Thursday, April 4, 2019

விருச்சிகம் - விகாரி வருட பலன்கள் 2019-2020


விருச்சிகம் - விகாரி வருட பலன்கள் 2019-2020
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

விருச்சிகம்   விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
நகைச்சுவை உணர்வும், சிறந்த பேச்சாற்றலும் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விகாரி ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் ஜென்ம ராசியிலேயே சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகளும், உடல் நிலையில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகளும் உண்டாகும். இது மட்டுமின்றி சனியும், கேதுவும் 2-ஆம் வீட்டிலும், ராகு 8-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் தேவையற்ற நெருக்கடிகளும், கருத்து வேறுபாடுகளும் உண்டாகும். இதுமட்டுமின்றி ஏழரைசனியில் பாதசனி நடைபெறுவது சாதகமற்ற அமைப்பு ஆகும். இதனால் ஆண்டின் தொடக்கத்தில் சற்று சோதனையான பலன்களை சந்திப்பீர்கள்.
திருக்கணிதப்படி ஐப்பசி மாதம் 19-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் 05-11-2019 (வாக்கியப்படி ஜப்பசி 12-ஆம் தேதி) முதல் குருபகவான் தனஸ்தானமான 2-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பது நல்ல அமைப்பாகும். இதனால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் படிப்படியாக குறைந்து பொருளாதார நிலை மேன்மையடையும். திருக்கணிதப்படி வரும் தை மாதம் 10-ஆம் தேதி 24-01-2020 ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் உங்களுக்கு நடைபெற்று கொண்டு இருக்கும் ஏழரைசனி முழுமையாக முடிவடைந்து விடுவதால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் யாவும் பகலவனை கண்ட பனி போல மறையும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். எதிர்பாராத உதவிகள் கிட்டும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமானப் பலன்கள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிட்டும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும்.
கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை உண்டாகும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. பெரிய மனிதர்களின் நட்பு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு, தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் மந்தநிலை நிலவினாலும் பிற்பாதியில் சிறப்பான லாபங்களைப் பெறுவீர்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்பு உடையவைகளால் அனுகூலப்பலன் கிடைக்கும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தடைகளுக்குப் பின் கிடைக்கும்.

உடல் ஆரோக்கியம்
உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள், சற்று மந்த நிலை, கைகால் அசதி போன்றவை ஏற்படும். அஜீரண கோளாறுகள் உண்டாகும் என்றாலும் பெரிய அளவில் எந்தவித மருத்துவ செலவுகளும் ஏற்படாது. அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் இருப்பது போன்றவற்றால் நிம்மதி நிலவும்.
குடும்பம் பொருளாதார நிலை
இந்த ஆண்டின் தொடக்கத்தில் குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள், திருமணத் தடைகள் உண்டாகும் என்றாலும் ஆண்டின் பிற்பாதியில் சுபிட்சமான நிலை நிலவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் சேரும். சிலருக்கு பூமி மனை போன்றவற்றால் சிறுசிறு விரயங்கள் ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய சொத்துக்கள் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.
உத்தியோகம்
பணியில் சற்று வேலைபளு அதிகரிப்பதுடன், எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும் என்றாலும் ஆண்டின் பிற்பாதியில் பணியில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். எதிர்பார்க்கும் கௌரவமான பதவிகள் கிடைக்கும். திறமைக்கு ஏற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் பணியினை தற்போது பயன்படுத்தி கொள்வது நல்லது. வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோரின் விருப்பம் சில தடைகளுக்குப்பின் நிறைவேறும்.
தொழில் வியாபாரம்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிறுசிறு போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் போன்றவற்றால் வரவேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப் போனாலும், ஆண்டின் பிற்பாதியில் எல்லா வகையிலும் மேன்மைகளை அடைய முடியும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலங்கள் ஏற்படும். எதிர்பார்க்கும் லாபங்கள் கிட்டும். பயணங்களால் அனுகூலங்கள் ஏற்படும் என்றாலும் தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் சற்று அனுசரித்து நடந்து கொண்டால் சிறப்பான நற்பலன்களை பெற முடியும்.
கொடுக்கல்- வாங்கல்
பண வரவுகளில் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும், பிற்பாதியில் தாராள தன வரவுகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை ஏற்படும். நெருக்கடிகள் விலகும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த தடையும் ஏற்படாது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் யாவற்றிலும் தடை தாமதங்களுக்குப் பின்பே வெற்றி கிட்டும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும்.
அரசியல்
கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய வேண்டியிருந்தாலும், கௌரவம் புகழ் யாவும் சிறப்பாக இருக்கும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி மக்களின் ஆதரவை பெறுவீர்கள். பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய வாய்ப்புகள் உண்டாகும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும் என்றாலும் அதன்மூலம் ஆதாயங்களும் உண்டாகும். பத்திரிக்கை நண்பர்களிடம் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது உத்தமம்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் ஒரளவுக்குச் சிறப்பாக இருக்கும் என்றாலும் புழு பூச்சிகளின் தொல்லைகளால் பயிரை காப்பாற்ற அதிக செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். அரசு வழியில் எதிர்பாராத மானிய உதவிகள் கிடைக்கப் பெற்று அனைத்தையும் சரி செய்ய முடியும். புதிய பூமி மனை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். தொழிலாளர்களின் உதவி கிடைக்கும். கால்நடைகளாலும், காய், கனி, பூ வகைகளாலும் ஓரளவுக்கு ஆதாயங்களைப் பெறுவீர்கள்.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் அதிகரிக்காது. ஆண்டின் முற்பாதியில் பணவரவுகளில் சற்று நெருக்கடிகள் ஏற்பட்டாலும், பிற்பாதியில் தாராள தன வரவைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் குடியேறும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் ஏற்படும் என்றாலும் எதிலும் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது.
மாணவ- மாணவிகள்
கல்வியில் சற்று ஈடுபாட்டுடன் செயல்பட்டால் அடைய நினைத்த மதிப்பெண்களை அடைந்து விட முடியும். கல்விக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். அரசு வழியில் ஆதரவுகள் கிடைக்கும். பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது உத்தமம்.

மாதப்பலன்
சித்திரை
உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் சிறப்பான பணவரவுகளையும், எதையும் எதிர்கொள்ள கூடிய பலத்தையும் தரும் அமைப்பாகும். குடும்பத்தில் தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் மருத்துவ செலவுகள் குறைவாகவே இருக்கும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலப்பலன் ஏற்படும். உத்தியோகத்தில் உயர்பதவிகள் கிடைக்கும். வேலைப்பளு குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளிடன் சற்று விட்டுக் கொடுத்து நடந்து கொள்வதால் அபிவிருத்தியை பெருக்கிக்கொள்ள முடியும்.  கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். முருகனை வழிபடவும்.
வைகாசி 
உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், 8-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. 2-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் முடிந்த வரை பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக் குறைவு ஏற்படும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பணியில் வேலைபளு அதிகப்படியாக இருக்கும். தொழிலில் கூட்டாளிகளால் தேவையற்ற சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.
ஆனி           
உங்கள் ராசிக்கு 2-ல் சனி, கேது, 8-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் சற்று விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைக்கவும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதப் பட்டாலும் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். வண்டி, வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்ளும் போது நிதானம் தேவை. சிவனை வழிபடுவது நல்லது.
ஆடி            
உங்கள் ராசியாதிபதி செவ்வாய், சூரியன், புதன் சேர்க்கைப் பெற்று பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களுக்குள்ள பிரச்சினைகள் சற்று குறையும். எல்லா வகையிலும் லாபம் கிட்டும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். கணவன்- மனைவி விட்டுக் கொடுத்து நடந்துக் கொள்வதும், உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பதும் நல்லது. முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது உத்தமம். துர்க்கையம்மனை வழிபடவும்.
ஆவணி  
ராசியாதிபதி செவ்வாய், சூரியன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்று ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் லாபத்தை அடைவீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். சுபகாரியங்களில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும்.  பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் வீண் செலவுகளைக் குறைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.  தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவது நல்லது.
புரட்டாசி
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சூரியன், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் எதிலும் லாபகரமான பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் அதன் முழுப்பலனை தடையின்றி அடைய முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் ஒரளவுக்கு லாபம் கிட்டும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகக் கூடிய காலம் என்பதால் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். முருகனை வழிபடுவது உத்தமம்.
ஐப்பசி    
ராசியாதிபதி செவ்வாய் லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதாலும் இம்மாதம் 19-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு பெயர்ச்சியால் குரு 2-ஆம் வீட்டிற்கு செல்வதாலும் உங்களுக்குள்ள நெருக்கடிகள் படிப்படியாக குறையும். பூர்வீக சொத்துகளால் அனுகூலங்கள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபங்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. அம்மனை வழிபாடு செய்யவும்.
கார்த்திகை    
ஜென்ம ராசியில் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தனக்காரகன் குரு பகவான் 2-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். சுப காரியங்கள் கைகூடும். இழந்த பொருட்களை மீட்க முடியும். கடன்கள் படிப்படியாகக் குறையும். கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும். அசையும் அசையா சொத்துகளில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்கள் சாதகமாக நடந்து கொள்வார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறையும். சிவ வழிபாடு மேற்கொள்வது நல்லது.
மார்கழி  
ராசிக்கு 2-ல் குரு சஞ்சரிப்பதால் உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் என்றாலும் 2-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்தால் மட்டுமே ஒற்றுமையான நிலை ஏற்படும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு சாதகமாக இருப்பார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதையும் சமாளிக்கக் கூடிய அளவிற்கு எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன்கள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிலிருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதி நிலவும். முருகப் பெருமானை வழிபடவும்.
தை       
ஜென்ம ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். திருக்கணிதப்படி இம்மாதம் 10-ஆம் தேதி ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் ஏழரைசனி முழுமையாக முடிவதால் குடும்பத்தில் தடைபட்ட திருமண சுப காரியங்கள் தடபுடலாக கைகூடும். வீடு வாகனங்களை வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டி, பொறாமைகளும், மறைமுக எதிர்ப்புகளும் மறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சிறப்பாக செயல்பட முடியும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். துர்கை அம்மனை வழிபடவும்.
மாசி            
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சனி, 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் முன்னேற்றங்களை அடைவீர்கள். நினைத்ததை நிறைவேற்றி விடுவீர்கள். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும். அசையா சொத்துகளால் தேவையற்ற விரயங்களை சந்திக்க நேர்ந்தாலும் எதிர்பாராத திடீர் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் நற்பலனைப் பெற முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடன் பணிபுரிபவர்களும் சாதகமாகச் செயல்படுவார்கள். முருக வழிபாடு செய்வது நல்லது.
பங்குனி
தன ஸ்தானமான 2-ல் குரு, 3-ல் சனி சஞ்சரிப்பதும் இம்மாதம் 9-ஆம் தேதி முதல் 3-ல் செவ்வாய் சஞ்சாரம்  செய்ய இருப்பதும் தொழில் வியாபாரத்தில் நற்பலனை தரும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். திருமண முயற்சிகளில் தடையின்றி அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் லாபத்தை அடைய முடியும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. முருகப் ªருமானை வழிபடுவது உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை,
எண்    - 1,2,3,9,
நிறம்    - ஆழ்சிவப்பு, மஞ்சள்
கிழமை  - செவ்வாய், வியாழன்
திசை   - தெற்கு
கல்     - பவளம்
தெய்வம் - முருகன்

No comments: