Thursday, December 14, 2017

2018 புத்தாண்டுப் பலன்கள் மகரம்
2018 புத்தாண்டுப் பலன்கள் மகரம் 

உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்

பிடித்ததை விடாத பிடிவாதக்காரர் என்றாலும் வீண் பிடிவாதக்காரராக இல்லாமல் எதிலும் நிதானமுடன் செயல்படும் மகர ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த வருடம் உங்கள் ராசியாதிபதி சனிபகவான் விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு ஏழரைச் சனியில் விரயச்சனி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது மட்டுமின்றி ஆண்டுக் கோளான குரு பகவானும் முற்பாதியில் ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சாரம் செய்கிறார். இந்த ஆண்டின் முற்பாதியில் நீங்கள் எதிலும் கவனமுடன் செயல்படுவதே நல்லது. ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது, ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது போன்றவை நன்மையளிக்கும். ஏழரைச் சனி தொடர்ந்தாலும் சனி உங்கள் ராசியாதிபதி என்பதால் பெரிய கெடுதல்களைச் செய்ய மாட்டார். வரும் 11.10.2018-ல் முதல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு பகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறையத் தொடங்கும். எடுக்கும் முயற்சிகளில் ஏற்றங்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். அசையும், அசையாச் சொத்துகள் வாங்கக் கூடிய யோகமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் சில போட்டி பொறாமைகளைச் சந்தித்தாலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் சற்று தாமதமாக அமைந்தாலும், பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்தாலே வீண் பிரச்சினைகளில் சிக்காமல் விலகிக் கொள்ளலாம். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டிய ஆண்டாகும். உங்களுக்கு ஏழரைச் சனி நடைபெறுவதால் உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகும். நெருங்கியவர்களை இழக்கக் கூடிய சூழ்நிலைகளும் ஏற்படலாம். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனமுடனிருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். வரும் அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்திற்குப் பிறகு உடல் ஆரோக்கியத்தில் படிப்படியான முன்னேற்றத்தை அடைய முடியும். 

குடும்பம், பொருளாதாரம்

இந்த வருடம் முழுவதும் ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி இருவரும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடம் பிரச்சினைகள் ஏற்படும் என்றாலும் நீங்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்தால் எதிரிகளும் நண்பர்களாவார்கள். ஆண்டின் தொடக்கத்தில் சற்று பொருளாதார நெருக்கடிகளை சந்தித்தாலும், குருப் பெயர்ச்சிக்குப் பின் பணவரவுகள் சரளமாக இருக்கும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களும் கைகூடும். புத்திர வழியில் சிறுசிறு மனக்கவலைகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். 

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவதும் தேவையற்ற பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பதும் நல்லது. உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். உடன் பணிபுரிபவர்கள் செய்யும் தவறுகளுக்கும் சில நேரங்களில் பொறுப்பேற்க வேண்டிய காலம் என்பதால் வேலைப் பளுவும் சற்று அதிகரிக்கும். வரும் அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளதால் இக்காலங்கள் ஓரளவுக்கு முன்னேற்றத்தை உண்டாக்கும். உங்களின் திறமைகளைப் பாராட்டும் வகையில் உயரதிகாரிகள் நடந்து கொள்வார்கள். பயணங்களாலும் அனுகூலங்கள் உண்டாகும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்கள் ஏற்ற இறக்கமான பலன்களையே அடைய முடியும். உங்களுக்கு ஏழரைச் சனி நடைபெறுவதும் ஆண்டின் தொடக்கத்தில் குரு ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் மட்டுமே போட்டிகளை சமாளித்து அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ள முடியும். வரும் அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு லாப ஸ்தானத்திற்கு மாறுதலாக இருப்பதால் ஓரளவுக்கு உங்களது பிரச்சினைகள் குறைந்து வெற்றிப்படியை எட்டி விடுவீர்கள். புதிய வாய்ப்புகளும் தேடி வரும்.

பெண்களுக்கு

உங்களுக்கு ஏழரைச் சனி தொடர்வதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் உறவுகளும் உங்களுக்கு சாதகமாக  இருக்கும். பொருளாதார நிலையில் நெருக்கடிகள் நிலவினாலும் குருப்பெயர்ச்சிக்குப் பின் தடைகள் விலகும். குடும்பத்தில் திருமணம் போன்ற மங்களகரமான சுபகாரியங்கள் தடைக்குப் பின்பு கைகூடும். கடன் சுமைகளும் குறையும். புத்திரர்களால் சிறுசிறு மனக்குழப்பங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. 

கொடுக்கல்- வாங்கல்

ஆண்டின் தொடக்கத்தில் தனகாரகன் குரு 10-ல் சஞ்சரிப்பதாலும் உங்களுக்கு ஏழரைச் சனி தொடருவதாலும் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனமுடனிருப்பது நல்லது என்றாலும் 11-10-2018-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் பணவரவுகள் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். வம்பு வழக்குகளும் ஒரு நல்ல முடிவுக்கு வரும். சேமிப்பும் பெருகும்.

அரசியல்வாதிகளுக்கு

அரசியல்வாதிகளுக்கு தங்கள் பேச்சாலேயே பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதால் பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. மக்கள் செல்வாக்கிற்கு காரகனான சனி விரய ஸ்தானத்தில் இருப்பதால் கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்ய நேரிடும். மக்களின் செல்வாக்கினைப் பெற அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது நல்லது. குருப் பெயர்ச்சிக்குப் பின் வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லக் கூடிய வாய்ப்புகளும் அதன் மூலம் அனுகூலமும் உண்டாகும்.

விவசாயிகளுக்கு

விவசாயிகள் சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும் மகசூல் ஓரளவுக்கு திருப்தியளிப்பதாக அமையும். விளைபொருளுக்கேற்ற விலையை சந்தையில் பெற முடியாமல் போகும் என்றாலும் நஷ்டம் ஏற்படாது. வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் உறவினர்களிடையே சிறுசிறு மன சஞ்சலங்கள் உண்டாகக் கூடும். வங்கிக் கடன்களை குறித்த நேரத்தில் செலுத்த முடியாமல் போகும். கால்நடைகளால் ஓரளவுக்கு லாபத்தினை அடைவீர்கள்.

கலைஞர்களுக்கு

இந்த ஆண்டு உங்களுக்கு தேவையற்ற பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்தினாலும் சிறு சிறு வாய்ப்புகள் தேடி வரும். உங்கள் திறமைகள் பளிச்சிடும். ரசிகர்களின் ஆதரவும் பெருகும். பண விவகாரங்களில் சற்று கவனமுடனிருப்பது நல்லது. தேவையற்ற கிசுகிசுக்களால் பத்திரிக்கைகளில் வீண் வதந்திகள் ஏற்படும். 

மாணவ- மாணவியருக்கு

மாணவர்கள் ஆண்டின் தொடக்கத்தில் கட்டாயம் படிப்பில் கவனம் செலுத்தியே ஆக வேண்டும். கூடாதார் நட்பை கூடுமானவரைத் தவிர்ப்பது நல்லது. குருப்பெயர்ச்சிக்குப்பின் கல்வியில் தானாகவே ஈடுபாடு ஏற்படும். பெற்றோர், ஆசிரியர்களின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றி உங்களுக்கே கிட்டும்.

மாதப் பலன்கள்

ஜனவரி: ஜென்ம ராசிக்கு 12-ல் சூரியன், சனி, 10-ல் குரு சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் நிம்மதி குறைவுகள் ஏற்படும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளிலும் தடைகளுக்குப் பின்பே வெற்றி பெற முடியும். அசையும், அசையா சொத்துகளால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். பணவரவுகளில் ஏற்ற இறக்கமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் வரவேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் லாபம் குறையும். உடனிருப்பவர்களே தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகவே இருக்கும். சனிக்குப் பரிகாரம் செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 05-01-2018 அதிகாலை 03.55 மணி முதல் 07-01-2018 காலை 07.15 மணி வரை.

பிப்ரவரி: ஜென்ம ராசியில் புதன் சுக்கிரன், 11-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் ஏற்பட்டு உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்களைத் தவிர்த்து பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். அசையும், அசையா சொத்துகளால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் மேம்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சில கெடுபிடிகள் ஏற்படும். சிவ வழிபாடு செய்வது நல்லது. 

சந்திராஷ்டமம்: 01-02-2018 மதியம் 03.07 மணி முதல் 03-02-2018 05.08 மணி வரை. 

மார்ச்: ஜென்ம ராசிக்கு 3-ல் புதன், சுக்கிரன், மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நன்மை தீமை கலந்த பலன்களையே பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றியினை அடைவீர்கள். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்துச் செயல்பட்டால் லாபத்தினை அடைய முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பினைப் பெற்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் கவனம் தேவை. கூட்டாளிகளாலும் தொழிலாளர்களாலும் வீண் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். முருக வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 01-03-2018 அதிகாலை 01.45 மணி முதல் 03-03-2018 அதிகாலை 03.49 மணி வரை மற்றும் 28-03-2018 காலை 10.02 மணி முதல் 30-03-2018 மதியம் 01.13 மணி வரை. 

ஏப்ரல்: ஜென்ம ராசிக்கு 4-ல் சுக்கிரன், மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதையும் எளிதில் எதிர்கொண்டு வெற்றியை அடையும் ஆற்றலைப் பெறுவீர்கள். தொழில் ரீதியாக வீண் விரயங்களையும், நெருக்கடிகளையும் சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளிக்கும் வலிமையும் வல்லமையும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் வேலைப்பளு அதிகரித்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் நிம்மதியான நிலையிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றும் என்பதால் கவனமுடனிருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச்  செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு சுமாராக இருக்கும். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது. 

சந்திராஷ்டமம்: 24-04-2018 மாலை 04.00 மணி முதல் 26-04-2018 இரவு 08.20 மணி வரை.  

மே: இம்மாதம் குருவும், சனியும் வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும் 5-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதாலும் ஓரளவுக்கு எதையும் எளிதில் எதிர்கொண்டு வெற்றியையும் லாபத்தினையும் பெறுவீர்கள். தடைப்பட்டுக்கொண்டிருந்த திருமண சுபகாரியங்கள் யாவும் தடை விலகி கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் பாதிக்காது. கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். அசையும், அசையா சொத்துகளை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். கடன்கள் சற்று நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் லாபம் தரும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றங்களை அடைய முடியும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். துர்க்கை அம்மனை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 21-05-2018 இரவு 09.26 மணி முதல் 24-05-2018 அதிகாலை 01.52 மணி வரை. 

ஜூன்: இம்மாதம் குருவும், சனியும் வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும் மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் பணவரவுகளிலிருந்த தடைகள் விலகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் கிட்டும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் ரீதியாக வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 18-06-2018 அதிகாலை 04.21 மணி முதல் 20-06-2018 காலை 07.38 மணி வரை. 

ஜூலை: ஜென்ம ராசிக்கு 7-ல் புதன், மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் செய்யும் தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மையடையும். கூட்டாளிகளிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் யாவும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் அமைப்பும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைப்பதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். வாகனம் வாங்கும் வாய்ப்பு அமையும். சிவ வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 15-07-2018 மதியம் 01.30 மணி முதல் 17-07-2018 மதியம் 03.09 மணி வரை. 

ஆகஸ்ட்: சர்ப்ப கிரகங்களான ராகு கேதுவும், மாதக் கோளான சூரியனும் சாதகமின்றி சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் கவனமுடன் செயல்படுவதே நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுக்க வேண்டியிருக்கும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் தோன்றும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத பலன் ஏற்படும். பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்திலும் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது உத்தமம். கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படமாட்டார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். சிவ வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 12-08-2018 அதிகாலை 12.07 மணி முதல் 14-08-2018 அதிகாலை 12.41 மணி வரை. 


செப்டம்பர்: ஜென்ம ராசியில் செவ்வாய், 8-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பதும், பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அபிவிருத்தியைப் பெருக்கிகொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனைத் தரும். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 08-09-2018 காலை 10.31 மணி முதல் 10-09-2018 காலை 11.10 மணி வரை.  

அக்டோபர்: ஜென்ம ராசிக்கு 10-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும், 11-ஆம் தேதி முதல் லாப ஸ்தானமான 11-ல் குரு சஞ்சாரம் செய்ய இருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். சுபச்செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபங்களை அடையலாம். தொழில், வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் சற்றே குறையும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகளும் தடையின்றி கிடைக்கும். பயணங்களால் அனுகூலப்பலனை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது. 

சந்திராஷ்டமம்: 05-10-2018 இரவு 07.04 மணி முதல் 07-10-2018 இரவு 08.52 மணி வரை. 

நவம்பர்: ஜென்ம ராசிக்கு 10-ல் சுக்கிரன், 11-ல் குரு சஞ்சாரம் செய்வதும் மாத, கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பணவரவுகளும் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். உற்றார் உறவினர்களிடமிருந்தும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். தொழில், வியாபார ரீதியாகவும் முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வினைப் பெற்று வாழ்வில் முன்னேற்றம் அடைவார்கள். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 02-11-2018 அதிகாலை 01.18 மணி முதல் 04-11-2018 அதிகாலை 04.27 மணி வரை மற்றும் 29-11-2018 காலை 06.40 மணி முதல் 01-12-2018 காலை 10.06 மணி வரை.

டிசம்பர்: ஜென்ம ராசிக்கு 10-ல் சுக்கிரன், 11-ல் குரு, சூரியன், புதன் சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்பதால் தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலையினை அடைய முடியும். தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்களும் பணியில் மன நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்த்துக் காத்திருந்த ஊதிய உயர்வு, இடமாற்றம் போன்றவையும் கிடைக்கப் பெறும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். குடும்பத்திலும் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கணவன்- மனைவி யிடையே ஒற்றுமை நிலவும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப் பிடிப்பது நல்லது. திருமண சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். கடன்கள் நிவர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 26-12-2018 மதியம் 01.41 மணி முதல் 28-12-2018 மதியம் 03.48 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 5, 6, 7, 8, கிழமை - சனி, புதன், திசை - மேற்கு, நிறம்  - நீலம், பச்சை, கல் - நீலக்கல், தெய்வம் - ஐயப்பன்

No comments: