Wednesday, April 8, 2020

மிதுனம் - சார்வரி வருட பலன்கள் 2020-2021


மிதுனம் - சார்வரி வருட பலன்கள் 2020-2021
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
பிறரை எளிதில் வசப்படுத்தக்கூடிய பேச்சாற்றலும், சிறந்த தெய்வ பக்தியும் கொண்ட மிதுன ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த சார்வரி வருடத்தில் பொன்னவன் என போற்றப்படும் குருபகவான் வரும் ஆனி 15 முதல் கார்த்திகை 5 வரை (30-06-2020 முதல் 20-11-2020) 7-ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளதால் உங்களது பொருளாதார நிலை சிறப்பாக இருந்து குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர் நீச்சல் போட்டாவது ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். வேலையாட்களையும், கூட்டாளிகளையும் அனுசரித்து சென்றால் தொழிலில் சாதகமான பலனை அடைய முடியும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் ஒரு புறம் கிடைத்தாலும் வேலைபளு சற்று அதிகப்படியாக இருக்கும். உடல் சோர்வு காரணமாக வேலையில் உங்கள் கவனத்தை செலுத்த முடியாத அளவிற்கு தேவையற்ற இடையூறுகள் உண்டாகும்.
திருக்கணிதப்படி இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரித்து அஷ்டம சனி நடப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவினை உண்டாக்கும். உங்களது உடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது மிகவும் நல்லது. சனி உங்கள் ராசியாதிபதி புதனுக்கு நட்பு கிரகம் என்பதால் பெரிய கெடுதல்களை ஏற்படுத்தாது.
சர்ப்ப கிரகமான ராகு ஜென்ம ராசியிலும் கேது 7-லும் வரும் புரட்டாசி 7 (23-09-2020) வரை சஞ்சாரம் செய்வதால் கணவன்- மனைவி இடையே தேவையில்லாத கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வது பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது. அதன் பின்பு ஏற்படும் ராகு - கேது பெயர்ச்சியால் புரட்டாசி 7 (23-09-2020) முதல் கேது 6-ல், ராகு 12-ல் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் உள்ள சிறுசிறு பிரச்சினைகள் கூட முழுமையாக விலகி கணவன்- மனைவி இடையே ஒற்றுமை உண்டாகும்.
உங்கள் ராசிக்கு ஆண்டு கோளான குரு பகவான் வரும் ஆனி 15 (30-06-2020) முடியவும், அதன் பின்பு கார்த்திகை 5-ஆம் தேதி (20-11-2020) முதல் 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் பண விஷத்தில் சற்று சிக்கனத்துடன் இருப்பது நல்லது. குரு 8-ல் சஞ்சரிக்கும் போது சனி சேர்க்கை பெற்று சஞ்சரிக்க இருப்பதால் நீசபங்க ராஜ யோகம் ஏற்படுவதால் உங்களுக்கு எதையும் சமாளிக்கும் பலத்தை அடைவீர்கள்.

உடல் ஆரோக்கியம்
உங்களுக்கு அஷ்டம சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்வது வேலைபளுவை குறைத்து கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் ஏற்பட்டு உடல் நிலை சோர்வடையும். ஆண்டின் முற்பாதியில் நெருங்கியவர்கள் ஏற்படுத்தக் கூடிய பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும். மற்றவருக்கு நல்லது செய்ய நினைத்தாலும் அது உங்களுக்கே வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது நல்லது. ஆண்டின் பிற்பாதியில் கேது 6-ல் சஞ்சரிக்க இருப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும்.
குடும்பம் பொருளாதாரம்
ஆண்டின் முற்பாதியில் குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவும் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் பிற்பாதியில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் தேவையற்ற பேச்சுகளை குறைத்து கொள்வது நல்லது. பணவரவுகள் சரளமான நிலையில் இருக்கும் புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
உத்தியோகம்
உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எடுக்கும் பணிகளை முழுமையாக முடிக்க முடியாத சூழ்நிலை, பிறர் செய்யும் தவறுகளுக்கும் வீண் பழிகளைச் சுமக்கக் கூடிய நிலை போன்றவை ஏற்படும். தேவையற்ற அலைச்சல்களால் பணியில் நிம்மதி குறையும், ஆண்டின் முற்பாதியில் குரு சாதகமாக சஞ்சரிப்பதால் ஒரளவுக்கு கௌரவமான நிலையினை அடைவீர்கள். எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிட்டும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை அமையும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் சற்று கவனத்துடன் செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். தொழில் வியாபாரத்தில் நிறைய போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் நிலவினாலும் எதையும் எதிர் கொள்ளும் பலம் உண்டாகும். கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலாளர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் அவர்களை கவனத்துடன் கையாள்வது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. பயணங்களால் சற்று அலைச்சல் ஏற்படும்.
பெண்கள் 
பணவரவுகள் சரளமாக இருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் ஆண்டின் மத்தியில் எளிதில் கைகூடும். எதிர்பாராத உதவிகள் கிடைத்து குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். அஷ்டம சனி நடைபெறுதால் உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை உடல் சேர்வு ஏற்படும், வாயுத் தொல்லை, அஜீரணக் கோளாறு ஏற்படலாம் என்பதால் உணவு விஷத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. ஆண்டின் முற்பாதியில் சர்ப்ப கிரகங்கள் சாதகமற்று இருப்பதால் கணவன்- மனைவியிடையே வீண் பிரச்சினை, நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.
கொடுக்கல்- வாங்கல்
இந்த ஆண்டில் குரு பகவான் 30-06-2020 முதல் 20-11-2020 வரை சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிக்க உள்ள காலத்தில் பண வரவுகள் மிக சிறப்பாக இருந்து உங்கள் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளிலும் நல்ல லாபம் கிட்டும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி விடுவீர்கள். குரு வரும் 30-06-2020 முடியவும், அதன் பின்பு 20-11-2020 முதல் 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் இக்காலத்தில் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் செயல்படுவது நல்லது. ஆண்டின் பிற்பாதியில் கேது 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிலும் முன்னேற்றமான நிலை உண்டாகும்.
அரசியல்
அரசியல்வாதிகளுக்கு இவ்வாண்டில் ஒரளவுக்கு சாதகமான பலன்களை அடையும் வாய்ப்புகள் உண்டு. உடனிருப்பவர்களிடம் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. பேச்சிலும், செயலிலும் நிதானம் தேவை. பத்திரிக்கை நண்பர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வீண் வதந்திகளில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும். மக்களின் ஆதரவும் உங்களுக்கு சிறப்பாகக் கிட்டும்.
விவசாயிகள்
இவ்வாண்டில் வாழ்வில் ஒரளவுக்கு முன்னேற்றமும் நல்ல விளைச்சலும் கிடைக்கும். சந்தையில் விளைபொருட்களை நல்ல விலைக்கு விற்க முடியும். பூமி, மனை போன்றவற்றை வாங்கும் விஷயத்தில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கால்நடைகளால் வீண் செலவுகள் ஏற்படும். வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகளும் அதிகரிக்கும். முடிந்த வரை முன்கோபத்தைக் குறைப்பது நல்லது.
கலைஞர்கள்
நினைத்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். நிலுவையிலிருந்த பணத்தொகைகள் கைக்கு வந்து சேரும். சுக வாழ்விற்கு தேவையற்ற இடையூறு உண்டாகும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் சூழ்நிலை அதன் மூலம் அலைச்சல் உண்டாகும், பொதுவாக கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. நிறைய மறைமுக எதிர்ப்புகள், கிசுகிசுக்கள் போன்றவற்றால் மனநிம்மதி குறையும். உடல் சோர்வு, நேரத்திற்கு உணவு உண்ண இடையூறு உண்டாகும்.
மாணவ- மாணவியர்
மாணவ- மாணவியருக்கு இந்த ஆண்டில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு உங்களுக்கு மேலும் உற்சாகத்தினை உண்டாக்கும், நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். ஆரோக்கிய குறைவால் கல்வியில் ஈடுபாடு குறையும் என்றாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலை பெறுவீர்கள்.

மாதப்பலன்
சித்திரை       
இம்மாதத்தில் சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அனுகூலமான பலன்களை அடைவீர்கள் என்றாலும் குரு சனி 8-ல் இருப்பதால் பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். வீடு, மனை போன்றவற்றை வாங்கும் முயற்சிகளில் சற்று கவனம் தேவை. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்கு பின் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றலாம். தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். பல பெரிய மனிதர்களின் உதவிகள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் எதையும் சிறப்புடன் செய்து பாராட்டுதல்களை பெற முடியும். முருக பொருமானை வழிபாடு செய்வது நல்லது.
வைகாசி 
உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய காலமாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே முன்னேற்றம் கொடுக்கும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். 7-ல் கேது 8-ல் சனி சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் சற்றே நெருக்கடியான காலம் என்பதால் புதிய முயற்சிகளில் சற்று கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவுகள் ஒரளவுக்கு கிடைப்பதால் பணிகளை சிறப்புடன் செய்து முடிக்க முடியும். தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்லது.
ஆனி                
ஜென்ம ராசியில் புதன், வரும் 4-ஆம் தேதி முதல் 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுப காரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும்.  உடல் ஆரோக்கியத்தில் சற்றே மந்த நிலை உண்டாகும். குடும்பத்தில் கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஜென்ம ராசியில் சூரியன், ராகு, 8-ல் சனி சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது, குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பண வரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். தொழிலில் ஒரளவுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் நற்பலனை அடையலாம். சனிபகவானை வழிபாடு செய்வது நல்லது.
ஆடி                   
ஜென்ம ராசியில் புதன், 7-ல் குரு, 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் தொடர்புகளால் லாபம் கிட்டும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணங்ககள் நிறைவேறும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை அளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். சூரியன் 2-ல் இருப்பதால் பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களை குறைத்து கொள்வதன் மூலம் அலைச்சல்களை தவிர்க்கலாம். சிவ வழிபாடு செய்வது நல்லது.
ஆவணி        
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் ஏற்படும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடை விலகி கைகூடும். பண வரவுகளில் சரளமான நிலையிருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். நவீன பொருட்கள் வாங்கும் முயற்சியில் சாதகமான பலன் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகள் விலகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களை பெறுவார்கள். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.
புரட்டாசி      
உங்கள் ராசிக்கு 7-ல் குரு, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் வரும் 7-ஆம் தேதி முதல் கேது 6-ல் சஞ்சரிக்க இருப்பதும் வலுவான அமைப்பாகும். எந்தவித மறைமுக எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறும் ஆற்றல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. தாராள தனவரவால் உங்கள் பொருளாதார நிலை மேலோங்கும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடும். சிலருக்கு சொந்த வீடு வாகனம் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் அனுகூலப்பலன்களைப் பெற முடியும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலன்கள் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். சிவ பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்-.
ஐப்பசி             
குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் 6-ல் கேது, 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் எடுக்கும் முயற்சியில் தடையின்றி வெற்றி கிட்டும். பணவரவுகள் தேவைக் கேற்றபடியிருப்பதால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையப் பெற்று சுபகாரியங்கள் கைகூடும் யோகம் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வழியில் இருந்த சிறு சிறு தடைகள் எல்லாம் விலகி சாதகமான பலன்களை அடைவீர்கள். உற்றார் உறவினர்களால் ஒரளவுக்கு அனுகூலத்தைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கும். குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமக இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது நல்லது.
கார்த்திகை                
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன் கேது, 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் சற்று எதிர் நீச்சல் போடுட்டாவது வெற்றி பெறுவீர்கள். எதிலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் நற்பலன்களை அடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் கெடுதி ஏற்படாது. பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். தொழிலில் வியாபாரத்தில் முன்னேற்ற நிலையிருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளின் ஆதரவுகள் கிடைக்கும். நவீனகரமான கருவிகள் வாங்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கேற்ப பரிசுகளும் பதவிகளும் தேடி வரும். எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். சனிப்ரீதியாக ஆஞ்நேயரை வழிபாடு செய்வது நல்லது.
மார்கழி         
ஜென்ம ராசிக்கு 6-ல் கேது 10, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தொழில் உத்தியோக ரீதியாக சாதகமான பலன்களை அடைவீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். பயணங்களால் ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று கூற முடியாது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்க்கொள்வீர்கள். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். 7-ல் சூரியன் 8-ல் சனி குரு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. பணவிஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படவும். கொடுத்த கடன்களை வசூலிப்பதிலும் சற்று தடைகள் உண்டாகும். தினமும் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, சிவ வழிபாடு செய்வது நல்லது.
தை                    
செவ்வாய் லாப ஸ்தானமான 11-லும், 6-ல் கேதுவும் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பணவரவுகள் கிடைத்து எதையும் சமாளிக்கும் பலம் உண்டாகும். பண வரவுகள் சிறப்பாகவே இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. சூரியன் சனி குரு 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் ஓரளவுக்கு ஆதாயங்கள் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரித்தாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனம் தேவை. சிவ வழிபாடு மற்றும் அம்மன் வழிபாடு செய்வது நல்லது.
மாசி                  
மாத கோளான சூரியன் 9-லும், கேது 6-லும் சஞ்சரிப்பதால் சாதகமான பலன்களை அடையும் வாய்ப்பு உண்டு.  ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியை அடைவீர்கள். குடும்பத்தில் இருந்த ஒற்றுமை குறைவுகள் மறையும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் சற்று கவனமாக இருப்பது நல்லது. பணவரவுகளில் சுமாரான நிலையிருந்தாலும் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். குரு, சனி 8-ல் இருப்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது உத்தமம். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடன்களின்றி சமாளிக்கலாம். தொழில் வியாபார ரீதியான கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது ஒரு முறைக்குப் பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறலாம். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது நல்லது.
பங்குனி
உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 10-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் -ருக்கும் பிரச்சினைகள் குறைந்து மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கணவன்-- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உடல் நிலை சுமாராக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன் கிட்டும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். வர வேண்டிய லாபம் வரும். மறைமுக எதிர்ப்புகள் குறையும் என்றாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் லாபகரமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். சிலருக்கு வெளியூர், வெளிநாடுகளில் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் அமையும். சிவனை வழிபடுவது உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 5,6,8,             நிறம் - பச்சை, வெள்ளை,        கிழமை - புதன், வெள்ளி
கல் - மரகதம்             திசை - வடக்கு                 தெய்வம் - விஷ்ணுNo comments: