Wednesday, December 14, 2016

புத்தாண்டு பலன்கள் 2017 சிம்மம்


புத்தாண்டு பலன்கள் 2017 சிம்மம்      
(மகம், பூரம். உத்திரம்- 1-ம் பாதம்)

அஞ்சா நெஞ்சமும் சிங்கம்போல தைரியமும் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த ஆண்டில் செப்டம்பர் மாதம் வரை குருபகவான் தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளார். இது அற்புதமான அமைப்பாகும். இதனால் பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் இருக்கும். திருமண சுபகாரியங்கள் யாவும் கைகூடும். சிலருக்கு சிறப்பான புத்திரபாக்கியமும் அமையும். கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலை இருக்கும் என்றாலும் சனிபகவான் சுகஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பாகும். இதனால் தேவையற்ற அலைச்சல்கள் அதிக ரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படுவதுடன், குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் உண்டாகும். தற்போது 1, 7-ல் சஞ்சரிக்கும் ராகு, கேது வரும் 27-07-2017 முதல் ராகு 12-லிம், கேது 6-லிம் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்திலுள்ளவர்களிடம் இருந்த பிரச்சினைகள் எல்லாம் ஆண்டின் பிற்பாதியில் முழுமையாக குறையும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. வரும் செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி ஏற்படவிருக்கும் குரு மாற்றத்தின்மூலம் குரு முயற்சி ஸ்தானமான 3-க்கு மாறுதலாக இருப்பதால் எடுக்கும் முயற்சிகளிலும் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள், நிறைய போட்டி பொறாமைகளை சமாளித்தே முன்னேற  வேண்டியிருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதன்மூலம் ஓரளவுக்கு லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தடைகளுடன் கிட்டும். உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் வேலைபளுவை குறைத்துக்கொள்ள முடியும். நேரத்திற்கு உணவுஉண்பது, முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது மூலம் இந்த ஆண்டு உங்கள் உடல்நிலையையும் மனநிலையையும் பாதுகாத்துக் கொள்ளமுடியும்.

உடல் ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. ஒன்றுபோனால் ஒன்றுவந்து மருத்துவச் செலவுகளை ஏற்படுத்திச் கொண்டேயிருக்கும். உடல் சோர்வு எதிலும் முழுமையாக ஈடுபட முடியாத அளவிற்கு அசதி உண்டாக்கும். குடும்பத்திலும் மனைவியால் நிறைய மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். தேவையற்ற மனசஞ்சலங்களும் அதிகரிக்கும். 

குடும்பம், பொருளாதார நிலை  
இந்த ஆண்டின் முற்பாதியில் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் தாராள தனவரவுகளும் உண்டாகும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்களும் கைகூடும். உற்றார்- உறவினர்களை சற்று அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுவதும் செப்டம்பர் 2-ஆம் தேதி முதல் குருபகவானும் 3-ஆம் வீட்டிற்கு மாறுதலாகி விடுவதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது, முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. தேவையற்ற வீண்செலவுகளை தவிர்க்கவும்.
கொடுக்கல் வாங்கல்
கமிஷன் ஏஜென்ஸி, காண்ட்ராக்ட் போன்ற துறைகளிலிருப்பவர்களுக்கு ஆண்டின் முற்பாதியானது சாதகமானதாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலும் சரளமாக நடைபெறும். ஆண்டின் இறுதியில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதையும், பிறரைநம்பி முன்ஜாமீன் கொடுப்பதையும் தவிர்ப்பது நல்லது.

தொழில், வியாபாரம் 
தொழில், வியாபாரம் செய்பவர்கள் நிறைய எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டிவரும். ஆண்டின் தொடக்கத்தில் லாபங்கள் சிறப்பாக இருந்தாலும், படிப்படியாக குறையத் தொடங்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. வேலையாட்களாலும், கூட்டாளிகளாலும் வீண்வம்புவழக்குகளை சந்திப்பீர்கள். அனைவரையும் அனுசரித்து நடப்பது நல்லது.

உத்தியோகம் 
பணியில் ஆண்டின் தொடக்கத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வுகளும், பதவி உயர்வுகளும் கிடைக்கப்பெற்றாலும் பிற்பாதியில் நிறைய நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். உடன் பணிபுரிபவர்களால் பிரச்சினைகள், உயரதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். பிறர்செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்கக்கூடிய சூழ்நிலையும் வீண்பழிச் சொற்களும் உண்டாகும். சிந்தித்துச் செயல்படுவது நல்லது.

பெண்கள் 
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தக்கூடிய அளவில் உடல் நலக்குறைவுகள் உண்டாகும். ஆண்டின் முற்பாதியல் எதிர்பாராத தனவரவுகளும் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடும் என்றாலும் எதிலும் சற்று கவனமுடன் நடப்பது நல்லது. புத்திர வழியில் மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. பேச்சில் நிதானத்துடன் இருப்பதும் நல்லது.

அரசியல்  அரசியல்வாதிகள், தங்கள் பதவிகளை காப்பாற்றிக் கொள்ள அரும்பாடு பட வேண்டிவரும். தேவையற்ற பயணங்களாலும் அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் தடை பின்பு சாதகமான பலன்கள் ஏற்படும். மக்களின் ஆதரவும் சுமாராக இருக்கும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுசெய்ய நேரிடும்.
விவசாயிகள் விவசாயிகள் எதிர்பார்த்த லாபம் பெறமுடியாது என்றாலும் போட்ட முதலீட்டிற்கு பங்கம் வராது. அரசுவழியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்று தாமதப்படும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. புதிய நவீனக்கருவிகளை வாங்குவதற்காக கடன்வாங்க நேரிடும்.

மாணவ- மாணவியர் 
கல்வி பயிலும் மாணவ- மாணவிகள்ஓரளவுக்கு மதிப்பெண்களைப் பெற்றுவிடுவார்கள். உடல் நலக்குறைவுகளால் மதிப்பெண்கள் குறையக் கூடிய வாய்ப்பும், அடிக்கடி விடுப்பு எடுக்கக் கூடிய சூழ்நிலையும் உண்டாகும் என்றாலும் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்படக்கூடிய ஆற்றலும் இருக்கும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை.
மாதப் பலன்கள்

ஜனவரிதன ஸ்தானமான 2-ல் குரு, 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், மாதப் பிற்பாதியில் சூரியன் 6ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பாகும். இதனால் தொட்டதெல்லாம் பொன்னாகும். கடந்த காலங் களிலிருந்த பிரச்சினைகள் யாவும் விலகும். குடும்பத்திலும் மகிழ்ச்சி, சுபிட்சம் ஏற்படும். திருமணத்தடைகள் விலகி கெட்டிமேளம் கொட்டும். சிலர் விரும்பியவர்களையே மணம்முடிப்பர். பணவரவு சரளமாக இருப்ப தால் கடன்கள் குறைந்து குடும்பத்தேவைகளும் பூர்த்தியாகும். தொழில், வியாபார, உத்தியோக ரீதியாக இருந்த பிரச்சினைகள் விலகும். உத்தியோ கஸ்தர்கள் உயர்வடைவார்கள். துர்கை அம்மனை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம்:  04-01-2017 பகல் 11.15 மணி முதல் 06-01-2017 மதியம் 03.45 மணி வரை. 31-01-2017 மாலை 04.48 மணி முதல் 02-02-2017 இரவு 09.11 மணி வரை
பிப்ரவரி
மாத முற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சாரம் செய்வது ஓரளவுக்கு சாதகமான அமைப்பு என்றாலும் அஷ்டம ஸ்தானமான 8-ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. தேவையற்ற அலைச்சல். டென்ஷன் ஏற்படும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடும். உற்றார்- உறவினர்களால் வீண்வம்புவழக்குகளை சந்திக்க நேரிடும். தொழில், வியாபாரம் செய் பவர்கள் போட்டி பொறாமைகளால் வீண்விரயங்களை சந்திக்க நேரிடும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்:  27-02-2017 இரவு 12.09 மணி முதல் 02-03-2017 அதிகாலை 03.16 மணி வரை 

மார்ச்
மாத கோளான சூரியன் சாதகமின்றி சஞ்சாரம் செய்வதும்  அஷ்டம ஸ்தானமான 8-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் உடல் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அனுகூலமும் உண்டாகும். பொருளாதாரநிலை ஏற்றஇறக்கத் தோடு அமைந்தாலும் குடும்பத்தேவைகளை பூர்த்திசெய்துவிடுவீர்கள். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. தொழில், வியாபார ரீதியாக எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும். சிவபெருமானை வழிபடவும்.
சந்திராஷ்டமம்:  27-03-2017 காலை 09.38 மணி முதல் 29-03-2017 காலை 11.39 மணி வரை
ஏப்ரல்
அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதும் உடல் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும், 2-ல் குரு சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும். உங்களுக்குள்ள பிரச்சினைகள் படிப்படியாக குறையும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றுவீர்கள். பூர்வீக சொத்துகளால் ஓரளவுக்கு லாபத்தை அடைய முடியும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். உறவினர்களும் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் நிலவினாலும் புதிய வாய்ப்புகள் தேடிவரும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியிலிருந்த நெருக்கடிகள் குறையும். சிவனை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம்:  23-04-2017 இரவு 07.56 மணி முதல் 25-04-2017 இரவு 09.56 மணி வரை

மே
தன ஸ்தானமான 2-ல் குரு, 10, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றங்களை அடையமுடியும். உடல், ஆரோக்கியத்திலும் உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகலாம். பணவரவுகளிலிருந்த தடைகள் விலகுவதால் குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தடைபட்ட சுபகாரியங்களும் கைகூடும். பொன்பொருள் சேரும். தாராள தனவரவுகளால் பூமி, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். தொழில், வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சிறுசிறு அலைச்சல்களை சந்திக்க நேர்ந்தாலும் நினைத்தது நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். முருகனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்:  21-05-2017 அதிகாலை 05.18 மணி முதல் 23-05-2017 காலை 08.26 மணி வரை 
ஜுன்
தன ஸ்தானமான 2-ல் குரு, 10, 11-ல் சூரியன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நினைத்தது நிறைவேறும். உடல்ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுப்பது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். உங்களைப் புரிந்து கொள்ளாமல் பிரிந்துசென்ற உறவினர்களும் நட்புக்கரம் நீட்டுவார்கள். பொன்பொருள் சேரும். சிலருக்கு திருமண சுபகாரியங்கள் நிறைவேறும். பூமி, மனை வாங்கும் யோகம், புதுவீடு கட்டி குடிபுகும் வாய்ப்பு அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலும் சரள நிலையில் நடைபெறும். உத்தியோகஸ் தர்கள் தங்கள் பணிகளில் நல்ல உயர்வினை பெறுவர். துர்க்கை அம்மனை வழிபடவும்.
சந்திராஷ்டமம்:  17-06-2017 பகல் 12.44 மணி முதல் 19-06-2017 மாலை 05.29 மணி வரை

ஜுலை
ஜென்ம ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் குரு, மாத முற்பாதியில் 11-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நினைத்தது நிறைவேறும். இதுமட்டுமின்றி இம்மாதம் 27-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு- கேது பெயர்ச்சியின்மூலம் கேது 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவுள்ளது சாதகமான அமைப்பாகும். நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத திடீர் தனவரவுகள் ஏற்பட்டு பொருளாதார நிலை மேலும் உயரும். மற்றவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வீர்கள். கொடுக்கல்- வாங்கலில் சிறப்பான லாபம் அமையும். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிட்டும். சனிக்கு பரிகாரம் செய்யவும்.
சந்திராஷ்டமம்:  14-07-2017 மாலை 06.33 மணி முதல் 16-07-2017 இரவு 12.23 மணி வரை

ஆகஸ்ட்
ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானமான 12-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பது அனுகூலமற்ற அமைப்பு என்றாலும், 2-ல் குரு, 6-ல் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். உடல்ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றும். பணவிஷயத்தில் பிறரை நம்பி பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. பொன்பொருள் சேரும். உற்றார்- உறவினர்கள் சிறுசிறு பிரச்சினைகளை ஏற்படுத்தி னாலும் சாதகமாகவே செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு கூடும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 10-08-2017 இரவு 12.08 மணி முதல் 13-08-2017 காலை 05.54 மணி வரை

செப்டம்பர்
ஜென்ம ராசியில்  சூரியன், செவ்வாய், 4-ல் சனி  சஞ்சரிப்பதால் குடும்பத்தில் வீண்வாக்குவாதங்கள் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வதும் சிறப்பு. இம்மாதம் ஏற்படவுள்ள குரு பெயர்ச்சியின்முலம் குரு பகவான் 3-ஆம் வீட்டிற்கு மாறுதலாகவிருப்பதும் சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. தேவையற்ற அலைச்சல்களும், உடல்நலக்குறைவும் உண்டாகும். பொருளாதார நிலை ஏற்றஇறக்கமாக இருக்கும். நினைத்த காரியங்களை நிறைவேற்ற பாடுபட வேண்டி இருக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பமும் நிறைவேறும். சிவபெருமானை வழிபடவும்.
சந்திராஷ்டமம்:  07-09-2017 காலை 07.00  மணி முதல் 09-09-2017 பகல் 11.46 மணி வரை

அக்டோபர்ஜென்ம ராசியில்  செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும், மாதப் பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். முன்கோபத்தை தவிர்ப்பது, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உடல்ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக்கொண்டால் வீண்விரயங்களை தவிர்க்கமுடியும். குடும்பத்திலும் ஓரளவுக்கு  ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். பணவரவுகள் ஏற்ற- இறக்கமாக இருந்தாலும் குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தைப் பெற சற்று பாடுபட வேண்டிவரும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்:  04-10-2017 மதியம் 03.47 மணி முதல் 06-10-2017 இரவு 07.35 மணி வரை

நவம்பர்
ஜென்ம ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் சுக்கிரன், 4-ல் புதன், மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களுக்கு பொருளாதார ரீதியாக மேன்மைகள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் சில தடைகளுக்குபின் கைகூடும். நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். கடன்கள் சற்று குறையும். பொன்பொருள் சேரும். தொழில், வியாபாரத்தில் லாபம் பெருகும். பெரிய முதலீடுகளை தவிர்த்தால் வீண் விரயங்களை குறைக்கலாம். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. வேலைப்பளு சற்று கூடும். ஆஞ்சநேயரை வழிபடவும்.
சந்திராஷ்டமம்:  01-11-2017 அதிகாலை 01.46 மணி முதல் 03-11-2017 அதிகாலை 05.33 மணி வரை. மற்றும் 28-11-2017 பகல் 11.17 மணி முதல்  30.11.2017 மாலை 04.17 மணி வரை

டிசம்பர்ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் குரு, 4-ல் சூரியன், சஞ்சரிப்பதால் உடல்ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். குடும்பத்திலும், உறவினர்களிடமும் பகைமை உணர்வு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதும் நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்கள் சிலகாலம் தள்ளிவைப்பது நல்லது.  கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். இம்மாதம் 19-ஆம் தேதி ஏற்படவிருக்கும் சனி மாற்றத்தின்முலம் சனி 5-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனி முடிவடைந்துவிடும். நீங்கள் சிவபெருமானை வழிபடுவது, குருவுக்கு பரிகாரம் செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 25-12-2017 மாலை 06.55 மணி முதல் 28-12-2017 அதிகாலை 01.41 மணி வரை 

அதிர்ஷ்டம் அளிப்பவைஎண் : 1, 2, 3, 9; நிறம் : வெள்ளை, சிவப்பு; கிழமை : ஞாயிறு, திங்கள்; கல் :  மாணிக்கம்; திசை : கிழக்கு; தெய்வம் : சிவன்.

No comments: