Thursday, December 14, 2017

2018 புத்தாண்டுப் பலன்கள்- கன்னி
2018 புத்தாண்டுப் பலன்கள்-  கன்னி 
உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்

னைவரிடமும் சகஜமாகப் பழகினாலும் அளவோடு தன்மையுடன் பேசும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். ஆண்டுக் கோளான குரு பகவான் தனஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றிக் கொள்ள முடியும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய புதிய யுக்திகளைக் கையாளக் கூடிய வாய்ப்பும், சர்ப்ப கிரகமான ராகு 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் குறைந்து லாபமும் அபிவிருத்தியும் பெருகக் கூடிய அமைப்பு கொடுக்கும். இந்த 2018-ஆம் ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு சுகஸ்தானமான 4-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுகிறது. இதனால் உங்களுக்கு தேவையற்ற அலைச்சல், டென்ஷன், எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத சூழ்நிலை, நேரத்திற்கு உணவு உண்ண இயலாத நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் கௌரவமான பதவிகளையும், ஊதிய உயர்வுகளையும் பெறுவார்கள். சிலருக்கு நினைத்த இடத்திற்கு மாற்றமும் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். வெளியூர், வெளி நாடுகளுக்குச் செல்லக் கூடிய வாய்ப்பு, பயணங்களால் அனுகூலங்களும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய சம்பவங்கள் நடைபெறும் திருமண சுபகாரியங்களும் கைகூடும். பிரிந்து சென்ற உறவினர்களும் ஒற்றுமை பாராட்டுவார்கள். உடல்நிலையும் ஓரளவுக்கு சிறப்படையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். 11.10.2018 முதல் குரு 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் ஆண்டின் இறுதியில் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. 

உடல் ஆரோக்கியம்

உங்களின் உடல் ஆரோக்கியமானது ஓரளவுக்கு சுமாராக இருக்கும். அடிக்கடி சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகளுக்குப்பின் குணமாகும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன், எடுக்கும் முயற்சிகளில் இடையூறு, நெருங்கியவர்கள் ஏற்படுத்தும் பிரச்சினைகளால் மன உளைச்சல்கள் போன்றவை உண்டாகும். முடிந்த வரை அனைவரையும் அனுசரித்துச் செல்வதும் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. நேரத்திற்கு உணவு உண்பது நல்லது.

குடும்பம், பொருளாதார நிலை

உங்கள் ராசிக்கு குரு 2-ல் சஞ்சரிப்பதால் திருமண சுபகாரியங்கள் தடையின்றி கைகூடும். உங்களை விரோதிகளும் உரிமையோடு நட்பு பாராட்டுவார்கள். புதிய வீடு, மனை, வண்டி, வாகனங்கள் யாவும் சேரும். குடும்ப ஒற்றுமையும் சிறப்பாகவே இருக்கும். பூர்வீகச் சொத்துகளால் சிறுசிறு விரயங்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் ஓரளவுக்கு அனுகூலப் பலன்களைப் பெறுவீர்கள். 

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்பதவிகள் தாமதப்பட்டாலும் ஊதிய உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். கொடுத்த பணிகளைக் குறித்த நேரத்தில் செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட்டால் அனுகூலமான நற்பலன்களைப் பெற முடியும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பம் தடையின்றி நிறைவேறும். 

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறசிறு போட்டி பெறாமைகளை சமாளிக்க வேண்டி இருந்தாலும் எதிர்பார்த்த லாபத்தைப் பெற முடியும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் அனுகூலமானப் பலனை பெறுவீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும். வெளியூர், வெளிநாடு தொடர்புடையவற்றாலும் ஆதாயங்களைப் பெற முடியும். முடிந்த வரை கூட்டாளிகளை அனுசரித்து செல்வது, தொழிலாளர்களிடம் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது.

பெண்களுக்கு

ஜென்ம ராசிக்கு குரு 2-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் திருமண வயதை எட்டியவர்களுக்கு மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமையும் நிம்மதியும் சிறக்கும். பண வரவுகள் நண்றாக இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். பகைமை பாராட்டிய உறவினர்களும் தேடி வந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. 

கொடுக்கல்- வாங்கல்

தனகாரகன் குரு 2-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். கமிஷன் ஏஜென்ஸி, கான்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். 

அரசியல்வாதிகளுக்கு

அரசியல்வாதிகள் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, எதிலும் சிந்தித்து செயலாற்றுவது நல்லது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எப்பாடுபட்டாவது காப்பாற்றி அனைவரின் ஆதரவையும் பெறுவீர்கள். எதிர்பார்த்துக் காத்திருக்கும் உயர்பதவிகள் சில தடைகளுக்குப்பின் கிடைக்கப் பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

விவசாயிகளுக்கு

மகசூல் சற்று சுமாராக இருந்தாலும் சந்தையில் நல்ல விலை போகும். பங்காளிகளை அனுசரித்துச் செல்வதும், வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளில் தலையீடு செய்யாது இருப்பதும் மிகவும் நல்லது. தன வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஏற்படும். கால்நடைகளால் ஓரளவுக்கு லாபத்தைப் பெறுவீர்கள். ஆழ்கிணறு போடுவது, புதிய நவீன கருவிகள் வாங்குவது போன்றவையும் நிறைவேறும்.

கலைஞர்களுக்கு

கலைஞர்கள் கையிலிருக்கும் வாய்ப்புகளை நழுவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் ஒரளவுக்கு சிறப்பாக அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அமையும். வராமலிருந்த பணவரவுகளும் தடையின்றி வந்து சேரும்.

மாணவ- மாணவியருக்கு

கல்வியில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் சாதகமான பலனைப் பெற முடியும். உடன் பழகும் நண்பர்களிடம் கவனமுடன் செயல்படுவது, பெற்றோர், ஆசிரியர்களின் அறிவுரையைக் கேட்டு நடப்பதும் மூலம் நற்பலன் உண்டாகும். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும்போது மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது.

மாதப் பலன்கள் 

ஜனவரி: ஜென்ம ராசிக்கு 2-ல் குரு, 4-ல் சுக்கிரன், 11-ல் ராகு சஞ்சாரம் செய்வதால் நினைத்தது நிறைவேறும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற யாவும் கிடைக்கப் பெறும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும். முருகப் பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 24-01-2018 காலை 08.39 மணி முதல் 26-01-2018 மதியம் 01.15 மணி வரை.  

பிப்ரவரி: இம்மாதம் 2-ல் குரு, 5-ல் புதன், சுக்கிரன், 11-ல் ராகு சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.  உற்றார் உறவினர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி எதிர்பார்த்த லாபத்தைப் பெற முடியும். தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளினாலும் ஒரளவுக்கு அனுகூலம் ஏற்படும். எந்தவித போட்டிகளையும் சமாளித்து அடைய வேண்டிய இலக்கை அடைந்து விட முடியும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் லாபம் கிட்டும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 20-02-2018 மதியம் 02.07 மணி முதல் 22-02-2018 இரவு 07.27 மணி வரை.  

மார்ச்: ஜென்ம ராசிக்கு 2-ல் குரு, 11-ல் ராகு சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பாகும். இதனால் பலவகையில் முன்னேற்றங்களைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் கௌரவமான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களையும் பெற முடியும். தொழில், வியாபாரம் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி, நிம்மதி, பொருளாதார மேன்மை யாவும் சிறப்பாக அமையும். தேக ஆரோக்கியமும் நல்ல முறையில் இருப்பதால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். விரோதிகளும் நண்பர்களாக மாறி நற்பலன்களை செய்வார்கள். சேமிப்புகளும் பெருகும். சிவபெருமானை வழிபாடு செய்யவும்.

சந்திராஷ்டமம்: 19-03-2018 இரவு 08.13 மணி முதல் 22-03-2018 அதிகாலை 12.52 மணி வரை.  

ஏப்ரல்: ஜென்ம ராசிக்கு 2-ல் சஞ்சரிக்கும் குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதும், சூரியன் சாதகமற்று சஞ்சாரம் செய்வதும் குடும்பத்தில் வீண் வாக்கு வாதங்களை ஏற்படுத்தும் என்றாலும் 11-ல் ராகு சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளும் வலிமை உண்டாகும். பண வரவுகள் சுமாராகத் தானிருக்கும். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். உணவு விஷயத்திலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது மூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எதிலும் சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். துர்க்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 16-04-2018 அதிகாலை 04.10 மணி முதல் 18-04-2018 காலை 07.39 மணி வரை.  

மே: ஜென்ம ராசிக்கு சூரியன் 8-ல் சஞ்சாரம் செய்வதும் 2-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள், குடும்பத்தில் நிம்மதிக் குறைவுகள் தோன்றும் உற்றார் உறவினர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். பணவரவுகள் சுமாராக தானிருக்கும். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளை பிறர் தட்டிச் செல்வார்கள். முன்கோபத்தைக் குறைப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். சிவ பெருமானை வழிபாடு செய்வது உத்தமம். 

சந்திராஷ்டமம்: 13-05-2018 மதியம் 01.36 மணி முதல் 15-05-2018 மாலை 04.32 மணி வரை. 

ஜூன்: ஜென்ம ராசிக்கு 10-ல் சுக்கிரன், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொண்டால் தேவையற்ற மருத்துவ செலவுகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். குரு வக்ர கதியில் இருப்பதால் திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளை எதிர்கொள்ள நேரிடும். குடும்பத்தில் சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை நிலவும். எதிர்பார்த்த லாபத்தைப் பெற எதிர்நீச்சல் போட வேண்டி வரும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளைத் ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும். சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 09-06-2018 இரவு 11.15 மணி முதல் 12-06-2018 அதிகாலை 02.41 மணி வரை. 

ஜூன்: மாதக்கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும் 2-ல் குரு, 11-ல் புதன், ராகு சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்களே உண்டாகும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கடன்களும் குறையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியினை உண்டாக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பொன், பொருள் சேரும். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். செய்யும் தொழில், வியாபாரத்திலும் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் மேலும் மேலும் தொழிலை விரிவுபடுத்த முடியும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 07-07-2018 காலை 07.44 மணி முதல் 09-07-2018 மதியம் 12.34 மணி வரை. 

ஆகஸ்ட்: ஜென்ம ராசிக்கு 2-ல் குரு, 11-ல் புதன், ராகு, சூரியன் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். சுப காரியங்கள் கைகூடும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உற்றார், உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும்போது சற்று சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபங்களை அடைய முடியும். தொழில், வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் சற்றே குறையும். லாபங்கள் சிறப்பாக இருக்கும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகளும் தடையின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். பயணங்களால் அனுகூலப் பலனை அடைவீர்கள். எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 03-08-2018 மதியம் 02.29 மணி முதல் 05-08-2018 இரவு 08.47 மணி வரை மற்றும் 30-08-2018 இரவு 08.05 மணி முதல் 02-09-2018 அதிகாலை 03.03 மணி வரை.

செப்டம்பர்: ஜென்ம ராசிக்கு 2-ல் குரு சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும் 4-ல் சனி, 12-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். எடுக்கும் சுபகாரியங்களில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் வீண் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். உத்தியோகத்திலிருப்பவர்கள் நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபங்களும் அபிவிருத்தியும் பெருகும். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 27-09-2018 அதிகாலை 01.58 மணி முதல் 29-09-2018 காலை 08.28 மணி வரை.  
 
அக்டோபர்: ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதும், வரும் 11-ஆம் தேதி முதல் குரு 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதன் மூலம் ஏற்ற இறக்கமானப் பலன்களைப் பெறுவீர்கள். பண வரவுகளில் சிறுசிறு நெருக்கடிகளும், உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினைகளும் உண்டாகும் என்றாலும் குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்தே இருக்கும். அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்களை சந்திக்க நேர்ந்தாலும் எதிர்பாராத திடீர் உதவிகள் கிடைக்கப் பெற்று தேவைகள் யாவும் பூர்த்தியாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் நற்பலனைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடன் பணிபுரிபவர்களும் ஓரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். சிவ வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 24-10-2018 காலை 09.26 மணி முதல் 26-10-2018 மதியம் 02.55 மணி வரை. 

நவம்பர்: இம்மாதம் 4-ல் சனி, 3-ல் குரு சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பதும், பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக் கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. 11-ல் ராகு, மாதபிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனைத் தரும். குரு, சனிக்குப் பரிகாரம் செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 20-11-2018 மாலை 06.37 மணி முதல் 22-11-2018 இரவு 11.36 மணி வரை.  

டிசம்பர்: ஜென்ம ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன், 6-ல் செவ்வாய், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். தொழில், வியாபாரத்தில் லாபங்கள் தடைப்படாது. அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகளும் கணவன்- மனைவியிடையே வாக்குவாதங்களும் உண்டாகும் என்பதால் அனைவரிடமும் சற்று விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது உத்தமம். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.  குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்வது உத்தமம்-. 

சந்திராஷ்டமம்: 18-12-2018 அதிகாலை 04.20 மணி முதல் 20-12-2018 காலை 09.59 மணி வரை. 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் -  5, 6, 7, 8, நிறம் -  பச்சை, நீலம், கிழமை - புதன், சனி, கல் -  மரகத பச்சை, திசை - வடக்கு, தெய்வம் - ஸ்ரீவிஷ்ணு.

No comments: