Thursday, December 14, 2017

2018 புத்தாண்டுப் பலன்கள் - மீனம்
2018 புத்தாண்டுப் பலன்கள்   -  மீனம்  

பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி  

நீதி நேர்மை தவறாமல் நடக்கும் பண்பும், ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யும் ஆற்றலும் கொண்ட மீன ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள். இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இதுமட்டுமின்றி குரு பகவானும் ஆண்டின் தொடக்கத்தில் ஜென்ம ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு தேவையற்ற அலைச்சல்களும் உடல் அசதியும், வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகளும் ஏற்படும். கேது 11-ல் சஞ்சரிப்பதால் பெரிய கெடுதல்கள் ஏற்படாது எதையும் சமாளித்து விடுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு தொழில் நிலை சற்றே மந்தமடைந்தாலும் உங்களின் உழைப்பாற்றலால் புதிய வாய்ப்புகளை பெற்று உயர்வடைவீர்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் எதையும் எளிதில் சாதிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. வரும் 11.10.2018 முதல் குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதனால் குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் ஏற்படும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை நிலவும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீகச் சொத்துகளால் அனுகூலமும் கிட்டும். கொடுக்கல்- வாங்கலும் லாபமளிக்கும். தொழில், வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கும் ஊதிய உயர்வுகள் கிடைக்கப்பெறும், தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

உடல் ஆராக்கியம்

உங்களது உடல் ஆரோக்கியமானது ஓரளவுக்கு சிறப்பாக அமையும். தேவையற்ற அலைச்சல்கள், நேரத்திற்கு சாப்பிட முடியாத நிலை, வாழ்க்கையில் எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். ஜென்ம ராசிக்கு 8-ல் குரு சஞ்சரிப்பதால் நிம்மதியான உறக்கம் கூட வராது. எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட வேண்டியிருப்பதால் மனநிம்மதி குறையும். அக்டோபர் 11-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்திற்குப் பிறகு குரு பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுதலாக இருப்பதால் ஆரோக்கிய ரீதியாக உள்ள பாதிப்புகள் குறைந்து மன நிம்மதி உண்டாகும். 

குடும்பம், பொருளாதார நிலை

குரு பகவான் 8-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதிக் குறைவு, பொருளாதார நெருக்கடி, சுபகாரிய முயற்சிகளில் தடை ஏற்படும் என்றாலும், வரும் அக்டோபர் 11-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்திற்குப் பிறகு குரு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தாராள தன வரவுகள் உண்டாகும். அசையாச் சொத்துகள் மூலமும் அனுகூலங்கள் கிட்டும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடை விலகி தடபுடலாக நிறைவேறும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை உண்டாக்கும். முடிந்தவரை பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைப்பது மிகவும் நல்லது.

உத்தியோகம்

சனி 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் குரு ஜென்ம ராசிக்கு 8-ல் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். இதனால் உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பதும், உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடப்பதும் நல்லது. 11-ல் கேது சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ள முடியும். குருப்பெயர்ச்சிக்குப் பின் உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்பதவிகளும் ஊதிய உயர்வுகளும் உண்டாகும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்காவிட்டாலும் கிடைப்பதைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

தொழில், வியாபாரம்

குரு, சனி சாதகமற்று சஞ்சாரம் செய்வதால் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. தேவையற்ற பயணங்களாலும் அலைச்சல்கள் அதிகரிக்கும். அக்டோபர் 11-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்திற்குப் பிறகு குரு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நல்ல மேன்மைகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும்.

பெண்களுக்கு

பெண்களுக்கு சிறுசிறு வயிறு பாதிப்புகளும், குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவும், பொருளாதார நெருக்கடிகளும் உண்டாகும் என்றாலும் குரு மாற்றத்திற்குப் பின் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் அனைத்து தேவைகளும் தடையின்றிப் பூர்த்தியாகும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். 

கொடுக்கல்- வாங்கல்

குரு 8-ல் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கலிலும், பிறரை நம்பி பண விஷயத்தில் முன்ஜாமீன் கொடுப்பதையும் தவிர்த்து விடுவது நல்லது என்றாலும் குருப்பெயர்ச்சிக்குப் பின் கொடுக்கல்- வாங்கலில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். உங்களுக்கிருந்த வந்த வம்பு வழக்குகளிலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். 

அரசியல்வாதிகளுக்கு

அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப் பெற அதிகம் பாடுபட வேண்டியிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற எதிர்நீச்சல் போடுவீர்கள் என்றாலும் ஆண்டின் பிற்பாதியில் எதையும் சாதிக்கும் ஆற்றலும் உண்டாகும். கட்சிப் பணிகளுக்காக சிறுசிறு விரயங்கள் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் ஓரளவுக்கு அனுகூலமும் உண்டாகும். வெளியூர், வெளிநாடுகளுக்குப் பயணங்களை  மேற்கொள்வீர்கள்.

விவசாயிகளுக்கு

விவசாயத்தில் பட்டபாட்டிற்கேற்ற பலனைப் பெற்று விட முடியும். சில நேரங்களில் வேலைக்கு ஆள் கிடைக்காமல் பயிர்கள் வீணாகும் நிலை ஏற்பட்டாலும் தகுந்த நேரத்தில் முடிக்க வேண்டிய வேலையை முடித்து விடுவீர்கள். காய்கனி மற்றும் பழவகை, கீரை வகைகளாலும் ஓரளவுக்கு லாபம் கிட்டும். கால்நடைகளுக்கு சிறுசிறு  ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டாலும், அவற்றின் மூலம் அடைய வேண்டிய லாபங்களை அடைந்து விட முடியும்.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப் போகும். பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும். குருப் பெயர்ச்சிக்குப்பின் ஓரளவுக்கு வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும், உடனிருப்ப வரை அனுசரித்துச் செல்லுதலும் அவசியம். சுக வாழ்வுக்கும் பஞ்சம் ஏற்படாது.

மாணவ- மாணவியருக்கு

கல்வியில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றிகளைப் பெறுவீர்கள். உடன் பழகுபவர்களிடம் சற்று கவனமுடனிருப்பது நல்லது. பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு உங்களுக்கு உண்டு. விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும்போது எச்சரிக்கை தேவை. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும்போது வேகத்தைக் குறைப்பது நல்லது.

மாதப் பலன்கள்

ஜனவரி: மாதகோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதாலும், 9-ல் புதன், 11-ல் கேது சஞ்சாரம் செய்வதாலும் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகளும் பொறாமைகளும் மறைந்து லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். எடுக்கும் முயற்சிகளிலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெற்றுவிட முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத் தைக் குறைப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும். முருகப்பெருமானை வழிபடுவது நல்லது. 

சந்திராஷ்டமம்: 09-01-2018 மதியம் 02.23 மணி முதல் 12-01-2018 அதிகாலை 12.49 மணி வரை. 

பிப்ரவரி: இம்மாதம் 11-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் ஓரளவுக்கு நற்பலன்களைப் பெறுவீர்கள். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை காணப்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றடாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கலாம். தொழில், வியாபார ரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. வேலைப்பளு சற்று அதிகரித்தாலும் உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பகள் சிறப்பாக இருப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். முருக வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 05-02-2018 இரவு 10.32 மணி முதல் 08-02-2018 காலை 07.45 மணி வரை. 

மார்ச்: ஜென்ம ராசிக்கு 8-ல் குரு, 12-ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள், தேவையற்ற வாக்கு வாதங்கள் உண்டாகும். கணவன்- மனைவிடையே ஒற்றுமை குறையும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். பணவரவுகள் சுமாராகத்தான் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது, தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் கிடைப்பதைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் பணியில் திறம்பட செயல்பட முடியும். துர்க்கையம்மனை வழிபாடு செய்வது நற்பலனை உண்டாக்கும்.

சந்திராஷ்டமம்: 05-03-2018 காலை 08.13 மணி முதல் 07-03-2018 மாலை 04.07 மணி வரை. 

ஏப்ரல்: ஜென்ம ராசியில் சூரியன், 10-ல் சனி சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்பட்டு சுக வாழ்வில் பாதிப்பும், வீண் விரயங்களும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்களும், கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் சோர்வு உண்டாகும். பணவரவுகளில் சற்று நெருக்கடியான நிலையே இருக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் நிலவும். உற்றார் உறவினர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்றாலும் எந்த வித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி எந்தவொரு காரியத்தையும் செய்யாதிருப்பது நல்லது. சிவபெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 01-04-2018 மாலை 05.52 மணி முதல் 04-04-2018 அதிகாலை 01.09 மணி வரை மற்றும் 29-04-2018 அதிகாலை 01.58 மணி முதல் 01-05-2018 காலை 09.35 மணி வரை. 

மே: உங்கள் ராசிக்கு குரு, சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும், மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது நல்லது. முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தினைப் பெற முடியும். குருபகவானுக்குப் பரிகாரம் செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 26-05-2018 காலை 08.16 மணி முதல் 28-05-2018 மாலை 04.38 மணி வரை. 

ஜூன்: இம்மாதம் 4-ல் சுக்கிரன், 11-ல் செவ்வாய், மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். சிறப்பான லாபங்களும் கிட்டும். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும் என்பதால் முடிந்த வரை பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். ஆஞ்சநேயரை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 22-06-2018 மதியம் 01.44 மணி முதல் 24-06-2018 இரவு 10.31 மணி வரை.
  
ஜூலை: ஜென்ம ராசிக்கு 5-ல் புதன், 11-ல் செவ்வாய், கேது சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவில் இருந்த தடைகள் விலகி தாராள தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். கணவன்- மனைவியிடையே மகிழ்ச்சியும், ஒற்றுமையும் உண்டாகும். புத்திர வழியில் பூரிப்பு ஏற்படும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் சற்று அனுசரித்து நடப்பது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கும் தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கும். சிவ வழிபாடு செய்வது நல்லது.  

சந்திராஷ்டமம்: 19-07-2018 இரவு 07.56 மணி முதல் 22-07-2018 அதிகாலை 04.14 மணி வரை.
  
ஆகஸ்ட்: லாப ஸ்தானமான 11-ல் செவ்வாய், கேது சஞ்சாரம் செய்வதாலும் மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் அனைத்து வகையிலும் நற்பலன்கள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்டி பொறாமைகளை சமாளித்து நல்ல லாபத்தினை அடைவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் அபிவிருத்தியும் பெருகும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். துர்க்கையம்மனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 16-08-2018 அதிகாலை 03.55 மணி முதல் 18-08-2018 காலை 10.57 மணி வரை.

செப்டம்பர்: ஜென்ம ராசிக்கு 11-ல் செவ்வாய், கேது சஞ்சாரம் செய்வதாலும் மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதாலும் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது, உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது நல்லது. புத்திர வழியில் மனக்கவலைகள் உண்டாகும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்டி பொறாமைகளை சமாளித்து முன்னேற்றங்களைப் பெறுவீர்கள். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 12-09-2018 மதியம் 01.30 மணி முதல் 14-09-2018 இரவு 07.12 மணி வரை.  

அக்டோபர்: இம்மாதம் 11-ல் செவ்வாய், கேது சஞ்சாரம் செய்வதும் 11-ஆம் தேதி முதல் 9-ல் குரு சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன்களும் குறையும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று வாழ்க்கைத் தரம் உயரும். கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. அசையும், அசையா சொத்துகளை வாங்கும் நோக்கங்களும் நிறைவேறக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ளலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்படுவதால் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 09-10-2018 இரவு 11.28 மணி முதல் 12-10-2018 அதிகாலை 04.31 மணி வரை.  

நவம்பர்: ஜென்ம ராசிக்கு 9-ல் குரு, புதன் 11-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எந்தவித பிரச்சினைகளையும் எதிர்கொள்ளக் கூடிய அளவுக்கு உங்கள் பலமும் வளமும் கூடும். எதிர்பாராத உதவிகளும் தேடி வரும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். ஆடை அபரணங்களை வாங்கும் வாய்ப்பு அமையும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைத் தடையின்றி அடைவீர்கள். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் தடையின்றி நிறைவேறும். கடன்களும் படிப்படியாக குறையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 06-11-2018 காலை 08.12 மணி முதல் 08-11-2018 மதியம் 01.39 மணி வரை.  

டிசம்பர்: மாத கோளான சூரியன் சாதகமாக சஞ்சாரம் செய்வதாலும், 9-ல் குரு 11-ல் கேது சஞ்சாரம் செய்வதாலும் நற்பலன்களைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை உண்டானாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி எளிதில் கைகூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்களும் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பலருக்கு உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளைப் பெற முடியும். அம்மன் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 03-12-2018 மதியம் 02.51 மணி முதல் 05-12-2018 இரவு 09.20 மணி வரை மற்றும் 30-12-2018 இரவு 08.16 மணி முதல் 02-01-2019 அதிகாலை 03.19 மணி வரை. 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1, 2, 3, 9, கிழமை - வியாழன், ஞாயிறு, திசை - வடகிழக்கு, நிறம் - மஞ்சள், சிவப்பு, கல் - புஷ்ப ராகம், தெய்வம் - தட்சிணாமூர்த்தி.

No comments: