Tuesday, October 31, 2017

sani peyarchi 2017 to 2020 Rishaba rasi

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் 2017-2020 ரிஷபம்

ரிஷபம்  

கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2-ஆம் பாதங்கள்

  இனிமையான சுபாவமும், எல்லாரையும் வசீகரப்படுத்தக் கூடிய ஆற்றலும் கொண்ட ரிஷப ராசி நேயர்களே! சுக்கிரனின் ராசியில் பிறந்த உங்களுக்கு இதுநாள் வரை 7-ல் சஞ்சரித்த சனி வாக்கிய கணிதப்படி  19-12-2017 முதல் 27-12-2020 வரை ராசிக்கு 8-ல் சஞ்சரிக்க உள்ளதால் அஷ்டமச்சனி தொடங்குகிறது. இதனால் தேக ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள், உடல்நிலையில் சோர்வு, மந்த நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வது உத்தமம். உற்றார்- உறவினர்களிடமும் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் முடிந்தவரை பேச்சைக் குறைத்துக்கொள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடை, தாமதங்கங்களைச் சந்திக்க நேரிடும். எந்த ஒரு காரியத்தையும் எதிர்நீச்சல் போட்டே முடிக்க வேண்டியிருக்கும். பண விஷயங்களில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்த பணத்தைத் திரும்பப் பெறமுடியாமல் போகும். பொருளாதார நிலையில் நெருக்கடிகள் ஏற்படுவதால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படும். தொழில், வியாபார ரீதியாக நெருக்கடிகள் ஏற்பட்டு அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். பெரிய முதலீடுகள் கொண்ட செயல்களைச் செய்யும்போது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் செய்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். அஷ்டமச்சனி நடைப்பெற்றாலும் உங்கள் ராசிக்கு 9, 10-க்கு அதிபதியான சனி பகவான் தர்மகர்மாதிபதியாகி யோகக்காரகன் என்பதால் பெரிய கெடுதலைச் செய்ய மாட்டார்.

  சனி அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கவுள்ள இக்காலத்தில் ஆண்டுக் கோளான குரு உங்கள் ராசிக்கு 5-10-2018 முதல் 28-10-2019 வரை சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சாரம் செய்கின்ற காலத்தில் எதிர்பாராத தனச் சேர்க்கைகள் ஏற்பட்டு குடும்பத் தேவைகள் ஓரளவுக்குப் பூர்த்தியாகும். நெருங்கியவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் செயல்பட்டால் அனுகூலமானப் பலனை அடையலாம். கொடுக்கல்-வாங்கலில் ஓரளவுக்கு லாபம் அமையும். உங்கள் ராசிக்கு 27-7-2017 முதல் 13-2-2019 வரை முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு சஞ்சரிக்க இருப்பதால்  எதிர்பாராத உதவிகள் கிடைத்து எந்தவித நெருக்கடி களையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். 

உடல் ஆரோக்கியம்  

   உடல்நிலையில் சற்று கவனம் செலுத்த வேண்டிய காலமாகும். அவ்வப்போது பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளை உண்டாக்கும். மனைவி, பிள்ளைகளாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் உண்டாகக்கூடிய பிரச்சினைகளால் மனநிம்மதியற்ற நிலை ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் தடை, தாமதங்கள் உண்டாவதால் மனநிம்மதி குறைவடையும். தேவையற்ற பயணங்களால் உடல்நிலை சோர்வடையும்.

குடும்பம், பொருளாதார நிலை

   கணவன்- மனைவியிடையே ஒற்றமை குறையும். பொருளாதார நிலையிலும் தடைகள் ஏற்பட்டு குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யவே கஷ்டப்பட வேண்டியிருக்கும். கடன்கள் மேலோங்கும். உற்றார்- உறவினர்களிடையே உண்டாகக்கூடிய கருத்து வேறுபாடுகளால்  சுபகாரியங்கள் தடைப்படும். புத்திரர்கள் உங்கள் பேச்சை மதிக்காமல் நடப்பதால் வீண் மனசஞ்சலங்கள் உண்டாகும்.

கொடுக்கல்- வாங்கல்

  கமிஷன் ஏஜென்ஸி, கான்ட்ராக்ட் துறையில் உள்ளவர்கள் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கொடுக்கல்-வாங்கல் சுமாரான லாபத்தைத் தரும். பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது உத்தமம். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலை இருக்கும். உடன்பழகுபவர்களிடம் சற்று கவனமுடனிருப்பது நல்லது.

தொழில், வியாபாரம் 

தொழில், வியாபாரத்தில் மந்தமான நிலையே நிலவும். எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படும். நிறைய போட்டி பொறாமைகள் நிலவுவதால் லாபம் குறைந்து அபிவிருத்தி தடைப்படும். கூட்டாளிகளை மிகவும் அனுசரித்துச்செல்ல வேண்டியிருக்கும். புதிய முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே லாபத்தினைப் பெறமுடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்து வதில் கவனமுடன் நடந்து கொண்டால் ஓரளவுக்கு நற்பலனை அடைய முடியும்.

உத்தியோகம் 

  உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். பணியில் கவனக்குறைவுடன் செயல்பட்டு அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். எதிர்பாராத இடமாற்றங்களால் வீண் அலைச்சல் அதிகரிக்கும். பிறர்செய்யும் தவறுகளுக்கும் நீங்கள் பொறுப்பேற்கக்கூடும் என்பதால் எதிலும் கவனம் தேவை. உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்காததால் வேலைப்பளு அதிகரிக்கும்.

பெண்கள்

   உடல்நிலையில் அக்கறை செலுத்த வேண்டியிருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். பொருளாதார நிலையில் பற்றாக்குறைகள் ஏற்படும். உற்றார்-உறவினர்கள் உங்களுக்கு வீண் செலவுகளையும், பிரச்சினைகளையும் உண்டாக்கு வார்கள். எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படுவதால் கடன்கள் வாங்க வேண்டியிருக்கும். முடிந்தவரை அனைவரையும் அனுசரித்துச் செல்வது உத்தமம்.

அரசியலில் எதிர்பார்க்கும் பெரிய பதவிகள் கிடைக்காவிட்டாலும் பெயர், புகழுக்கு பங்கம் ஏற்படாது. பணவருவாய் சுமாராக இருக்கும். உடனிருப்பவர்களே துரோகம் செய்ய எண்ணுவார்கள். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாமல் அவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். மேடைப் பேச்சுகளில் கவனமுடன் இருப்பது நல்லது.

விவசாயிகள்

   பயிர் விளைச்சல் சுமாராக இருப்பதால் பொருளாதார நிலையும் சுமாராகத்தானிருக்கும். பூமி, மனை போன்றவற்றால் சிறுசிறு வீண் செலவுகள் உண்டாகும். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்றுத் தாமதப்படும். பங்காளிகளால் பிரச்சினைகள் ஏற்பட்டு மனஅமைதி குறையும். உடனிருப்பவர்களிடம் பேச்சில் நிதானம் தேவை.

கலைஞர்கள் 

   தொழிலில் நிறைய போட்டிகள் உண்டாவதால் வரவேண்டிய வாய்ப்புகள் குறையும். பணவிஷயத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டியிருக்கும். ஆடம்பரச் செலவுகளால் கடன்கள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை. கையிலிருக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பயன்படுத்திக் கொள்வது உத்தமம். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் மந்த நிலை உண்டாகும். உடல்நிலையில் சோர்வு ஏற்பட்டு அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டியிருக்கும். தேவையற்ற பொழுது போக்குகளையும் பழக்கவழக்கங்களையும் தவிர்ப்பது நல்லது. பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவைப்பெற கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. கல்விக்காகப் பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும்.

சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 19-12-2017 முதல் 23-4-2018 வரை

   சனி பகவான் மூல நட்சத்திரத்தில் உங்கள் ராசிக்கு 8-ல் சனி சஞ்சரிப்பதும், 6-ல் குரு சஞ்சரிப்பதும் அனுகூலமற்ற அமைப்பு என்றாலும் 3-ல் ராகு இருப்பதால் பொருளாதார நிலை ஓரளவுக்குத் திருப்தியளிக்கும். பணவிஷயத்தில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் நிலவும். தொழில், வியாபாரம் சற்று மந்தநிலையில் நடை பெற்றாலும் தேக்கம் அடையாது. உத்தியோகஸ்தர்களுக்கு சற்று வேலைப் பளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப்பெறும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ள முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 24-4-2018 முதல் 20-8-2018 வரை

  சனி 8-ல் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு கடந்த காலங்களில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக விலகி ஓரளவுக்கு அனுகூலப்பலன்களை உண்டாக்கும். ஜென்ம ராசிக்கு 3-ல் ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, பொருளாதார மேன்மை உண்டாகும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை நிலவும். உங்களுக் குள்ள வம்பு வழக்குகளில் சற்றே சாதக நிலை ஏற்படும். பல்வேறு பொது நலக் காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பும் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதும், வேலை யாட்களிடம் விட்டுக்கொடுத்து நடப்பதும் நல்லது. புத்திரவழியில் சிறுசிறு மனக்கவலைகள், செலவுகள் ஏற்படும் என்றாலும் பெரிய கெடுதிகள் இல்லை. தேவையற்ற செலவுகளைக் குறைத்து சிக்கனமாக செயல்பட்டால் சேமிக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தாங்கள் எதிர் பார்க்கும் உயர்வுகளைப் பெறுவார்கள். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பு.

சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 21-8-2018 முதல் 19-1-2019 வரை

  சனி பகவான் 8-ல் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது சாதகமற்ற பலனை ஏற்படுத்தும் என்பதால் உடல்நிலையில் சற்று அதிக அக்கறை எடுத்துக்கொள்வது, வாகனங்களில் பயணம் செய்யும்போது சற்று கவனமுடனிருப்பது நல்லது. 5-10-2018 முதல் குரு ஜென்ம ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக உயர்வுகள் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஏற்படும். உறவினர் களிடையே சற்று விட்டுக்கொடுத்து நடப்பது சிறப்பு. வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் அமையும். செல்வம், செல்வாக்கு உயரும். பழைய கடன்கள் படிப்படியாகக் குறையும். தொழில், வியாபாரம் சிறப்பான லாபம் தரும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். ஆன்மிக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 20-1-2019 முதல் 6-5-2019 வரை

  சனி பகவான் தனுசு ராசியில் ராசியதிபதியான சுக்கிரனின் நட்சத்திரத்தில் 8-ல் சஞ்சரித்தாலும், 7-ல் குரு சஞ்சரிப்பதால்  சுபகாரியங்கள் கைகூடும். பொருளாதார நிலை மிகச்சிறப்பாக அமையும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். எதிர்பாராத தனவரவுகள் கிடைத்து மனமகிழ்ச்சியை உண்டாக்கும். பொன்பொருள், ஆடை, ஆபரணம் சேரும். பணம் பல வழிகளில் தேடிவரும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகம் அமையும். புத்திரவழிகளில் மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எடுக்கும் பணிகளைச் சிறப்பாக செய்து முடிப்பார்கள். 13-2-2019 முதல் 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சரிப்பதால் கணவன்-மனைவி இருவரும் அனுசரித்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். கொடுக்கல்-வாங்கலில் லாபம் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் அமையும். கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சியளிக்கும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடவும்.

சனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 7-5-2019 முதல் 1-9-2019 வரை

   சனி பகவான் 8-ல் வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும், 7-ல் குரு சஞ்சரிப் பதாலும் குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். பணவரவு ஓரளவுக்கு சரளநிலையில் இருக்கும். எதிர்பாராத வீண்செலவுகள் உண்டாகக்கூடும் என்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைக்கவும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அமையும். கூட்டாளிகளால் ஓரளவுக்கு சாதகப்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. உடல்நிலையில் சற்று கவனம் செலுத்த வேண்டியிருக்கும். சர்ப்ப கிரகங்கள் சாதகமின்றி சஞ்சரிப்பதால் கணவன்-மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலைகள், வீண் வாக்குவாதங்கள் உண்டாகும் என்பதால் குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. வெளியூர், வெளிநாட்டுப் பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் அதன்மூலம் சாதகமான பலன் உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும். 

சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 2-9-2019 முதல் 28-9-2019 வரை

  சனி பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும், ஆண்டுக்கோளான குரு சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்கள் கைகூடும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகள் விலகும். ஜென்ம ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சரிப்பதால் உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கணவன்-மனைவி விட்டுக்கொடுத்து நடப்பது, நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள்,  பதவி உயர்வுகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிட்டும். செல்வம், செல்வாக்கு உயரும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். பழைய கடன்கள் படிப்படியாகக் குறையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். இக்காலங் களில் சனிப்ரீதியாக ஆஞ்சநேயர், அம்மனை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 29-9-2019 முதல் 25-2-2020 வரை

  சனி பகவான் தனுசு ராசியில் 8-ல் சஞ்சரித்தாலும், தனக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் நன்மை தீமை கலந்த பலன்களைப் பெறமுடியும். குரு 7-ல் இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில், வியாபார நிலையிலிருந்த போட்டிகள் விலகும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது நற்பலனை உண்டாக்கும். உத்தியோகஸ்தர்களுக்குத் தடைப்பட்ட உயர்வுகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தேடிவரும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். நினைத்தது நிறைவேறும். 29-10-2019 முதல், குரு 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். உறவினர்களை அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 26-2-2020 முதல் 28-4-2020 வரை

  சனி பகவான் தனுசு ராசியில், தனக்கு பகை கிரகமான சூரியனின் நட்சத்திரத்தில் 8-ல் சஞ்சரிப்பதால் எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது உத்தமம். பொருளாதார நிலையில் நெருக்கடிகள் ஏற்படும். 2-ல் ராகு, 8-ல் குரு, சனி, கேது போன்ற கிரகங்கள் சாதகமற்று சஞ்சரிப்பதால் மனசஞ்சலங்கள் அதிகரிக்கும். அசையும், அசையா சொத்துகளால் வீண்விரயங்கள் உண்டாகும். உடல்நிலையில் உண்டாகக்கூடிய பாதிப்புகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி ஈடுபடாமலிருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போடவேண்டி வரும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் ஏற்பட்டு வாய்ப்புகள் தடைப்படும். சர்ப்ப சாந்தி செய்வது, சனிக்குப் பரிகாரம் செய்வது, தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 29-4-2020 முதல் 14-9-2020 வரை

  சனி பகவான் ஜென்ம ராசிக்கு 8-ல் வக்ரகதியில் சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது.  குருவும் 8-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறுவதால் குடும்பத்தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியும். ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. புத்திரர்களால் வீண் மனசஞ்சலங்கள் உண்டாகும். பூர்வீக சொத்துகளாலும் வீண்விரயங்களை எதிர்கொள் வீர்கள். உற்றார்-உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் சற்று மந்தநிலையும் பொருட்தேக்கமும் உண்டாகும். உடனிருக்கும் கூட்டாளிகளிடம் வாக்குவாதங்கள் தோன்றுவதால் அபிவிருத்திக்க குறையும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 15-9-2020 முதல் 19-11-2020 வரை

  சனி பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் கடந்தகால பிரச்சினைகள் சற்றே குறையும் என்றாலும், 8-ல் சஞ்சரிப்பதால் எதிலும் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே அனுகூலப்பலனைப் பெறமுடியும். பணவரவுகளிலிருந்த தடைகள் படிப்படியாக விலகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடும். சொத்துகள் வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். கொடுத்த கடன்களும் வசூலாகும். சர்ப்ப கிரகங்கள் சாதகமின்றி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடப்பது நல்லது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது சிந்தித்துச் செயல்படவும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் சிறுசிறு நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத ஊதிய உயர்வுகள் கிடைக்கும். குடும்பத்திலுள்ளவர்களால் மருத்துவச் செலவுகளை சந்திப்பீர்கள். சர்ப்ப சாந்தி செய்யவும்.

சனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 20-11-2020 முதல் 27-12-2020 வரை

  சனி பகவான் தனுசு ராசியில் தனக்கு பகை கிரகமான சூரியனின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். குரு பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை மிகவும் சிறப்பாக இருக்கும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் தேடிவரும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களும் ஆதரவாக செயல்படுவார்கள். கொடுக்கல்-வாங்கல் லாப மளிக்கும். அசையும், அசையா சொத்துகளால் சுபச்செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் லாபம் தடைப்படாது. கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் நெருக்கடிகள் உண்டானாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். பல பொதுநலக் காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். சனிக்கு எள் தீபமேற்றி வழிபடுவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை எண் : 5, 6, 8,     நிறம் : வெண்மை, நீலம்,     கிழமை : வெள்ளி, சனி, கல் :  வைரம், திசை : தென்கிழக்கு, தெய்வம் : விஷ்ணு, லக்ஷ்மி.

No comments: