Sunday, February 12, 2017

ஜோதிடத்தில் காதல் யோகம்

ஜோதிடத்தில் காதல் யோகம் 

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

காதல் இளைய தலைமுறையின் மூச்சுக்காற்றில் கலந்திருக்கும் ஒன்று. ஜாதி மதம், இனம் மொழிகளைக் கடந்து காற்று புக முடியாத இடத்திற்கும் இந்த காதல் புகுந்துவிடும். பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர்களின் சொல்லுக்கு செவி சாய்க்காதவர்கூட, இந்த காதலில்  ஈடுபட்டால் காதலியின் கடைக்கண் பார்வைக்கு கட்டுண்டு போவார்கள். கெட்டவர்களையும் நல்லவர்களாக்கும் வலிமை காதலுக்கு உண்டு. மழை வருமா என வானத்தை நிமிர்ந்து பார்க்காதவனுக்குக் கூட காதலில் விழுந்தால் வானமே கையிலிருக்கும். மேகங்களில் மிதப்பான். நிலாவைப் பற்றி வர்ணிப்பான். கோடை வெயில் சுடாது. குளிர்காலத்தில் குளிராது. கவிதை பிறக்கும். கற்பனை ஊற்றெடுக்கும். காதலித்துப் பார் இந்த உலகில் உள்ள அனைத்தும் அழகாகத் தெரியும்.

எச்சில் கையில் காக்காய் ஓட்டாதவனும் காதலியுடன் இருக்கும்போது பிச்சைகாரனுக்கு பத்து ரூபாய் கொடுப்பான். இளைஞர்களே!  வெட்ட வெளியில், சுடும் வெயிலில் கடற்கரை மணலிலும், பூங்காக்களில் செடியின் மறைவிடங்களிலும் சுற்றி இருப்போரைப் பற்றிக்கவலைப்படாமல் நடந்து கொள்வதல்ல காதல். காதல் புனிதமானது. காமம் இயற்கையானது என்றாலும், திருமணத்திற்கு பின்தான் எதுவும் என்று மனக்கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வது நல்லது.

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் என்பதால் மலர் கண்காட்சியைப் போல எங்கு பார்த்தாலும் காதலர்கள் கைகோர்த்து நடப்பதைப் பார்ப்பதே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். காதலியுங்கள். ஆனால் பெற்றோர்களின் மனம் நோகாமல் பார்த்து கொள்ளுங்கள். தற்போதைய சூழ்நிலையில் பிள்ளைகளின் தேவைகளை புரிந்து நடக்கும் பெற்றோர்கள் அதிகரித்து கொண்டே இருக்கிறார்கள். பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளை நண்பர்களைப் போல பாவித்து, உங்களின் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். பிள்ளைகளே! உங்களின் பெற்றோர்கள்  உங்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருப்பார்களே தவிர, உங்களின்  வாழ்க்கையை அழிப்பவர்களாக இருக்க மாட்டார்கள் என்பதை புரிந்து நடந்து கொள்ளுங்கள். இனக்கவர்ச்சிக்கும், உண்மையான காதலுக்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ளுங்கள். 

ஜோதிட ரீதியாக காதல் உணர்வு உண்டாக நவகிரகங்களின் ஆதிக்கமே காரணமாக அமைகிறது. பொதுவாக நவகிரகங்களில் ஆண்களுக்கு களத்திர காரகன் சுக்கிரன். பெண்களுக்கு களத்திர காரகன் செவ்வாய்.  இந்த இரு கிரகங்களும் ஆண் பெண் இருவர்களின் ஆசை, பாசங்களை தூண்டுவதாக உள்ளது. ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் பலம் பெற்றிருந்தாலும், சுப கிரகங்களால் சூழப்பட்டாலும் சிறப்பான மண வாழ்க்கை அமைவதுடன் சுக போகங்களை அனுபவிக்க கூடிய யோகமும் உண்டாகும். பாவிகளால் சூழப்பட்டால் வாழ்க்கை பாதையே தடம் மாறி போகும். சுக்கிரனை போலவே 7ம் வீட்டில் இருக்கக் கூடிய கிரகமும் மண வாழ்க்கையை நிர்ணயம் செய்கிறது. ஆண்களுக்கு சுக்கிரன் எப்படியோ அது போல் தான் பெண்களுக்கு செவ்வாய் செவ்வாயின் அமைப்பை கொண்டு பெண்ணின் மண வாழ்க்கையை நிர்ணயம் செய்யலாம்.     

இராசி சக்கரத்தில் ஒவ்வொரு பாவத்திற்கும் ஒவ்வொரு காரகத்துவம் உண்டு. திருமணத்தைப் பற்றி ஆராயும்போது குடும்ப ஸ்தானமான 2ம் இடமும், சுகஸ்தானமான 4 ஆம் இடமும், மன ஈர்ப்பு மற்றும் புத்திர பாக்கியத்திற்குரிய ஸ்தானமான 5ம் இடமும், களத்திர ஸ்தானமான 7ம் இடமும், மாங்கல்ய ஸ்தானமான 8ம் இடமும், அயன, சயன சுகஸ்தானமான 12ம் இடமும் முக்கியத்துவம் வகிக்கிறது. 

அதில் குறிப்பாகக் காதல் திருமணத்தைப் பற்றி ஆராயும் போது 5,7ம் இடங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஏனென்றால்  மனத்தில் ஏற்படக் கூடிய ஈர்ப்பு தன்மையைக் குறிப்பது 5ம் இடமாகும். களத்திர ஸ்தானமான 7ம் இடம் திருமணத்தைக் குறிக்கக் கூடியதாகும். 5,7க்குரிய அதிபதிகள் ஒருவருக்கு ஒருவர் சம்மந்தத்துடனிருந்தால் மனத்தளவில் ஈர்ப்புத் தன்மை உண்டாகிக் காதல் கை கூடித் திருமணத்தில் முடிகிறது. ஆக 5,7க்கு அதிபதிகள் இணைவது, பார்த்துக் கொள்வது, பரிவர்த்தனை பெறுவது, காதல் திருமணத்தை ஏற்படுத்தும். 

இலக்கினத்திற்கு அதிபதி 5இல் இருந்தாலும் 1,5,க்குரிய அதிபதிகள் ஒருவருக்கொருவர் சம்மந்தம் பெற்றாலும் காதலில் ஈடுபடக்கூடிய வாய்ப்பு உண்டாகும். 5,7ல்  சந்திரன், ராகு அல்லது கேது  ஆகிய கிரகங்கள் அமைந்தாலும் 5,7 இக்கு அதிபதிகள் சந்திரன், £கு அல்லது கேது, சேர்க்கை அல்லது சாரம் பெற்றாலும் காதலில் ஈடுபடக்கூடிய வாய்ப்பு உண்டாகும். 

     ஒருவருக்கொருவர் ஈர்ப்பு சக்தி உண்டாவதற்கான கிரக அமைப்புகளை பற்றி பார்க்கும் பொது பெண் ஜாதகத்தில் எங்கு செவ்வாய் உள்ளதோ  அதே ராசியில் ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் இருந்தால் ஈர்ப்பு சக்தி அதிகம் உண்டாகும். இரு கிரகங்களும் டிகிரி ரீதியாக எவ்வளவு நெருக்கமாக உள்ளதோ அவ்வளவு  ஈர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

     பெண் ஜாதகத்தில் செவ்வாய் எங்கு உள்ளதோ, அதற்கு கேந்திர திரிகோணங்களில் ஆணுக்கு சுக்கிரன் இருந்தால் ஒற்றுமை உண்டாகும்.
     பெண் ஜாதகத்தில் செவ்வாய் எங்கு உள்ளதோ அதற்கு 2,6,8,12ல் சுக்கிரன் ஆண் ஜாதகத்தில் இருந்தால் இருவருக்கும் ஒற்றுமை இருக்காது.

     பெண் ஜாதகத்தில் செவ்வாய் எங்கு உள்ளதோ அதற்கு 7ஆம் வீட்டில் ஆண் ஜாதகத்தில் சனி, ராகு இருந்தாலும், ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் எங்கு உள்ளதோ அதற்கு 7ம் வீட்டில் சனி ராகு பெண் ஜாதகத்தில் இருந்தால் இருவருக்கும் ஈர்ப்பு சக்தி உண்டாகும் என்றாலும் இருவரும் விட்டு கொடுத்து செல்ல வேண்டி இருக்கும். 

செவ்வாய் சனி, ராகுவால் பாதிக்கப்பட்டிருந்தாலும், சுக்கிரன் சனி ராகுவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் பெண்ணாக இருந்தால் ஆண்களிடமும் ஆணாக இருந்தால் பெண்களிடமும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது உத்தமம்.

     ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் எங்கு உள்ளதோ அதனை ஆண் ஜாதகத்தில் உள்ள குரு பார்வை செய்தாலும், ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் எங்கு உள்ளாரோ அதனை பெண் ஜாதகத்தில் உள்ள குரு பார்வை செய்தாலும் ஆண் பெண் இருவருக்கும் எந்த ஒரு ஏமாற்று வேலையும் இல்லாமல் வாழ்க்கை சிறப்பாக அமையும். ஆணுக்கு 12ல் சுக்கிரன் இருந்து பெண்ணுக்கு 12ல் செவ்வாய் இருந்தால் இருவருக்கும் ஈர்ப்பு உண்டாகும்.

     ஒரு பெண் ஜாதகத்தில் செவ்வாய் சனியால் பாதிக்கப்பட்டிருந்து, ஆண் ஜாதகத்தில் பெண்ணுக்கு எங்கு செவ்வாய் சனி உள்ளதோ அதே இடத்தில் சனி, செவ்வாய் அமையப் பெற்றால் இருவருக்கும் ஈர்ப்பு உண்டாகும்.

     ஆண் பெண் இருவருக்கும் சம சப்தம லக்னம், சம சப்தம ராசியாக இருந்தாலும் ஈர்ப்பு உண்டாகும். ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் சனியால் பாதிக்கப்பட்டிருந்தால், செவ்வாய் சனியால் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணின் மீது ஈர்ப்பு உண்டாகும்.
     பெண் ஜாதகத்தில் சந்திரன் உச்சம் பெற்று 7ம் அதிபதி சேர்க்கை பெற்றாலும், 7ல் சந்திரன் அமையப் பெற்றாலும், சந்திரன் செவ்வாய் சேர்க்கை பெற்றாலும் காதலில் அதிக ஈடுபாடு ஏற்பட்டு காதல் திருமணம் செய்து கொள்ளும் அமைப்பு உண்டாகும்.

     சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்று அமையப் பெற்றிருந்தால் மற்றவர்களை எளிதில் வசீகரம் செய்யும் ஆற்றல் உண்டாகும். ஒரு ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் பாவிகளால் சூழப்பட்டாலும்,பெண் ஜாதகத்தில் செவ்வாய் சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்றாலும் வேறு ஜாதி வேறு மத நபரை காதலித்து கை பிடிக்கும் அமைப்பு உண்டாகும்.

     லக்னத்திற்கு 5ம் வீட்டில் சந்திரன் அமையப் பெற்றால் காதல் திருமணத்தில் ஈடுபாடு உண்டாகும். பெண் ஜாதகத்தில் 5ல் சந்திரன் செவ்வாய் ஆண் ஜாதகத்தில் 5ல் சுக்கிரன் சந்திரன் அமையப் பெற்றால் காதலித்து திருமணம் செய்யக் கூடிய அமைப்பு உண்டாகும்.

இளைஞர்களே தங்களின் காதல் எந்த வகையிலும் மற்றவர்களைப் பாதிக்காமல் நடந்து கொள்வது இன்றைய தலைமுறையினரின் தலையாயக் கடமையாகும். No comments: