கள்
     
எப்பொழுதும் குஷியான மனநிலையுடன் செயல்படுபவராக விளங்கும் கன்னி ராசி அன்பர்களே!  உங்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2014ஆம் ஆண்டின் முற்பாதி வரை வாழ்வில் பல்வேறு இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஜென்ம ராசிக்கு 2ஆம் வீட்டில் சனியும், ராகுவும் சஞ்சரிப்பதும் 8இல் கேது சஞ்சாரம் செய்வதும் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குருபகவானும் 10ஆம் வீட்டில் சஞசரிப்பதால் தொழில் உத்தியோகத்தில் நெருக்கடிகள் அதிகரிக்கும். ஆண்டின் முற்பாதி வரை எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. வரும் 13.06.2014 முதல் குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கவிருப்பதால் பணவரவுகள் தாராளமாக அமையும். குடும்பத்திலும் திருமணம் போன்ற சுப காரியங்களும் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். கடன்கள் யாவும் குறையும். கொடுக்கல்&வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறைந்து வரவேண்டிய லாபங்கள் கைக்கு வந்து சேரும். சிலருக்கு பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும். வரும் 21.06.2014 இல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் ராகு ஜென்ம ராசியிலும், கேது 7&லும் சஞ்சரிப்பதால் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. இந்த ஆண்டின் இறுதியில் 16.12.2014 ஏற்படவுள்ள சனி மாற்றத்தத்தினால் உங்களுக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஏழுரை சனி முழுவதுமாக முடிவடைந்து விடுவதால் உங்களின் பிரச்சனைகள் யாவும் ஒரு முடிவுக்கு வரும்.

தேக ஆரோக்கியம்
  உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றியபடியே இருக்கும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். உங்களின் முன் கோபத்தால் தேவையற்ற வாக்குவாதங்களும் குடும்பத்தில் பிரச்சனைகளும் ஏற்பட்டு மனநிம்மதி குறையும். பேச்சில் நிதானத்தை கடை பிடிக்கவும்.

குடும்பம் பொருளாதார நிலை
  கணவன்&மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்களும், சண்டை, சச்சரவுகளும் ஏற்படக் கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களும் தங்கள் பங்கிற்கு வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். ஆண்டின் தொடக்கத்தில் பணவரவில் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் பிற்பாதியில் தாராள தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் திருமண சுப  காரியங்கள் கை கூடும். புத்திர வழியிலும் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும்.

கொடுக்கல் வாங்கல்
  கொடுக்கல்&வாங்கலில் ஆண்டின் தொடக்கத்தில் நெருக்கடிகள் தோன்றினாலும் பிற்பாதியில் சரளமான நிலை ஏற்படும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. அவ்வப்போது தேவையற்ற வம்பு வழக்குகள் மற்றும் பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் எதிர் கொள்ளக் கூடிய வலிமையும் வல்லமையும் கூடும். கடன்கள் நிவர்த்தியாகும்.

தொழில் வியாபாரிகளுக்கு
  எதிர்பார்த்த லாபங்களை அடைவதில் சில சிக்கல்களை சந்திப்பீர்கள். நிறைய போட்டி பொறாமைகளை எதிர் கொள்ள நேரிடும். ஆண்டின் பிற்பாதியில் தொழில் வியாபாரத்திலிருந்த மந்த நிலை விலகும். லாபம் பெருகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு
  நிம்மதி குறைவுகள், வீண் பழிச் சொற்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டு பணியில் ஈடுபாடற்ற சூழ்நிலை உண்டாகும். ஆண்டின் பிற்பாதியில் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெறும். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்களும் அமையும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணி புரிய விரும்பு வோரின் விருப்பம் நிறைவேறும்.

அரசியல்வாதிகளுக்கு
  மக்களின் ஆதரவைப் பெறவே அரும்பாடுபட வேண்டியிருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடை தாமதங்கள் ஏற்படுவதால் மன நிம்மதி குறையும். ஆண்டின் பிற்பாதியில் ஒரளவுக்கு செல்வாக்கினைப் பெறுவீர்கள். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டியிருந்தாலும் மறைமுக வருவாய்கள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

விவசாயிகளுக்கு
  பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்தாலும், புழு பூச்சிகளின் தொல்லைகளால் வீண் விரயங்கள் அதிகரிக்கும். எதிர்பாராத ஏற்படக் கூடிய செலவுகளை சமாளிக்க கடன் வாங்க வேண்டி வரும். ஆண்டின் பிற்பாதியில் உங்களுக்குள்ள வம்பு பிரச்சனைகள் யாவும் விலகி லாபம் பெருகும். உழைப்பிற்கேற்ற அனுகூலமானப் பலன்களை அடைய முடியும். நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாகும்.

பெண்களுக்கு
    உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய காலமாகும். கணவன்&மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் எதிலும் ஒற்றுமையுடன் செயல் பட முடியும். பொன் பொருள் யாவும் சேரும். சிலருக்கு வீடு மனை வாங்கும் யோகங்களும் உண்டாகும். புத்திர பாக்கியமும் ஏற்பட்டு மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.

படிப்பு
  கல்வியில் முழு முயற்சியுடன் செயல்பட்டால் அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். ஆண்டின் தொடக்கத்தில் ஆரோக்கிய பாதிப்புகளால் விடுப்பு எடுக்க வேண்டியிருந்தாலும், பிற்பாதியில் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாரட்டுதல்களை பெறுவீர்கள்.

ஸ்பெகுலேஷன்
  லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவற்றில் ஆண்டின் முற்பாதியை விட பிற்பாதியில் தான் அனுகூலங்கள் உண்டாகும்.

ஜனவரி
  நல்ல ஞாபக சக்தியும், நிதானமும் கொண்ட உங்களுக்கு, ஜென்ம ராசியில் செவ்வாயும், 2இல் சனியும் ராகுவும் சஞ்சரிப்பது குடும்பத்தில் நிம்மதி குறைவை உண்டாக்கும் அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். 10இல் சஞ்சரிக்கும் குரு பகவான் வக்ரகதியிலிருப்பதால் பணவரவுகள் ஒரளவுக்கு திருப்திகரமாக இருக்கும். தொழில் வியாபாரத்திலும் எதிர் நீச்சல் போட்டாவது லாபத்தினை அடைவீர்கள். கொடுக்கல்&வாங்கலும் திருப்தியளிப்பதாக அமையும். துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 09.01.2014 அதிகாலை 02.38 மணி முதல் 11.01.2014 காலை 09.59 மணி வரை

பிப்ரவரி
  பிறரை வசீகரிக்கும் பேச்சுத் திறன் கொண்ட உங்களுக்கு, ஜென்ம ராசிக்கு 2இல் சனி ராகு சஞ்சரிப்பதால் கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்றாலும், மாத பிற்பாதியில் சூரியன் 6&ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் தொழில் வியாபார ரீதியாக அனுகூலங்களைப் பெறுவீர்கள். 10இல் சஞ்சரிக்கும் குரு வக்ர கதியிலிருப்பதால் பணம் பல வழிகளில் தேடி வரும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். உறவினர்களை அனுசரித்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முன் கோபத்தை குறைப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தவும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 05.02.2014 காலை 10.26 மணி முதல் 07.02.2014 மாலை 05.33 மணி வரை

மார்ச்
  பொறுமை, கன்னியம்,கட்டுப்பாட்டுடன் செயல்படக் கூடிய உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 5இல் சுக்கிரனும், 6இல் சூரியனும் சஞ்சரிப்பதால் பணவரவுகளில் இடையூறுகள் ஏற்படாது. குருவும் வக்ர கதியிலிருப்பதால் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களும் பணியில் நிம்மதியுடன் செயல் படமுடியும். 2இல் செவ்வாய் சனி ராகு சஞ்சரிப்பதால் வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனமுடனிருப்பதும், தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமலிருப்பதும் நல்லது. இம்மாதம் விநாயகரை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் 04.03.2014 மாலை 06.08 மணி முதல் 06.03.2014 இரவு 12.57 மணி வரை

ஏப்ரல்
  பிறரை வசீகரிக்கும் பேச்சுத் திறன் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2இல் சனியும் ராகுவும், 7இல் சூரியனும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உற்றார் உறவினர்களால் நிம்மதி குறைவு ஏற்படும். பயணங்களாலும் அலைச்சல்கள் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. வீண் விரயங்களும் ஏற்படும். இம்மாதம் தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 01.04.2014 அதிகாலை 01.47 மணி முதல் 03.04.2014 காலை 08.19 மணி வரை. மற்றும் 28.04.2014 காலை 09.30 மணி முதல் 30.04.2014 மதியம் 03.51 மணிவரை

மே
  எதிலும் பிறரை கலந்தாலோசித்து செயல் படக் கூடிய உங்களுக்கு 2ஆம் வீட்டில் சனியும் ராகுவும், 8இல் சூரியன் கேது சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கணவன்&மனைவியிடையேயும் வீண் வாக்கு வாதங்கள் சண்டை சச்சரவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்புகள் ஏற்பட்டு வீண் விரயங்களை எதிர் கொள்ள வேண்டி வரும். கொடுக்கல்&வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில் வியாபாரத்திலும் சற்று மந்த நிலை ஏற்படும். னுந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல் படுவது நல்லது. பணியில் வேலை பளு அதிகரிக்கும். சிவனை வழிபடவும்.

சந்திராஷ்டமம் 25.05 2014 மாலை  05.26 மணி முதல் 27.05.2014 இரவு 11.34 மணிவரை

ஜீன்
  தன்னை தாழ்த்தி பிறரை உயர்த்தும் பண்பு கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாயும் 2இல் சனியும் ராகுவும் சஞ்சரிப்பதால் குடும்பத்திலுள்ளவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. இது வரை 10&இல் சஞ்சரிக்கும் குரு வரும் 13ஆம் தேதி முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கவிருப்பதால் பண வரவுகளிலிருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் கைகூடும். வரும் 21&ஆம் தேதி ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் இது வரை 2,8 இல் சஞ்சரித்த ராகு கேது, ராகு ஜென்ம ராசியிலும், கேது 8லும் சஞ்சரிக்கவுள்ளனர், இதனால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது. துர்கை அம்மனை வழிபடுவது நற்பலனை தரும்.

சந்திராஷ்டமம் 22.06.2014 அதிகாலை 01.27 மணி முதல் 24.06.2014 காலை 07.22 மணி வரை

ஜீலை
    பிறரின் நலன் அறிந்து செயல் படக் கூடிய குணம் கொண்ட உங்களுக்கு ஏழுரை சனி தொடர்ந்தாலும் 10இல் சூரியன் புதனும், 11இல் குருவும் சஞ்சரிப்பதால் கடந்த கால  பிரச்சனைகள் யாவும் படிப்படியாக விலகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கொடுக்கல்&வாங்கலில் இருந்த நெருக்கடிகள் விலகி சரளமான நிலை உண்டாகும். தொழில் வியாபாரத்திலும் புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் சி-று சிறு பிரச்சனைகள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. இம்மாதம் தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 19.07.2014 காலை 09.34 மணி முதல் 21.07.2014 மதியம் 03.15 மணி வரை.

ஆகஸ்ட்
    பேச்சிலும், செயலிலும் பிறரை புண் படுத்தாத நற்குணம் கொண்ட உங்களுக்கு லாப ஸ்தானமான 11&இல் குரு, சூரியன் சஞ்சரிப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். பணி புரிபவர்களுக்கு எதிர் பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். பயணங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் அன்றாட பணிகளில் சுறு சுறுப்புடன் செயல்பட முடியும். உத்தியோகஸ்தர்கள் திறமைக்கேற்ற பாராட்டுதல்களையும், உயர்வுகளையும் பெற முடியும். கடன்களும் படிப்படியாக குறையும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 15.08.2014 மாலை 05.38 மணி முதல் 17.08.2014 இரவு 10.59 மணி வரை

செப்டம்பர்
  சூழ்நிலைக்கு தக்கவாறு  தன்னை மாற்றிக் கொள்ளும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் ராகு 2இல் சனி செவ்வாய் சஞ்சரிப்பதாலும், 12இல் சூரியன் சஞ்சாரம் செய்வதாலும், உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. குரு லாப ஸ்தானத்தில்  சஞ்சரிப்பதால் தாராள தன வரவுகள் ஏற்பட்டு குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடப்பது நல்லது. எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். சனிக்குரிய பரிகாரங்களை செய்யவும்.

சந்திராஷ்டமம் 12.09.2014 அதிகாலை 01.29 மணி முதல் 14.09.2014 காலை 06.39 மணி வரை.

அக்டோபர் 
  தன் கடமைகளிலிருந்து தவறாமல் பாடுபடும் உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதாலும், 3இல் செவ்வாயும், 11இல் குருவும் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், லாபமும் கிட்டும். பொருளாதாரமும் உயரும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களையும் மேற்கொள்வீர்கள். புதிய பூமி மனை, வண்டி வாகனங்கள் வாங்க கூடிய யோகமும் உண்டாகும். குடும்பத்லுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் குடும்பத்திலும் நிம்மதியான நிலையிருக்கும். தொழில் வியாபாரத்தில் போட்ட முதலீட்டிற்கேற்ற லாபத்தினை அடைய முடியும். சிவ பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 09.10.2014 காலை 09.21 மணி முதல் 11.10.2014 மதியம் 02.21 மணி வரை.

நவம்பர்
    எதையும் எளிதில் கற்றறியும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு லாபஸ்தானத்தில் குரு சஞ்சரிபப்பதால் இம்மாதத்தில் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். மாத பிற்பாதியில் சூரியனும் 3ம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் எதிலும் துணிவுடனும், தைரியத்துடனும் செயல்பட முடியும். கொடுக்கல்&வாங்கலில் சிறப்பான லாபம் அமையும். கொடுத்த கடன்களை வசூலிப்பதிலும் எந்த வித பிரச்சனையும் ஏற்படாது. தொழில் வியாபாரத்திலுருந்த போட்டிகள் விலகும். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள். விநாயகரை வழிபடவும்.

சந்திராஷ்டமம் 05.11.2014 மாலை 05.22 மணி முதல் 07.11.2014 இரவு 10.08 மணி வரை

டிசம்பர்
    மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசக் கூடிய உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&இல் சூரியன் சஞ்சரிப்பது 11&இல் குரு சஞ்சாரம் செய்வதும் நல்ல அமைப்பாகும். இதனால் அனுகூலமானப் பலன்களையே பெறுவீர்கள். இம்மாதம் 16&ஆம் தேதி ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் உங்களுக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும். ஏழரைச் சனி முடிவடைந்து விடும். சனி 3&ஆம் வீட்டிற்கு மாறுதலாவதால் எல்லா வகையிலும் ஏற்றங்கள் ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதோடு கொடுக்கல்&வாங்கலிலும் நல்ல லாபம் கிட்டும். தொழில் வியாபாரம் மேன்மையடையும். இம்மாதம் துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 03.12.2014 அதிகாலை 01.26 மணி முதல் 05.12.2014 காலை  05.58 மணி வரை மற்றும் 30.12.2014 காலை 09.35 மணி முதல் 01.01.2015 பகல் 01.58 மணி வரை.

உத்திரம் 2,3,4ம் பாதங்கள்
    சூரியனின் நட்சததிரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு அனுபவ அறிவு அதிகமிருக்கும். இந்த வருடத்தின் முற்பாதி வரை குடும்பத்தில் பிரச்சனைகள், தொழில் வியாபார ரீதியாக போட்டிகளை எதிர் கொள்ளக் கூடிய அமைப்பு, எடுக்கும் முயற்சிகளில் தடைகள் உண்டாகும் என்றாலும் ஆண்டின் பிற்பாதியில் ஒரளவுக்கு அனுகூலமானப் பலன்களை பெறுவீர்கள். பொருளாதார நிலை மேன்மையடைவதால் குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் குறையும். கொடுக்கல்&வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். பணியிலிருந்த நெருக்கடிகள், பிரச்சனைகள் குறையும்.

அஸ்தம்
    சந்திரனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு பரோபகார சிந்தனையும், இரக்க குணமும் இருக்கும். இந்த ஆண்டின் முற்பாதியில் நிறைய சோதனைகளையும், வேதனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாவதுடன் உடல் நிலையும் பாதிப்படையும். ஆண்டின் பிற்பாதியில் உங்களுக்குள்ள பிரச்சனைகளிலிருந்து படிப்படியான முன்னேற்றங்கள் உண்டாகி பொருளாதாரமும் உயர்வடையும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் உயர்வுகளும் உண்டாகும். தொழில் வியாபாரத்திலும் நல்ல லாபம் கிட்டும். குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

சித்திரை 1,2ம் பாதங்கள்
  செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு நடைமுறைக்கேற்றவாறு நடந்து கொள்ளக் கூடிய பண்பு இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் ஆண்டின் முற்பாதியில் தடை தாமதங்கள் உண்டாகும். எதிர் பார்க்கும் உதவிகளும் தக்க சமயத்திற்கு கிடைக்காமல் போகும். எதிலும் எதிர் நீச்சல் போட வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும். ஆண்டின் பிற்பாதியில் வாழ்வில் முன்னேற்றமும், தாராள தனவரவும் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். அசையும் அசையா சொத்துக்களும் சேரும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்  4,5,6,7,8
நிறம்  பச்சை, நீலம் 
கிழமை  புதன், சனி
கல்  மரகத பச்சை 
திசை  வடக்கு
தெய்வம் ஸ்ரீ விஷ்ணு

பரிகாரம்
    கன்னி ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஏழரை சனியில் பாத சனி தொடருவதால் சனிக்கிழமை தோறும் சனிக்குரிய பரிகாரங்களை செய்வது, தொடர்ந்து ஆஞ்ச நேயரை வழிபடுவது நல்லது. சர்ப கிரகங்களான ராகு கேது சாதகமற்று சஞ்சரிப்பதால் ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடுவது, தினமும் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது. குரு பகவான் 13.06.2014 வரை 10&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் குரு ப்ரீதி தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

No comments: