Thursday, January 23, 2020

மகர ராசி -  சனி பெயர்ச்சி பலன்கள் 2020  -2023


மகர ராசி - திருக்கணித  சனி பெயர்ச்சி பலன்கள் 2020  -2023
24-01-2020 முதல் 17-01-2023 வரை
பலன்கள், பரிகாரங்கள், அதிர்ஷ்ட குறிப்புகள் அடங்கியது

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
இன்ப துன்பங்களை சமமாக ஏற்றுக் கொள்ளகூடிய மனத்தெளிவு கொண்ட மகர ராசி நேயர்களே, சனியின் ராசியில் பிறந்த உங்களுக்கு இதுநாள் வரை 12-ல் சஞ்சரித்த சனி பகவான் திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் 17-01-2023 வரை ஜென்ம ராசியில் சஞ்சரிக்க உள்ளதால் உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்ம சனி தொடங்குகிறது. இதனால் நீங்கள் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். உணவு விஷயத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களையும் மற்றவர்கள் தவறாக எடுத்து கொள்வார்கள் என்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது சிறப்பு. ஏழரைச்சனி நடைபெற்றாலும் சனி உங்கள் ராசியாதிபதி என்பதால் பொருளாதார நிலை ஓரளவுக்கு சாதகமாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். சிலருக்கு எதிர்பாராத திடீர் செலவுகளால் வீண் விரயங்கள் ஏற்பட்டு கடன் வாங்கும் நிலை ஏற்படும். கணவன்- மனைவி இடையே வாக்கு வாதங்கள் அதிகரித்தாலும் ஒற்றுமை குறையாது. தொழில் வியாபார ரீதியாக தேக்கமான நிலை பெருளாதார ரீதியாக நெருக்கடி இருந்தாலும் எதையும் சாமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். அதிக முதலீடு கொண்ட செயல்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. அப்படி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் உங்கள் பெயரில் செய்யாமல் மனைவி பெயரில் செய்வது சற்று நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார நிலை சற்று சுமாராக இருந்தாலும் வேலைபளு அதிகப்படியாக இருக்கும். உழைப்பிற்கான பலனை அடைய முடியாது. மேலதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானமாக இருப்பது, கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது.
சனி ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஆண்டு கோளான குருபகவான் உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் (கும்ப ராசியில்) 06-04-2021 முதல் 20-06-2021 வரையும் அதன் பின்பு 20-11-2021 முதல் 13-04-2022 வரை சஞ்சரிக்க உள்ள காலங்களில் உங்களது பொருளாதார நிலை மிகவும் சாதகமாக அமைந்து எந்தவிதமான பிரச்சினைகளையும் சமாளிக்கும் பலம் உண்டாகும், திருமணம் போன்ற சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சர்ப கிரகமான ராகு உங்கள் ராசிக்கு 6-ல் வரும் 01-09-2020 வரையும், கேது 11-ல் வரும் 23-09-2020 முதல் 12-04-2022 வரையும் சஞ்சரிக்க இருப்பதன் மூலம் ஏழரைச்சனி நடைபெற்றாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் எதிர்கொள்ளும் திறன் உண்டாகும். பொதுவாக பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது மிகவும் நல்லது. பணவிஷயங்களில் நம்பியர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் உண்டாகும். நெருங்கியவர்களுக்கு உடல்நிலை பாதிப்புகள் உண்டாகி உங்களின் மனநிம்மதி குறையும். தூக்கமின்மை, சோர்வு, அஜீரணக் கோளாறுகள் ஏற்படும். சிலருக்கு வயிறு சம்பந்தமான பாதிப்புகளால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். முன்கோபத்தைக் குறைப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.
குடும்ப பொருளாதார நிலை
கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் ஏற்படும் என்பதால் முடிந்த வரை அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. எந்தவொரு செயலிலும் பிறர் மனதை புண்படுத்தாது இருப்பதும் நற்பலனை உண்டாக்கும். உற்றார்- உறவினர்களால் நிம்மதியற்ற சூழ்நிலை காணப்படும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். சுப காரிய முயற்சிகளில் தடைகளுக்கு பின் சாதகப்பலன் உண்டாகும்.
கொடுக்கல்- வாங்கல்
பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும். கொடுத்த கடன்களை சில தடைகளுக்குப் பின்பு தான் திரும்பப் பெற முடியும். அதே போல் பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்றவற்றில் ஓரளவுக்கு லாபத்தை அடைய முடியும்.
தொழில், வியாபாரம்
செய்யும் தொழில் வியாபாரத்தில் நிறைய போட்டிகளை சந்திக்க வேண்டி வரும். இதனால் வரவேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப் போகும். கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல் பாட்டினால் அபிவிருத்தி குறையும். தொழிலாளர்கள் தங்கள் பங்கிற்கு வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். அதிக முதலீடு கொண்ட செயல்களில் கவனமுடன் செயல்படுவது, அப்படி செய்ய வேண்டும் என்றால் உங்கள் பெயரில் செய்யாமல் இருப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்க தாமதம் உண்டாகும்.
உத்தியோகம்
உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாகி வெளியூர் செல்ல நேரிடும். பொறுப்புகள் அதிகமாகி அதிக நேரம் பணிபுரிய நேரிடுவதால் உடல்நிலை சோர்வடையும். அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடுவதால் அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது.
அரசியல்
உடனிருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் தடைகள் ஏற்படும். மக்களின் ஆதரவை தக்க வைத்துக் கொள்ள அரும்பாடு படவேண்டி இருக்கும். கட்சிப் பணிகளுக்காக நிறைய வீண் செலவுகளும் உண்டாகும். புகழ், பெருமை மங்கக்கூடிய காலமாகும். எடுக்கும் காரியங்களை சரிவர செய்து முடிக்காதபடி இடையூறுகள் உண்டாகும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. போதிய நீர் இன்மையால் பயிர்கள் விளைச்சல் பாதிக்கும். போட்ட முதலீட்டினை எடுக்க முடியாது. பங்காளிகளிடம் தேவையற்ற கருத்து வேறுப்பாடுகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் மானிய உதவிகள் கிடைப்பதில் தாமத நிலை ஏற்படும். வங்கிக்கடன்கள் அதிகரிக்கும். கால் நடைகளால் எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும்.
கலைஞர்கள்
புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் நிறைய போட்டிகள் உண்டாகும். அதிக நேரம் உழைப்பதால் உடல் அசதி, சோர்வு உண்டாகும். வரவேண்டிய சம்பளத் தொகைகள் தாமதப்பட்டாலும் கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கும், எந்த வாய்ப்புகளையும் தவறவிடாமல் பயன்படுத்தி கொள்வது நல்லது. அடிக்கடி வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகளும் அதன் மூலம் ஒரளவுக்கு பொருளாதார மேன்மையும் உண்டாகும்.
பெண்கள்
உடல்நிலையில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள், கர்ப்பபை கோளாறுகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். விட்டுக் கொடுத்து நடந்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். புத்திர வழியில் சிறுசிறு நிம்மதிக் குறைவுகள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகள் சில தடைகளுக்குப் பின் நிறைவேறும். வீடு, மனை வாங்கும் முயற்சிகளால் கடன்கள் ஏற்படும்.
மாணவ- மாணவியர்
கல்வியில் மந்த நிலை ஏற்படக் கூடிய காலம் என்பதால் முழு ஈடுபாட்டினைச் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த அளவிற்கு மதிப்பெண்களைப் பெற முடியாவிட்டாலும் தேர்ச்சியடையும் அளவிற்கு மதிப்பெண்கள் கிடைக்கும். பெற்றோர் ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். அரசு வழியில் கிடைக்க வேண்டிய மானியத் தொகைகள் சற்று தாமதப்படும். தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்க்கவும்.

சனிபகவான் மகர ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 24-01-2020 முதல் 10-05-2020 வரை
ஜென்ம ராசியில் சனி பகவான் சூரியன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடைபெற உள்ளதால் உடல் நிலையில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற வீண் பிரச்சினைகளும், சங்கடங்களும் ஏற்படும். இக்காலங்களில் குரு 12-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையில் நெருக்கடிகள், எதிர்பாராத வீண் செலவுகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் தேவையற்ற பயணங்களையும் பெரிய முதலீடுகளையும் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைப் பளுவை குறைத்துக் கொள்ள முடியும். ராகு 6-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினை பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் செய்யும் உதவிகள் மூலம் உங்கள் பிரச்சினைகள் குறையும். பெருமாள் வழிபாடு செய்வது, வியாழக்கிழமை விரதம் இருந்து தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
சனிபகவான் மகர ராசியில் வக்ர கதியில் 11-05-2020 முதல் 28-09-2020 வரை
குரு, சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று நிதானமாக செயல்பட்டால் ஓரளவுக்கு சாதகமான பலனை அடைவீர்கள். தேவையற்ற அலைச்சல் டென்ஷன் இருக்கும் என்பதால் எதிலும் எதிர்நீச்சல் போட்டே சமாளிக்க வேண்டியிருக்கும். சர்ப கிரகமான ராகு 6-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் எதிர்பாராத செலவுகள் உண்டாகும் என்றாலும் உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். பொருளாதார நிலையானது சற்று சுமாராக இருக்கும் என்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். பெரிய முதலீடுகளில் செய்யவிருக்கும் காரியங்களில் மிகவும் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உயர்வுக்கு வழிவகுக்கும். விநாயகர் வழிபாடு செய்வது, குரு பகவானை வழிபடுவது நல்லது.
சனிபகவான் மகர ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 29-09-2020 முதல் 22-01-2021 வரை
உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் சனிபகவான் சூரியன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக் கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. சர்ப்ப கிரகமான கேது 11-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். பணவரவுகள் ஓரளவுக்கு திருப்தியளிப்பதாக இருக்கும். குரு 20-11-2020 முதல் ஜென்ம ராசியில் சஞ்சரித்து 7-ஆம் வீட்டை பார்ப்பதால் திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் மிகவும் கவனமுடன் செயல்படுவது உத்தமம். தொழில், வியாபாரத்தில் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றத்தை பெறுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடைகளுக்கு பின் கிட்டும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆஞ்சநேயரை வழிபடுவது, துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.
சனிபகவான் மகர ராசியில் திருவோண நட்சத்திரத்தில் 23-01-2021 முதல் 23-05-2021 வரை
ஜென்ம ராசியில் சனி சந்திரன் நட்சத்திரத்தில் குரு சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. சுப காரிய முயற்சிகளில் சற்று சாதகமான பலன் கிடைக்கும். கேது 11-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை ஓரளவுக்கு திருப்தியளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் மிகவும் கவனமுடன் செயல்படுவதே நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். பெரிய முதலீடுகளில் செய்யும் காரியங்களில் மிகவும் கவனமுடன் செயல்படுவது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகக் கூடிய காலம் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. முன் கோபத்தையும். பேச்சையும் குறைத்துக் கொள்வது மிகவும் உத்தமம். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். அதிகாரிகளின் ஆதரவுகள் உங்களுக்கு சற்று மன நிம்மதியை தரும். விநாயகரை வழிபடுவது, துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.
சனிபகவான் மகர ராசியில் வக்ர கதியில் 24-05-2021 முதல் 10-10-2021 வரை
ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும், குரு அதிசாரமாக 2-ல் சஞ்சரிப்பதாலும் கேது 11-ல் சஞ்சரிப்பாதாலும் கடந்த காலப் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் தேடி வரும். பொன் பொருள் சேரும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். ஆஞ்சநேயரை வழிபடுவது, அஷ்டலட்சுமியை வழிபடுவது உத்தமம்.
சனிபகவான் மகர ராசியில் திருவோண நட்சத்திரத்தில் 11-10-2021 முதல் 17-02-2022 வரை
ஜென்ம ராசியில் சனிபகவான் சந்திரன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. கேது 11-ல் சஞ்சரிப்பதாலும், 20-11-2021 முதல் குரு தன ஸ்தானமான 2-ல் சஞ்சரிப்பதாலும் ஒரளவுக்கு ஏற்றமிகுந்த பலன்களைப் பெற முடியும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பரச் செலவுகளை சற்றே குறைத்துக் கொண்டால் கடன்கள் உண்டாவதை தவிர்க்க முடியும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பல பொது நலக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் அதன் மூலம் லாபத்தை அடைய முடியும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலப் பலனை அடைவீர்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். தொழில் வியாபாரத்தில் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றத்தை அடைவீர்கள். கூட்டாளிகளால் ஒரளவுக்கு சாதகப் பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனத்தை செலுத்துவது நல்லது. விநாயகரை வழிபடுவது, உக்ர தெய்வங்களை வழிபடுவது உத்தமம்.
சனிபகவான் மகர ராசியில் அவிட்ட நட்சத்திரத்தில் 18-02-2022 முதல் 28-04-2022 வரை
சனிபகவான் செவ்வாய் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது உணவு விஷயத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது சிறப்பு. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். குரு தன ஸ்தானமான 2-ல் சஞ்சரிப்பதால் பண வரவுகளில் இருந்த தேக்கங்கள் குறைந்து தாராள பண வரவு ஏற்படும். எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் எதையும் சமாளிக்க முடியும். கடன்களும் குறையும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்கள் ஏற்படும். சிலருக்கு அசையும் அசையா சொத்துகளால் சுப செலவுகள் தோன்றும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த பொருட் தேக்கங்கள் விலகி லாபகரமான நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணி புரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பெருமாளை வழிபடுவது, சிவனை வழிபடுவது உத்தமம்.
சனிபகவான்அதிசாரமாக கும்ப ராசியில் அவிட்ட நட்சத்திரத்தில் 29-04-2022 முதல் 04-06-2022 வரை
உங்கள் ராசிக்கு சனி அதிசாரமாக 2-ல் சஞ்சரிப்பதும், 3-ல் குரு, 4-ல் ராகு 10-ல் கேது சஞ்சரிப்பதும் உடல் ஆரோக்கியத்தில் வயிறு பிரச்சினை, அஜீரண கோளாறு ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே உண்டாகக் கூடிய தேவையற்ற வாக்குவாதங்களால் மன நிம்மதி குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் மந்தமான நிலை நிலவும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன்கள் இல்லாமல் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனம் தேவை. நெருங்கியவர்களை பிரிய நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இருப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. இறை வழிபாடுகளில் மனதை ஈடுபடுத்தி கொள்வது வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளை குறைக்கும். நவகிரக வழிபாடு செய்வது உத்தமம்.
சனிபகவான் வக்ர கதியில் 05-06-2022 முதல் 21-10-2022 வரை
சனிபகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதும், 3-ல் குரு, 4-ல் ராகு, 10-ல் கேது சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகள் ஏற்படும். பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் சமாளிக்கும் ஆற்றல் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் மந்தநிலைகள் நிலவும். தொழிலாளர்களிடமும், நண்பர்களிடமும் விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். எடுக்கும் எந்த காரியத்தையும் கஷ்டப்பட்டே முடிக்க வேண்டியிருக்கும். உத்தயோகஸ்தர்கள் இக்காலங்களில் உயர்வுகளை எதிர்பார்க்க முடியாது. தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது அலைச்சல்களைக் குறைக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது மூலம் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். தேவையற்ற நபர்களின் சகவாசத்தால் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். விநாயகரை வழிபடுவது, குரு தெய்வத்தை வழிபடுவது உத்தமம்.
சனிபகவான் மகர ராசியில் அவிட்ட நட்சத்திரத்தில் 22-10-2022 முதல் 17-01-2023 வரை
சனிபகவான் ஜென்ம ராசியில் செவ்வாய் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், 3-ல் குரு, 4-ல் ராகு, 10-ல் கேது சஞ்சரிப்பதாலும் நீங்கள் எதிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலமாகும். உடல் நிலையில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் எதிலும் சிக்கனத்துடன் இருப்பது நல்லது. சுகவாழ்வு, சொகுசு வாழ்வு பாதிக்கும். அசையும் அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்கு பின் வெற்றி கிட்டும். சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களின் கனவுகள் சில தடைகளுக்குப் பின் நிறைவேறும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையீடு செய்யாது இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். தூர பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. நவகிரக வழிபாடு செய்வது உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் -  5,6,8      நிறம் - நீலம், பச்சை            கிழமை - சனி, புதன்
கல் - நீலக்கல்            திசை - மேற்கு                          தெய்வம் - விநாயகர்

No comments: