Thursday, December 22, 2016

2017- புத்தாண்டு பலன்கள் தனுசு

 2017- புத்தாண்டு பலன்கள்   தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)


எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் கள்ளம் கபடமின்றி பழகும் பண்பு கொண்ட தனுசுராசி நேயர்களே,  உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். இந்த வருடம் உங்களுக்கு ஏழரை சனி தொடருவதாலும், ஆண்டின் முற்பாதிவரை உங்கள் ராசியாதிபதி குரு ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுக்க வேண்டியிருக்கும். நெருங்கியவர்களிடையே பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பதும், கணவன்- மனைவி விட்டுக் கொடுத்து நடப்பதும் நல்லது. தொழில், வியாபார ரீதியாக நிறைய போட்டி பொறாமைகள் மறைமுக எதிர்ப்புகள் யாவும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். கேது 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றி பெற்று விடுவீர்கள். வரும் 27-07-2017ல் ஏற்படவுள்ள சர்ப்பகிரக மாற்றத்தின் மூலம் கேது 2-ஆம் வீட்டிலும் ராகு 8-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய இருப்பதும் சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது.   என்றாலும் செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தினால் குரு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் செப்டம்பருக்குப் பின்பு நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். தொழில், வியாபார ரீதியாக நீங்கள் சந்தித்த போட்டி பொறாமைகள், கண்ணுக்கு தெரியாத மறைமுக எதிர்ப்புகள் யாவும் இருந்த இடம் தெரியாமல் மறையும். உத்தியோகஸ்தர்களும் திறமைக்கேற்ற உயர் பதவிகளை அடைவார்கள். உடன் பணிபுரிபவர்களும் சாதகமாக செயல்படுவார்கள். உற்றார் உறவினர்களும் நட்புக்கரம் நீட்டுவார்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி பெறுவீர்கள். நம்பிக்கையான நண்பர்களும் கிடைப்பார்கள். இக்காலங்களில் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயங்களில் நல்ல லாபம் காண முடியும். எதிரி களை ஓட ஓட விரட்டியடிக்கும் ஆற்றல் உண்டாகும். வாழ்வில் சுபிட்ச மான நிலையினை அடைவீர்கள். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும்.

உடல் ஆரோக்கியம் 

உடல் ஆரோக்கியம் சுமாராகத்தான் இருக்கும். தலைவலிக்கு மருந்து சாப்பிடாமல் வயிற்றுவலி வந்து சேரும். ஒன்றுபோனால் ஒன்றுவரும், உடல், நிலையில் சோர்வுமந்தமான நிலை இருக்கும். தேவையற்ற பயணங் களாலும் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படும். நேரத்திற்கு உணவு உண்ண முடியாது.

குடும்பம், பொருளாதார நிலை 

குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள், ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். நெருங்கியவர்களை மிகவும் அனுசரித்து செல்ல வேண்டி வரும் என்றாலும் ஆண்டின் பிற்பாதியில் குடும்பத்திலிருந்தப் பிரச்சினைகள் விலகி தடைபட்ட திருமண சுபகாரியங்களும் கைகூடும். தாராள தனவரவு உண்டாகி குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன் ஏஜென்ஸி, காண்ட்ராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்கள் பணவிஷயத்தில் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதை தவிர்த்து விடவும். நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். ஆண்டின் பிற்பாதியில் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். 

தொழில், வியாபாரம் 

தொழில், வியாபாரம் செய்பவர்கள் ஆண்டின் தொடக்கத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் வீண் விரயங் களை சந்திப்பீர்கள். உடனிருப்பவர்கள் சாதகமற்று செயல்படுவார்கள். எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது என்றாலும் குரு மாற்றத்திற்குப் பின் நல்ல லாபமும் கூட்டாளிகளால் அனுகூலமும் பெறுவார்கள். எதிர்பாராத கடனுதவிகள் தக்கநேரத்தில் கிடைக்கும். 

உத்தியோகம் 

பணியில் சுறுசுறுப்பாகச் செயல்பட இயலாத நிலை ஏற்படும். பிறர் செய்யும் தவறுகளுக்காகவும் வீண்பழிகளை சுமப்பீர்கள். உடல் நலக்குறைவால் வேலைக்கு ஒழுங்காகச் செல்ல முடியாத நிலையும் இதனால் உயரதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாகக் கூடிய சூழ்நிலைகளும் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தை விட்டுப் பிரிய நேர்ந்தாலும் ஊதிய உயர்வுகள் கிடைக்கப்பெறுவீர்கள்.

பெண்கள் 

பெண்களின் உடல் நிலையில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகும். குடும்ப விஷயங்களை அதிகம் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். பணவரவுகள் ஆண்டின் பிற்பாதியில் தாராள மாக அமையும். குடும்பத்திலும் சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு நினைத் தவரையே கைப்பிடிக்கும் யோகமும் உண்டாகும். பணவிஷயத்திலும் உடல் ஆரோக்கியத்திலும் அதிக கவனம் செலுத்துவது நல்லது. 

அரசியல் 

அரசியல்வாதிகள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற அதிக சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். பெயர், புகழ், செல்வம், செல்வாக்கு யாவும் கிடைக்கப் பெற்றாலும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும்.

விவசாயிகள் 

விவசாயிகளுக்கு மகசூல் பெருகி லாபங்கள் கிடைக்கும் என்றாலும் வேலையாட்கள் கிடைக்க சிரமம் உண்டாகும். உங்கள் உடல் நிலை பாதிப்படைவதால் சரிவர பணிகளை செய்து முடிக்க முடியாது. பூமி, மனை வாங்கும் விஷயங்களை ஆண்டின் பிற்பாதியில் செய்வது நல்லது.

மாணவ- மாணவியர்

கல்வி பயிலுபவர்கள் சற்று மந்தநிலையிலேயே இருப்பார்கள். ஞாபக மறதியால் கல்வியில் ஈடுபாடற்ற நிலை உண்டாகும். பெற்றோர், ஆசிரியர்களின் அன்பும் ஆதரவும் எப்பொழுதும் உண்டு. விளையாட்டுப் போட்டிகளில் சற்று கவனமுடன் செயல்பட்டால் பரிசுகளை தட்டிச் செல்லலாம். தேவையற்ற பொழுதுபோக்குகளையும், நண்பர்களின் சேர்க்கைகளையும் தவிர்த்துவிடுதல் உத்தமம்.


மாதப்பலன்கள்ஜனவரி

உங்கள் ஜென்ம ராசிக்கு 3-ல் செவ்வாய் 17-ஆம் தேதி முதல் அதிசாரமாக 11-ல் குரு, சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். நீங்கள் நினைத்தது நிறைவேறும், தொட்டதெல்லாம் பொன்னாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் மேலோங்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றும் ஆற்றல் உண்டாகும். பொன் பொருள் சேரும். புதிய பூமி, மனை வாங்கும் யோகம், வண்டி சேர்க்கை யாவும் அமையும். உத்தி யோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பாராத உயர்வுகள் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் தேடிவரும். சிவபெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்:  12-01-2017 இரவு 07.50 மணி முதல் 14-01-2017 இரவு 10.57 மணி வரை 

பிப்ரவரி

உங்கள் ஜென்ம ராசிக்கு 11-ல் அதிசாரமாக குரு சஞ்சரிப்பதும், மாதப் பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் தாராள தனவரவுகள் உண்டாகி உங்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் திருமண வயதை அடைந்தவர்களுக்கு சிறப்பான மணவாழ்க்கை அமையும். சிலர் விரும்பியவரை கைபிடிப்பர். பொன் பொருள் சேரும். புதிய வீடுகட்டி குடி புகும் யோகம் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிக்கும். தொழில், வியாபாரத்திலும் நல்லதொரு முன்னேற்றம் ஏற்படும். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். சனிக்கு பரிகாரம் செய்யவும்.

சந்திராஷ்டமம்:  09-02-2017 காலை 05.11 மணி முதல் 11-02-2017 காலை 08.56 மணி வரை 

மார்ச்

ஜென்ம ராசிக்கு 4-ல் சுக்கிரன், மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் ஏற்றமிகு பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். பணவரவில் இருந்த தடை விலகும். திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் நல்ல லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சலும் டென்ஷனும் உண்டாகும் என்றாலும் அதன்மூலம் ஆதாயங்களும் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் கிட்டும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடப்பது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடவும். 

சந்திராஷ்டமம்:  08-03-2017 பகல் 11.59 மணி முதல் 10-03-2017 மாலை 04.59 மணி வரை 

ஏப்ரல்

ராசிக்கு 4-ல் சூரியன், 10-ல் குரு சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும், 3-ல் கேது, 11-ஆம் தேதி முதல் 6ல் செவ்வாய் சஞ்சாரம் செய்யவிருப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தேவையற்ற பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பதும், பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகளும் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பணவரவு களுக்கு பஞ்சம் இருக்காது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்:  04-04-2017 மாலை 05.23 மணி முதல் 06-04-2017 இரவு 11.01 மணி வரை 

மே

ராசிக்கு 4-ல் சுக்கிரன், 6-ல் செவ்வாய், மாதப் பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நிறைவேறும். திருமண சுபகாரியங்கள் யாவும் மகிழ்ச்சியுடன் நடைபெறும். கணவன்- மனைவியடையே ஒற்றுமை பலப்படும். பொன் பொருள், ஆடை ஆபரணம் சேரும். கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். பூமி, மனை வாங்கும் யோகம் அமையும். பயணங்களாலும் எதிர்பாராத லாபங் கள் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் அதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமைகள் பாராட்டப்படும். துர்க்கை அம்மனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்:  01-05-2017 இரவு 11.35 மணி முதல் 04-05-2017 அதிகாலை 04.30 மணி வரை மற்றும்  29-05-2017 காலை 07.56 மணி முதல் 31-05-2017 பகல் 11.14 மணி வரை 

ஜுன்

ராசிக்கு 5-ல் சுக்கிரன், மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால், பொருளாதார ரீதியாக மேன்மைகள் உண்டாகும். பணம் பல வழிகளில் தேடிவந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்திலும் சுபிட்சமான நிலையிருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் கைகூடும். புத்திர பாக்கியம் உண்டா வதற்கான அறிகுறிகள் தோன்றும். பூர்வீகச் சொத்துகளால் ஏற்பட்ட வம்பு வழக்குகளாலும் சாதகமான பலன்கள் உண்டாகும். தொழில், வியாபாரமும் சிறப்பாக நடைபெறும். எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். சிவபெருமானை வழிபடவும்.

சந்திராஷ்டமம்:  25-06-2017 மாலை 06.04 மணி முதல் 27-06-2017 இரவு 07.59 மணி வரை 

ஜுலை

ராசிக்கு 7-ல் சூரியன் செவ்வாய், 10-ல் குரு சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு ஆகும். இதுமட்டுமின்றி இம்மாதம் 27-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு கேது பெயர்ச்சியின்மூலம் கேது 2-லிம் ராகு 8-லிம் சஞ்சாரம் செய்ய வுள்ளதால்  குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை, சோர்வு, தூக்கமின்மை போன்ற பாதிப்புகள் உண்டாகும். அஜீரணக் கோளாறுகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டிவரும். உற்றார்- உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடு களும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வுகளை பிறர் தட்டிச் செல்வார்கள். சர்ப்ப சாந்தி செய்யவும்.

சந்திராஷ்டமம்:  23-07-2017 அதிகாலை 04.30 மணி முதல் 25-07-2017 காலை 06.02  மணி வரை 

ஆகஸ்ட்

ஏழரைசனி நடப்பதும், ராசிக்கு 8-ல் சூரியன், செவ்வாய், சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. பொருளாதார ரீதியாக மேன்மைகள் உண்டாகும் என்றாலும் வீண் அலைச்சல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகளும் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சற்றே மந்தநிலை உண்டாகும். கூட்டாளிகளால் சிறுசிறு விரயங்கள் சந்திப்பீர்கள். எந்தவொரு காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுத்துவது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும். தொழில், வியாபாரம் போன்றவற்றில் போட்டிகள் நிலவினாலும் லாபங்கள் குறையாது. சிவபெருமானை வழிபடவும்.

சந்திராஷ்டமம்:  19-08-2017 மதியம் 01.39 மணி முதல் 21-08-2017 மதியம் 03.52 மணி வரை 

செப்டம்பர்

இம்மாதம் 2-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு பெயர்ச்சியின்மூலம் குரு 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதும், 9-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி பெறுவீர்கள். பணவரவுகளும் தாராளமாக அமைந்து குடும்பத்தேவைகளும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார்- உறவினர்களின் வருகையும் மகிழ்ச்சியை உண்டாக்கும், தொழில், வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். அரசுவழியில் அனுகூலங்கள் கிடைக்கப்பெற்று புதிய நவீனக்கருவிகளை வாங்கிப் போடுவீர்கள். துர்க்கை அம்மனை வழிபடுவது நல்லது. 

சந்திராஷ்டமம்:  15-09-2017 இரவு 08.37 மணி முதல் 17-09-2017 இரவு 12.07 மணி வரை

அக்டோபர்

ஏழரைசனி நடைபெற்றாலும் 11-ல் குரு 10-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பது தொழில் வியாபார ரீதியாக அனுகூலத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். கூட்டாளிகளின் ஆதரவுகளால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ளமுடியும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பூர்வீகச் சொத்துகளால் லாபம் அடைவீர்கள். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகளுக்கு தகுந்த பாராட்டுதல்கள் கிடைப்பதுடன் எதிர்பார்த்த பதவி உயர்வுகளும் கிடைக்கும். கௌரவமான பதவிகளை அடைவார்கள். இம்மாதம் நீங்கள் முருகனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்:  13-10-2017 அதிகாலை 02.03 மணி முதல் 15-10-2017 காலை 06.21 மணி வரை 

நவம்பர்

ஏழரைசனி நடைபெற்றாலும் 11-ல் குரு, சூரியன் 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும்.  தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி மேல் வெற்றி பெறுவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத் தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் சிறப்பாகவே இருக்கும். உடல் ஆரோக்கி யத்தில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். உற்றார்- உறவினர்கள் சாதமாக அமைவார்கள். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். முருகப்பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்:  09-11-2017 காலை 08.03 மணி முதல் 11-11-2017 பகல் 11.44 மணி வரை 

டிசம்பர்

லாப ஸ்தானமான 11-ல் குரு சஞ்சரிப்பதும் 3-ஆம் தேதி முதல் 11-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பாகும். இதனால் பொருளாதார ரீதியாக சிறப்பான மேன்மைகள் உண்டாகும். நெருங்கியவர்களால் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக குறையும். பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு வழக்குகளும் ஒரு முடிவுக்கு வரும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் அளவிற்கு ஆற்றல் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிர்பார்க்கும் பதவி உயர்வும் கிட்டும். இம்மாதம் 19-ஆம் தேதி ஏற்படவிருக்கும் சனி பெயர்ச்சியின்மூலம் உங்களுக்கு ஏழரை சனியில் ஜென்மச் சனி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. நீங்கள் விநாயகப்பெருமானை வழிபடவும். 

சந்திராஷ்டமம்:  06-12-2017 மாலை 04.33 மணி முதல் 08-12-2017 மாலை 06.28 மணி வரை 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் : 1, 2, 3, 9; நிறம் : மஞ்சள், பச்சை; கிழமை : வியாழன், திங்கள்.

கல் : புஷ்ப ராகம்; திசை : வடகிழக்கு; தெய்வம் : தட்சிணா மூர்த்தி.

No comments: