Thursday, April 4, 2019

மிதுனம் - விகாரி வருட பலன்கள் 2019-2020


மிதுனம் - விகாரி வருட பலன்கள் 2019-2020
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

மிதுனம்  மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள்,  திருவாதிரை,   புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
வசீகரமான கண்களும், சிறந்த பேச்சாற்றலும் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக் கூடிய திறமையும் கொண்ட மிதுன ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விகாரி ஆண்டில் ஜென்ம ராசிக்கு 7-ல் சனி சஞ்சரிப்பதும், 6-ல் குரு சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பாகும். இதுமட்டுமின்றி ஜென்ம ராசியில் ராகுவும், 7-ல் கேதுவும், சஞ்சரிப்பது அனுகூலமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத அளவிற்கு அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். கூட்டுத் தொழில் வியாபார ரீதியாகவும் கூட்டாளிகளால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும்.
திருக்கணிதப்படி வரும் ஐப்பசி 19-ஆம் தேதி 05-11-2019 (வாக்கியப்படி ஜப்பசி 12-ஆம் தேதி) முதல் குரு சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் குரு மாற்றத்திற்கு பின்பு பொருளாதார நிலை மேன்மையடையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வருவதால் குடும்பத்தில் தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவி இடையே இருந்த வாக்குவாதங்கள் மறைந்து ஒற்றுமை பலப்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்களும், புத்திர வழியில் மகிழ்ச்சித் தரகூடிய சம்பவங்களும் நடைபெறும். அசையும் அசையா சொத்துக்களும் சேரும். உற்றார் உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்துக் கொண்டால் அவர்களால் அனுகூலப்பலனை பெற முடியும்.
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்றே அலைச்சல்கள் ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி கிட்டும். கூட்டாளிகளிடம் இருந்த பிரச்சினைகள் மறைந்து அபிவிருத்தி பெருகும். நல்ல ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களால் சிறுசிறு இடையூறுகளை சந்தித்தாலும் எதிர்பார்த்த உயர்வுகளை தடையின்றி அடைவார்கள். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை நல்லபடி பயன்படுத்தி கொண்டால் நல்ல உயர்வுகளை பெறுவார்கள்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய காலமிது. அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். கை கால் மூட்டுகளில் வலி, நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள், வயிறு கோளாறு போன்றவையும் உண்டாகும். எல்லா இருந்தும் அனுபவிக்க இயலாமல் போகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது போன்றவற்றால் நிம்மதி நிலவும்.
குடும்பம் பொருளாதார நிலை
திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். பணவரவுகள் தொடக்கத்தில் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் படிப்படியாக முன்னேற்றம் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பும் அமையும். சுக வாழ்வு சொகுசு வாழ்வு பாதிப்படையாது. கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது.
உத்தியோகம்
பணியில் வேலைபளு சற்று அதிகரிக்கும் என்பதால் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் ஓரளவுக்கு திருப்தி அளிப்பதாக இருப்பதால் எதையும் சமாளிக்க முடியும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். ஆண்டின் பிற்பாதியில் எதிர்பார்க்கும் சம்பள உயர்வுகள் கிடைக்கும். அனைவரிடமும் பேசும் போது சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். நிலுவையில் இருக்கும் சம்பள பாக்கிகள் கைக்கு வந்து சேரும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்து செயல்படவும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைத்தாலும் நிறைய போட்டிகளை சந்திக்க வேண்டியிருக்கும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரித்தாலும் அதன் மூலம் அனுகூலப்பலனை அடைவீர்கள். ஆண்டின் பிற்பாதியில் அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிட்டும். தொழிலாளர்களையும் கூட்டாளிகளையும் சற்று அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும்.
கொடுக்கல்- வாங்கல்
தொடக்கத்தில் பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவும் என்பதால் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. குரு பெயர்ச்சிக்குப்பின் பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். உங்களுக்குள்ள வம்பு, வழக்கு பிரச்சினைகளில் சற்று இழுபறியான நிலை ஏற்பட்டாலும் முடிவு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
அரசியல்
பெயர் புகழ் மங்க கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, மக்களின் தேவையறிந்து செயல்படுவது நல்லது. கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய வேண்டி இருந்தாலும் அதற்கு ஏற்ற வருவாய்களும் கிட்டும். குருப்பெயர்ச்சிக்குப் பின் பணவரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் சற்று ஏற்பட்டாலும் அதன் மூலம் அனுகூலமானப் பலன்களைப் பெருவீர்கள். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். பத்திரிக்கை நண்பர்களால் அனுகூலமானப் பலனை பெருவீர்கள்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சுமாராகத் இருந்தாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். புழு பூச்சிகளின் தொல்லைகளால் நிறைய வீண் செலவுகள் ஏற்படும். தகுந்த நேரத்திற்கு வேலையாட்கள் கிடைக்காததால் அறுவடையில் தாமதம் உண்டாகும் என்றாலும் ஒரளவுக்கு எதையும் சமாளித்து எல்லா வகையிலும் முன்னேற்றத்தினை அடைய முடியும். ஆண்டின் பிற்பாதியில் அரசு வழியில் எதிர்பாராத ஆதரவுகள் கிட்டும். பங்காளிகளை அனுசரித்து செல்வது உத்தமம்.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொண்டால் மட்டுமே அன்றாட பணிகளை தடையின்றி செய்து முடிக்க முடியும். குருப் பெயர்ச்சிக்குப் பின் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதோடு கடன்களும் குறையும். திருமணம் போன்ற சுப காரியங்களும் கை கூடும். கணவன்- மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சொத்துகள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.
மாணவ- மாணவிகள்
கல்வியில் சற்று ஈடுபாடற்ற நிலை, ஞாபகமறதி போன்றவை ஏற்படும். உடல் நிலையில் உண்டாக கூடிய பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். கல்விக்காக வெளியூர் செல்ல வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படுவதால் சிலருக்கு அலைச்சல்கள் உண்டாகும். நல்ல நட்புகளாக தேர்ந்தெடுத்து பழகுவது மூலம் அனுகூல பலனை அடையலாம்.

மாதப்பலன்
சித்திரை   
மாத கோளான சூரியன் லாப ஸ்தானத்திலும் சுக்கிரன் 10-லும் சஞ்சரிப்பதால் ஓரளவுக்கு அனுகூலங்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை, சோர்வு போன்றவை உண்டாகும். எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். முன் கோபத்தைக் குறைப்பது, முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. தெய்வ காரியங்களுக்காக சிறுசிறு செலவுகளைச் செய்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும். ஆஞ்சநேயரையும் அம்மனையும் வழிபடவும்.
வைகாசி 
ஜென்ம ராசியில் செவ்வாய், ராகு, 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். சுக வாழ்வு, சொகுசு வாழ்விற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். 7-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். மங்களகரமான சுபகாரியங்கள் சில தடைகளுக்குப்பின் கைகூடும். பணம் கொடுக்கல்- வாங்கலில் மிகவும் கவனமுடன் நடந்து கொண்டால் மட்டுமே நற்பலனை அடைய முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதால் கூட்டாளிகளின் ஆதரவுடன், அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். முருகப் பெருமானை வழிபடவும்.
ஆனி                       
சூரியன், ராகு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். முன்கோபத்தை குறைப்பது சிறப்பு. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். குரு 6-ல் இருப்பதால் பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. 7-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை, கை கால் அசதி போன்றவை ஏற்படுவதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியாத நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. முருகப் பெருமானை வழிபடுவது நல்லது-.
ஆடி             
ஜென்ம ராசிக்கு 2-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் கவனமாக இருப்பது உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சனி, கேது 7-ல் இருப்பதால் கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். எதிலும் விட்டுக் கொடுத்து நடந்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பணியில் வீண் பழிகளை சுமக்க வேண்டி இருப்பதால் மனசஞ்சலங்கள் உண்டாகும். எந்தவொரு விஷயத்திலும் கவனமுடன் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். சுப காரியங்களில் தாமதம் உண்டாகும். அம்மனை வழிபடுவது நல்லது.
ஆவணி     
முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் ஏற்றங்கள் ஏற்படும். உங்களுக்கு இருக்கும் தடைகள் எல்லாம் விலகி சகல விதத்திலும் மேன்மைகளை அடைவீர்கள். பண வரவுகள் தாராளமாகவே இருக்கும். குரு 6-ல் உள்ளதால் ஆடம்பர செலவுகள் செய்வதையும் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபத்துவதையும் தவிர்ப்பது நல்லது. கணவன்- மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் சிறுசிறு மன சஞ்சலங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. தொழில் வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உத்தியோக ரீதியாக உயர்வுகள் கிடைக்கும். தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது
புரட்டாசி   
சுக்கிரன், புதன் 4, 5-ஆகிய ஸ்தானங்களில் சஞ்சரிப்பதால் செல்வம் செல்வாக்கு மேலோங்கும். பணவரவுகள் தடையின்றி இருப்பதால் கடன்கள் குறைவதோடு எடுக்கும் முயற்சிகளில் வெற்றிக்களைப் பெறுவீர்கள். சிலருக்கு சொந்த பூமி, வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சுப காரியங்கள் தடையின்றி கைகூடும். சூரியன் 4-ல், சனி, கேது 7-ல் இருப்பதால் குடும்பத்தில் சிறுசிறு நிம்மதி குறைவுகள் இருக்கும் என்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. முடிந்தவரை பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் பிரச்சினைகளை சந்தித்தாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெற முடியும். சிவ பெருமானையும், விநாயகரையும் வழிபடுவது நல்லது.
ஐப்பசி         
இம்மாத தொடகத்தில் புதன், சுக்கிரன் 5-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். 19-ஆம் தேதி ஏற்படகூடிய குரு பெயர்ச்சியால் குரு 7-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் உள்ள நெருக்கடிகள் யாவும் மாத பிற்பாதியில் முழுமையாக குறைந்து மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொருளாதார மேம்பாடுகளால் கடன்களும் குறைந்து நிம்மதி நிலவும். உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. சிவ பெருமானையும் முருகரையும் வழிபடவும்.
கார்த்திகை          
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், 7-ல் குரு சஞ்சரிப்பது பொருளாதார ரீதியாக உயர்வுகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். உங்களது பலமும் வலிமையும் கூடக்கூடிய காலமாகும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தேவையற்ற வம்வு வழக்குகள் மறையும். 7-ல் சனி, கேது இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். உறவினர்களின் அதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். தொழில் வியாபாரத்தில் போட்ட முதலீட்டினை எடுத்து விட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் பதவிகள் கிட்டும். துர்கையம்மனையும் விநாயகரையும் வழிபடுவது நல்லது.
மார்கழி     
குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் தாராள தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் நல்லது நடக்கும் யோகம் இம்மாதத்தில் உண்டு. 9-ஆம் தேதி முதல் செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரிதியாக முன்னேற்றங்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் எந்தவித பிரச்சினைகளையும் எளிதில் சமாளித்து விட கூடிய ஆற்றலும் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர் பார்க்கும் உயர்வுகளைப் பெற்று முன்னேற்றம் அடைவார்கள். சூரியன், சனி 7-ல் இருப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கடன்களை குறைத்து கொள்ள முடியும். சனிக்குரிய பரிகாரங்களை செய்யவும்.
தை               
உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், 7-ல் குரு சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் பொருளாதார ரீதியாக ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் தடையின்றி இருப்பதால் கடன்கள் குறைவதோடு எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளையும் பெற முடியும். திருமணம் போன்ற சுப காரியங்கள் தடையின்றி கைகூடும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பெரிய மனிதர்களின் நட்புகளால் நற்பலன்கள் உண்டாகும். சூரியன் அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. வீண் அலைச்சல்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிவ பெருமானை வழிபடுவது நல்லது.
மாசி                        
உங்கள் ராசியாதிபதி புதன் பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதும், 7-ல் குரு, 10-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் தொழில் ரீதியாக முன்னேற்றமும் தாராள தனவரவுகளும் உண்டாகும். தடைப்பட்ட திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றும். கணவன்- மனைவி அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். பொது நலக் காரியங்களில் ஈடுபடக் கூடிய வாய்ப்பு, பல பெரிய மனிதர்களின் தொடர்புகளால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அரசு வழியில் ஆதரவு கிட்டும். அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
பங்குனி
சூரியன் 10-ல், சுக்கிரன் 11-ல் சஞ்சரிப்பதும், குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதும் சிறப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். போட்டி பொறாமைகளை சமாளித்து அபிவிருத்தியைப் பெருக்குவீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். வண்டி வாகனங்களால் சுப செலவுகள் உண்டாகும். ஆஞ்சநேயரை வழிபடுவதால் நற்பலனை அடைய முடியும்.

அதிர்ஷ்டம் அளிப்பை
எண்  - 5,6,8,
நிறம்  - பச்சை, வெள்ளை
கிழமை - புதன், வெள்ளி
கல்   - மரகதம்
திசை  - வடக்கு
தெய்வம் - விஷ்ணு


No comments: