Friday, October 11, 2019

ரிஷபம் - குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020


ரிஷபம்  - குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020

குரு பகவான் திருக்கணித சித்தாந்தப்படி விகாரி வருடம் ஐப்பசி மாதம் 18-ஆம் தேதி திங்கட்கிழமை 57.56 நாழிகைக்கு, ஆங்கிலப்படி 05-11-2019 செவ்வாய்கிழமை அதிகாலை 05.17 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகி 20-11-2020 வரை தனுசு ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.(வாக்கிய சித்தாந்தப்படி வரும் 29-10-2019 முதல் 15-11-2020 வரை தனுசு ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார் ).
தனுசு ராசியில் குரு பகவான் சஞ்சாரம் செய்யவுள்ள காலங்களில் உண்டாகக் கூடிய பலா பலன்களை தெள்ளத் தெளிவாக வழங்கி உள்ளேன்.

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,ரிஷபம்              கிருத்திகை 2,3,4ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ஆம் பாதங்கள்
எந்த கஷ்டத்தையும் தாங்கக்கூடிய சகிப்புதன்மை அதிகம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு இதுநாள் வரை 7-ல் சஞ்சரித்த குரு திருக்கணிதப்படி வரும் 05.11.2019 முதல் 20.11.2020 வரை உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் கேது சேர்க்கை பெற்று சஞ்சரிக்க இருப்பது சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதனால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும் என்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்களுக்கு பின் தான் கைகூடும். ஜென்ம ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் கேது வரும் 23.09.2020 முடியும் அதன் பின்பு ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது என சஞ்சரிக்க இருப்பதால் கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து நடந்து கொள்வது, உற்றார் உறவினர்களிடம் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது, மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. முடிந்த வரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது மிகவும் சிறப்பு. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாவதோடு குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். அசையும் அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்களை எதிர்கொள்ள நேரிடும்.  தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் அவற்றை தவிர்ப்பது நல்லது. சொந்த தொழில் செய்பவர்களுக்கு மந்த நிலை நிலவினாலும் பொருட் தேக்கம் ஏற்படாமல் ஒரளவுக்கு லாபம் கிட்டும். கொடுத்த கடன்களை திரும்ப பெறுவதில் சில இடையூறுகள் ஏற்படும். அதிக முதலிடு கொண்ட செயல்களில் ஈடுபடும் போது கவனமுடன் இருப்பதும் முதலிடு செய்தாக வேண்டும் என்ற நிலை இருந்தால் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் முதலிடு செய்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளை கண்ணெதிரேயே பிறர் தட்டி செல்வார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிப்பதோடு சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் கிடைக்காமல் போகும். குரு பார்வை 2, 4, 12-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் குடும்ப வாழ்வில் ஓரளவுக்கு சுபிட்சமும் ஒற்றுமையும் நிலவும். இருக்கும் வீட்டை பராமரிப்பதற்காக செலவுகள் செய்ய நேரிடும். பண விஷயத்தில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். தற்போது 8-ல் சஞ்சரிக்கும் சனி திருக்கணிதப்படி வரும் 24.01.2020 முதல் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதாலும், உங்களுக்கு தற்போது நடக்கும் அஷ்டமச்சனி முழுமையாக முடிவதாலும் எதிர்பாராத வகையில் அனுகூலங்கள், பொருளாதார மேன்மை போன்றவை ஏற்பட்டு குருவால் ஏற்படும் நெருக்கடிகள் விலகும் யோகம் உண்டு.

உடல் ஆரோக்கியம் 
உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். சோர்வு, கை, கால், மூட்டுகளில் வலி மற்றும் அஜீரண கோளாறு போன்றவற்றால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் ஈடுபட முடியாத நிலை உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களால் மன நிம்மதி குறைவு, தேவையற்ற மருத்துவ செலவுகள் ஏற்படும் என்பதால் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. உடற்பயிற்சி செய்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது மிகவும் நல்லது.
குடும்பம் பொருளாதார நிலை   
உங்களுக்கு குருபகவான் அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும் 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சரிப்பதாலும் குடும்பத்தில் நிம்மதி குறைவு, கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடு உண்டாகும். உற்றார் உறவினர்களும் தங்கள் பங்கிற்கு வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். நல்லதே செய்தாலும் அவற்றால் வீண் அவபெயர் தான் வரும். பணவரவுகளில் நெருக்கடிகள், நிலவுவதால் செலவுகளை சமாளிக்க கடன் வாங்க வேண்டியிருக்கும். சிலருக்கு எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை உண்டாகும். முடிந்தவரை அனைவரையும் அனுசரித்து செல்ல பழகி கொள்வது நல்லது.
கமிஷன்- ஏஜென்ஸி 
கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்றத் துறைகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபங்கள் குறையும். பணவிஷயத்தில் மிகவும் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே வீண் விரயங்களைத் தவிர்க்க முடியும். பிறரை நம்பி பணவிஷயத்தில் முன்ஜாமீன் கொடுத்தால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். ஏற்றுமதி இறக்குமதி தொடர்புடைய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத அனுகூலங்கள் கிடைக்கும்.
தொழில் வியாபாரம் 
தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். வங்கி கடன்களை திருப்பி செலுத்த முடியாத அளவிற்கு பொருளாதார நெருக்கடி உண்டாகும். வரவேண்டிய வாய்ப்புகள் எல்லாம் போட்டி பொறாமைகளால் தாமதப்படும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் எதிர்பாராத உதவிகளும், லாபங்களும் கிடைக்கும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.
உத்தியோகம் 
உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயரதிகாரிகளால் நிம்மதி குறையும். எந்த வேலை செய்தாலும் அதில் குற்றம் கண்டுபிடிப்பதே அவர்களின் வேலையாக இருக்கும். பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். தேவையற்ற வீண் பழிச்சொற்களை சுமக்க வேண்டியிருப்பதால் பணியில் நிம்மதி குறையும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சற்று சாதகமாக இருந்து வேலைபளு குறையும். நெருங்கியவர்களின் உதவியால் எதையும் சமாளிக்கும் திறன் உண்டாகும்.
அரசியல் 
அரசியல்வாதிகள் எதிலும் நிதானத்தை கடைப்பிடித்தால் மட்டுமே பதவிகளை தக்கவைத்துக் கொள்ள முடியும். தலைவர்களிடம் பேசும் போது சற்று நிதானமாக பேசுவது மூலம் நற்பலனை அடைய முடியும். மக்களின் தேவையறிந்து அவற்றை நிறைவேற்றினால் மட்டுமே அவர்களின் ஆதரவை தொடர்ந்து பெற முடியும். மேடை பேச்சுகளில் வேகத்தை குறைப்பது நல்லது. கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டிவரும்.
விவசாயிகள் 
பயிர் விளைச்சல் சுமாராக தான் இருக்கும். புழு பூச்சிகளின் தொல்லை மற்றும் நீர்வரத்து குறைவு போன்றவற்றால் எதிர்பார்த்த மகசூலைப் பெற முடியாது. பட்டபாட்டிற்கான பலனை அடைந்து ஒரளவுக்கு கடனை அடைக்க முடியும். பங்காளிகளிடம் தேவையற்ற கருத்து வேறுப்பாடு ஏற்படும். கால்நடைகளுக்கு நோய்கள் ஏற்படுவதால் எதிர்பாராத மருத்துவ செலவுகள் உண்டாகும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சி¬னைகள், மாதவிடாய் கோளாறு போன்றவற்றால் மருத்துவ செலவுகள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு வரன்கள் தட்டிப்போகும் என்றாலும் கடின முயற்சிக்கு பின் சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். புத்திரர்களால் சுப செலவுகள் உண்டாகும். குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. சேமிப்புகள் குறையும்.
மாணவ- மாணவியர்
கல்வியில் மந்தநிலை ஞாபகமறதி ஏற்படும். உடல்நிலை பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடுவதால் தகுந்த பாடங்களைப் படிக்க முடியாமல் போகும். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை வேறு பாதைக்கு அழைத்து செல்லும் என்பதால் எதிலும் கவனம் தேவை. தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் ஈடுபாடு காட்டினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் 05.11.2019 முதல் 04.01.2020
உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ல் குரு பகவான் சனி- கேது சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய காலமாகும். உடல் சோர்வு, மந்தமான நிலை காரணமாக அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியாத நிலை உண்டாகும். தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும் என்றாலும் எதையும் சமாளித்து அனுகூலப்பலன்களை பெறுவீர்கள். குடும்பத்தில் நிம்மதிக் குறைவுகள் தோன்றும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பால் பிரச்சினைகள் குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதப் பட்டாலும் உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது உத்தமம்.

குரு பகவான் பூராட நட்சத்திரத்தில் 05.01.2020 முதல் 07.03.2020
உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிக்கும் குரு பகவான் ராசியாதிபதி சுக்கிரனின் நட்சத்திரமான பூராடத்தில் சஞ்சரிப்பதால் சிறிது நெருக்கடி நிலவினாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். சர்ப்ப கிரகமான ராகு 2-லும் கேது 8-லும் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். முடிந்த வரை பேச்சை குறைப்பது நல்லது. உற்றார் உறவினர்களும் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது. குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். அசையும் அசையா சொத்துகளால் வீண் விரயங்களை எதிர்கொள்வீர்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சற்று தாமத நிலை உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். வரும் 24.01.2020 முதல் சனி 9-ல் சஞ்சரிக்க உள்ளதால் தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகி அனுகூலம் உண்டாகும்.  வரவேண்டிய வாய்ப்புகள் ஓரளவுக்கு வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது முலம் வீண் பிரச்சினைகளில் இருந்து தப்பித்து கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது குரு வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

குரு பகவான் உத்திராட நட்சத்திரத்தில் 08.03.2020 முதல் 29.03.2020
உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ல் குரு பகவான் சூரியன் நட்சத்திரமான உத்திராடத்தில் கேது சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடன் செயல்பட்டால் மருத்துவ செலவுகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. சனி பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் நிலவினாலும் எதையும் எதிர்கொள்ளும் வாய்ப்புகள் உண்டாகும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. வரும் வாய்ப்புகள் யாவும் கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் ஓரளவு அனுகூலமான பலனை அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்படும். வேலைபளுவை குறைத்து கொள்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் முழுமுயற்சியுடன் செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். குரு பகவான் வழிபாடு அம்மன் வழிபாடு செய்வது கஷ்டத்தை குறைக்கும்.

குரு பகவான் மகர ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 30.03.2020 முதல் 14.05.2020
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் மகர ராசியில் குரு பகவான் அதிசாரமாக சனி சேர்க்கை பெற்று சஞ்சாரம் செய்ய இருப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் எண்ணங்கள் ஈடேற கூடிய யோகம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கடன்கள் சற்றே குறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். சர்ப்ப கிரகமான ராகு 2-லும், கேது 8-லும் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றும் என்பதால் உடல் நலத்திலும் உணவு விஷயத்திலும் அக்கறை எடுத்து கொள்வது நல்லது. அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெறுவதால் சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகளால் சிறுசிறு பிரச்சினைகளை சந்திப்பீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறுவார்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். ராகு- கேதுவுக்கு பரிகாரம் செய்வது உத்தமம்.

குரு பகவான் வக்ர கதியில் 15.05.2020 முதல் 12.09.2020
குரு பகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் உங்கள் ராசிக்கு தர்மகர்மாதிபதி சனி 9-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதாலும்         ஓரளவுக்கு நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளுக்கு பின் அனுகூலங்களை பெறுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் அதிகரித்தாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறும் ஆற்றல் உண்டாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். சர்ப்ப கிரக சஞ்சாரத்தால் கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் மனநிம்மதி குறையாது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி விடுவீர்கள். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பார்த்த அனுகூலங்களைப் பெறுவதுடன் அபிவிருத்தியும் பெருகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்ணைப் பெறுவார்கள். அம்மன் வழிபாடு செய்வது நல்லது.

குரு பகவான் பூராட நட்சத்திரத்தில் 13.09.2020 முதல் 30.10.2020
உங்கள் ராசிக்கு குரு பகவான் 8-ல் சஞ்சரித்தாலும் ராசியாதிபதி சுக்கிரன் நட்சத்திரமான பூராடத்தில் சஞ்சரிப்பதும், சனி 9-ல் சஞ்சரிப்பதும் சற்று சாதகமான அமைப்பு என்பதால் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் சமாளித்துவிட முடியும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். சர்ப கிரகமான ராகு ஜென்ம ராசியிலும் கேது 7-லும் 23-09-2020 முதல் சஞ்சரிக்க இருப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. முடிந்தவரை உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படாது. தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது மூலம் அலைச்சல்களை குறைத்து கொள்ளலாம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுகளால் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

குரு பகவான் உத்திராட நட்சத்திரத்தில் 31.10.2020 முதல் 20.11.2020
உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ல் குரு பகவான் சூரியன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும் ஜென்ம ராசியில் ராகு 7-ல் கேது சஞ்சரிப்பதும் சற்று ஏற்ற இறக்கமான பலன்களை எற்படுத்தும் அமைப்பாகும். குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும் என்றாலும் பெரிய பிரச்சினைகள் ஏற்படாது. தேவையின்றி பிறர் விஷயத்தில் தலையீடு செய்வதை தவிர்ப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சனி 9-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். தேவையற்ற ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் மிகவும் கவனமுடன் நடந்து கொண்டால் நற்பலனை அடைய முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது, கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத திடீர் உதவிகள் கிடைக்கப் பெறுவதால் நெருக்கடிகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் சற்று அதிக கவனம் எடுக்க வேண்டிய காலமாகும். விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனமுடன் இருப்பது நல்லது. துர்கை அம்மனை வழிபாடு செய்வதால் வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

பரிகாரம்
ரிஷப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குரு, தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது.
உங்களுக்கு ராகு 2-லும் கேது 8-லும் சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள் பயன்படுத்துவது நல்லது. விநாயகரை வழிபடுவது செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது. கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை தானம் தருவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 5,6,8                         நிறம் - வெண்மை, நீலம்,                        கிழமை - வெள்ளி, சனி
கல் -  வைரம்                 திசை - தென்கிழக்கு,                  தெய்வம் - விஷ்ணு, லக்ஷ்மி


No comments: