Thursday, January 23, 2020

கடக ராசி - சனி பெயர்ச்சி பலன்கள் 2020  -2023


கடக ராசி - திருக்கணித  சனி பெயர்ச்சி பலன்கள் 2020  -2023
24-01-2020 முதல் 17-01-2023 வரை
பலன்கள், பரிகாரங்கள், அதிர்ஷ்ட குறிப்புகள் அடங்கியது

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
சாந்தமான குணமும், சகிப்புத்தன்மையும், எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக் கூடிய ஆற்றலும் கொண்ட கடக ராசி நேயர்களே, சந்திரனின் ராசியில் பிறந்த உங்களுக்கு ஒரு ராசியில் நீண்ட நாட்கள் சஞ்சரிக்கும் கிரகமான சனி பகவான் தனது சொந்த வீடான மகர ராசியில் சமசப்தம ஸ்தாமான 7-ஆம் வீட்டில் திருக்கணித சித்தாந்தபடி வரும் 24-01-2020 முதல் 17-01-2023 வரை சஞ்சாரம் செய்ய உள்ளார். சனி 7-ல் சஞ்சாரம் செய்வது கண்டச்சனி என்பதால் ஏற்ற தாழ்வான பலன்கள் உண்டாகும். பண வரவுகள் சுமாராக இருக்கும். உடல் நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. களத்திர ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி இடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். ஜென்ம ராசி, 4, 9 ஆகிய ஸ்தானங்களை பார்வை செய்வதால் எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாதபடி சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் பாதிப்பு உண்டாகும். உற்றார் உறவினர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும், சக நண்பர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் முன் கோபத்தை குறைத்துக் கொள்வதும் நற்பலனை தரும். அசையும், அசையா சொத்துகளால் வீண் செலவுகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் மற்றவர்களுக்கு முன்ஜாமின், வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகளும், நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும் என்றாலும் சக ஊழியர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது.
சனி 7-ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் குருபகவான் 20-11-2020 முதல் 20-11-2021 வரை 7-ஆம் வீட்டிலும், 13-04-2022 முதல் 22-04-2023 வரை 9-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கவுள்ள காலங்கள் சகலவிதத்திலும் ஏற்றத்தை உண்டாக்கும் காலமாக உங்களுக்கு இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபகாரியங்கள் எளிதில் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். மணமானவர்களுக்கு புத்திர பாக்கியம் அமையும். பொருளாதார நிலை சிறப்பாக அமைவதால் அசையும் அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். உற்றார்- உறவினர்களிடம் சுமுகமான நிலை நிலவும். எடுக்கும் முயற்சிகளின் வெற்றி கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் நல்ல லாபம் கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். வெளியூர், வெளிநாடுகள் மூலம் அனுகூலம் உண்டாகும். சர்ப கிரகமான கேது உங்கள் ராசிக்கு 6-ல் வரும் 01-09-2020 வரையும், ராகு 11-ல் வரும் 23-09-2020 முதல் 12-04-2022 வரையும் சஞ்சரிக்க இருப்பதும் உங்களது பலத்தை அதிகரிக்கும் அமைப்பு என்பதால் இக்காலங்களில் எதிர்பாராத அனுகூலங்கள் உண்டாகும்.

உடல்ஆரோக்கியம் 
உடல் நிலையில் சோர்வு மந்தமான நிலை உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் செயல்படுவது நல்லது. மனைவி, மக்களுக்கும் உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை உண்டாக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். குடும்பத்தில் உண்டாகும் பிரச்சினைகள் மன குழப்பத்தை ஏற்படுத்தும் என்றாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது.
குடும்பம் பொருளாதாரநிலை
பொருளாதாரநிலை திருப்தியளிப்பதாக இருக்கும். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் வாய்ப்பு அமையும். பொன், பொருள் சேரும். திருமண சுப காரியங்கள் சிறு தடைக்கு பின்பு கைகூடும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்- உறவினர்களிடையே விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது.
கொடுக்கல்- வாங்கல்
கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்றவற்றில் கவனத்துடன் செயல்பட்டால் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது முன்ஜாமின் கொடுப்பதில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
தொழில், வியாபாரம்
தொழில், வியாபாரம் நல்ல முறையில் நடைபெறும். நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உயர்வினை சந்திப்பீர்கள். வேலையாட்களையும் கூட்டாளிகளையும் அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். வெளிநாட்டுத் தொடர்புகளால் ஓரளவுக்கு முனனேற்றமானப் பலன்கள் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது மிகவும் கவனம் தேவை.
உத்தியோகம்
உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப் பெற்றாலும் வேலைபளு அதிகரிப்பதால் அதிக நேரம் உழைக்க வேண்டியிருக்கும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும், அதிகாரிகளின் ஆதரவுகளும் மனமகிழ்ச்சியை உண்டாக்கும். சக நண்பர்களை அனுசரித்து செல்வது மூலம் எதை சமாளிக்க முடியும். வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களுக்கு சிறு தடைகளுக்கு பின் அனுகூலம் உண்டாகும்.
அரசியல்   
சிறுசிறு சோதனைகளை சந்தித்தாலும் பதவிக்கு பங்கம் வராது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதால் மக்களின் ஆதரவு சிறப்பாகவே அமையும். மேடை பேச்சுகளில் சற்று கவனமுடன் இருப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலைகள் உருவாகி அலைச்சல் அதிகரிக்கும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சுமாராக இருக்கும். பட்ட பாட்டிற்கான பலனைப் பெற சற்று எதிர்நீச்சல் போட வேண்டி வரும். பணவரவுகளும் சுமாராகத் தானிருக்கும். புதிய பூமி மனை போன்றவற்றால் ஒரளவுக்கு அனுகூலம் உண்டாகும். கால்நடைகளை வாங்குவீர்கள். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது.
கலைஞர்கள்
தொழில் ரீதியாக சில போட்டிகளை சந்தித்தாலும் உங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தடைபடாது. எதிர்பார்க்கும் வாய்ப்புகளுக்காகக் காத்திருக்காமல் கிடைப்பதை பயன்படுத்திக் கொள்வது நல்லது. வெளிநாடு பயணங்களால் சற்றே அலைச்சல்கள் ஏற்பட்டாலும் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள முடியும். மறைமுக எதிர்ப்புகளும் இருக்கும்.
பெண்கள்
கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. மணமாகாத மங்கையருக்கு சில தடைகளுக்குப்பின் சுபகாரியம் நடந்தேறும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை திருப்தியளிக்கும். பொன், பொருள் ஆடை ஆபரணம் சேரும். நவீன பொருட் சேர்க்கைகள் உண்டாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது உத்தமம்.
மாணவ- மாணவியர்
கல்வியில் முழு ஈடுபாடுட்டுடன் செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறமுடியும். முடிந்தவரை தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் மானிய உதவிகள் தாமதப்படும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும்.

சனிபகவான் மகர ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 24-01-2020 முதல் 10-05-2020 வரை
சனிபகவான் உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன் நட்சத்திரமான உத்திராடத்தில் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, கணவன்- மனைவி இடையே சற்று விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உடல் நிலையில் சற்று கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களால் தேவையற்ற செலவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றாலும் கேது 6-ல் சஞ்சரிப்பதால் சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் நிதானமாக செயல்பட்டால் நல்லது நடக்கும். தொழில், வியாபாரத்தில் சாதகமான பலன்கள் ஏற்படும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது சிறப்பு. வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் கிட்டும். துர்க்கை வழிபாடு, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது நல்லது.
சனிபகவான் மகர ராசியில் வக்ர கதியில் 11-05-2020 முதல் 28-09-2020 வரை
சனி பகவான் 7-ல் வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும், கேது 6-ல் சஞ்சரிப்பதாலும் எல்லா வகையிலும் அனுகூலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். பண வரவுகள் தாராளமாக அமைவதால் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் வீண் செலவுகளை தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். சுப காரியங்கள் கைகூடும். வெளிவட்டாரத் தொடர்புகளால் அனுகூலம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களின் கனவுகள் நினைவாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் தோன்றும் என்பதால் பேச்சில் நிதானம் தேவை. பயணங்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். துர்க்கையம்மனை வழிபடுவது மிகவும் உத்தமம்.
சனிபகவான் மகர ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 29-09-2020 முதல் 22-01-2021 வரை
சனிபகவான் உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் எதையும் சாமாளித்து ஏற்றங்களை அடைய முடியும். ராகு 11-ல் சஞ்சரிப்பதும் வரும் 20-11-2020 முதல் குரு 11-ல் சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் ஏற்றமானப் பலன்கள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கடன்கள் படிப்படியாக குறையும். சுபகாரியங்கள் தடபுடலாக கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். வெளியூர் செல்ல கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் உயர்வுகள் கிடைக்கும். கேது 5-ல் சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருந்தால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புத்திரர்கள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். ஆஞ்சநேயர் வழிபாடு செய்வதும் விநாயகர் வழிபாடு செய்வதும் மிகவும் உத்தமம்.
சனிபகவான் மகர ராசியில் திருவோண நட்சத்திரத்தில் 23-01-2021 முதல் 23-05-2021 வரை
சனிபகவான் ராசியாதிபதி சந்திரன் நட்சத்திரத்தில் 7-ல் சஞ்சரிப்பதால் ஒரளவுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். கணவன்- மனைவி இடையே வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. இக்காலத்தில் தனகாரகன் குரு 7-லும், ராகு 11-லும் சஞ்சரிப்பது மிகவும் சாதகமான பலனை உண்டாக்கும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகள், பொருளாதார ரீதியாக மேன்மைகள் உண்டாகும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில், வியாபாரத்தில் கடந்த காலங்களில் இருந்த சோதனைகள் அனைத்தும் விலகி அபிவிருத்தியும் லாபமும் பெருகும். உத்தியோகத்தில் உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் வேலைப்பளு குறையும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளும் தடையின்றிக் கிட்டும். ஜென்ம ராசிக்கு 5-ல் கேது சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பெருமாள் வழிபாடு செய்வதும் விநாயகர் வழிபாடு செய்வதும் மிகவும் உத்தமம்.
சனிபகவான் மகர ராசியில் வக்ர கதியில் 24-05-2021 முதல் 10-10-2021 வரை
உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிக்கும் சனிபகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் சர்ப்பகிரகமான ராகு 11-ல் சஞ்சரிப்பதாலும் பணம் தாராளமாக வருவதால் கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றிக் கிடைக்கும். செய்யும் தொழில் வியாபாரத்தில் மேன்மைகளும் கூட்டாளிகளால் லாபங்களும் உண்டாகும். புதிய நவீன கருவிகளை வாங்கிப் போடுவீர்கள். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவற்றால் அனுகூலங்கள் ஏற்படும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் இல்லை. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் எளிதில் கைகூடும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர்பார்த்த உயர்வுகளைப் பெற்று முன்னேற முடியும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிக்கும். கடன்களும் குறையும். விநாயகரை வழிபடுவது நல்லது.
சனிபகவான் மகர ராசியில் திருவோண நட்சத்திரத்தில் 11-10-2021 முதல் 17-02-2022 வரை
சனிபகவான் ராசியாதிபதி சந்திரன் நட்சத்திரமான திருவோணத்தில் சஞ்சரிப்பதாலும் ராகு 11-ல் சஞ்சரிப்பதாலும் எதிர்பாராத தனவரவுகள் ஏற்பட்டு குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். வரும் 20-11-2021 முதல் குரு 8-ல் சஞ்சரிக்க இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.  குடும்பத்திலுள்ளவர்கள் சற்று சாதகமாக இருப்பதால் எதையும் சமாளிக்க முடியும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்து உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நல்ல அனுகூலங்களை பெற முடியும். தொழில் வியாபாரம் ஒரளவுக்கு முன்னேற்றமளிப்பதாக இருந்தாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் கவனம் தேவை. தட்சிணாமூர்த்தியை வழிபடுவதும் விநாயகரை வழிபடுவதும் நல்லது.
சனிபகவான் மகர ராசியில் அவிட்ட நட்சத்திரத்தில் 18-02-2022 முதல் 28-04-2022 வரை
சனிபகவான் 7-ல் செவ்வாய் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும் குரு 8-ல் சஞ்சரிப்பதாலும் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது சிறப்பு. குடும்பத்தில் விட்டுக் கொடுத்து நடப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுவதற்கு முன் சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. வாழ்க்கை வண்டிச்சக்கரம் போல நன்மை தீமைகள் கலந்ததாகவே இருக்கும். சர்ப்பகிரகமான ராகு 11-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எந்த வித நெருக்கடிகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது முன்ஜாமின் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்றே மந்த நிலை நிலவினாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உடன்பணிபுரிபவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுவதும், நவகிரகங்களில் உள்ள கேதுபகவானை வழிபடுவதும் நல்லது.
சனிபகவான்அதிசாரமாக கும்ப ராசியில் அவிட்ட நட்சத்திரத்தில் 29-04-2022 முதல் 04-06-2022 வரை
சனிபகவான் அதிசாரமாக உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருப்பது உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும் என்றாலும் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தன காரகன் குரு பாக்கிய ஸ்தானமான 9-ல் ஆட்சி பெற்று சஞ்சரிக்க இருப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருந்து உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். தடைப்பட்ட சுப காரியங்கள் அனைத்தும் கை கூடி மகிழ்ச்சி அளிக்கும். பூர்வீக சொத்துக்களால் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கும் பதவி உயர்வுகளும் கிட்டும். உங்களது கனவுகள் அனைத்தும் நிறைவேறி மகிழ்ச்சி அளிக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் கிட்டும். கடன்கள் யாவும் குறையும். விநாயகரை வழிபாடு செய்வது உத்தமம்.
சனிபகவான் வக்ர கதியில் 05-06-2022 முதல் 21-10-2022 வரை
சனிபகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதாலும்  உடல் நிலையில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாக விலகும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரித்து குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதாரம் உயர்வடையும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்- வாங்கல் நல்ல நிலையில் நடைபெற்று லாபம் பெருகும். விரோதிகளும் நண்பர்களாகச் செயல்படுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். தொழில் வியாபார ரீதியாக நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டாகும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலம் கிட்டும். கடன்கள் குறையும். பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த ஊதிய உயர்வு பதவி உயர்வுகள் போன்ற யாவும் கிடைக்கும். ஆஞ்சநேயர் மற்றும் பெருமாள் வழிபாடு செய்வது நல்லது.
சனிபகவான் மகர ராசியில் அவிட்ட நட்சத்திரத்தில் 22-10-2022 முதல் 17-01-2023 வரை
சனிபகவான் உங்கள் ராசிக்கு 7-ல் அவிட்ட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் நெருங்கியர்களை அனுசரித்து செல்வது நல்லது. உங்கள் ராசிக்கு 4-ல் கேது, 10-ல் ராகு சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறு உண்டாகும். குரு 9-ல் சஞ்சரிப்பதால் கடந்த கால பிரச்சினைகள் அனைத்தும் விலகி எல்லா வகையிலும் மேன்மையான பலன்களை அடைவீர்கள். மங்களகரமான நிகழ்ச்சிகள் நிறைவேறி குடும்பத்தில் மனநிறைவை உண்டாக்கும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை நிலவும். வீடுமனை, வண்டி வாகனம் வாங்கும் யோகம் அமையும். பொன்பொருள் சேரும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக அமையும். எதி£பாராத திடீர் தனவரவுகள் ஏற்பட்டு செல்வம், செல்வாக்கும் உயரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை ஏற்படும். போட்டிகளும் மறைமுக எதிர்ப்புகளும் குறையும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். துர்க்கையம்மனையும் ஆஞ்சநேயரையும் வழிபடுவது உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 1,2,3,9                   நிறம் - வெள்ளை, சிவப்பு                கிழமை - திங்கள், வியாழன்
கல் -  முத்து                       திசை - வடகிழக்கு                தெய்வம் - வெங்கடாசலபதி


No comments: