Saturday, July 15, 2017

ராகு- கேது பெயர்ச்சிப் பலன்கள்

ராகு- கேது பெயர்ச்சிப் பலன்கள்

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் - இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.comமேஷம்
அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்

எதையும் வெளிப்படையாகப் பேசும் குணமும், சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே! வாக்கியப்படி வரும் 27-7-2017முதல் 13-2-2019வரை ராகு பகவான் ஜென்ம ராசிக்கு சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டிலும், கேது பகவான் ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. இதனால் அசையும் அசையாச் சொத்துகளால் வீண் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் இருக்கும் வாய்ப்புகளை நழுவவிடாதிருப்பது நல்லது. கூட்டாளிகளும், வேலையாட்களும் ஒற்றுமையுடன் செயல்படமாட்டார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் சிறப்பாகக் கிடைக்கும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன் உண்டாகக்கூடிய காலம் என்பதால் பயணங்களைத் தவிர்க்கவும். தற்போது 6-ல் சஞ்சரிக்கும் குருபகவான் வரும் 2-9-2017முதல் 4-10-2018வரை சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சாரம் செய்ய இருப்பது அற்புதமான அமைப்பாகும். கணவன்- மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் அனைத்தும் விலகி ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் படிப்படியாகக் குறையும். குடும்பத்தில் உள்ளவர்வர்களால் சிறுசிறு மருத்துவச் செலவுகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் இல்லை. உற்றார்- உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நற்பலன் ஏற்படும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் தேடிவரும். பண வரவுகள் சிறப்பாக அமையும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் சாதகமானப் பலன்களை அடைவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். அஷ்டமச்சனி நடைபெறுவதால் பல இன்னல்களை சந்தித்து வரும் உங்களுக்கு 19-12-2017-ல் ஏற்படவுள்ள சனி மாற்றத்திற்குப்பிறகு சனி பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிக்க உள்ளார். இதனால் மேன்மேலும் முன்னேற்றங்களை அடைவீர்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளால் அனுகூலமானப்பலன்களை அடையமுடியும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் நற்பலன் அமையும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் அன்றாடப்பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படமுடியும். மனைவி, பிள்ளைகளால் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களாலும் எடுக்கும் முயற்சிகளில் போட்டி பொறாமைகள் ஏற்படுவதாலும் மன சஞ்சலங்கள் ஏற்படும். உறக்கமின்மை, சுகவாழ்வு -சொகுசு வாழ்வு பாதிப்பு உண்டாகும். எடுத்த காரியங்களில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேற்றத்தை அடைந்துவிடுவீர்கள்.

குடும்பம், பொருளாதாரநிலை

குடும்பத்தில் கணவன் -மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உறவினர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும் தக்கசமயத்தில் ஆதரவாக செயல்படுவார்கள். பொருளாதாரநிலை திருப்திகரமாக இருக்கும். வீண் செலவுகளைக் குறைத்துக்கொண்டால் கடன் வாங்குவதைத் தவிர்க்கலாம். திருமண சுபகாரிய முயற்சிகளுக்கு நெருங்கியவர்களே தடையாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவிகள் தாமதப்பட்டாலும் கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கும். குடும்பத்தின் தேவைகளை நிவர்த்தி செய்யமுடியும்.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன் ஏஜென்ஸி, கான்டிராக்ட் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்யும் முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். எதிர்பார்த்த பணவரவுகளும் கிடைக்கும். வம்பு, வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்.

தொழில், வியாபாரம்

தொழில் ,வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிரிகளால் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். புதிய முதலீடுகளில் செய்யும் காரியங்களில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. எதிர்பார்க்கும் கடனுதவிகள் சில தடைகளுக்குப்பின் கிடைக்கும். கூட்டாளிகள் அனுகூலமாக செயல்படுவார்கள். லாபம் சிறப்பாக அமையும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சலை குறைத்து கொள்ள முடியும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற இடமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். பொறுப்புகள் அதிகமாகி அதிகநேரம் பணிபுரிய வேண்டிவரும். உடல்நிலை சோர்வடையும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன் உண்டாகும் என்றாலும் எடுக்கும் பணிகளை எளிதில் செய்துமுடித்து அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை உண்டாக்கும்.

பெண்கள்

குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக அமையும். மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். வரவுக்குமீறிய செலவுகள் ஏற்பட்டாலும் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தாய்வழியில் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகக் கிடைக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறி மனமகிழ்ச்சியை உண்டாகும். உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. பணிபுரியும் பெண்களுக்கு சற்று வேலைப்பளு கூடும்.

அரசியல்

அரசியல்வாதிகளுக்குப் புகழ், பெருமை உயரக்கூடிய காலமாகும். உடனிருப்பவர்கள் உதவிகரமாக அமைவார்கள். எடுக்கும் காரியங்களை சிறப்பாகச் செய்து முடித்து அமைச்சர்களின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றிவிடமுடியும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சுமாராகத்தான் இருக்கும். விளைபொருளுக்கேற்ற விலையை சந்தையில் தடைக்குப்பின்பு பெறமுடியும். அரசுவழியில் சிறுசிறு மானியத் தொகை கிடைக்கும். பங்காளிகளால் ஓரளவுக்கு ஆதரவு உண்டாகும். எதிர்பாராத தனவரவுகளும் கிடைக்கும்.

கலைஞர்கள்

தொழிலில் நிறைய போட்டிகள் நிலவினாலும் எதையும் சமாளித்து முன்னேற்றமடையக்கூடிய ஆற்றல் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல், டென்ஷன் ஏற்பட்டாலும் அதன்மூலம் அனுகூலங்களை அடைவீர்கள். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். உடன் பழகும் கலைஞர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது உத்தமம்.

மாணவ- மாணவியர்

கல்வியில் அதிக கவனம் எடுத்துக்கொண்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறமுடியும். விளையாட்டுப்போட்டிகளிலும் வெற்றி வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும். பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் திருப்தியளிக்கும். வண்டிவாகனங்களில் செல்லும்போது வேகத்தைக் குறைப்பது நல்லது.

ராகு ஆயில்ய நட்சத்திரத்தில், கேது அவிட்ட நட்சத்திரத்தில் 27-7-2017முதல் 29-11-2017வரை

ராகு ஜென்ம ராசிக்கு 4-ல் ஆயில்ய நட்சத்திரத்திலும், கேது 10-ல் அவிட்ட நட்சத்திரத்திலும் சஞ்சரிக்கும் இக்காலங்கள் உங்களுக்கு ஓரளவுக்கு அனுகூலமானதாகவே அமையும். 2-9-2017முதல் குரு சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடையின்றி நிறைவேறி மகிழ்ச்சி அளிக்கும். எதிர்பாராத திடீர் தனவரவுகளால் குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பழைய கடன்கள் படிப்படியாகக் குறையும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடு மறையும். சிலருக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். உடன்பிறப்புகளால் சாதகமான பலனை அடைவீர்கள். அண்டை அயலாரின் உறவு சிறப்பாக அமையும். புதிய பொருட்கள் சேரும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் சிறப்பாக அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறையும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிர்பார்த்த லாபங்களும் கிடைக்கப்பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் முன்னேற்றமான நிலை உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். அரசியல்வாதிகளின் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் உயரும். கலைஞர்கள் கைநழுவிய படவாய்ப்புகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவார்கள். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவதால் அதிக மதிப்பெண்களைப் பெறுவார்கள். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

ராகு ஆயில்ய நட்சத்திரத்தில், கேது திருவோண நட்சத்திரத்தில் 30-11-2017முதல் 4-4-2018வரை

ராகு பகவான் புதனின் நட்சத்திரத்தில் 4-ஆம் வீட்டிலும், கேது பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் 10-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்கின்றனர். ராகு கேதுவால் நன்மை தீமை கலந்த பலன்களே உண்டாகும் என்றாலும் குரு 7-ல் சஞ்சரிப்பதால் பணவரவில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திரவழியில் பூரிப்பு உண்டாகும். சிலருக்கு பூர்வீகச் சொத்து விஷயங்களிலிருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். அசையும், அசையாச் சொத்துகள் வாங்கும் யோகமும் உண்டாகும். பொன், பொருள் சேரும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். 19-12-2017முதல் சனி பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தொழில், வியாபாரம் செய்பவர்கள் தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். நல்ல வாய்ப்புகள் தேடிவரும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப்பெறும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.

ராகு பூச நட்சத்திரத்தில், கேது திருவோண நட்சத்திரத்தில் 5-4-2018முதல் 8-8-2018வரை

ராகு பகவான் சனியின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 4-லும், கேது பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் 10-லும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றி கிட்டும். குருவும், சனியும் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் தனவரவுகள் சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் விரைவில் சரியாகிவிடும். குடும்பத்திலுள்ளவர்களால் எதிர்பாராத மருத்துவச் செலவுகளைச் சந்திக்க நேரிடும். பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத உதவிகளால் குடும்பத்தேவைகளைப் பூர்த்திசெய்து விடமுடியும். கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும், அசையாச் சொத்துகளை வாங்கும் யோகம் அமையும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும், பதவி உயர்வுகளும் கிடைக்கப்பெறும். வேலைப்பளு குறைவாக இருக்கும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

ராகு பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 9-8-2018 முதல் 12-12-2018 வரை

ராகு பகவான் சனியின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 4-லும், கேது பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 10-லும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் சுமாரான பலன்களைப் பெறமுடியும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் மட்டுமே ஒற்றுமை நிலவும். 4-10-2018முதல் குரு 8-ல் சஞ்சரிக்க இருப்பதால் இருப்பதால் சுபகாரிய முயற்சிகளில் தடை ஏற்படும். அசையும், அசையாச் சொத்துககளால் வீண் விரயம் ஏற்படும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப்பெறுவதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்துச் செயல்படுவது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவதுடன் மருத்துவச் செலவுகளையும் குறைத்துக்கொள்ள முடியும். தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். கூட்டாளிகளை அனுசரித்துச்செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் நற்பலனை அடையலாம். அரசியல்வாதிகள் மேடைப் பேச்சுகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. குருப்ரீதியாக தட்சிணா மூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 13-12-2018முதல் 13-2-2019வரை

ராகு பகவான் குருவின் நட்சத்திரத்தில் 4-ஆம் வீட்டிலும், கேது பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 10-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. இக்காலங்களில் குரு பகவான் 8-ல் சஞ்சரிப்பதால் கணவன்-- மனைவியிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக்கூடிய பாதிப்புகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். நல்ல வரன்கள் தட்டிப்போகும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படத் தடை ஏற்படும். வரவேண்டிய லாபம் குறையும். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பற்ற நிலையால் எதிலும் திறம்பட ஈடுபடமுடியாமல் போகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. சிலருக்கு அசையும், அசையாச் சொத்துகளால் வீண் செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். எதிர்பாராத திடீர் உதவிகள் கிடைக்கப்பெறுவதால் நிலைமையை சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். அசையும், அசையாச் சொத்துகளால் வீண் விரயம் ஏற்படும். வியாழக்கிழமைதோறும் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

பரிகாரம்

மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ராகு 4-லும் கேது 10-லும் சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைக்குட்டை போன்றவற்றைப் பயன்படுத்துவது, ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் சஹ ராஹவே நமஹ என்ற பீஜ மந்திரத்தைக் கூறிவருவது நல்லது. தினமும் விநாயகரை வழிபடுவது, ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ என்ற பீஜ மந்திரத்தைக் கூறிவருவது, செவ்வரளிப் பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, கருப்பு எள், வண்ணமயமான போர்வை, வெள்ளைப் புள்ளிகள் உடைய பழுப்பு நிறப்பசு போன்றவற்றைத் தானம் தருவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பை

எண் - 1, 2, 3, 9
நிறம் - ஆழ்சிவப்பு
கிழமை - செவ்வாய்
கல் - பவளம்
திசை - தெற்கு
தெய்வம் - முருகன்

No comments: