Friday, March 9, 2018

விபத்து அமைப்பு யாருக்கு ஏற்படுகிறது. ( சனி- செவ்வாய் சேர்க்கை என்ன செய்யும் )


விபத்து அமைப்பு யாருக்கு ஏற்படுகிறது.
( சனி- செவ்வாய் சேர்க்கை என்ன செய்யும் )
ஜோதிட மாமணி,  முனைவர் முருகு பால முருகன் -  0091  7200163001
                தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் மனிதன் தன் அன்றாட வாழ்க்கையை நடத்துவதென்பது கடினமாக உள்ளது. அது மட்டுமின்றி வேலைக்காகவும் மற்ற விஷயங்களுக்காகவும் நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. சைக்கிளில் சென்றவன் பைக்கில் செல்கிறான். பைக்கில் சென்றவன் காரில் செல்கிறான். நடைபயனம் மேற் கொள்பவன் ஆட்டோவில் பயணிக்கிறான். பொருளாதார நெருக்கடி என கூறி விட்டு வாழ்க்கை தர உயர்வை பற்றி கூறுகிறேன் என நினைக்காதீர்கள். நேரத்தை மிச்சப்படுத்த உரிய நேரத்தில் நினைத்த இடத்திற்கு சென்றடைய தான் இந்த மாற்றங்கள்.
                தற்போதுள்ள சூழ்நிலைகளில் வண்டி வாகனங்களில் சத்தமும் அவற்றால் உண்டாகும் அசுத்தங்களும் மூச்சையே நிறுத்தி விடும் போல இருக்கிறது. யார் எங்கு செல்கிறார்கள். எதற்காக கண்ட நேரங்களில் பயணிக்கிறார்கள் என ஒன்றுமே புரியவில்லை. அது மட்டுமின்றி காலையில் வீட்டை விட்டு கிளம்பும் ஒருவர் நல்லபடியாக வீடு வந்து சேர்ந்தால் தான் அன்றைய தினமே உண்மையாக வாழ்ந்ததற்கு அடையாளமாக இருக்கிறது. எத்தனை விபத்துகள் எத்தனை உடலுறுப்புகளை இழக்க வேண்டிய சூழ்நிலைகள் என்ன கொடுமையிது என நினைத்து மனம் அலறித் துடிக்கிறது.
                நவகிரகங்கள் தான் நம்மை ஆட்டுவிக்கின்றது என இப்படி விபத்துக்களை சந்தித்து வாழ்க்கையையே இழக்க கூடிய அவலம் எப்படிப் பட்ட கிரக அமைப்புகள் ஜெனன ஜாதகத்தில் அமையப் பெற்றவர்களுக்கு ஏற்படும் என பார்த்தோமானால் ஜென்ம லக்னமும் சந்திரா லக்னமும் ஒருவருக்கு பலமாக இருப்பது மிகவும் அவசியம். ஜென்ம லக்னத்தை கொண்டு தான் அவரின் உடலமைப்பு ஆயுள், ஆரோக்கியத்தை பற்றி அறிந்து கொள்ள முடியும். ஜென்ம லக்னமும் சந்திரா லக்னமும் பலமாக அமைந்து விட்டால் அவரின் உடலமைப்பு, ஆயுள், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அதுவே ஜென்ம லக்னத்தை பாவ கிரகங்கள் சூழ்ந்திருந்தாலும், சனி போன்ற பாவ கிரகங்கள் பார்வை செய்தாலும் லக்னாதிபதி பலவீனமாக இருந்தாலும் அந்த ஜாதகருக்கு உடலில் ஏதாவது பாதிப்புகள் ஏற்படக்கூடிய நிலை நல்ல நிலையிலிருந்தாலும் ஏதாவது ஒரு விபத்தின் மூலம் உடலுறுப்புகளை இழக்க கூடிய அவலம் உண்டாகும்.
                ஜெனன ஜாதகத்தில் 6-ஆம் இடம் ரூண ரோக ஸ்தானமாகும். 8-ஆம் இடம் ஆயுள் ஆரோக்கிய ஸ்தானமாகும். 6,8-ல் பாவ கிரகங்கள் அமையப் பெற்று சுபர் பார்வையின்றி இருப்பது நல்லதல்ல. குறிப்பாக நவகிரகங்களில் செவ்வாய் ரத்த காரகனாவார். சனி  மந்தகாரகனாவார். அவர் உடல் உறுப்புகளுக்கும் அங்கஹீனங்களுக்கும் காரகம் வகிக்கிறார். செவ்வாய் ரத்த காயங்கள் வெட்டு காயங்கள் ரத்த சம்மந்தப்பட்ட பாதிப்புகளுக்கு காரகம் வகிக்கிறார்.
                பொதுவாகவே சனி செவ்வாய் சேர்க்கைப் பெற்று 6,8-ல் இருந்தாலும் 6,8-ஆம் அதிபதியுடன் இணைந்திருந்தாலும் சனி- செவ்வாய் இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டாலும் எதிர்பாராத விபத்துகளை சந்திக்க நேரிட்டு ரத்த காயங்கள், உடல் உறுப்புகளில் பாதிப்பு போன்றவை உண்டாகிறது. குறிப்பாக சனி- செவ்வாய் சேர்க்கை பெற்றவர்களுக்கு சனி திசை- செவ்வாய் புக்தி, செவ்வாய் திசை- சனி புக்தி காலங்களில் விபத்துகள் ஏற்படுகிறது.
                சனி அல்லது செவ்வாய் ராகு சேர்க்கை பெற்று 6,8-ல் இருந்தாலும் மூவரும் இணைந்து 6,8-ல் இருந்தாலும் 6,8-ஆம் அதிபதிகளுடன் சேர்க்கைப் பெற்று சனி செவ்வாய் ராகு ஆகியவர்களில் இருவர் இருந்தாலும் அக்கிரங்களில் ஒருவரின் தசாவில் மற்றொருவரின் புக்தி காலங்களில் விபத்துகளை சந்திக்க நேரிடுகிறது.
                சனி செவ்வாய் ராகு ஆகிய கிரகங்கள் சேர்க்கைப் பெற்று 6,8-ல் அமைந்தால் போர் மற்றும் அசம்பாவிதம் போன்றவற்றாலும் ஆயுதத்ததாலும் மரணம் ஏற்படும். சூரியன் செவ்வாய் 6,8-ல் இருந்தால் இடி, மின்னல், நெருப்பு மற்றும் உஷ்ண சம்பந்தப்பட்டவற்றால் மரணம் உண்டாகும்.
                வாகன காரகன் என வர்ணிக்கப்படும் சுக்கிரன் சனி செவ்வாய், ராகு போன்ற கிரகங்களின் சேர்க்கைப் பெற்று 6,8-ல் இருந்தால் வண்டி வாகனங்களால் விபத்துகள் ஏற்படும்.
                லக்னாதிபதி பலமிழந்து 6,8-ல் பாவிகள் பலம் பெற்று அமைந்திருந்தால் எதிர்பாராத விபத்துகளை சந்திக்க நேரிடும். ஜென்ம லக்னத்தையோ, சந்திரனையோ, 6,8-ஆம் வீட்டையோ பாவிகள் சூழ்ந்திருந்தாலும் எதிர்பாராத கண்டங்கள் உண்டாகும்.
ஜல காரகன் சந்திரன் பாவிகள் சேர்க்கைப் பெற்று 6,8-ல் இருந்தால் நீரால் கண்டங்கள் ஏற்படும்.
                கால புருஷ தத்துவப்படி 6-ஆம் இடம் என வர்ணிக்கப்பட கூடிய கன்னியிலும் எட்டாம் இடமாகிய விருச்சிகத்திலும் சனி செவ்வாய் ராகு சேர்க்கைப் பெற்றிருந்தால் அதன் தசா புக்தி காலங்களில் விபத்துகளை சந்திக்க நேரிடும்.
ஜென்ம லக்னத்ததிற்கு 6,8-ஆம் வீட்டில் பாவிகள் இருந்தால் கெடுதிகள் ஏற்படும் என்றாலும் குருபகவானின் பார்வை 6,8-ஆம் வீட்டிற்கோ அல்லது சனி ராகு செவ்வாய் போன்ற பாவ கிரக சேர்க்கைக்கோ இருந்தால் கண்டங்கள் விபத்துகள் ஏற்பட்டாலும் தப்பித்து விட முடியும் பெரிய பாதிப்புகள் ஏற்படாது.
                பொதுவாக கோட்சாரத்தில் சனி- செவ்வாய் சேர்க்கை ஏற்படும் காலங்களில் நாட்டில் தேவையற்ற அசம்பாவிதங்கள் நடந்து உள்ளது. தற்போது திருக்கணிதப்படி தனுசு ராசியில் சஞ்சரிக்கும் சனியுடன் கடந்த 07-03-2018 முதல் வரும் 02-05-2018 வரை செவ்வாய் இனைந்து உள்ளதால் நாட்டில் பல்வேறு குழப்பங்கள், எதிர்பாராத தீ விபத்துக்கள், வாகன விபத்துகள் தேவையற்ற நிகழ்வுகள் நடக்க வாய்ப்பு உண்டு.
                தனுசு ராசி என்பது குருவின் ராசி என்பதால் மாணவ, மாணவியர்கள், கவனமாக இருப்பது நல்லது. குருவின் காரகத்துவம் கொண்ட பகுதிகளான ஆலயங்கள், பண நடமாட்டம் உள்ள பகுதிகளான வங்கிகள், வணிக வளாகங்கள், நீதி துறை போன்றவற்றில் உள்ளவர்கள் மிகவும் கவனுத்துடன் வரும் நாட்களில் இருப்பதன் மூலம் பிரச்சினைகளில் இருந்து விடுபட முடியும். வரும் இரண்டு மாதங்கள் மிகவும் சோதனையான காலம் என்பதால் நாம் அனைவரும் நாடு நலம் பெற அசுப பலன் ஏற்படாமல் இருக்க இறைவனை பிரார்த்திப்போம்.



No comments: