Friday, December 16, 2016

புத்தாண்டு பலன்கள் 2017 துலாம்புத்தாண்டு பலன்கள் 2017   துலாம்  

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள் சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


பிறரை எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய சாமர்த்தியம் கொண்ட துலா ராசி அன்பர்களே, உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள். இந்த 2017-ஆம் ஆண்டில் உங்கள் ஜென்ம ராசிக்கு 2-ஆம் வீட்டில் சனி பகவான் சஞ்சரிப்பதால் உங்களுக்கு ஏழரை சனியில் குடும்பச் சனி நடைபெறுகிறது. இதுமட்டுமின்றி ஆண்டு கோளான குருபகவானும் ஆண்டின் தொடக்கத்தில் விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டிலும், வரும் செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதிமுதல் ஜென்ம ராசியிலும் சஞ்சாரம் செய்யவுள்ளார். இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதனால் எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். செய்யும் தொழில், வியாபாரத்திலும் அனுகூலமானப் பலன்களைப் பெறமுடியாது. தொழில்ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரிப்பதுடன் வீண்விரயங்களும் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி குறைவும் பொருளாதார ரீதியாக நெருக்கடிகளும் உண்டாகும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, பிறர் விஷயங்களில் தலையிடாதிருப்பது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றிலும் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாகக் கொடுப்பதை தவிர்ப்பதால் வீண் பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும். சர்ப்பகிரகமான ராகு ஆண்டின் தொடக்கத்தில் 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய வலிமையை. பெறுவீர்கள். என்றாலும் வரும் 27-07-2017ல் ஏற்படவிருக்கும் சர்ப்பகிரக மாற்றத்தால் கேதுபகவான் 4-ஆம் வீட்டிலும், ராகு 10-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யவிருப்பது ஓரளவுக்கு சுமாரான அமைப்பு என்பதால்  எதிலும் ஏற்றஇறக்கமான பலன்களைப் பெறுவீர்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல், டென்ஷன்களை குறைத்துக்கொள்ளமுடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சி களில் தடைகளுக்குப் பின்பே அனுகூலம் உண்டாகும். ஏழரைச் சனி தொடர்ந்தாலும் நீங்கள் துலா ராசியில் பிறந்திருப்பதால் சனி உங்களுக்கு கேந்திர திரிகோணாதிபதியாகி யோகக்காரகன் என்பதால் பெரிய கெடுதல்கள் ஏற்படாது.

உடல் ஆரோக்கியம்  
ஒருநாளைக்கு ஒருபிரச்சினை தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்த நிலை, எதிலும் சுறுசுறுப்பாக ஈடுபட முடியாத நிலை உண்டாகும் என்றாலும் குடும்பத்தில் உள்ளவர்கள் ஓரளவுக்கு நலமாக இருப்பார்கள். தேவையற்ற அலைச்சல், டென்ஷன் போன்றவையும் உண்டாகும்.
குடும்பம், பொருளாதார நிலை 
கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உற்றார்- உறவினர்களை சற்று அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் பிறருக்கு தேவையற்ற பிரச்சினையை ஏற்படுத்தும். பணவரவுகள் ஓரளவுக்கு திருப்தியாக அமையும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளை குறைப்பது நல்லது.  திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூட சற்று தாமத நிலை ஏற்படும். 
கொடுக்கல்- வாங்கல் 
கமிஷன் ஏஜென்ஸி, காண்ட்ராக்ட் துறைகளிலிருப்பவர்களுக்கு வரவேண்டிய லாபங்கள் தடைபடும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும்.

தொழில், வியாபாரம் 
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளால் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தட்டிச்செல்லும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களை சில காலம் தள்ளிவைப்பது நல்லது. எதிர்பார்க்கும் கடனுதவிகள் தாமதப்படும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். 
உத்தியோகம் 
உத்தியோகஸ்தர்கள் கவனமுடன் செயல்பட வேண்டிய காலமாகும். பணியில் மந்த நிலையும் எதையும் சுறுசுறுப்பாக செய்துமுடிக்க முடியாத அளவிற்கு உடல் சோர்வும் ஏற்படும். உயரதிகாரிகளின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாவீர்கள். பிறர் செய்யும் தவறுகளுக்கும் நீங்களே பொறுப்பேற்க வேண்டி வரும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதப்படுவதால் மனநிம்மதி குறையும்.

பெண்கள்
உடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். எடுக்கும் காரியங்களில் தடைகளுக்குப்பின் வெற்றிகளைப் பெறுவீர்கள். பொருளாதார ரீதியாக நெருக்கடியும், குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகளும் தோன்றும் என்பதால் கணவன் மனைவி விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். சுபகாரியங்கள் கைகூட சற்று தாமத நிலை ஏற்படும். 

அரசியல் 
அரசியலில் செல்வாக்கிற்கு பஞ்சம் இருக்காது என்றாலும் கட்சிப் பணிகளுக்காக நிறைய அலைச்சல்களை எதிர்கொள்ள நேரிடும். மக்களின் ஆதரவைப் பெற சற்று கஷ்டப்பட வேண்டிய வரும். வருவாய்களுக்கு பஞ்சம் இருக்காது என்றாலும் எதிர்பாராத வீண்விரயங்களும் ஏற்படும். மக்கள் தேவையறிந்து செயல்படுவது நல்லது.

விவசாயிகள் விவசாயிகள் அதிகம் பாடுபட்டல் மட்டுமே உழைப்பிற்கேற்ற லாபத்தை அடையமுடியும். பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும். பங்காளிகளை அனுசரித்து நடப்பது நல்லது. கால்நடைகளால் ஓரளவுக்கு லாபத்தைப் பெறமுடியும். காய், கனி, பூ வகைகளாலும் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும்.

மாணவ- மாணவியர் மாணவ- மாணவியர் கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் நினைத்த மதிப்பெண்களைப்பெற முடியும். அரசுவழியில் எதிர்பார்த்த உதவிகள் சற்று தாமதப்படும். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும்போது கவனம் தேவை. நண்பர்களின் சகவாசங்களால் சிறுசிறு பிரச்சினைகளை சந்திப்பீர்கள். 

மாதப்பலன்கள்


ஜனவரி
உங்கள் ராசிக்கு மாதமுற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சாரம் செய்வதும், லாப ஸ்தானமான 11-ல் ராகு சஞ்சாரம் செய்வதும் ஓரளவுக்கு சாதமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் சுபிட்சம், கணவன்- மனைவியிடையே ஒற்றுமை இருக்கும். உங்களுக்கு ஏழரை சனி தொடருவதால் எதிலும் சிந்தித்து நிதானமுடன் செயல்படவும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனமாக செயல்படுவது நல்லது. எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்திசெய்து கொள்வீர்கள். உற்றார்- உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே நற்பலனை அடைய முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
சந்திராஷ்டமம்:  08-01-2017 மாலை 05.58 மணி முதல் 10-01-2017 மாலை 06.48 மணி வரை 
பிப்ரவரி
உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன் சஞ்சாரம் செய்வது சாதமற்ற அமைப்பு என்றாலும் 6-ல் செவ்வாய், லாப ஸ்தானமான 11-ல் ராகு சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றி களைப் பெறுவீர்கள். பிறரிடம் வீணாக வாக்குவாதங்கள் செய்வதையும் மற்றவர்களின் விஷயங்களில் தலையீடு செய்வதையும் தவிர்த்தால் வம்பு வழக்குகளை குறைக்கலாம். உங்களின் முன்கோபம் உங்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பார்கள். சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்:  04-02-2017 இரவு 12.20 மணி முதல் 07-02-2017 அதிகாலை 02.43 மணி வரை

மார்ச்
லாப ஸ்தானமான 11-ல் ராகு சஞ்சாரம் செய்வதும், மாதப்பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் சாதகமான அமைப்பாகும். பொருளாதார ரீதியாக மேன்மைகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வதும் முன்கோபத்தை குறைத்துக் கொள்வதும் நல்லது. நீங்கள் நல்லதாக செய்யும் செயல்களும் பிறருக்கு தேவையற்ற பிரச்சினைகளை உண்டாக்கும். தொழில், வியாபாரத்தில் நிகரற்ற லாபத்தை அடைவீர்கள். கொடுக்கல்- வாங்கலும் சரளமான நிலையில் இருக்கும். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். சுபகாரியங்களுக் கான பேச்சு வார்த்தைகளில் சிறப்பான சாதகப்பலன் அமையும். நினைத்தது நிறைவேறும். சனிக்கு பரிகாரம் செய்யவும்.
சந்திராஷ்டமம்:  04-03-2017 காலை 05.42 மணி முதல் 06-03-2017 காலை 08.24 மணி வரை

ஏப்ரல்
லாப ஸ்தானமான 11-ல் ராகு சஞ்சாரம் செய்வதும், மாதமுற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் ஓரளவுக்கு சாதகமான அமைப்பாகும். இதனால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய வலிமை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும், உடனிருப் பவர்களை அனுசரித்து நடப்பதும் நல்லது. பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவும் என்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைக்கவும். புதிய முயற்சிகளை மேற்கொள்வதை சில காலம் தள்ளிவைக்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களும் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து பணிகளில் கவனம் செலுத்தவும்.
சந்திராஷ்டமம்:  31-03-2017 மதியம் 12.35 மணி முதல் 02-04-2017 மதியம் 02.05 மணி வரை. மற்றும்  27-04-2017 இரவு 09.51 மணி முதல் 29-04-2017 இரவு 09.46 மணி வரை

மே
களத்திர ஸ்தானமான 7-ல் சூரியன் 8-ல் செவ்வாய், விரய ஸ்தானமான 12-ல் குரு சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். மற்றவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பணவரவுகள் சுமாராக இருக்கும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் தேவையற்ற பிரச்சினைகளை உண்டாக்கிவிடும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் அதிகரிக்கும். எதிலும் நிதானமுடன் செயல்பட்டால் மட்டுமே நற்பலனை அடைய முடியும். சிவபெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்  25.05.2017 காலை 08.33 மணி முதல் 27.05.2017 காலை 07.38 மணி வரை

ஜுன்
அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன், புதன் விரய ஸ்தானமான 12-ல் குரு சஞ்சாரம் செய்வதால் வீண் செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற பிரச்சினைகள் மேலோங்கும். எதிர்பாராத பயணங்களால் உடல் சோர்வு ஏற்பட்டு மனநிம்மதி குறையும். குடும்பத்திலுள்ளவர்களிடமும் உற்றார்- உறவினர்களிடமும் பேச்சை குறைப்பது வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். உங்களிடம் உதவி பெற்றவர்கள்கூட நன்றிமறந்து பேசுவார்கள். பணவரவுகளில் தடை இருக்காது. உத்தியோகஸ்தர்களின் நிலை உயர் வாகவே இருக்கும். தொழில், வியாபாரமும் சுமுக நிலையில் நடைபெறும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்:  21-06-2017 மாலை 06.52 மணி முதல் 23-06-2017 மாலை 06.22 மணி வரை

ஜுலை
பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன் செவ்வாய், 10-ல் புதன் சஞ்சாரம் செய்வதால் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். இதுமட்டுமின்றி இம்மாதம் 27-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு- கேது பெயர்ச்சியின்மூலம் கேது 4-லிம் ராகு 10-லிம் சஞ்சாரம் செய்யவுள்ளதால் அசையாச் சொத்துகளால் சிறுசிறு விரயங்கள் உண்டாகும். தேவையற்ற அலைச்சல்களும் உண்டாகும் என்றாலும் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கும், சுபிட்சத்திற்கும் பஞ்சம் இருக்காது. பணவரவுகளும் தேவைக்கேற்றபடி அமையும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பொன்பொருள் சேரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். தினமும் விநாயகரை வழிபடவும்.
சந்திராஷ்டமம்:  19-07-2017 அதிகாலை 03.21 மணி முதல் 21-07-2017 அதிகாலை 04.13 மணி வரை

ஆகஸ்ட்பாக்கிய ஸ்தானமான 9-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், சூரியன் 10, 11-ல் சஞ்சாரம் செய்வதும் நல்ல அமைப்பாகும். உங்களுக்கு எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி கிட்டும். பணவரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். உற்றார்- உறவினர்களும் உங்களைப் புரிந்துகொள்வதற்கான உண்டாகும். சிலர் வீடு, மனை, வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத இரட்டிப்பு லாபம் கிட்டும். கடன்கள் படிப்படியாக குறையும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்ளவும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
சந்திராஷ்டமம்:  15-08-2017 காலை 09.41 மணி முதல் 17-08-2017 பகல் 11.58 மணி வரை

செப்டம்பர்
இம்மாதம் 2-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு பெயர்ச்சியின்மூலம் குரு ஜென்ம ராசியில் சஞ்சரிக்க இருப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் ஜீவன ஸ்தானமான 10-ல் சுக்கிரன், 11-ல் செவ்வாய், மாத முற்பாதி வரை சூரியன் 11-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் விலகி தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிட்டும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. அதுபோல பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. குடும்ப ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்:  11-09-2017 மதியம் 03.04 மணி முதல் 13-09-2017 மாலை 05.47 மணி வரை

அக்டோபர்விரய ஸ்தானமான 12-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் தேவையற்ற வீண் விரயங்கள் அதிகரிக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். 11-ல் செவ்வாய், சுக்கிரன் இருப்பதால் பொருளாதார ரீதியாக ஓரளவுக்கு முன்னேற்றங்களை அடைவீர்கள். முன்கோபத்தை குறைத்துக் கொண்டு பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது எல்லாவகையிலும் மேன்மை தரும். தேவையற்ற ஆடம்பரச் செலவுகளை குறைப்பது நல்லது.  சுபகாரியங்களுக்கான பேச்சு வார்த்தைகளில் சற்று தாமத நிலை ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 08-10-2017 இரவு 09.33 மணி முதல் 10-10-2017 இரவு 11.18 மணி வரை

நவம்பர்
ஜென்ம ராசியில் சூரியன், விரய ஸ்தானமான 12-ல் செவ்வாய் சுக்கிரன்,  சஞ்சரிப்பதால் தேவையற்ற வீண் விரயங்கள் அதிகரிக்கும். கணவன்- மனைவிடையே அன்யோன்யம் குறையும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள், கண்களில் கோளாறு ஏற்படலாம். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும்போது  நிதானத்துடன் செயல்படுவதும் நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். தொழில், வியாபார ரீதியாக சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருள்தேக்கம் ஏற்படாது. நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் சிலருக்கு வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தும். முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்:  05-11-2017 காலை 06.32 மணி முதல் 07-11-2017 காலை 06.44 மணி வரை 
டிசம்பர்
உங்கள் ஜென்ம ராசியில் குரு, 2-ல் சூரியன், சஞ்சரிப்பதால் குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்கள் அதிகரிக்கும் என்றாலும் மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் ஓரளவுக்கு வெற்றியினைப் பெறமுடியும். கடந்த கால பிரச்சினைகள் சற்றே மறையும். குடும்பத்திலும் ஒற்றுமையும் மனநிம்மதியும் உண்டாகும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடி அமையும். தொழில், வியாபார நிலையிலும் முன்னேற்றம் உண்டாகும். ஆடம்பரமாக செலவு செய்வதை குறைத்தால் கடன்களை தவிர்க்கலாம். இம்மாதம் 19-ஆம் தேதி ஏற்படவிருக்கும் சனி மாற்றத்தின்மூலம் சனி 3-ஆம் வீட்டிற்கு மாறுதலாகவிருப்பதால் உங்களுக்கு ஏழரைச்சனி முழுமையாக முடிவடைந்துவிடும். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்:  02-12-2017 மாலை 05.32 மணி முதல் 04-12-2017 மாலை 04.53 மணி வரை மற்றும்  30-12-2017 அதிகாலை 04.29 மணி முதல் 01-01-2018 அதிகாலை 04.27 மணி வரை 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் : 4, 5, 6, 7, 8; நிறம் : வெள்ளை, பச்சை; கிழமை : வெள்ளி, புதன்; கல் : வைரம்; திசை : தென் கிழக்கு; தெய்வம் : லக்ஷ்மி.

No comments: