Rasi palangal

Monday, July 25, 2016

குருப்பெயர்ச்சி பலன்கள் கும்பம்


(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)


எளிதில் உணர்ச்சிவசப்பட்டு கோபம் கொள்ளும் குணம்கொண்ட கும்ப ராசி நேயர்களே! உங்கள் ஜென்மராசிக்கு 2, 11-க்கு அதிபதியான குரு அஷ்டம  ஸ்தானமான 8-ஆம் வீட்டில் 02-08-2016 முதல் 02-09-2017 வரை சஞ்சாரம் செய்யவுள்ளார். இது சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதனால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும் என்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துகொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது, உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாவதோடு குடும்பத் திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். அசையும்- அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்களை எதிர்கொள்ள நேரிடும். சனியும் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபார ரீதியாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. மந்த நிலை நிலவினாலும் பொருள் தேக்கம் ஏற்படாமல் ஒரளவுக்கு லாபம் கிட்டும். தேவையற்ற அலைச்சல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தி லிருப்பவர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளை கண்ணெதிரிலேயே பிறர் தட்டிச் செல்வார்கள். குரு பார்வை 2, 4, 12-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் குடும்ப வாழ்வில் ஓரளவுக்கு சுபிட்சமும் ஒற்றுமையும் நிலவும். 

உடல் ஆரோக்கியம்
உடல் நிலை சுமாராகத்தானிருக்கும் சில நேரங்களில் சிறப்பாக இருந்தாலும் பல நேரங்களில் ஆரோக்கிய பாதிப்பினை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன்களாலும் உடல் நிலை சோர்வடையும். வேலைப்பளுவும் அதிகரிக்கும். குடும்பத்திலுள்ளவர்களுக்கு உண்டாகக் கூடிய பாதிப்புகளால் வீண் செலவுகள் அதிகரிக்கும்.

குடும்பம், பொருளாதார நிலை
குடும்ப ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். ஏதாவது வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பணவரவுகளில் நெருக்கடிகள் தோன்றும் என்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்ய கடன்வாங்க வேண்டியிருக்கும். முடிந்தவரை ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கும்.

கொடுக்கல்- வாங்கல்
பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் பிறரை நம்பி கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பண விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்ததைக் கேட்டால் அடுத்தது பகை என்பது போலாகும். வீண் விரயங்கள் உண்டாகும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும்.

தொழில், வியாபாரம்
தொழில், வியாபாரம் ஓரளவுக்கு முன்னேற்றமளிப்பதாக இருந்தாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் கவனம் தேவை. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் அபிவிருத்தியைப் பெருக்க முடியும். தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொள்வதால் தொழிலில் முடக்கம் ஏற்படாது. அரசு வழியில் உதவிகள் தாமதப்படும்.

உத்தியோகம்
பணியில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உடல் நலக்குறைவுகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடுவதால் வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சுமாராகத் தானிருக்கும். சில நேரங்களில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க நேரிடும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், அஜீரணக் கோளாறு, உடல் சோர்வு போன்றவை உண்டாகும். உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. திருமணமாகாதவர்களுக்கு வரன்கள் கிடைப்பதில் தாமத நிலை ஏற்படும். கணவன், மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். குடும்ப விஷயங்களைப் பற்றி பிறரிடம் பேசுவதைத் தவிர்க்கவும் ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது.

அரசியல்
மக்களின் ஆதரவைப் பெற அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவது நல்லது. உடனிருப்பவர்களால் பெயர், புகழுக்கு பங்கம் ஏற்படலாம். மேடைப் பேச்சுகளில் நிதானத்தைக் கையாளவும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும்.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. போதிய நீர் இன்மையால் பயிர்கள் வாடிப்போகும். போட்ட முதலீட்டினை எடுக்க முடியாது. அரசு வழியில் எதிர்பார்க்கும் மானிய உதவிகளில் தாமத நிலை ஏற்படும். வங்கிக்கடனை செலுத்த முடியாமல் போகும்.

கலைஞர்கள்
நல்ல வாய்ப்புகளுக்காகக் காத்திராமல் இருப்பதைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. போட்டிகள் அதிகரிக்கக்கூடிய காலம் என்பதால் அலைச்சல்களும் அதிகரிக்கும். வரவேண்டிய பணத்தொகைகள் சற்று இழுபறிக்குப் பின் கிடைக்கும். சேமிக்க முடியாது.

மாணவ- மாணவியர்
கல்வியில் முழு ஈடுபாட்டினைச் செலுத்த முடியாது. கவனம் சிதறும். தேவையற்ற நட்புகள் உங்களை வேறு பாதைக்கு இழுத்துச் செல்லும். முடிந்த வரை வீண் பொழுதுபோக்குகளைத் தவிர்ப்பது நல்லது. நல்ல மதிப்பெண்களைப் பெற்றால் மட்டுமே பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவினைப் பெற முடியும். விளையாடும்போது கவனம் தேவை.

குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 02-08-2016 முதல் 20-09-2016 வரை சஞ்சாரம்
உங்கள் ஜென்மராசிக்கு 2, 11-க்கு அதிபதியான குருபகவான் அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சூரியனின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துகொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். உற்றார்- உறவினர்களை சற்று அனுசரித்து நடப்பது நல்லது. கொடுக்கல், வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பதன் மூலம் வீண்பிரச்சனைகளைக் குறைக்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்த நிலையை எதிர்கொள்ள நேரிட்டாலும் பொருள்தேக்கம் ஏற்படாது. தொழிலாளர்களால் சிறுசிறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.  உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற இடமாற்றங்கள் ஏற்படும். வேலை பளுவும் கூடும்.

குரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 21-09-2016 முதல் 25-11-2016 வரை சஞ்சாரம்
குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சந்திரனின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில்  கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்திலுள்வர்களிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதையும் சமாளிக்க முடியும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிடைக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்லவேண்டியிருக்கும். சிலருக்கு அசையும்- அசையா சொத்துகளால் வீண் செலவுகள் தோன்றும். தொழில்,  வியாபாரம் செய்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கக்கூடிய காலம் என்பதால் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களும் தங்கள் பணிகளில் சற்று கவனமுடனிருப்பது, உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கல்வி பயிலுபவர்கள் சற்று ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்ணைப் பெறமுடியும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 26-11-2016 முதல் 16-1-2017 வரை சஞ்சாரம்
குரு பகவான் 3, 10-க்கு அதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் ஏற்ற இறக்கமான பலன்களே உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். கணவன், மனைவியிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு நிம்மதி குறையும். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து நிதானமாக செயல்படுவது நல்லது. உற்றார்- உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும். கூட்டாளிகளிடமும், தொழிலாளர்களிடமும் ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகி அபிவிருத்திகள் குறையக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். முடிந்த வரை பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தைவிட்டுப் பிரிய நேரிடும். அலைச்சல், டென்ஷன்களும் அதிகரிக்கும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் துலா ராசியில் 17-01-2017 முதல் 22-02-2017 வரை சஞ்சாரம்
குரு பகவான் இக்காலங்களில் துலா ராசியில் அதிசாரமாக ஜென்ம ராசிக்கு 9-ல் செவ்வாய் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இக்காலங்களில் பல பொதுநலக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளைத் தடையின்றி மேற்கொள்ளலாம். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியம் மேன்மையடையும். உற்றார், உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து லாபம் பெருகும். புதிய கூட்டாளிகள் சேருவார்கள். பயணங்களால் சிறுசிறு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் ஆதாயமும் உண்டு. உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பால் வேலை பளுவை சற்றுக் குறைத்துக் கொள்ளலாம்.

குரு பகவான் வக்ர கதியில் 23-02-2017 முதல் 01-06-2017 வரை
குரு வக்ர கதியிலிருப்பதால் இக்காலங்களிலும் ஏற்றமான பலன்களையே பெறுவீர்கள். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் அதிகரிக்காது. குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. எதிர்பாராத தனவரவுகளால் குடும்பத்தின் பொருளாதாரம் உயரும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதசமாகச் செயல்படுவார்கள். ஆடை ஆபரணம் சேரும். சிலருக்கு அசையா சொத்து யோகமும் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை விலகி நல்ல வரன்கள் தேடி வரும். புத்திரவழியில் மகிழ்ச்சி நிலவும். கொடுக்கல் வாங்கலும் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். தொழில், வியாபாரம் நல்ல நிலையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். போட்டிகள் குறையும். பல பொதுநலக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும்.

குரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 02-06-2017 முதல் 15-07-2017 வரை சஞ்சாரம்
குரு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் 8-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யும். இக்காலங்களில் ஓரளவுக்கு ஏற்றத்தைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நிறைய போட்டி பொறாமைகளாலும் தொழிலாளர்களின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளாலும் லாபங்கள் குறைந்து மந்த நிலை உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைப்பதில் தாமத நிலை ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடக்கவும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளையும் இடமாற்றங் களையும் சில தடைகளுக்குபின் பெற முடியும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்து உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நல்ல அனுகூலங்களைப் பெற முடியும். 

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 16-07-2017 முதல் 02-09-2017 வரை சஞ்சாரம்
குரு பகவான் 3, 10-க்கு அதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்கள் பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலப்பலனை அடையமுடியும். புத்திர வழியில் சிறுசிறு மன உளைச்சல்கள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உற்றார்- உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்திலுள்ளவர்களால் அடிக்கடி மருத்துவச் செலவுகளை சந்திப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும்போது சிந்தித்து செயல்படுவது உத்தமம். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சில சிக்கல்கள் நிலவும். 27.07.2017ல் ஏற்படவுள்ள சர்ப்பகிரக மாற்றத்தால் ராகு 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எந்தவித எதிர்ப்புகளையும் எதிர்கொண்டு சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். போட்டி பொறாமைகள் குறையும்.

நட்சத்திரப்பலன்

அவிட்டம் 2, 3-ஆம் பாதங்கள்
கும்ப ராசியில் செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் பணவரவுகளில் சிறுசிறு நெருக்கடிகளை சந்திப்பீர்கள். என்றாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கக்கூடும் என்பதால் கிடைத்த வாய்ப்புகளைக் பயன்படுத்திக்கொள்வது லாபத்தை அளிக்கும்.

சதயம்
கும்ப ராசியில் ராகுவின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டாலும், குடும்பத்தின் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நெருக்கடிகள் ஏற்படக் கூடிய காலம் என்பதால் எதிலும் கவனம் தேவை.

பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்
கும்ப ராசியில் குருவின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் அட்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு இல்லை என்பதால் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உடல் நிலையில் சற்றே கவனம் செலுத்தவும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. தொழில், வியாபா ரத்தில் சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் பொருள் தேக்கம் ஏற்படாது.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் :    5, 6, 8, 14, 15, 17
கிழமை:     வெள்ளி, சனி 
திசை:     மேற்கு
நிறம்     :    வெள்ளை, நீலம்
கல்:         நீலக்கல்
தெய்வம்:     விநாயகர்

பரிகாரம்
கும்ப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 8-ல் குரு சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணா மூர்த்திக்கு கொண்டைக்கடலையை மாலையாகக் கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடவும். தானம் போன்றவற்றை காலைப் பொழுதிலும் (வியாழக் கிழமைகளில்) மந்திர ஜெபங்களை மாலைப்பொழுதிலும் செய்யவும். சனி 10-ல் சஞ்சரிப் பதால் சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழுமலையில் வீற்றிருக்கும் ஸ்ரீபாலாஜி வெங்கடாசலபதியை வழிபடுவது, அனுமனையும் விநாயக ரையும் வழிபடுவது நல்லது. சனிக்கிழமைகளில் விரதமிருந்து அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றுவது, சனிக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீலநிற சங்குப் பூக்களால் அர்ச்சனை செய்வது, ஊன முற்ற ஏழை, எளியவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது. ராகு- கேது சாதக மற்று சஞ்சரிப்பதால், ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, சிவன் மற்றும் சண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்குவது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன் படுத்துவது, ""ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் சஹ ராஹவே நமஹ'' என்ற பீஜ மந்திரத்தைக்கூறி வருவது நல்லது. தினமும் விநாயகரை வழிபடுவது, ""ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவே நமஹ"" என்ற பீஜ மந்திரத்தைக் கூறிவருவது, செவ்வல்லிப் பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.

No comments: