Rasi palangal

Sunday, August 21, 2016

கோட்சாரத்தில் செவ்வாய்

கோட்சாரத்தில் செவ்வாய்


கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com
செவ்வாய் பௌமன், அங்காரகன், சகோதரக்காரகன், பூமிக்காரகன் இரத்த காரகன் என அழைக்கப்படும் செவ்வாய் ஒரு நெருப்பு கிரகமாகும். சிவந்த நிறம். க்ஷத்திரிய குலம், குள்ள வடிவம், ஆண் கிரகம் ஆகும். தலையை ஆளுமை செய்யும். செவ்வாய் உலோகத்தில் செப்பையும், இரத்தினத்தில் பவழத்தையும், தானியத்தில் துவரையையும் திசையில் தெற்கையும், சமித்துவில் கருங்காலியையும், சூடாக புசிக்கும் குணமும், துவர்ப்புச் சுவையையும் உடையது. வாகனத்தில் அன்னத்தையும், துவாரத்தில் வாயையும், சிவப்பு நிற வஸ்திரத்தையும், தூபம் குங்கிலியமாகவும் உள்ள கிரகமாகும். அதி தேவதை முருகன். பிரிதிவி கிரகம். பித்த நாடி. 

செவ்வாய் தான் இருக்கும் ராசியில் இருந்து 4,7,8ம் வீடுகளை பார்வை செய்யும். புஷ்பம் செண்பகம். செவ்வாய் மேஷம், விருச்சிக ராசியில் ஆட்சியும், மகர ராசியில் உச்சமும், கடக ராசியில் நீசமும் பெறும். சூரியன், சந்திரன், குரு ஆகியவை நட்புக்கிரகம் ஆகும். சுக்கிரன், சனி சமம். புதன், ராகு, கேது பகை. செவ்வாய் மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் போன்ற நட்சத்திரங்களுக்கு அதிபதி ஆகும். செவ்வாய் ஒரு ராசியில் 1 1/2 மாத காலம் தங்கும். சூரியனுக்கு 9ல் செவ்வாய் வரும் பொழுது வக்ரம் பெற்று சூரியனுக்கு 5ல் செவ்வாய் வரும் பொழுது வக்ர நிவர்த்தி அடையும். 

ஜென்ம ராசியிலிருந்து 12 வீடுகளில் செவ்வாய் அமையப் பெற்றால் உண்டாகும் பலன்கள்  
  
ஜென்ம ராசியில் செவ்வாய் இருந்தால் உடலில் காயம் படும் அமைப்பு, கவலை, வீண் விரயம், காரியத் தடை, அலைச்சல் அதிகரிக்கும் அமைப்பு உண்டாகும்.

2ல் சஞ்சரிக்கும் போது ஏமாற்றம், குடும்ப வாழ்வில் கஷ்டம் போன்ற அசுபப் பலன்கள் ஏற்படும்.

3ல் சஞ்சரிக்கும் போது அதிகாரம் கொண்ட பதவிகளை அடையும் அமைப்பு, நல்ல நிர்வாகத் திறன், பூமி, மனை போன்றவற்றால் லாபம், சகோதரர்களால் அனுகூலம் போன்ற நற்பலன்கள் உண்டாகும்.

4ல் சஞ்சரிக்கும் போது வயிறு சம்மந்தமான உபாதைகள், ரத்த சம்மந்தமான பாதிப்பு, காயம், ரணம், எடுக்கும் முயற்சிகளில் தோல்வி, அரசாங்கவழியில் சோதனைகள், நெருப்பினால் பாதிப்புகள் உண்டாகும்.

5ல் சஞ்சரிக்கும் போது பிள்ளைகளுக்கு உடல் பாதிப்பு, அனுகூலமற்ற நிலை, உடலில்  காயம் படக்கூடிய சூழ்நிலை, பணம் அல்லது பொருள் திருடு போகும் நிலை, தேவையற்ற கலகம்,  போன்றவை ஏற்படும்.

6ல் சஞ்சரிக்கும் போது நல்ல உடல் ஆரோக்கியம், பெயர் புகழ் உயரும் யோகம், எதிரிகளை அடக்கி வெற்றி கொள்ளும் அமைப்பு, தாராள தன வரவுகள் உண்டாகும்.

7ல் செவ்வாய் சஞ்சரிக்கும் காலங்களில் கணவன் மனைவி இடையே ஒற்றுமை குறைவு, வயிறு, கண் போன்றவற்றில் பாதிப்பு, பணநஷ்டம், உற்றார் உறவினர், மற்றும் நண்பர்களுடன் பகை ஆகியவை உண்டாகும்.

8ல் செவ்வாய் சஞ்சரிக்கும் காலம் தவறி கீழே விழும் அமைப்பு, பகைவர்களால் தொல்லை, பயம், ஆயுதம் வகையால் காயம்படும் அமைப்பு, நெருப்பினால் ஆபத்து யாவும் உண்டாகும்.

9ல் சஞ்சரிக்கும் காலம் உடலில் காயம் படும் அமைப்பு, அதிக அலைச்சல், பலவீனம், தந்தை வழியில் அனுகூலமற்ற நிலை உண்டாகும்.

10ல் சஞ்சரிக்கும் போது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு, சொரி, சிரங்கு, ஏற்பட கூடிய நிலை, தேவையற்ற பயம், ஆயுதம் மூலம் காயம் போன்றவை ஏற்படும்.

11ல் சஞ்சரிக்கும் காலங்களில் பிள்ளைகளால் அனுகூலம், பெருமை, உயர்பதவிகளை வகிக்கும் யோகம், பூமி, மனையால் லாபம், பகைவர்களை பலம் இழக்கச் செய்திடும் அமைப்பு, செல்வம், செல்வாக்கு உயர்வு, வண்டி வாகன யோகம் யாவும் அமையும்.

      12ல் சஞ்சரிக்கும் காலம் கால்களில் அடிபடும் அமைப்பு, அவமானப்படும் நிலை, குடும்பத்தில் கலகம், வெளியூர், வெளிநாட்டுப் பயணங்களால் சிக்கல், பலவித வீண் செலவுகள் கண்களில் பாதிப்பு, தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும்.
     

செவ்வாய் பகவான் கோட்சார ரீதியாக 3,6,11ல் சஞ்சரிக்கும் காலங்களில் சுப பலனை தருவார். மற்ற இடங்களில் சஞ்சரிக்கும் போது அசுபப் பலன்கள் ஏற்படும். அக்காலத்தில் முருக பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்து செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்வது, கந்தர் சஷ்டி கவசம் படிப்பது மூலம் கெடுதல்கள் குறையும்.  

No comments: