Tuesday, October 4, 2016

கோட்சாரத்தில் சனி

கோட்சாரத்தில்  சனி
     நவகிரகங்களிலேயே சனியை கண்டு தான் அனைவரும் பயப்படுகிறார்கள். ஏனென்றால் சனி தான் இருக்கும் இடத்தையும், பார்க்கும் இடத்தையும் பாதிக்கும் தன்மை கொண்டது. அது மட்டுமின்றி தவறு செய்பவர்களுக்கு நீதியை நிலை நாட்டி தண்டனையை அளித்து விடுபவர். நவகிரகங்களிலேயே சனியே ஈஸ்வர பட்டம் பெற்றவர். மூன்று பேர்கள் மட்டுமே உலகில் ஈஸ்வர பட்டம் வென்றவர்கள் ராவணேஸ்வரன், சனீஸ்வரன், பரமேஸ்வரன். சனிபகவான் சூரியனின் மகன் என்றாலும் சூரியனுக்கு ஜென்ம பகைவர். ஆயுளை தருபவர். எனவே இவர் ஆயுள்காரகன் எனப்படுவார். மிகவும் மந்தமான குணம் கொண்டவர். ஒரு ராசியில்  2 1/2 ஆண்டு என நீண்ட காலம் தங்கி ஒரு ராசி மண்டலத்தை சுற்றி வர 30 ஆண்டுகளை எடுத்துக் கொள்கின்றார். இதனால் தான் 30 வருடம் வாழ்ந்தவன் இல்லை. 30 வருடம் தாழ்ந்தவன் இல்லை என கூறுகிறார்கள்.
சாயா புத்திரன், மந்தன், நொண்டி, கரியவன், நீலன், ரவிபுத்திரன், மார்த்தாண்டன் போன்ற பல வகை பெயருடன் விளங்கும் சனிக்கு ஒரு கால் ஊனம். சனி பார்வை மிகவும் கொடிய பலன்களை ஏற்படுத்தும். சனி சூத்திர ஜாதி. தொடை இவரது ஆளுகை. உலோகம் இரும்பு, ரத்தினம் நீலக்கல் தானியம் எள்ளு. புஷ்பம் கருங்குவளை மலர்கள். வாத நாடியை உடையவர். பஞ்ச பூதத்தில் ஆகாய கிரகம். அதிதேவதை எமன், ஐயப்பன். முழுப் பாவி கருப்பு நிற வஸ்திரம். அசன வாய் நவ துவாரம். கருமை நிறம். அலி கிரகம். சமித்து வன்னி, வாகனம் காக்கை, சீதோஷ்ணமாக புசிப்பவர். குள்ள உருவம், திக்கு மேற்கு. 
சனிக்கு மகரம், கும்பத்தை ஆட்சி வீடு. துலாம் உச்ச வீடு. மேஷம் நீச வீடு. தான் இருக்கும் வீட்டில் இருந்து 3,7,10ம் வீட்டை பார்வை செய்யும். புதன், சுக்கிரன் ராகு, கேது நட்பு, குரு சமம், சூரியன், சந்திரன், செவ்வாய், பகை. சனி பூசம், அனுஷம், உத்திரட்டாதி போன்ற நட்சத்திரங்களுக்கு அதிபதி. தான் சஞ்சரிக்கும் ராசி சுற்றில் 30 வருடங்களில் அர்த்தாஷ்டமச்சனி, கண்டச் சனி, அஷ்டமச் சனி, விரையச் சனி, ஜென்மச் சனி, பாதச் சனி என நடைபெற்று ராசிக்காரர்களை தவறுக்கு நீதிபதியாக இருந்து தண்டித்து புடம் போட்ட தங்கம் போல ஆக்கி விடும். சனி கோட்சார ரீதியாக ஒவ்வோரு ராசியிலும் 2 1/2 ஆண்டுகள் சஞ்சாரம் செய்யும். சனி தான் இருக்கும் இடத்தையும் பாதிப்படைய செய்வதோடு பார்வை செய்யும் இடத்தின் பலனை கடுமையாக பாதித்து விடும். உப ஜெய ஸ்தானமான 3,6,11ல் மட்டும் நற்பலன்களை அதிகமாக தரும். 5,9 வீடுகளில் சஞ்சரிக்கும் போது மத்திமமான பலனை தரும். 12,1,2ம் வீடுகளில் சஞ்சரிக்கும் காலம் 7 1/2 சனியின் காலமாகும். 12ல் சஞ்சரிக்கும் போது விரையச் சனி, ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் போது ஜென்மச் சனி, 2ல் சஞ்சரிக்கும் காலம் பாதச் சனி, 4ல் சஞ்சரிக்கும் போது அர்த்தாஷ்டமச் சனி, 7ல் சஞ்சரிக்கும் போது கண்டச் சனி, 8ல் சஞ்சரிக்கும் போது அஷ்மச் சனி, 10ல் சஞ்சரிக்கும் போது தொழில், வியாபாரம் ஜீவன ரீதியாக பாதிப்புகளை உண்டாக்கும்.
     
சனி கோட்சார ரீதியாக சஞ்சரிக்கும் காலத்தில் 3,6,11ல் சஞ்சரிக்கும் காலங்களில் மிகவும் சிறப்பான பலன்கள் ஏற்படுகின்றன.
3ல் சஞ்சரிக்கும் காலங்களில் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். வம்பு வழக்குகளில் அனுகூலமான பலன் உண்டாகும். கடன் தொல்லைகள் மறைந்து விடும். தடைப்பட்ட தனவரவுகள் வந்து சேரும். பலமும், வலிமையும் கூடும். தேக்கமான நிலைகள் விலகி  ஏற்றமிகு பலன்கள் உண்டாகும். பகைவர்களை வெற்றி கொள்ளும் ஆற்றல் ஏற்படும். மதிப்பு, மரியாதை, செல்வம், செல்வாக்கு, உயரும். செய்யும் தொழில் உத்தியோகத்தில் உயர்வுகள் கிட்டும்.
6ல் சஞ்சரிக்கும் காலங்களில் ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். எதிர்ப்புகள் மறையும். போட்டி, பொறாமைகள் குறையும்.  பொருளாதார நிலை உயரும். பொன், பொருள், ஆடை ஆபரண சேரும்.
சனி 11ல் சஞ்சரிக்கும் காலங்களில் தொழில் வியாபாரத்தில் லாபம் கிட்டும். அபிவிருத்தி பெருகும். புதிய தொழில் வியாபாரம் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் அனுகூல பலன் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். வீடு, மனை, வண்டி, வாகன சேரும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் நடைபெறும்.

சனி 5,9ல் சஞ்சரிக்கும் காலம் ஓரளவு சாதகமான காலமாக இருக்கும்.
      5ல் சஞ்சரிக்கும் போது சோதனைகள் யாவும் விலகி மன ஆறுதல் ஏற்படும். அலைச்சல், டென்ஷன் குறையும். குடும்ப வாழ்வில் அமைதி ஏற்படும். புத்திர வழியில் சிறு சிறு பிரச்சனைகள் உண்டாகும் என்றாலும் எதையும் சமாளிக்கும் வலிமையும் உண்டாகும். உயர் கல்வியில் சிறுசிறு தடைகளுக்குப் பின் அனுகூலப் பலன் ஏற்படும்.
      9ல் சஞ்சரிக்கும் காலத்தில் தந்தை, தந்தை வழி உறவினர்களிடம் சிறு சிறு பிரச்சனைகள், கருத்து வேறுபாடுகளை உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் ஏற்படும் என்றாலும் அதன் மூலம் ஓரளவுக்கு அனுகூலமும் உண்டாகும். பண வரவில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் அமைதி ஏற்படும்.
      தொழில் ஸ்தானமான 10ம் ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமைகள், நலிவுகள், நஷ்டங்கள் தடைகள் உண்டாகும். ஜீவன ரீதியாக  அதிக பாதிப்புகள், ஏற்படும். கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியத்தை பெற முடியாமல் போகும். வீண் பழிகள் ஏற்க வேண்டி வரும். அரசாங்க வழியில் எதிர் பார்க்கும் உதவிகள் தாமதப்படும்.  தேவையற்ற இடமாற்றங்களால், அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். புதிய வேலை கிடைக்க தடை ஏற்படும்.

ஏழரைச் சனி
ஜெனன ராசிக்கு கோட்சார ரீதியாக சனி 12ல் வரும் போது 7 1/2 சனி தொடங்குகிறது. 12,1,2 ஆகிய ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடங்கள் சனி சஞ்சாரம் செய்யும் காலமே ஏழரைசனி காலமாகும். ஏழரை சனி காலங்களில் மாளிகையில் வாழ்பவரைக் கூட மண் குடிசைக்கு வரும் நிலைமை ஏற்படும். சாதாரண மனிதர் முதல் படைத்த இறைவனுக்கு கூட ஏழரை சனி காலங்களில் சோதனைகள் ஏற்படும்.
விரயசனி
ஜென்ம ராசிக்கு 12ல் வரும் போது ஏழரைசனியில் விரய சனி தொடங்குகிறது.  
இக்காலங்களில் எடுக்கும் காரியங்களில் தடைகள், கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகள், குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். இருக்கும் வீட்டை மாற்ற வேண்டிய சூழ்நிலை, தூக்கமின்மை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் நஷ்டம், மறைமுக எதிரிகளால் துன்பம், வண்டி வாகனம் மூலம் விபத்து, வீண் விரையங்கள் ஏற்படும். கடன்கள் அதிகரிக்கும். உடல் ஆராக்கியத்தில் பாதிப்பு, கண்களில் பாதிப்பு, கண்ணாடி அணிய வேண்டிய சூழ்நிலை, தேவையற்ற மருத்துவச் செலவுகள் உண்டாகும். குழந்தை பருவத்தில் ஏழரை சனி தொடங்கினால் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும். படிக்கும் வயதில் நடைபெற்றால் கல்வியில் தடை, எதிலும் மந்தமான நிலை, உடல் நிலையில் பாதிப்பு, தந்தைக்கு முன்னேற்ற தடை, தாய்க்கு உடல் பாதிப்பு, குடும்பத்தில் கலகம், விரோதம் போன்ற கெடுபலன்கள் உண்டாகும். 

ஜென்ம சனி
அடுத்த 2 1/2 ஆண்டு காலங்கள் ஜென்ம ராசியில் சனி சஞ்சரிக்கும் ஜென்ம சனி நடைபெறும். இக்காலங்களிலும் மிகுந்த சோதனைகள் ஏற்படும். உடல் நலம் அதிகமாக பாதிக்கப்படும்.  தொடரும் வியாதிகளால் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். செய்கின்ற தொழிலில் நஷ்டம், இடம் விட்டு இடம் செல்ல வேண்டிய நிலை, கூட்டாளிகளால் பிரிவு, பிரச்சனை உண்டாகும். பொருள் இழப்பு, மனைவிக்கு உடல் நலப் பாதிப்பு, கருச்சிதைவு, புத்திர வழியில் சங்கடம் சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு, திருமணத் தடை போன்றவை ஏற்பட்டு வாழ்க்கையே போராட்டம் நிறைந்ததாக மாறி விடும். உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுடன் பகை, வம்பு வழக்குகளில் சிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சிலருக்கு சிறை செல்ல வேண்டிய நிலை, நீதிமன்றத்திற்கு அலைய வேண்டிய சூழ்நிலை, அதனால் சொல்ல முடியாத துன்பங்கள் உண்டாகும். இக்காலங்களில் நடைபெறும் திசாபுக்தி சற்று சாதகமாக அமைந்தால் ஓரளவு கெடுபலன்கள் குறையும். அதிலும் செவ்வாய் பார்வை சனிக்கு இருந்தாலும், செவ்வாய் சனி சேர்க்கை பெற்றிருந்தாலும் 7 1/2 சனியில் கண்டிப்பாக அதுவும் ஜென்மச் சனி நடைபெறும் போது விபத்து, நெருப்பு போன்றவற்றால் உடல் உறுப்புக்களை இழக்கின்ற சூழ்நிலை உண்டாகும். ஜெனன ராசி கட்டத்திலும் சனி ஜென்ம ராசிக்கு அதாவது சந்திரனுக்கு 1,2,12ல் அமையப் பெற்றால் 7 1/2 சனியில் ஜாதகரின் வாழ்வு கடும் சோதனைக்கு உள்ளாகும்.
பாத சனி
அடுத்த கடைசி 2 1/2 ஆண்டு காலமான 2ம் வீட்டிற்கு சனி வரும் காலம் 7 1/2 சனியில் பாத சனியாகும். இக்காலத்தில் ஜென்மச் சனியில் பட்ட துன்பங்களில் சிறிதளவு குறையும் என்றாலும் துன்பத்திற்கு முற்றுப் புள்ளியாக அமையாது. அறிவை உண்டாக்கும் என்றாலும் அதிர்ஷ்ட வாழ்வுக்கு தடைகள் ஏற்படும். குடும்பத்தில் நெருக்கமானவர்களுக்கோ அல்லது பெற்றோர்களுக்கே கூட கர்மம் செய்கின்ற சூழ்நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியம் சற்றே மேம்படும். பணவரவுகள் சுமாராக இருக்கும். கடன் தொல்லைகள் ஏற்படும். பண விஷயத்தில் முன் ஜாமீன் அளிப்பது, யாரையும் நம்பி எந்த செயலிலும் ஈடுபடுவது கூடாது. குடும்பத்திலும் கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் உண்டாகும். உற்றார் உறவினர்களின் உதவி சில சமயம் கிடைக்கும் என்றாலும் பேச்சை குறைப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாத நிலை உண்டாகும். அலைச்சல், டென்ஷன் கூடும். பயணங்கள் உண்டாகும். 

அர்த்தாஷ்டம சனி
சனி 4ல் சஞ்சரிக்கும் காலம் அர்த்தாஷ்டமச் சனி காலமாகும். இக்காலத்தில் உடல் நிலையில் பாதிப்பு, குடும்பத்தில் குழப்பம், வீண் சண்டை சச்சரவுகள், மனைவி, பிள்ளைகளால் மருத்துவச் செலவுகள், தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன், வண்டி வாகனம் மூலம் நஷ்டம், எதிரிகளால் அதிக தொல்லை, உடலில் காயம்படும் அமைப்பு, வம்பு வழக்குகளால் மனசஞ்சலங்கள், தேவையற்ற விரயங்கள், திருமண சுபகாரியம் நடைபெற தடை, மாணவர்களுக்கு கல்வியில் கல்வியில் மந்த நிலை, பொருளாதார நிலையில் நெருக்கடி, கடன் பிரச்சனைகள் போன்ற அனுகூலமற்ற பலன்கள்  உண்டாகும். சோதனை மேல் சோதனை ஏற்படும்.

கண்டச்சனி
      ஜென்ம ராசிக்கு 7ல் சனி பகவான் சஞ்சரிக்கும் காலம் கண்டச் சனியாகும். சம சப்தம ஸ்தானம் மற்றும் களத்திர ஸ்தானமான 7ம் வீட்டில் சனி சஞ்சரிக்கும் போது 9,1,4ம் வீடுகளை பார்வை செய்யும். சனியின் பார்வை கொடியது என்பதால் 7ம் வீடு பாதிப்படையும். இதனால் கணவன் மனைவி இடையே பிரிவு, குடும்பத்திலுள்ளவர்களுக்கு உடல்நலத்தில் பாதிப்புகள், திருமணத்தடை, ஜாதகருக்கும் உடல் பாதிப்பு, கூட்டாளிகளால் கெடுபலன்கள், புத்திர பாக்கியம் தடைபடும் அமைப்பு யாவும் உண்டாகும். 

அஷ்டமச் சனி
      ஜென்ம ராசிக்கு ஆயுள் ஸ்தானமான 8ம் வீட்டில் சனி சஞ்சரிக்கும் காலம் அஷ்டம சனியாகும். அஷ்டமச் சனி நடைபெறும் காலத்தில் உடல்நிலை பாதிப்பு, எதிர்பாராத விபத்துக்களை சந்திக்கும் நிலை, மனக்குழப்பம், குடும்பத்தில் அமைதியற்ற நிலை, வண்டி வாகனம் மூலம் நஷ்டம், மனைவி, புத்திரர்களுக்கும் பாதிப்பு, தொழில் பொருளாதார நிலையில் நெருக்கடி, அவமானப்படும் அமைப்பு நஷ்டம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் சிக்கல், சிறை செல்லும் நிலை, நம்பியவர்களே துரோகியாக மாறும் சூழ்நிலை, பணக் கஷ்டம், கடன்களால் தொல்லை, இடமாற்றம் போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.

கோட்சார சனி யாரை பாதிக்காது
கோட்சார சனி மகரம், கும்ப ராசிக்கு ராசியாதிபதி என்பதாலும் பூச, அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களுக்கு அதிபதி என்பதாலும், ரிஷபம், துலா ராசிக்காரர்களுக்கு யோகாதிபதி என்பதாலும் அதிகமான கெடுபலன்கள் ஏற்படுத்தாது. சிம்ம ராசிக்கு சூரியன் ராசியாதிபதி என்பதால் சூரியனுக்கு சனி ஜென்ம பகை என்பதால் கோட்சார சனியின் பாதிப்புகள் கடுமையானதாக இருக்கும்.

சனியின் வக்ரகதி
    சனி முன்னோக்கிச் சென்றுக் கொண்டிருக்கும் போது சில காலம் பின்னோக்கி செல்லும். இது வக்ர கதியாகும். சுமார் 4 1/2 மாதம் வக்ரம் அடையும். சனி வக்ர கதியில் எந்த வீட்டில் சஞ்சரித்தாலும் அந்த வீட்டின் பலன்களையே தரும்.
      நவகிரகங்களில் சனியின் கோட்சாரப் பலன்களை கண்டு உலகில் பெருவாரியான மக்கள் பீதி அடைகிறார்கள். அந்த அளவுக்கு சனியின் கோட்சாரம் பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறது. 30 வருட சுற்றில் 15 வருடம் கெடுபலன்களையே தந்து விடுகிறது. ஒருவரது ஆயுளில் 30 ஆண்டுக்கு ஒரு சுற்று வந்து விடும். முதல் சுற்றாக வரும் போது மங்கு சனி எனவும், இரண்டாவது சுற்றில் பொங்கும் சனி எனவும், மூன்றாவது சுற்றில் மரணச்சனி எனவும் கூறப்படுகிறது. முதல் நிலையும் கடைசி நிலையும் அதிக துன்பம் தரக் கூடியது. இரண்டாவது சுற்றான பொங்கு சனி காலத்தில் ஓரளவு கெடுபலன் குறைவாக உண்டாகும். 
ராசிக் கட்டத்தில் சனி ஆட்சி உச்சம் பெற்று இருந்தால் கெடுபலன்கள் குறைவாகவே இருக்கும். நீசம், பகை, பாதக ஸ்தானத்தில் அமையப் பெற்றால் ஏழரைச்சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டச் சனி, அஷ்டமச் சனி காலம் அதிக சோதனை மிகுந்ததாகவே இருக்கும் அக்காலத்தில் சனிபகவானுக்கு உரிய சாந்தி பரிகாரங்களை முறையாகச் செய்து வழிபாடு செய்வது மூலம் கெடுதிகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ளலாம். சனியின் கோட்சாரப் பலன்களால் பலவிதமான மாற்றங்கள் ஏற்பட்டு மக்கள் நன்மை தீமைகளை அடைவது போல நாட்டிற்கும் நன்மை தீமைகள் உண்டாகும். 

சனிக்கு பரிகாரம்
சனி பரிகாரமாக காக்கைக்கு தினமும் எள் கலந்த அன்னம் வைப்பது, சனிக் கிழமைகளில் விரதம் மேற்கொள்வது உத்தமம். நவக்கிரக ஆலயம் சென்று சனிக் கிழமைகளில் எள் முடிந்த திரியிட்ட விளக்கு ஏற்றி நீல நிற மலர்களால் அர்ச்சனை செய்வது மிகவும் நற்பலனை தரும். சனி பிரதோஷ காலத்தில் பிரதோஷ வழிபாடு மிகவும் உயர்வான பலனை தரும். எள் சாதம் தானமாக வழங்கலாம். ஏழை, உடல் ஊனமுற்றவர்களுக்கு அன்னதானம், ஆடை தானம் தருவது, சனிக்கு சிறந்த பரிகாரமாகும். சனி பார்வையால் பாதிப்படையாத தெய்வங்கள் விநாயகர், ஆஞ்சநேயர் இவர்களை வணங்கி வழிபட்டால் சிறப்பான நற்பலன்கள் உண்டா-கும். ஐயப்பனும் சனிக்கு அதிதேவதை. எனவே, ஐயப்பனை வணங்குவதும் உத்தமம். சனியின் ஆலயமான திருநள்ளாறு சென்று சனியை தரிசிப்பதும் நளன் குளத்தில் குளித்து வருவதும் மிகவும் நல்லது. சனியின் ரத்தினமான நீலக் கல்லை மோதிரமாக செய்து அணிவது மூலம் கெடுதிகள் குறையும்.

No comments: