Rasi palangal

Thursday, July 14, 2016

குருப்பெயர்ச்சி பலன்கள் (2016-2017) மேஷம்
குருப்பெயர்ச்சி பலன்கள் (2016-2017)

மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

அஞ்சா நெஞ்சமும் துணிவும் தைரியமும் கொண்ட மேஷ ராசி நேயர்களே! ஆண்டுக்கோளான குரு பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு 6-ஆம் வீட்டில் 02.08.2016 முதல் 02-09-2017 வரை சஞ்சாரம் செய்யவிருப்பது சாதகமற்ற அமைப்பாகும். இதனால் பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும். தேவையற்ற பிரச்சினைகள், வம்பு, வழக்குகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக்கூடிய பாதிப்புகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி குறையும். கணவன் மனைவிடையே வீண் வாக்குவாதங்கள் தோன்றும். நண்பர்களும் எதிரிகளாக செயல்படுவதால் மன நிம்மதி குறையும். குரு பார்வை 2, 10, 12-ஆம் வீடுகளுக்கு இருப்பதாலும், கேது 11-ல் சஞ்சரிப்பதாலும் ஓரளவுக்கு எதையும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகளாலும் வீண் விரயங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது, பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகளில் தடைகள் ஏற்பட்டாலும் வேலைப்பளு குறைவாகவே இருக்கும். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவு கிட்டும். சனி 8-ல் சஞ்சரித்து அஷ்டம சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. ராகு 5-ல் சஞ்சரிப்பதால் பிள்ளைகளிடம் விட்டு- கொடுத்துச் செல்வது உத்தமம்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகியபடியே இருக்கும் என்றாலும், எதையும் சமாளித்து அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். மனைவி, பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடிய ஆரோக்கிய பாதிப்புகளால் குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாள் நோய்களுக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுப்பது நல்லது.

குடும்பம், பொருளாதார நிலை
கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்து விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் பிறருக்கு வீண் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். அசையும்- அசையா சொத்துகளால் வீண் செலவுகள் ஏற்படும்.

கொடுக்கல்- வாங்கல்
பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் ஈடுபட்டிருப்பவர்கள் பெரிய தொகைகளை எந்தவொரு காரணத்தைக் கொண்டும் பிறருக்குக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்க்கவும். உங்களுக்கு தேவையற்ற வம்பு, வழக்குகளும் அதிகரிக்கும். எதிலும் கவனமுடனிருப்பது நல்லது.

தொழில், வியாபாரம்
செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும் என்றாலும், வரவேண்டிய வாய்ப்புகளை கைநழுவிப் போகாமல் பாதுகாத்துக்கொள்ள முடியும். அபிவிருத்தி சாதகமாக இருக்கும். பொருளாதார நிலையில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலும் உண்டாகும். தொழிலாளர்களும் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவதால் மனசஞ்சலங்கள் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடை தாமதங்களுக்குப் பின் கிட்டும்.

உத்தியோகம்
பணியில் பிறர் செய்யும் தவறுகளுக்காக நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உடல் நிலையில் உண்டாகக் கூடிய பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடுவதால் வேலைபளுவும் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் செய்யும் கெடுபிடிகளால் மனநிம்மதி குறையும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தடைப்படும்.

பெண்கள்
உடல் நிலையில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது, உற்றார்- உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைக்கவும். குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்துகொள்வதைத் தவிர்க்கவும். பேச்சில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.

அரசியல்
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றினால் மட்டுமே அவர்களின் ஆதரவுடன் பதவியை தக்கவைத்துக்கொள்ள முடியும். எதிர்பார்க்கும் மாண்புமிகு பதவிகள் தாமதப்படும். கட்சிப் பணிகளுக்காக அதிக செலவுகள் செய்ய நேரிடும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்காது. போதிய நீர்வரத்தின்மையால் பயிர்கள் வாடும். பட்ட பாட்டிற்கு பலனின்றிப் போகும். வங்கிக் கடன்களை அடைக்க இயலாது. அரசு வழியில் வரவிருந்த மானிய உதவிகளும் தாமதப்படும். சேமிப்புகள் குறையும்.

கலைஞர்கள்
வரவேண்டிய வாய்ப்புகள் போட்டிகளால் கைநழுவிப்போகும். நினைத்த கதாபாத்திரத்திரங்களில் நடிக்க முடியாது. பொருளாதார நிலையிலும் இடையூறுகள் நிலவுவதால் சுகவாழ்வு, சொகுசுவாழ்வில் பாதிப்பு ஏற்படும். சக நடிகர்களுடன் கவனமுடன் பழகுவது நல்லது.

மாணவ- மாணவியர்
கல்வியில் சற்று ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. அரசு வழியில் வரவேண்டிய உதவிகள் தாமதப்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் தேடி வரும். உடன்பழகும் நண்பர்களால் சிறுசிறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்பதால் கவனம் தேவை. பயணங்களின்போது வேகத்தைக் குறைப்பது நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் கவனமுடன் இருக்கவும்.

குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 02-08-2016 முதல் 20-09-2016 வரை சஞ்சாரம்
குரு பகவான் பஞ்சமாதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் சஞ்சரித்தாலும் 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. கேது 11-ல் சஞ்சரிப்பதால் ஓரளவுக்கு நற்பலன்களை அடையமுடியும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். 8-ல் சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்திலும் நிம்மதிக் குறைவுகள் உண்டாகும். உற்றார் உறவினர்களும் தங்கள் பங்கிற்கு வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். மனைவி, பிள்ளைகளால் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் பிறருக்கு வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும். எந்தவொரு செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. பூர்வீக சொத்துகளால் எதிர்பார்க்கும் அனுகூலங்கள் தாமதப்படும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலில் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு கெடுபிடிகள் தோன்றும். வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும்.

குரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 21-09-2016 முதல் 25-11-2016 வரை சஞ்சாரம்
குரு பகவான் 4-ஆம் அதிபதியான சந்திரனின் நட்சத்திரத்தில் சஞ்சரித்தாலும் 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் இக்காலங்களிலும் தேவையற்ற பிரச்சினைகளையே சந்திக்க நேரிடும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. சனி 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்படும் என்றாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். பொருசிளாதார நிலையிலும் ஏற்ற இறக்கமான சூழ்நிலை நிலவுவதால் ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. செய்யும் தொழில், வியாபாரத்தில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் உதவியால் ஓரளவுக்கு லாபத்தைப் பெருக்க முடியும். போட்டிகளை சமாளிக்க வேண்டியிருக்கும். பயணங்களால் சற்று அலைச்சலும் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதும், பிறர் விஷயங்களில் தலையிடாதிருப்பதும் நல்லது.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 26-11-2016 முதல் 16-1-2017 வரை சஞ்சாரம்
குரு பகவான் ராசியாதிபதி செவ்வாயின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இது அவ்வளவு சாதக அமைப்பு என்று கூற முடியாது. கேது 11-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து நடப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது போன்றவற்றால் நற்பலனை அடையலாம். திருமண சுபகாரியகளுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றி கிட்டும். பணவரவுகளில் ஏற்றத் தாழ்வுகள் இருப்பதால் தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல் வாங்கலிலும் பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும். தொழில், வியாபார ரீதியாக மேற்கொள்ளும் புதிய முயற்சிகளில் சில இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உண்டாகக்கூடிய எதிர்பாராத இடமாற்றங்களால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிப்பதோடு நேரத்திற்கு உணவுண்ண முடியாத நிலை ஏற்படும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் துலா ராசியில் 17-01-2017 முதல் 22-02-2016 வரை சஞ்சாரம்
குரு பகவான் இக்காலங்களில் செவ்வாயின் நட்சத்திரத்தில் துலா ராசியில் அதிசாரமாக- ஜென்ம ராசிக்கு 7-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் பொருளாதார நிலையில் நல்ல மேன்மைகள் உண்டாகும். கடந்த காலங்களிலிருந்த பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகி குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தடபுடலாக நடைபெறும். கடன்கள் குறையும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் உதவி கிட்டும். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். பொன், பொருள் சேரும். கேது 11-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை ஏற்படும். போட்டிகளும் மறைமுக எதிர்ப்புகளும் குறையும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்களும் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு உயர்வடைவார்கள். சனி பகவான் 8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது.

குரு பகவான் வக்ர கதியில் 23.02.2017 முதல் 01.06.2017 வரை
குரு பகவான் வக்ரகதியிலிருப்பதால் இக்காலங்களிலும் நன்மையான பலன்களை அடையமுடியும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் குடும்பத்தில் நடைபெறும். தாராள தனவரவுகளால் குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் குறையும். சிலருக்கு பூர்வீக சொத்துகளால் அனுகூலம் கிட்டும். புதிய பூமி, மனை, வண்டி வாகனங்களையும் வாங்க முடியும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. செய்யும் தொழில், வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். போட்டி, பொறாமைகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் அதிகரிப்பதால் எந்தவொரு பணியிலும் முழுமையாக ஈடுபடமுடியும்.

குரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 02-06-2017 முதல் 15-07-2017 வரை சஞ்சாரம்
குரு உங்கள் ராசிக்கு 4-ஆம் அதிபதி சந்திரனின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்கள் நன்மை, தீமை நிறைந்ததாகவே இருக்கும். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்கடங்கியே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஜல சம்பந்தப்பட்ட பாதிப்புகள், வயிறு கோளாறு போன்றவை தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். மனைவி, பிள்ளைகளின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது. மணமாகாதவர்களுக்கு வரன் அமையும் விஷயங்களில் தாமத நிலை உண்டாகும். செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமைகள் அதிகரிக்கும். வரவேண்டிய வாய்ப்புகளை கண்ணெதிரிலேயே பிறர் தட்டிச் செல்வதால் நிம்மதிக் குறைவு உண்டாகும். தொழிலாளர்களுக்குத் தரவேண்டிய சம்பள பாக்கிகள் நிலுவையில் இருக்கும். நண்பர்களே விரோதிகளாக மாறுவார்கள். சனி 8-ல் சஞ்சரிப்பதால் எதிலும் கவனமுடனிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 16-07-2017 முதல் 02-09-2017 வரை சஞ்சாரம்
குரு பகவான் ராசியாதிபதி செவ்வாயின் நட்சத்திரத்தில், ஜென்ம ராசிக்கு 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளார். இதனால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். பொருளாதார நிலை அவ்வளவு சாதகமாக இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்பு ஏற்பட்டு மருத்துவ செலவுகள் ஏற்படும். உணவு விஷயத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களால் மன நிம்மதி குறையக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். உற்றார்- உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. திருமண சுபகாரியகளுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றி கிட்டும். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வரும் 27-07-2017-ல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் கேது 10-ல் சஞ்சரிக்கவிருப்பதால், எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்றுவிட முடியும். கொடுக்கல்- வாங்கலில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் நிறைய போட்டிகளை எதிர்கொண்டே லாபத்தினை அடைய முடியும்.

நட்சத்திரப்பலன்

அஸ்வினி
மேஷ ராசியில் கேதுவின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் ஜென்ம ராசிக்கு 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பாகும். இதனால் பொருளாதார நிலையில் நெருக்கடிகள் ஏற்படும். எந்தவொரு காரியத்திலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். எதிர்பாராத உதவிகள் சில அவ்வப்போது கிடைக்கப் பெறுவதால் கடனில்லாத கண்ணிய வாழ்க்கை வாழமுடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவது, உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

பரணி
மேஷ ராசியில் சுக்கிரனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தேவையற்ற வீண் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். பண வரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தில் கணவன், மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாகும். முன்கோபத்தைக் குறைந்து பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.

கிருத்திகை 1-ஆம் பாதம்
மேஷ ராசியில் சூரியனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6-ல் குரு சஞ்சரிப்பதால் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கணவன்- மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக்கூடிய பாதிப்புகளால் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழிலில் சுமாரான லாபம் கிட்டும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்: 1, 2, 3, 9, 10, 11, 12
நிறம் : ஆழ் சிவப்பு
கிழமை: செவ்வாய்
கல்: பவளம்
திசை: தெற்கு
தெய்வம்: முருகன்

பரிகாரம்
மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், வியாழக் கிழமைகளில் விரதமிருந்து குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலையை மாலையாகக் கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது, தானம் போன்றவற்றை காலைப் பொழுதிலும் (வியாழக் கிழமைகளில்) மந்திர ஜெபங்களை மாலைப் பொழுதிலும் செய்வது உத்தமம். சனி 8-ஆம் வீட்டில் சஞ்சரித்து அஷ்டமசனி நடைபெறுவதால் சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழு மலையில் வீற்றிருக்கும் ஸ்ரீபாலாஜி வெங்கடாசலபதியை வழிபடுவது, அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது, சனிக்கிழமைகளில் விரதமிருந்து அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றுவது, சனிக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீலநிற சங்குப் பூக்கள் கருங்குவளைப் பூக்களால் அர்ச்சனை செய்வது நல்லது. ராகு 5-ல் சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மற்றும் மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்வது, தேங்காய், உளுந்து, நாணயங்கள் போன்றவற்றை தொழுநோயாளிகளுக்கு தானம் கொடுப்பது உத்தமம்.

No comments: