Thursday, January 23, 2020

தனுசு ராசி -சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023


தனுசு ராசி - திருக்கணித  சனி பெயர்ச்சி பலன்கள் 2020  -2023
24-01-2020 முதல் 17-01-2023 வரை
பலன்கள், பரிகாரங்கள், அதிர்ஷ்ட குறிப்புகள் அடங்கியது

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
ஒழுக்கமும், நெறிதவறாத பண்பும், பெரியவர்களுக்கு கீழ்படிந்து நடக்கும் ஆற்றலும் கொண்ட தனுசு ராசி நேயர்களே! குரு பகவான் ராசியில் பிறந்த உங்களுக்கு இதுவரை உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்த சனி பகவான் திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் 17-01-2023 வரை குடும்ப ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு ஏழரை சனியில் ஜென்மச்சனி முடிவடைந்து பாதச்சனி தொடங்குகிறது. இதன் மூலம் ஏழரைச்சனியில் முதல் 5 வருடங்கள் முடிகிறது. உடல் ஆரோக்கிய ரீதியாக சற்று மந்த நிலை சோர்வு இருந்தாலும் எதிலும் துணிவுடன் செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள். கடந்த காலங்களில் இருந்த பெரிய பிரச்சினைகள் யாவும் படிப்படியாக மறைந்து முன்னேற்றம் உண்டாகும்.
பொருளாதார நிலை ஒரளவுக்கு சாதகமாக இருந்து உங்கள் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும் என்றாலும் முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. கொடுக்கல்-  வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். குடும்பத்தில் தேவையில்லாத கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது, உற்றார் உறவினர்களிடம் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம்.
தொழில், வியாபார ரீதியாக இருந்த தேக்க நிலை சற்று மறைந்து ஏற்றம் பெறுவீர்கள். அதிக முதலீடு கொண்ட செயல்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது-. சில போட்டிகளையும் மந்தமான சூழ்நிலைகளையும் சந்தித்தாலும் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய லாபத்தை பெற்று விடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளு அதிகப்படியாக இருக்கும். மற்றவர்கள் செய்ய வேண்டிய வேலையை கூட நீங்கள் செய்யும் சூழ்நிலை உண்டாகும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது.
சனி குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் குரு பகவான் குடும்ப ஸ்தானமான 2-ஆம் வீட்டில் 20-11-2020 முதல் 20-11-2021 வரை சஞ்சாரம் செய்ய இருப்பது அனுகூலமான அமைப்பு என்பதால் இக்காலங்களில் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரிங்கள் கைகூடும். ஏழரைச்சனி நடக்கும் இக்காலத்தில் வரும் 23-09-2020 வரை ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி இடையே அனுசரித்து செல்வது நல்லது. சர்ப கிரகமான ராகு உங்கள் ராசிக்கு 6-ல் 23-09-2020 முதல் 12-04-2022 முடியவும், கேது உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் வரும் 12-04-2022 முதல் 30-10-2023 முடிய சஞ்சரிக்க இருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் எதிர்பாராத பொருளாதார உதவிகள் கிடைத்து இருக்கும் நெருக்கடிகள் குறைந்து எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும்.

உடல்ஆரோக்கியம் 
உடல் ஆரோக்கியம் சற்று சாதகமாக இருக்கும் என்றாலும் அதிக அலைச்சலால் தூக்கமின்மை, உடல்நிலையில் சோர்வு, ஞாபகமறதி போன்றவை ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். குடும்பத்தில் உள்ளவர்களால் வீண் மருத்துவச் செலவுகள், மன நிம்மதி குறைவு ஏற்படும். புத்திர வழியில் சிறிது சுப செலவுகள் ஏற்படும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது மூலம் மன உளைச்சலைத் தவிர்க்கலாம்.
குடும்பம் பொருளாதார நிலை
கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்பதால் பேச்சில் கவனமாக இருப்பது நல்லது. சுப காரிய முயற்சிகள் தடையுடன் நிறைவேறும். பணவரவுகள் சுமாராக இருப்பதாலும் எதிர்பாராத உதவிகள் கிடைப்பதாலும் குடும்பத் தேவைகளை பூர்த்திசெய்து விட முடியும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதால் கடன்களை தவிர்க்கலாம்.
கொடுக்கல்- வாங்கல்
கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்றவற்றில் ஓரளவுக்கு லாபங்கள் கிடைக்கும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும் என்பதால் பெரிய முதலீடுகளை எதிலும் ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில்  நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் ஒரளவுக்கு சாதகமான நிலை ஏற்படும்.
தொழில், வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்கள் சிறுசிறு சங்கடங்களை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். எதிர்பார்த்த கடனுதவிகள் தாமதப்பட்டாலும் தக்க சமயத்தில் கிடைக்கும். அரசு வழியில் தேவையற்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். தொழலாளர்களின் ஒத்துழைப்பை பெற அவர்களை சற்று அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. எதிலும் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள்.
உத்தியோகம்
உத்தியோகஸ்தர்களுக்கு கடந்த கால பிரச்சினைகள் ஒரளவுக்கு குறையும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப் பெற்றாலும் பதவி உயர்வுக்காக அதிக நேரம் உழைக்க நேரிடும். உழைப்பிற்கான பலனை அடைய இடையூறு உண்டாகும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வதால் எதையும் சமாளித்து முன்னுக்கு வர முடியும். சிலருக்கு எதிர்பாராத இட மாற்றங்களால் குடும்பத்தை விட்டு பிரிந்து வெளியூர் செல்ல நேரிடும்.
அரசியல்
அரசியல்வாதிகளின் பெயர், புகழ், உயரும் என்றாலும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளை மக்களுக்கு நிறைவேற்றி கொடுப்பதில் சில தடைகளை சந்திக்க நேரிடும். தொண்டர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். பொருளாதாரம் உயரும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய வேண்டியிருந்தாலும் மக்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சுமாராகத் தான் இருக்கும். போதிய நீர்வரத்து இல்லாததால் பயிர்களை பாதுகாக்க அதிகம் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். போட்ட முதலீட்டினை எடுக்கவே நிறைய உழைப்பினை மேற்கொள்ள நேரிடும். கடந்த கால பிரச்சனைகள் சற்று குறைந்து முன்னேற்றம் அடைவீர்கள்.
கலைஞர்கள்
கலைஞர்களுக்கு வாய்ப்புகள் சுமாராக அமையும் என்றாலும் பட வசூல் தயாரிப்பாளர்களுக்கு சாதகமாக அமையும், பொருளாதார நிலை ஓரளவுக்கு திருப்தி அளிக்கும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் சிறுசிறு இடையூறுகள் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
பெண்கள்
பெண்களுக்கு தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடும். பொருளாதார நிலை ஓரளவுக்கு திருப்தியளிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது உத்தமம். சிலருக்கு சிறப்பான புத்திரபாக்கியம் அமையும். வீடு மனை வாங்கும் முயற்சிகள் சில தடைகளுக்குப் பின் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. பணிபுரிவோருக்கு வேலைபளு சற்று அதிகரித்து காணப்படும்.
மாணவ- மாணவியர்
கல்வியில் சற்று மந்தநிலை உண்டாகக் கூடிய காலம் என்பதால் அதிக கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. எவ்வளவு தான் கஷ்டப்பட்டு படித்தாலும் மனதில் வைத்துக்கொள்ள முடியாத அளவிற்கு மனம் அலைபாயும். தேவையற்ற பொழுதுபோக்குகளை தவிர்ப்பது நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் சொற்படி நடந்தால் அனுகூலமான பலன் கிடைக்கும்.

சனிபகவான் மகர ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 24-01-2020 முதல் 10-05-2020 வரை
சனிபகவான் உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானமாக செயல்படுவது நல்லது. ஜென்ம ராசியில் குரு, கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் உடல் நிலையில் சோர்வு உண்டாகும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுப்பாடுகள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். சுபகாரியங்கள் கைகூடும் வாய்ப்பு உண்டு. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை சமாளித்து முன்னேற வேண்டிய நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கும் சில நேரங்களில் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்றாலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஆஞ்சநேயரை வழிபடுவது, விநாயகரை வழிபடுவது உத்தமம்.
சனிபகவான் மகர ராசியில் வக்ர கதியில் 11-05-2020 முதல் 28-09-2020 வரை
சனி, குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் நன்மை தீமை கலந்த பலன்களை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது. எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் சமாளித்து ஏற்றம் பெற முடியும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலங்களை அடைவீர்கள். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்துச் செயல்பட்டால் லாபத்தினை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பினைப் பெற்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் கவனம் தேவை. கூட்டாளிகளாலும் தொழிலாளர்களாலும் வீண் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். ஆஞ்சநேயரை வழிபடுவது துர்க்கையம்மனை தரிசிப்பது உத்தமம்.
சனிபகவான் மகர ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 29-09-2020 முதல் 22-01-2021 வரை
சனிபகவான் உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். உங்கள் ராசிக்கு 6-ல் ராகு சஞ்சரிப்பதாலும், 20-11-2020 முதல் தன ஸ்தானமான 2-ல் குரு சஞ்சரிப்பதாலும் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுப்பாடுகள் விலகி அன்யோன்யம் அதிகரிக்கும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடும். நல்ல வரன்கள் தேடி வரும். உற்றார் உறவினர்களிடம் இருந்து எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்ற முடியும். தொழில் வியாபார ரீதியாகவும் முன்னேற்றங்கள் உண்டாகும். போட்டிகள் குறையும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வினைப் பெற்று வாழ்வில் முன்னேற்றம் அடைய முடியும். ஆஞ்சநேயரை வழிபடுவது விநாயகரை வழிபடுவது நல்லது.
சனிபகவான் மகர ராசியில் திருவோண நட்சத்திரத்தில் 23-01-2021 முதல் 23-05-2021 வரை
சனிபகவான் உங்கள் ராசிக்கு 2-ல் சந்திரன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் உடல் நிலை நன்றாக இருக்க உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படுவதில் இடையூறுகள் உண்டாகும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. இக்காலத்தில் உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 6-ல் ராகு சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையிலிருந்த நெருக்கடிகள் விலகி தாராள தன வரவால் கடன்கள் குறையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கை கூடும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எந்த விதமான பிரச்சினைகளையும் சமாளித்து லாபம் அடைய கூடிய ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப் பெற்றாலும் வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நல்லப் பெயரை எடுப்பீர்கள். முடிந்தவரை சனிக்கு பரிகாரம் செய்வது, விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம். 
சனிபகவான் மகர ராசியில் வக்ர கதியில் 24-05-2021 முதல் 10-10-2021 வரை
உங்கள் ராசிக்கு 2-ல் சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் ருண ரோக ஸ்தானமான 6-ல் ராகு சஞ்சரிப்பதாலும் எதையும் சமாளித்து வளமான பலன்களை அடையும் வாய்ப்பு உண்டாகும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகலாம் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றும், நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் சற்று நிதானமுடன் செயல்படுவது உத்தமம். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நிலவினாலும் போட்ட முதலீட்டிற்கு பங்கம் ஏற்படாது. பூர்வீக சொத்து விஷயத்தில் உள்ள வம்பு வழக்குகளில் அனுகூலப்பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு இருந்தாலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குரு வழிபாடு, சனிக் கிழமைகளில் விரதம் இருப்பது நல்லது.
சனிபகவான் மகர ராசியில் திருவோண நட்சத்திரத்தில் 11-10-2021 முதல் 17-02-2022 வரை
உங்கள் ராசிக்கு 2-ல் சனி திருவோண நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி இடையே உண்டாக கூடிய சிறு பிரச்சினைகளால் குடும்பத்தில் நிம்மதி குறைவு உண்டாகும். உங்கள் ராசியாதிபதி குரு 20-11-2020 முடிய 2-ல் சாதகமாக சஞ்சரிப்பதாலும் 6-ல் ராகு சஞ்சரிப்பதாலும் கடந்த காலங்களில் இருந்த நெருக்கடிகள் சற்று குறையும். பணவரவுகள் திருப்திகரமாக இருந்து குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் தடையின்றிப் பூர்த்தியாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்புகளால் வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். தொழில் ரீதியாக இருந்த தேக்கங்கள் விலகும் அமைப்பு, கடந்த கால வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும் நிலை உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து மன நிம்மதி உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல் குறையும். ஆஞ்சநேயரை வழிபடுவது பெருமாளை வழிபடுவது நல்லது.
சனிபகவான் மகர ராசியில் அவிட்ட நட்சத்திரத்தில் 18-02-2022 முதல் 28-04-2022 வரை
சனிபகவான் உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. பல்வேறு நெருக்கடிகள் நிலவினாலும் ராகு 6-ல் சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்றி விடுவீர்கள். நெருங்கியவர்களின் உதவி தக்க நேரத்தில் கிடைத்து உங்களது கஷ்டங்கள் குறையும். குரு 3-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும் என்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகலாம் என்பதால் உணவு விஷயத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நற்பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்களை எதிர்கொள்ள நேரிட்டாலும் அதன் மூலம் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் உங்களது மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.
சனிபகவான்அதிசாரமாக கும்ப ராசியில் அவிட்ட நட்சத்திரத்தில் 29-04-2022 முதல் 04-06-2022 வரை
சனிபகவான் அதிசாரமாக உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிப்பதாலும் 11-ல் கேது சஞ்சரிப்பதாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களது குடும்பத்தில் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழில் வியாபார ரீதியாக சிறப்பான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வுகள் மற்றும் எதிர்பார்த்த இட மாற்றங்கள் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த நெருக்கடிகள் குறையும். குரு 4-ல் சஞ்சரிப்பதால் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடையலாம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே ஒற்றுமையினை அடைய முடியும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். 5-ல் ராகு சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. தட்சிணாமுர்த்தியை வழிபடுவது, அஷ்டலட்சுமியை வழிபடுவது உத்தமம்.
சனிபகவான் வக்ர கதியில் 05-06-2022 முதல் 21-10-2022 வரை
சனிபகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதும் 4-ல் குரு, 5-ல் ராகு சஞ்சரிப்பதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்தினால் மட்டுமே அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றும் என்பதால் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டி வரும். தொழில் ரீதியாக வர வேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. பதவி உயர்வுகள் மற்றும் ஊதிய உயர்வுகள் சற்று தாமதப்படும். கேது 11-ல் இருப்பதால் பணவரவுகளில் சற்று அனுகூலமான பலனை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். நவகிரக வழிபாடு, குல தெய்வ வழிபாடு மேற்கொள்வது நல்லது.
சனிபகவான் மகர ராசியில் அவிட்ட நட்சத்திரத்தில் 22-10-2022 முதல் 17-01-2023 வரை
சனிபகவான் உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் நட்சத்திரமான அவிட்டத்தில் சஞ்சரிப்பதாலும் 4-ல் குரு சஞ்சரிப்பதாலும் வீண் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும் என்பதால் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. சர்ப்ப கிரகமான கேது 11-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக எதிர்பாராத உதவிகள் கிடைத்து எந்த வித நெருக்கடிகளையும் சமாளிக்கும் பலம் உண்டாகும். நெருங்கியவர்கள் செய்யும் உதவிகள் மூலம் உங்கள் பிரச்சினைகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்களுக்குப் பிறகே வெற்றி கிட்டும். உடல் நிலையில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியிருக்கும். எவ்வளவு தான் பாடுபட்டாலும் எதிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்துச் செயல்படவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகப்படியாக இருந்தாலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும், சனிக்குரிய பரிகாரங்களை செய்வது, தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 1,2,3,9          நிறம் - மஞ்சள், பச்சை               கிழமை - வியாழன், திங்கள்
கல் - புஷ்ப ராகம்    திசை - வடகிழக்கு                       தெய்வம் - தட்சிணா மூர்த்தி

No comments: