Saturday, July 23, 2016

குருப்பெயர்ச்சி பலன்கள் தனுசு


தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது பாடுபடும் ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே! உங்கள் ராசியாதிபதி குரு 02-08-2016 முதல் 02-09-2017 வரை ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவுள்ளார். இது செய்யும் தொழில். உத்தியோக ரீதியாக நெருக்கடிகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். கேது 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு இடையூறுகளை சந்தித்தாலும் தடைகளுக்குப் பின் வெற்றியினைப் பெற்ற விட முடியும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்துச் செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவது, பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்று தாமதப்படும். சில நேரங்களில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். எந்தவொரு விஷயத்திலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். ஜென்ம ராசிக்கு 12-ல் சனி சஞ்சரித்து ஏழரைச்சனியில் விரயச்சனி நடைபெறுவதால் எதிர்பாராத வீண்விரயங்களை எதிர்கொள்ளகூடிய சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் உண்டாகும். உடன் இருப்பவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

உடல் ஆரோக்கியம்
உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றும். உடல் அசதி, கை, கால் மூட்டுகளில் வலி மனநிம்மதிக் குறைவு போன்றவை உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களால் உண்டாகக் கூடிய மருத்துவச் செலவுகளால் வீண் விரயங்கள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் ஏற்படும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை
குடும்ப ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்கள் சில தடைகளுக்குப் பின் நிறைவேறும். உற்றார் உறவினர்களிடையே வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வீடு, வாகனம் போன்றவற்றால் அனுகூலங்கள் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறும். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது.

கொடுக்கல்- வாங்கல்
பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும். கொடுத்த கடன்களை சில தடைகளுக்குப் பின்புதான் திரும்பப் பெறமுடியும். அதே போல் பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும்.

தொழில், வியாபாரம்
செய்யும் தொழில், வியாபாரத்தில் நிறைய போட்டிகளை சந்திக்க வேண்டி வரும். இதனால் வரவேண்டிய வாய்ப்புகளும் கைநழுவிப் போகும். கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாட்டினால் அபிவிருத்தி குறையும். தொழிலாளர்களும் தங்கள் பங்கிற்கு வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். அவர்களுக்கு தரவேண்டிய சம்பளத் தொகைகளில் தடைகள் ஏற்படும். அரசு வழியில் நிம்மதிக்குறைவு உண்டாகும்.

உத்தியோகம்
பணியில் பிறர் செய்யும் தவறுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். உயரதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியாது. எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வுகளை கண்ணெதிரிலேயே பிறர் தட்டிச்செல்வதால் மன நிம்மதி குறையும். எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.

பெண்கள்
உடல் நிலையில் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். புத்திரவழியில் சிறுசிறு நிம்மதிக் குறைவுகள் உண்டாகும். அசையும்- அசையா சொத்துகளால் வீண்செலவு ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும்.

அரசியல்
உடனிருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் தடைகள் ஏற்படும். மக்களின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்ள அரும்பாடு படவேண்டியிருக்கும். கட்சிப் பணிகளுக்காக நிறைய வீண் செலவுகளும் உண்டாகும்.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் சுமாராகத்தான் இருக்கும். போதிய நீர்வரத்து இல்லாததால் பயிர்கள் கருகும் நிலை உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். போட்ட முதலீட்டினை எடுக்கவே நிறைய உழைப்பினை மேற்கொள்ள நேரிடும்.

கலைஞர்கள்
எதிர்பார்த்த கதாபாத்திரங்களுக்காக காத்திருக்காமல் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. பண வரவுகளில் தாமத நிலை ஏற்படுவதால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு பாதிப்படையும். உடனிருப்பவர்களே  போட்டியாளர்களாக மாறுவார்கள். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அலைச்சல்கள் உண்டாகும்.

மாணவ- மாணவியர்
கல்வியில் மந்தநிலை ஏற்படக் கூடிய காலம் என்பதால் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த அளவிற்கு மதிப்பெண்களைப் பெற முடியாவிட்டாலும் தேர்ச்சியடையும் அளவிற்கு மதிப்பெண்கள் கிடைக்கும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். அரசு வழியில் கிடைக்கவேண்டிய மானியத் தொகைகள் சற்று தாமதப்படும்.

குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 02-08-2016 முதல் 20-09-2016 வரை சஞ்சாரம்
குரு பகவான் பாக்கிய ஸ்தானாதிபதியாகிய சூரியனின் நட்சத்திரத்தில் ஜீவனஸ்தானமான 10-ல் சஞ்சாரம் செய்கிறார். இதுமட்டுமின்றி ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானமான 12-ல் சனி சஞ்சரிப்பதால் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக் கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப் பிடிப்பது நல்லது. உற்றார்- உறவினர்களையும் அனுசரித்துச் செல்ல வேண்டி வரும். பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரத்திலும் நிறைய போட்டிகள் நிலவும். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள்.

குரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 21-09-2016 முதல் 25-11-2016 வரை சஞ்சாரம்
ஜென்ம ராசிக்கு அட்டம ஸ்தானாதிபதியான சந்திரனின் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் செய்வதால் ஓரளவுக்கு சுமாரான பலன்களையே பெற முடியும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகக் கூடிய காலம் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உற்றார்- உறவினர்களால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பல பொதுநலக் காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். பணம் கொடுக்கல், வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் அதன்மூலம் லாபத்தை அடைய முடியும். புத்திர வழியில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் பெரிய கெடுதி இல்லை. தொழில், வியாபாரத்தில் எதிர் நீச்சல் போட்டாவது ஏற்றத்தை அடைவீர்கள். கூட்டாளிகளால் ஓரளவுக்கு சாதகப் பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனத்தை செலுத்துவது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்று தாமதமாகக் கிடைக்கும். பொருளாதாரநிலை தேவைக்கேற்றபடி இருக்கும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 26-11-2016 முதல் 16-1-2017 வரை சஞ்சாரம்
குரு 5, 12-க்கு அதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் 10-ல் சஞ்சரிப்பது தொழில், வியாபார ரீதியாக வீண் விரயங்களையும், நெருக்கடிகளையும் ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும், செவ்வாய் உங்கள் ராசியாதிபதி குருவுக்கு நட்பு கிரகம் என்பதால் எதையும் சமாளிக்கும் வலிமையும் வல்லமையும் உண்டாகும். ஜென்மராசிக்கு 12-ல் சனி சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். கணவன், மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்குப் பல முறை சிந்தித்துச் செயல்படுவது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் சிறப்பாகவே இருக்கும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் இழுபறி நிலையிருந்தாலும் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் பணியில் நெருக்கடிகளைச் சந்தித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் துலா ராசியில் 17-01-2017 முதல் 22-02-2017 வரை சஞ்சாரம்
குரு பகவான் இக்காலங்களில் அதிசாரமாக லாபஸ்தானமான 11-ஆம் வீட்டில் தனக்கு நட்பு கிரகமான செவ்வாயின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இதனால் கடந்த காலப் பிரச்சினைகள் குறையும். பணவரவுகளிலிருந்த தடைகள் விலகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளிலும் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் தேடி வரும். பொன், பொருள் சேரும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். வெளியூர், வெளிநாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். 

குரு பகவான் வக்ர கதியில் 23-02-2017 முதல் 01-06-2017 வரை
குரு பகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலையினை அடைய முடியும். புதிய கூட்டாளிகள் சேருவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்களும் பணியில் மன நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்த்துக் காத்திருந்த ஊதிய உயர்வு, இடமாற்றம் போன்றவையும் கிடைக்கப் பெறும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். உத்தியோகரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்திலும் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உங்களுக்கு ஏழரைச் சனியில் விரயச் சனி நடைபெறுவதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துகளல் ஓரளவுக்கு லாபம் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். 

குரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 02-06-2017 முதல் 15-07-2017 வரை சஞ்சாரம்
குரு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் நன்மை- தீமை கலந்த பலன்களையே பெறமுடியும். உடல் நிலையில் சற்று அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. சனி சாதகமற்று சஞ்சரிப்பதால் வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை. கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதும் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும் நற்பலனைத் தரும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் கேது 3-ல் இருப்பதால் எதையும் சமாளிக்க முடியும். புத்திர வழியில் மனக்கவலைகள் தோன்றி மறையும். பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு விரயங்களும் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் தேவையற்ற பயணங்களையும் பெரிய முதலீடுகளையும் தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகளாலும் வீண் பிரச்சினைகள் உண்டாகும். தொழிலில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருள் தேக்கம் உண்டாகாது. உத்தியோகஸ்தர்கள் உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைப் பளுவை குறைத்துக் கொள்ள முடியும். தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 16.07.2017 முதல் 02.09.2017 வரை சஞ்சாரம்
குரு பகவான் செவ்வாயின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் இக்காலங்களிலும் ஏற்ற இறக்கமான பலன்களையே பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தினரால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். 27-07-2017-ல் ஏற்படவுள்ள சர்ப்ப கிரக மாற்றத்தால் கேது 2-ல், ராகு 8-ல் சஞ்சரிக்கவிருப்பதால் குடும்பத்திலுள்ள வர்களை அனுசரித்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று எதையும் சமாளிக்க முடியும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் நெருக்கடிகள் உண்டாவதோடு போட்டி பொறாமைகள் அதிகரிப்பதால் வரவேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப் போகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் அனுகூலம் கிட்டும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. 

நட்சத்திரப்பலன்

மூலம்
தனுசு ராசியில் கேதுவின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சுமாராகத் தானிருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். மணமாகாதவர்களுக்கு வரன்கள் கிடைப்பதில் தாமத நிலை உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கடன்கள் சற்றே குறையும்.

பூராடம்
தனுசு ராசியில் சுக்கிரனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 10-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நெருக்கடிகள் ஏற்படும். போட்டி பொறாமைகள் அதிகரிப்பதால் வரவேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப் போகும் என்றாலும் எதையும் சமாளித்து விடுவீர்கள். பணவரவுகளிலும் சுமாரான நிலையே இருக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடனில்லாமல் வாழ முடியும். உத்தியோகத்தில் வேலைப் பளு அதிகரிக்கும்.

உத்திராடம் 1-ஆம் பாதம்
தனுசு ராசியில் சூரியனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு ஜீவன ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்றுவதில் தடைகள் ஏற்படும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் மட்டுமே வெற்றியினைப் பெறமுடியும். பணவரவுகளிலும் சுமாரான நிலையே இருக்கும் என்றாலும் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகி விடும். கொடுக்கல், வாங்கல் போன்றவற்றில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்     :    1, 2, 3, 9, 10, 11, 12
நிறம்:    மஞ்சள், பச்சை
கிழமை:     திங்கள், வியாழன்
கல்:         புஷ்ப ராகம்
திசை:     வடகிழக்கு
தெய்வம்:     தட்சிணாமூர்த்தி

பரிகாரம்
தனுசு ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணா மூர்த்திக்கு கொண்டைக்கடலையை மாலையாகக் கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது, தானம் போன்றவற்றை காலைப் பொழுதிலும் மந்திர ஜெபங்களை மாலைப் பொழுதிலும் செய்வது, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, கைகுட்டை உபயோகிப்பது, மஞ்சள் நிற பூக்களை அணிவது, வெண் முல்லை மலர்களால் குருவுக்கு அர்ச்சனை செய்வது, ""ஓம் ஜீரம் ஜரிம் ஜீரௌம் ச குரவே நமஹ"" என்ற குரு மந்திரத்தை துதிப்பது, புஷ்பராகக் கல்லை மோதிரத்தில் பதித்து அணிந்து கொள்வது உத்தமம். ஏழரைச் சனி நடைபெறுவதால் ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கும் முடிந்த உதவிகளைச் செய்வது, அனுமனை வழிபடுவது, அனுமன் துதிகளைக் கூறுவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, நல்லெண்ணெய், எள், கடுகு, சமையல் பாத்திரங்கள், குடை, செருப்பு, நீல மலர்கள் ஆகியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்வது, சனியின் பீஜ மந்திரமான ""ஹ்ரீம் ஸ்ரீம் க்ரஹ சக்ரவர்த்தினே, சனைச்சராய க்லிம் இம் சஹ ஸ்வாஹா"" என ஜெபிப்பது, நீலக்கல் மோதிரம் அணிவது நல்லது.

No comments: