Saturday, November 25, 2017

Vrichika rasi – Sani peyarchi 2017 to 2020

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் 2017-2020 விருச்சிகம் 
விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை


  எந்த எதிர்ப்புக்கும் அஞ்சாமல் எடுக்கும் முயற்சிகளில் அயராது பாடுபடக்கூடிய ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே! உங்கள் ராசிக்கு 3,4-க்கு அதிபதியும், ராசியதிபதி செவ்வாய்க்கு பகை கிரகமுமான சனி கடந்த காலங்களில் ஜென்ம ராசியில் சஞ்சரிந்து ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடைபெற்றதால் இதுநாள் வரை பல்வேறுவகையில் துன்பங்களைச் சந்தித்து வந்தீர்கள். வாக்கியப்படி  19-12-2017 முதல் 27-12-2020 வரை குடும்ப ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் உங்களுக்கு ஏழரைச்சனியில் ஜென்மச்சனி முடிவடைந்து பாதச்சனி தொடங்குகிறது. உடல் ஆரோக்கிய ரீதியாக சற்று மந்தநிலை, சோர்வு போன்றவை ஏற்பட்டாலும் கடந்த காலங்களில் இருந்த பெரிய பிரச்சினைகள் யாவும் படிப்படியாக மறைந்து மருத்துவச் செலவுகள் சற்றுக் குறையும். குடும்பத்தில் தேவையில்லாத கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச செல்வது, உற்றார்- உறவினர்களிடம் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். தொழில், வியாபார நிலையில் சில போட்டிகளையும் மந்தமான சூழ்நிலைகளையும் சந்தித்தாலும் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய லாபத்தைப் பெற்று விடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப்பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். புதிய வேலை தேடு பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது. 

சனி குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் 4-11-2019 வரை குருவும் சாதகமின்றி சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை ஏற்ற இறக்க மாகவே இருக்கும். முடிந்தவரை ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது. பணம் கொடுக்கல்-வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகையை பிறருக்குக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்ப்பது உத்தமம். உடல் ஆரோக் கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். தெய்வ தரிசனங் களுக்காகப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். பல பெரிய மனிதர்களின் ஆதரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குரு பகவான் குடும்ப ஸ்தானமான 2-ஆம் வீட்டில் 5-11-2019 முதல் 20-11-2020 வரை சஞ்சாரம் செய்ய விருப்பது அனுகூலமான அமைப்பாகும். இக்காலங்களில் குடும்பத்தில் சுபகாரிங்கள் கைகூடும். மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். பொருளா தார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். 13-2-2019 வரை கேது முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் எந்தவித பிரச்சினைகளையும் சமாளித்து முன்னேற்றம் அடையக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள்.

உடல் ஆரோக்கியம்  

   உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். தூக்கமின்மை, உடல்நிலையில் சோர்வு, மந்த மான நிலை, ஞாபகமறதி போன்ற பாதிப்புகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல் குறையும். குடும்பத்தி லுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். புத்திரவழியில் மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். பேச்சில் நிதானத்தைக் கடைப் பிடிப்பதன்மூலம் மனஉளைச்சலைத் தவிர்க்கலாம்.

குடும்பம், பொருளாதார நிலை 

   கணவன்-மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக அமையும். உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. சுப காரிய முயற்சிகள் தடையுடன் நிறைவேறும். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் குடும்பத்தேவைகளைப் பூர்த்தி செய்துவிட முடியும். எதிர் பாராத உதவிகளும் கிடைக்கப்பெறும். தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடன்களைத் தவிர்க்கலாம். 

கொடுக்கல்- வாங்கல்

   கமிஷன் ஏஜென்ஸி, கான்ட்ராக்ட் போன்றவற்றில் ஓரளவுக்கு லாபங்கள் கிடைக்கும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும் என்பதால் பெரிய முதலீடுகளை எதிலும் ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில்  நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும்.

தொழில், வியாபாரம் 

   தொழில், வியாபாரம் செய்பவர்கள் தேவையற்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். சிறுசிறு சங்கடங்களை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலும் உண்டாகும். எதிர்பார்த்த கடனுதவிகள் தாமதப்பட்டாலும் தக்க சமயத்தில் கிடைக்கப்பெறும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பைப் பெற சற்றே சங்கடங்களை எதிர் கொண்டாலும் அனுசரித்து நடந்து கொள்வதால் எதிலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள்.

உத்தியோகம் 

  உத்தியோகஸ்தர்களுக்கு எவ்வளவுதான் பாடுபட்டாலும் அதன் பலனை அடையமுடியாது. உயரதிகாரிகளின் கெடுபிடிகளால் வேலைப்பளுவும் அதிகரிக்கும். உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் எதையும் சமாளித்து முன்னுக்கு வரமுடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப் பெற்றாலும் பதவி உயர்வுகளால் அதிகநேரம் உழைக்க நேரிடும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் குடும்பத்தை விட்டுப்பிரிய நேரிடும். 

பெண்கள்

  பெண்களுக்குத் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். பொருளாதார நிலை ஓரளவுக்குத் திருப்தியளிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது உத்தமம். சிலருக்கு சிறப்பான புத்திரபாக்கியம் அமையும். வீடு, மனை வாங்கும் முயற்சிகள் சில தடைகளுக்குப் பின் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. பணிபுரிவோருக்கு வேலைப்பளு சற்று அதிகரித்து காணப்படும்.

அரசியல்

  அரசியல்வாதிகளின் பெயர், புகழ் உயரும் என்றாலும் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை  நிறைவேற்றுவதில்  சில தடைகளைச் சந்திக்க நேரிடும். தொண்டர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். பொருளாதாரம் உயரும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய வேண்டியிருந்தாலும் மக்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும்.

விவசாயிகள்

   பயிர் விளைச்சல் சுமாராகத்தான் இருக்கும். போதிய நீர்வரத்து இல்லாததால் பயிர்கள் கருகும் நிலை உண்டாகும். அரசுவழியில் எதிர் பார்க்கும் உதவிகள் கிடைக்கும். முதலீட்டினை எடுக்கவே நிறைய உழைப் பினை மேற்கொள்ள நேரிடும். கடந்தகால பிரச்சினைகள் சற்று குறைந்து முன்னேற்றம் அடைவீர்கள்.

கலைஞர்கள் 

  கலைஞர்களுக்கு வாய்ப்புகள் சுமாராக அமையும் என்றாலும் பட வசூல் தயாரிப்பாளர்களுக்கு சாதகமாக அமையும். பொருளாதார நிலை ஓரளவுக்குத் திருப்தி அளிக்கும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு கள் அமையும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் சிறுசிறு இடையூறுகள் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது.

மாணவ-மாணவியர்

  கல்வியில் சற்று மந்தநிலை உண்டாகக்கூடிய காலம் என்பதால் அதிக கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. எவ்வளவுதான் கஷ்டப்பட்டு படித்தா லும் மனதில் வைத்துக்கொள்ள முடியாத அளவிற்கு மனம் அலைபாயும். தேவையற்ற பொழுதுபோக்குகளைத் தவிர்ப்பது நல்லது.பெற்றோர், ஆசிரியர்களின் சொற்படி நடந்தால் அனுகூலமான பலன் கிடைக்கும்.

சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 19-12-2017 முதல் 23-4-2018 வரை

  சனி பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் குரு வீடான 2-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு ஏழரைச்சனியில் குடும்பச்சனி நடைபெறு கிறது. குருவும் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உடல்நிலையில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகும். கணவன்-மனைவியிடையே ஒற்றுமை குறையும். உற்றார்-உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். சுபகாரியங்கள் கைகூட தாமதமாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொண்டால் குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்து விடமுடியும். கேது முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் தொழில், வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை சமாளித்து முன்னேற வேண்டிவரும். உத்தியோகஸ்தர்கள் பிறர்செய்யும் தவறுகளுக்கும் சில நேரங்களில் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். ஆஞ்ச நேயரை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 24-4-2018 முதல் 20-8-2018 வரை

  சனி 2-ல் வக்ரகதியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் குரு பகவானும் சாதகமின்றி சஞ்சரிப்பதால் உடல்நிலையிலும், உணவு விஷயங்களிலும் மிகவும் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது உத்தமம். எடுக்கும் காரியங்களில் அதன் முழுப்பலனைப் பெற சில தடைகளை எதிர்கொண்டாலும் வெற்றி உங்களுக்கே கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளைப் காப்பாற்ற முடியாத சூழ்நிலைகள் ஏற்பட லாம். குடும்பத்தில் சுபகாரியங்கள் சில தடைகளுக்குப் பின் நிறைவேறும். தொழில், வியாபாரம் லாபம் தரும் என்றாலும் கூட்டாளிகளை மிகவும் அனுசரித்துச் செல்ல வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. கேது 3-ல் சஞ்சரிப்பதால்  உடனிருப்பவர்களின் ஆதரவு கிடைக்கப்பெறும். எதையும் சமாளித்துவிட முடியும். ஆஞ்சநேயரை வழபிடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 21-8-2018 முதல் 19-1-2019 வரை

  சனி பகவான் கேதுவின் நட்சத்திரமான மூலத்தில் 2-ல் சஞ்சரிப்பதால் குடும்ப ஒற்றுமை சுமாராக இருக்கும். நெருங்கியவர்களால் ஓரளவுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். கடந்தகால பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் நிலவும். உடல்நிலையில் சற்று கவனம் செலுத்த வேண்டி யிருக்கும். 5-10-2018 முதல், குரு ஜென்ம ராசியில் சஞ்சரிக்க இருப்பதால் பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். பயணங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரித்தாலும் ஓரளவுக்கு அனுகூலமானப் பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் உழைப்பிற்கேற்ற பலனைப் பெறமுடியும். கேது 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடை களுக்குப்பின் வெற்றி கிட்டும். கைக்குக் கிடைக்க வேண்டிய பணத்தொகை சற்றுத் தாமதப்படும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 20-1-2019 முதல் 6-5-2019 வரை

  சனி பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும் 2-ல் சஞ்சரிப்பதாலும், குருவும் ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்வதாலும் எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைப் பெற நிறைய உழைக்க வேண்டியிருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. பணவரவுகள் சுமாராக இருந்தாலும் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விடமுடியும். 13-2-2019 முதல், கேது 2-ல், ராகு 8-ல் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும். முடிந்தவரை நெருங்கியவர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்தாலே வீண்பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும். சர்ப்ப சாந்தி செய்வது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 7-5-2019 முதல் 1-9-2019 வரை

   சனி 2-ல் வக்ரகதியில் சஞ்சரிக்கும் இக்காலத்தில் குருவும் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையில் சங்கடங்கள் நிலவும். கொடுக்கல்- வாங்கலில் வாக்குறுதிகள் கொடுப்பதைத் தவிர்த்துவிடுவது நல்லது. உடல்நிலை, ஜலத்தொடர்புடைய பாதிப்புகள் உண்டாகும். 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்திலும் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றி மறையும். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பு நற்பலன் ஏற்படும். தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது கடன்களைக் குறைக்க உதவும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்குப் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோ கஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டி யிருக்கும். இக்காலங்களில் ஆஞ்சநேயர் மற்றும் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 2-9-2019 முதல் 28-9-2019 வரை

   சனி பகவான் சர்ப்ப கிரகமான கேதுவின் சேர்க்கை பெற்று குடும்ப ஸ்தானமான 2-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவச் செலவுகள் உண்டாகும். குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் பொருளா தார நிலை சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்து வதைத் தவிர்ப்பது சிறப்பு. நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது மிகவும் உத்தமம். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் சாதகப்பலன் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும்போது சிந்தித்துச் செயல்படவும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்றே நிம்மதியுடன் பணிபுரிய முடியும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது கெடுதியைக் குறைக்கும்.

சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 29-9-2019 முதல் 25-2-2020 வரை

  சனி பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் 2-ல் சஞ்சரிப்பதாலும், 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதாலும் கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமையும் சிறப்பாக இருக்கும். உற்றார்-உறவினர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்து வார்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. 29-10-2019 முதல், குரு தனஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையில் இருந்த தடைகள் விலகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். தடைப்பட்ட சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். தொழில், வியாபாரம் செய் பவர்களுக்கு இருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். உத்தியோகஸ்தர்களுக்குத் தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும். கடன்கள் படிப்படியாகக் குறையும். ராகு, கேதுவுக்குப் பரிகாரம் செய்யவும்.

சனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 26-2-2020 முதல் 28-4-2020 வரை

 சனி பகவான் தனக்கு பகை கிரகமான சூரியனின் நட்சத்திரத்தில் 2-ல் சஞ்சரிப்பதாலும், 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சாரம் செய்வதாலும் உடல் நிலையில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றியபடியே இருக்கும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படுவதில் இடையூறுகள் உண்டாகும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, குடும்பத்திலுள்ள வர்களை அனுசரித்து நடப்பது நல்லது. இக்காலத்தில் குரு பகவான் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையிலிருந்த தடைகள் விலகி கடன்கள் குறையும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எந்த விதமான பிரச்சினை களையும் சமாளித்து லாபம் அடையக்கூடிய ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர் பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப்பெற்றாலும் வேலைப்பளு சற்று அதிக மாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள்.  சனிக்குப் பரிகாரம் செய்வது, விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 29-4-2020 முதல் 14-9-2020 வரை

 உங்களுக்கு ஏழரைச்சனியில் குடும்பச்சனி நடைப்பெற்றாலும் சனி வக்ர கதியிலிருப்பதால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் செயல்படுவது உத்தமம். குரு 2-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தடைப்பட்டத் திருமண சுபகாரியங்கள் தடைவிலகி கைகூடும். நல்லவரன்கள் தேடிவரும். உற்றார்- உறவினர்களிடமிருந்தும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணம் கொடுக்கல்-வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். பெரிய தொகையை எளிதில் ஈடுபடுத்தமுடியும். தொழில், வியாபார ரீதியாகவும் முன்னேற் றங்கள் உண்டாகும். போட்டிகள் குறையும். கூட்டாளிகளும் தொழிலாளர் களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வினைப் பெற்று வாழ்வில் முன்னேற்றமடைவார்கள். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 15-9-2020 முதல் 19-11-2020 வரை

  சனி பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் சஞ்சரித்தாலும் 2-ல் சஞ்சரிப்பதால் ஏழரைச்சனி தொடருவதும், ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது என்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. குரு 2-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் குடும்பத்தில் தேவைகள் பூர்த்தியாகும். தொழில், வியாபார ரீதியாக ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலிலும், பெரிய தொகை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங் களிலும்  சற்று கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடைவீர்கள். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே ஒற்றுமையினை அடையமுடியும். உற்றார்-உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். சர்ப்ப சாந்தி செய்வது நற்பலனைத் தரும்.

சனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 20-11-2020 முதல் 27-12-2020 வரை

 சனி பகவான் தனக்கு பகை கிரகமான சூரியனின் நட்சத்திரத்தில் 2-ல் சஞ்சரிப்பதாலும், ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதும், 3-ல் குரு சஞ்சாரம் செய்வதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்தினால் மட்டுமே அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். எடுக்கும் முயற்சிகளிலும் எதிர்நீச்சல் போட வேண்டி வரும். வரவேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப் போகும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான பலன்களே உண்டாகும் என்பதால் கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றும் என்பதால் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. பதவி உயர்வுகள் மற்றும் ஊதிய உயர்வுகள் சற்றுத் தாமதப்படும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். நவகிரக வழிபாடு செய்வது சிறப்பு.

 அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் : 1, 2, 3, 9, நிறம் : ஆழ்சிவப்பு, மஞ்சள், கிழமை : செவ்வாய், வியாழன், கல் : பவளம், திசை : தெற்கு, தெய்வம் : முருகன்.

No comments: