Wednesday, July 19, 2017

ராகுகேது பெயா்ச்சி பலன்கள் 2017 2019

ராகுகேது பெயா்ச்சி பலன்கள் 2017 2019
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.comமிதுனம்  
மிருகசீரிஷம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்


எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவராகவும், தன்மானம் மிக்கவராகவும் விளங்கும் மிதுன ராசி நேயர்களே! வாக்கியப்படி வரும் 27-7-2017முதல் 13-2-2019வரை சர்ப்ப கிரங்களான ராகு உங்கள் ஜென்ம ராசிக்கு 2-ஆம் வீட்டிலும், கேது 8-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது என்றாலும் 2-9-2017முதல் 4-10-2018வரை குரு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்துவிடமுடியும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்படும் என்றாலும் பெரிய கெடுதி இல்லை. பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பதும், குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதிருப்பதும் உத்தமம். பொன் பொருள் சேரும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் அமையும். இக்காலங்களில் சிலருக்கு புத்திரபாக்கியம் உண்டாவதற்கான வாய்ப்புகளும் உண்டாகும்.  அசையும், அசையாச் சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். பூர்வீகச் சொத்து வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். 

வரும் 19-12-2017 முதல் சனி சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்ற விஷயத்தில் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கப்பெற்றாலும், பதவி உயர்வுகள் சற்று தாமதப்படும். தேவையற்ற பயணங்களாலும் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். 4-10-2018முதல் குருவும் ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் 2018 இறுதியில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். நீங்கள் நல்லதாக நினைத்துச்செய்யும் காரியங் களும் மற்றவர்களுக்கு வீண்பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்தால் மட்டுமே கடனில்லாத கண்ணிய வாழ்க்கை வாழமுடியும். இந்த ராகு- கேது பெயர்ச்சி ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும் என்பதால் எதிலும் சிந்தித்துச்செயல்படுவது நல்லது.

உடல் ஆரோக்கியம் 
உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச்செலவுகள் செய்ய வேண்டி இருக்கும். மனைவி, பிள்ளைகளாலும் மருத்துவச் செலவுகள் உண்டாகி சேமிப்புக் குறையும். தேவையற்ற பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும். எதிரிகளின் பலம்கூடி உங்கள் பலம் குறையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல், டென்ஷன் உண்டாகும். தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வதால் மனநிம்மதி உண்டாகும்.

குடும்பம் பொருளாதார நிலை 
உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டிவரும். குடும்பத்தில் மனஅமைதி குறையும். அடிக்கடி கணவன்- மனைவி இடையே சண்டை சச்சரவுகள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் இடையே கருத்து வேறுபாடுகளும், பிரச்சினைகளும் ஏற்படும். புத்திரவழியிலும் வீண் செலவுகள் உண்டாகும். பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறுவதால் குடும்பத்தேவைகளைப் பூர்த்தி செய்துவிடமுடியும். 

கொடுக்கல்- வாங்கல்
கமிஷன் ஏஜென்ஸி, கான்டிராக்ட் போன்றவற்றில் ஓரளவுக்கு லாபங்களைப் பெற்றுவிடமுடியும். கொடுக்கல் -வாங்கலிலும் சரளமான நிலை ஏற்படும். சிலநேரங்களில் கொடுத்த கடன்களை வசூலிக்க முடியாத நிலை உண்டாகும் என்றாலும் பிரச்சினைகளுக்குப்பின் வசூலித்து விடுவீர்கள். பணவிஷயத்தில் பிறரை நம்பி முன்ஜாமீன், வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது உத்தமம்.

தொழில் வியாபாரம்
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபங்கள் கிடைக்கப்பெற்றாலும் வீண்அலைச்சலும், தேவையற்ற நெருக்கடிகளும் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டி இருக்கும். கூட்டாளிகளை நம்பி பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்பட்டால் மட்டுமே வீண்விரயங்களைத் தவிர்க்கமுடியும். 

உத்தியோகம் 
உத்தியோகஸ்தர்களுக்கு அதிகாரிகளின் கெடுபிடிகளால் வேலைப்பளு அதிகரித்தாலும் உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் நிம்மதியளிக்கும். நியாயமாக கிடைக்கவேண்டிய பதவி உயர்வுகளில் தாமதநிலை உண்டாகும். தேவையற்ற இடமாற்றங்களால் வேலையில் ஈடுபாடற்றநிலை உண்டாகும். சில நேரங்களில் பிறர்செய்யும் தவறுகளுக்கும் நீங்களே பொறுப்பேற்க வேண்டி இருக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதைப் பயன்படுத்திக்கொள்வது உத்தமம்.

பெண்கள் 
உடல்நிலையில் அடிக்கடி பாதிப்பு உண்டாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பரச்செலவுகளைக் குறைத்துக்கொண்டால் கடன்களைத் தவிர்க்கலாம். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். பணிபுரிபவர் களுக்கு உயர்வுகள் கிடைக்கப்பெற்றாலும் வேலைப்பளு அதிகரிப்பதால் உடல் சோர்வடையும்.

அரசியல் 
அரசியலில் எதிர்பார்க்கும் கௌரவப் பதவிகள் கிடைக்கப்பெற்றாலும் பெயர், புகழ் பாதிக்கக்கூடிய சூழ்நிலைகளும் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாததால் மக்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். வெளியூர், வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள் வீர்கள். கட்சிப் பணிகளுக்காக செலவுகள் செய்ய நேரிட்டாலும் மறைமுக வருவாய்கள் கிடைக்கும். 

விவசாயிகள்
பயிர் விளைச்சல் சுமாராகத்தானிருக்கும். வயல் வேலைகளுக்கு சரியான வேலையாட்கள் கிடைக்காமல் பணியில் தடை ஏற்படும். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகளிலும் தாமதநிலை ஏற்படும். நீர்மட்டம் குறைவு, அதிக காற்று, மண் வளமின்மை போன்றவற்றால் பயிர்கள் பாதிப்படையும்.

கலைஞர்கள் 
தொழில்ரீதியாக நிறைய போட்டிகள் உண்டாகும் என்றாலும் இருக்கும் வாய்ப்புகளைச் சிறப்பாகப் பயன்படுத்தினால் முன்னேற்றம் உண்டாகும். அளவுக்கு அதிகமாக உழைப்பினை மேற்கொள்ள நேரிடும்.  வரவேண்டிய சம்பளத் தொகை தடைதாமதங்களுக்குப்பின் கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவு மகிழ்ச்சி தரும்.

மாணவ- மாணவியர்
ஆசிரியர்கள் அறிவுரைகளைக்கேட்டு நடந்துகொள்வது நல்லது. கல்வியில் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலைகள் உண்டானாலும் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்றுவிடுவீர்கள். மனதை அலைபாயவிடாமல் படிப்பது நல்லது. தேவையற்ற நண்பர்கள் சகவாசத்தைத் தவிர்ப்பது உத்தமம். வண்டி வாகனங்களில் வேகத்தைக் குறைப்பது நல்லது.

ராகு ஆயில்ய நட்சத்திரத்தில், கேது அவிட்ட நட்சத்திரத்தில் 27-7-2017முதல் 29-11-2017வரை
ராகு பகவான் உங்கள் ராசியாதிபதியான புதனின் நட்சத்திரத்தில் 2-ஆம் வீட்டிலும், கேது பகவான் செவ்வாயின் நட்சத்திரத்தில் 8-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படுவது மட்டுமின்றி குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். 2-9-2017முதல் குரு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் அற்புதமான நற்பலன்களை அடையமுடியும். நினைத்த காரியங்கள் யாவும் நிறைவேறும். பொருளாதாரநிலை மேன்மையாக இருப்பதால் குடும்பத்தின் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடை ஆபரணம் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக அமையும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப்பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். சுபகாரியங்கள் கைகூடும். புத்திரவழியில் மகிழ்ச்சி நிலவும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பினைப் பெறுவீர்கள். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கூட்டாளிகளையும் தொழிலாளர் களையும் சற்று அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. உத்தியோ கஸ்தர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி ஏற்படும். ராகு, கேதுவுக்குப் பரிகாரம் செய்வது உத்தமம்.

ராகு ஆயில்ய நட்சத்திரத்தில், கேது திருவோண நட்சத்திரத்தில் 30-11-2017முதல் 4-4-2018வரை
ராகு பகவான் உங்கள் ராசியாதிபதியான புதனின் நட்சத்திரத்தில் 2-ஆம் வீட்டிலும், கேது பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் 8-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் இக்காலத்தில் குரு 5-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும். எதிரிகளும் நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். 19-12-2017முதல் சனி 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வதும், உறவினர்களை அனுசரித்து நடந்துகொள்வதும் நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாகவே நடைபெறும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச்செல்வது நல்லது. எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலப்பலனை பெறமுடியும். அரசுவழியிலும் லாபம் கிட்டும். கடன்கள் யாவும் படிப்படியாகக் குறையும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள், ஊதிய உயர்வுகள் யாவும் தடையின்றிக் கிடைக்கும். சிலருக்கு வெளியூர், வெளிநாடுகளுக்குச்சென்று பணிபுரியும் வாய்ப்பு உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு மக்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். சனிப்பரீதியாக ஆஞ்சநேரை  வழிபடுவது, அம்மனை வழிபடுவது நல்லது.

ராகு பூச நட்சத்திரத்தில், கேது திருவோண நட்சத்திரத்தில் 5-4-2018முதல் 8-8-2018வரை
ராகு பகவான் சனியின் நட்சத்திரத்தில் 2-ஆம் வீட்டிலும், கேது பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் 8-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் இக்காலத்தில் 7-ல் சஞ்சரிக்கும் சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். சொந்தமாக வீடு வாகனங்கள் வாங்கக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் தேடிவரும். உற்றார் உறவினர்களை சற்றே அனுசரித்து நடந்துகொண்டால் அனுகூலங்களைப் பெறமுடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கடன்கள் யாவும் படிப்படியாகக் குறையும். குடும்பத்தில் திருமணம் போன்ற மங்களகரமான சுப காரியங்கள் தடைக்குப்பின்பு கைகூடும். தாராள தனவரவுகளால் மகிழ்ச்சி நிலவும். செய்யும் தொழில், வியாபாரத்தில் சற்றே மந்தநிலை ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவை லாபமளிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குக் கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கப்பெறும். கலைஞர்கள் கையில் இருக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பயன்படுத்திக்கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். துர்க்கை,விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

ராகு பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 9-8-2018முதல் 12-12-2018வரை
ராகு பகவான் சனியின் நட்சத்திரத்தில் 2-ஆம் வீட்டிலும், கேது பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 8-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. சனி 7-ல் சஞ்சரிப்பதாலும், 4-10-2018 முதல் குரு 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதாலும் வீண் வம்பு வழக்குகள் ஏற்படும். தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். சிலருக்கு அசையும், அசையாச் சொத்துகளால் செலவுகள் ஏற்படும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு மணமாவதில் தடைகள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். வரவேண்டிய வாய்ப்புகள் யாவும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் கைநழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்படமுடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமதநிலை ஏற்பட்டாலும் வேலைப்பளு குறைவாகவே இருக்கும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடவும்.

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 13-12-2018முதல் 13-2-2019வரை
ராகு பகவான் குருவின் நட்சத்திரத்தில் 2-ஆம் வீட்டிலும், கேது பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 8-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலத்தில் குரு 6-ல், சனி 7-ல் சஞ்சரிப்பதால் எதிலும் கவனத்தோடு இருப்பது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். புத்திரவழியில் மனசஞ்சலங்கள் ஏற்படும். பூர்வீகச் சொத்துகளால் வீண்விரயங்கள் ஏற்படும். உற்றார்- உறவினர்களிடையே பிரச்சினைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக்கூடிய பாதிப்புகளால் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்திலுள்ளவர்களுக்கும் உடல்நல பாதிப்பு ஏற்படும். பொருளாதாரநிலை  சிறப்பாக இருக்கும் என்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். குடும்பத் தேவைகளை ஓரளவுக்குப் பூர்த்தி செய்யமுடியும். திருமண சுபகாரியங்கள் தடைகளுக்குப்பின் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். உற்றார்- உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உயரதிகாரிகளை அனுசரித்துச்செல்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச்செய்ய நினைக்கும் செயல்களில் கவனமுடன் நடந்து கொள்வது உத்தமம். வியாழக்கிழமைதோறும் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

பரிகாரம்

மிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 2-ல் ராகு 8-ல் கேது சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, சிவன் மற்றும் சண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைக்குட்டை போன்றவற்றைப் பயன்படுத்துவது, ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் சஹ ராஹவே நமஹ என்ற பீஜ மந்திரத்தைக் கூறிவருவதும், கேதுவுக்குப் பரிகாரமாக தினமும் விநாயகரை வழிபடுவது, செவ்வரளிப் பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்  கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ணமயமான போர்வை, வெள்ளைப் புள்ளிகள் உடைய பழுப்பு நிறப்பசு போன்றவற்றை  ஏழை மனிதனுக்கு தானம் தருவது நல்லது. சனி பகவான் 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்வது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பை
எண்       - 5, 6, 8,
நிறம் - பச்சை, வெள்ளை
கிழமை - புதன், வெள்ளி
கல் - மரகதம்
திசை - வடக்கு
தெய்வம் - விஷ்ணு

No comments: