Rasi palangal

Sunday, July 17, 2016

குருப்பெயர்ச்சி பலன்கள் கடகம்

குருப்பெயர்ச்சி பலன்கள் கடகம்குருப்பெயர்ச்சி பலன்கள் கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு வெற்றிக் கொடியினை நாட்டக் கூடிய ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே! உங்கள் ஜென்ம ராசிக்கு 6, 9-க்கு அதிபதியான குரு 02-08-2016 முதல் 02-09-2017 வரை முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளார். இதனால் எதிலும் நன்மை, தீமை கலந்த பலன்களையே பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போடவேண்டியிருக்கும். பணவரவுகளில் சுமாரான நிலை இருந்தாலும் குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்துவிட முடியும். சர்ப்ப கிரகமான ராகு 2லும், கேது 8லும் சஞ்சரிக்கவிருப்பதால் கணவன், மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக்கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். சனி 5-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் புத்திரவழியில் தேவையற்ற மனகவலைகள், பூர்வீக சொத்துக்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாகக் கொடுப்பதைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் பல போட்டிகளை சமாளித்தே எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கப் பெற்றாலும் வேலைப்பளு அதிகமாக இருக்கும். குரு பார்வை 7, 9, 11-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். எதிர்பாராத உதவிகள் தேடி வரும்.

உடல் ஆரோக்கியம்
உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். புத்திர வழியில் மனசஞ்சலங்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாவதால் மனநிம்மதி குறைவடையும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களும்  விரோதிகளாவார்கள்.

குடும்பம், பொருளாதாரநிலை
கணவன்- மனைவி அனுசரித்து நடந்துகொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். பண வரவுகள் சுமாராக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று நிலைமையை சமாளிப்பீர்கள். சொந்தமாக பூமி, மனை, வண்டி, வாகனம் போன்றவற்றை வாங்கும் விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது.

கொடுக்கல்- வாங்கல்
பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவக்கூடிய காலம் என்பதால் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. பிறரை நம்பி பணவிஷயத்தில் முன்ஜாமீன் கொடுப்பதால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள், வம்பு வழக்குகளில் இழுபறி நிலைகள் உண்டாகும். கொடுத்த கடன்கள் தடைகளுக்குப் பின் வசூலாகும்.

தொழில், வியாபாரம்
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்ட முதலீட்டினை எடுத்துவிடக்கூடிய அளவிற்கு லாபம் கிட்டும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். கூட்டாளிகளிடம் சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் அபிவிருத்தியைப் பெருக்குவதற்கு உதவிகரமாகவே செயல்படுவார்கள். புதிய முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே லாபத்தினைப் பெற முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதில் கவனம் தேவை.

உத்தியோகம்
பணியில் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். உயரதிகாரிகளிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்தாலே பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்றே தாமதப்படும்.

பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொண்டால் மட்டுமே அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் குடும்பத் தேவைகளைபூர்த்தி செய்துவிடமுடியும். கணவரிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. புத்திரர்களால் வீண் மனசஞ்சலங்கள் உண்டாகும்.

அரசியல்
பெயர், புகழுக்கு பஞ்சம் இருக்காது என்றாலும் வருவாய் குறைவடையும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்கள் மேற் கொள்ள வேண்டி வருவதால் வீண் செலவுகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உடனிருப்பவர்களிடம் பேசும் போது பேச்சில் நிதானம் தேவை.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் சுமாராக இருப்பதால் பொருளாதார நிலையும் சுமாராகத்தானிருக்கும். பூமி, மனை போன்றவற்றால் சிறுசிறு வீண் செலவுகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். பங்காளிகளிடம் விட்டுகொடுத்து நடப்பது நல்லது.

கலைஞர்கள்
புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவதில் தாமத நிலை உண்டாகும். கையிலிருக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. பணவரவுகளிலும் சுமாரான நிலையே இருக்கும். ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக்கொண்டால் கடன்கள் குறையும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும்.

மாணவ- மாணவியர்
கல்வியில் முழு ஈடுபாடுட்டுடன் செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறமுடியும். முடிந்தவரை தேவையற்ற நட்புகளைத் தவிர்ப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போடவேண்டியிருக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் மானிய உதவிகள் தாமதப்படும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும்.

குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 02-08-2016 முதல் 20-09-2016 வரை சஞ்சாரம்
ஜென்ம ராசிக்கு 6, 9-க்கு அதிபதியான குருபகவான் சூரியனின் நட்சத்திரத்தில் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் பொருளாதார ரீதியாக தட்டுபாடுகள் ஏற்படும். எடுக்கும் எந்த காரியத்தையும் எளிதில் செய்துமுடிக்க முடியாது. உற்றார்-  உறவினர்களின் வருகை  வரவுக்கு மீறிய செலவுகளை உண்டாக்கும். முன்கோபத்தை குறைத்துக்கொள்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். திருமண முயற்சிகளில் தடை தாமதம் உண்டாகும். திருமண மானவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாக சில மருத்துவ செலவுகளை செய்யவேண்டி வரும். உத்தியோகஸ்தர்கள் பணிகளை சிரமப்பட்டே செய்து முடிக்க முடியும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கலிலும் பிரச்சினைகள் உண்டாகும். கொடுத்த கடன்களை வசூலிக்க முடியாது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர் பார்க்கும் கடனுதவிகள் தாமதப்படுவதால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியாத நிலை உண்டாகும்.

குரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 21-09-2016 முதல் 25-11-2016 வரை சஞ்சாரம்
ஜென்ம ராசிக்கு 6, 9-க்கு அதிபதியான குருபகவான் ராசியாதிபதி சந்திரனின் நட்சத்திரத்தில் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சாரம் செய்வதாலும், ராகு- கேது 2, 8-ல் சஞ்சரிப்பதாலும் குடும்பத்தில் ஒற்றுமைக்குறைவு, தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும். நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக்கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். பண வரவுகளில் நெருக்கடிகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு தேவையற்ற இடமாற்றங்கள் ஏற்பட்டு அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போடவேண்டியிருக்கும். தொழில் வியாபாரம் செய்யபவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களை தவிர்த்துவிடுவது நல்லது. அரசுவழியில் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 26-11-2016 முதல் 16-1-2017 வரை சஞ்சாரம்
குரு பகவான் தனக்கு நட்பு கிரகமான செவ்வாயின் நட்சத்திரத்தில் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். உடல் நிலையில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. கணவன், மனைவி இடையே தேவையற்ற வாக்குவாதங்கள் தோன்றி ஒற்றுமை குறையும். பொருளாதார தட்டுப்பாடுகளால் நிம்மதிக் குறைவும், கடன்கள் வாங்க வேண்டிய சூழ்நிலைகளும் ஏற்படும். புத்திரவழியில் வீண் செலவுகள் உண்டாகும். உற்றார்- உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகளும் தேவையற்ற பிரச்சினைகளும் தோன்றி பிரிவினைகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிப்பதால் உடல் நிலை சோர்வடையும். அடிக்கடி பயணங்களும் செல்ல வேண்டி வருவதால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைப்படும். தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி உண்டாவதால் அவர்கள் பணிக்கு வருவதிலும் சிக்கல்கள் உண்டாகும். 

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் துலா ராசியில் 17-01-2017 முதல் 22-02-2017 வரை சஞ்சாரம்
குருபகவான் தனக்கு நட்பு கிரகமான செவ்வாயின் நட்சத்திரத்தில் சுக ஸ்தானமான 4-ல் அதிசாரமாக சஞ்சாரம் செய்வதால் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். எந்த காரியத்திலும் வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்பட முடியும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்கடங்கியே காணப்படும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். உடன் பிறப்புகளால் எதிர்பாராத அனுகூலப்பலனைப் பெற முடியும். கொடுக்கல்- வாங்கலில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தாங்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்கப்பெற்றாலும், உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல் பாடுபட வேண்டியிருக்கும். அதிகாரிகளின் ஆதரவு சற்றே மனஅமைதியை உண்டாக்கும். அரசியல்வாதிகளுக்கு பெயர் புகழ் உயரும் என்றாலும், மக்களின் தேவைகளை உணர்ந்து பாடுபட்டால்தான் மக்களின் ஆதரவைத் தொடர்ந்து பெறமுடியும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் அமையும்.

குரு பகவான் வக்ரகதியில் 23-02-2017 முதல் 01-06-2017 வரை
குருபகவான் வக்ரகதியிலிருப்பது சாதகமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சரிப்பதால் குடும்ப வாழ்வில் பல பிரச்சினைகள் ஏற்படும் என்றாலும் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் மகிழ்ச்சியான பலன்களை அடைய முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று நல்ல முன்னேற்றங்களை அடைவார்கள். வெளியூர், வெளிநாடு தொடர்பு உடையவற்றால் அபிரிமிதமான லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணிகளை திறம்பட எளிதில் செய்து முடித்து அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். எதிர்பாராத தன வரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடந்த கால கடன்களும் நிவர்த்தியாகும்.

குரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 02-06-2017 முதல் 15-07-2017 வரை சஞ்சாரம்
குருபகவான் ராசியாதிபதி சந்திரனின் நட்சத்திரத்தில் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சாரம் செய்வதால் உடல் நிலையில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும். பெண்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் சிரமம் உண்டாகும். குடும்பத்திலும் ஒற்றுமை குறையும். உறவினர்கள் சாதகமாக செயல்படுவதால் சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற இடமாற்றத்தை சந்தித்தாலும், கௌரவப்பதவிகள் கிடைக்கப் பெறும். பூர்வீக சொத்து வழக்குகளால் லாபமற்ற நிலையே உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் ஓரளவுக்கு அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ள முடியும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று கவனமுடன் செய்ல்படுவது நல்லது.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 16-07-2017 முதல் 02-09-2017 வரை சஞ்சாரம்
குரு தனக்கு நட்பு கிரகமான செவ்வாயின் நட்சத்திரத்தில் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சாரம் செய்வதால் சற்று சோதனையான பலன்களையே எதிர்கொள்ள நேரிடும். பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும். நண்பர்களே எதிரிகளாக மாறக்கூடிய சூழ்நிலைகளும் உண்டாகும். பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் என்னதான் பாடுபட்டாலும் அதற்கான முழு பலனை அடைய முடியாது. எதிர்பார்த்த உயர்வுகள் தாமதப்படுவதால் எதையும் முழுமையாக செயல்படுத்த முடியாத நிலை உண்டாகும். எடுக்கும் காரியங்களில் வீண் விரயமும், தடை தாமதங்களும் ஏற்படும். பூர்வீக சொத்துகளால் அலைச்சல் அதிகரிக்கும். எதிரிகளின் பலம் கூடி உங்கள் பலம் குறையக்கூடிய காலமாக அமையும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்ததால் அலைச்சல்களை குறைத்துகொள்ள முடியும்.

நட்சத்திரப்பலன்

புனர்பூசம் 4-ஆம் பாதம்
கடக ராசியில் குருவின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும் சனி 5-ல் சஞ்சரிப்பதால் ஏற்ற இறக்கமான பலனைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை சுமாராக இருந்தாலும் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொண்டால் குடும்பத்தேவைகளைப் பூர்த்தி செய்துவிட முடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது.

பூசம்
கடக ராசியில் சனியின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு திருமண சுபகாரியங்களில் தடை தாமதம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றமான நிலையினை அடைய முடியும். பணவரவுகள் திருப்திகரமாகவே இருக்கும். ஆடம்பரச் செலவுகளை சற்றே குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். பூர்வீக சொத்துகளால் சற்றே வீண் செலவுகள் ஏற்படும்.

ஆயில்யம் 
கடக ராசியில் புதனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும்.  பிறருக்கு வாக்குறுதிகள் கொடுப்பதைத் தவிர்க்கவும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்களில் தாமத நிலை ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திருப்தியான நிலையே இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பொதுநலக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்:       1, 2, 3, 9, 10, 11, 12, 18
நிறம்       : வெள்ளை, சிவப்பு
கிழமை: திங்கள், வியாழன்
கல்: முத்து
திசை: வடகிழக்கு
தெய்வம்: வெங்கடாசலபதி

பரிகாரம்
கடக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3-ல் குரு சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலையை மாலையாகக்கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது, தானம் போன்றவற்றை காலைப் பொழுதிலும் மந்திர ஜெபங்களை மாலைப் பொழுதிலும் செய்வது, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, கைகுட்டை உபயோகிப்பது, மஞ்சள்நிறப் பூக்களை அணிவது நல்லது. வெண் முல்லை மலர்களால் குருவுக்கு அர்ச்சனை செய்வது, ""ஓம் ஜீரம் ஜரிம் ஜீரௌம் ச குரவே நமஹ"" என்ற குரு மந்திரத்தை துதிப்பது, புஷ்பராகக் கல்லை மோதிரத்தில் பதித்து அணிந்து கொள்வது உத்தமம். ராகு 2-ல் சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, சிவன் மற்றும் சண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்குவது நல்லது. கேது 8-ல் சஞ்சரிப்பதால் தினமும் விநாயகரை வழிபடுவது, கேது மந்திரங்களைக் கூறுவது, ""ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் ச கேதவ நமஹ"" என்ற பீஜ மந்திரத்தைக் கூறிவருவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.

No comments: