Thursday, April 9, 2020

தனுசு - சார்வரி வருட பலன்கள் 2020-2021


தனுசு - சார்வரி வருட பலன்கள் 2020-2021
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
எந்த காரியத்திலும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வெற்றிகள் பல பெறக்கூடிய ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த சார்வரி வருடத்தில் உங்கள் ராசியதிபதி குரு பகவான் வரும் ஆனி 15 (30-06-2020) முடியவும் அதன் பின்பு கார்த்திகை 5-ஆம் தேதி (20-11-2020) முதல் உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்க கூடிய இனிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். கடந்த கால பொருளாதார நெருக்கடிகள் விலகி படிப்படியான முன்னேற்றங்களை அடைவீர்கள் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும் திருமண சுபகாரியங்களும் கைகூடும். தொழில் வியாபாரத்தில் கடந்தகால நெருக்கடிகள் குறைந்து படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். புதிய யுக்திகளைக் கையாளக் கூடிய வாய்ப்பு உண்டு. உத்தியோகஸ்தர்கள் கௌரவமான பதவிகளையும், ஊதிய உயர்வுகளையும் பெற்றாலும் வேலைபளு காரணமாக அதிக நேரம் உழைக்க வேண்டிய நிலை ஏற்படும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடிய வாய்ப்பு, பயணங்களால் அனுகூலங்களும் உண்டாகும்.
இவ்வாண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு தனஸ்தானமான 2-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு ஏழரைச்சனி பாதச்சனி நடைபெறுகிறது. இதனால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன், நெருங்கியவர்களிடம் கருத்து வேறுப்பாடு ஏற்படும். உடல்நிலை ஓரளவுக்கு சாதகமாக இருந்தாலும் குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் உண்டாகும். உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவதும் முடிந்த வரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. குரு பகவான் வரும் ஆனி 15 முதல் கார்த்திகை 5 வரை (30-06-2020 முதல் 20-11-2020) ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. 
இவ்வாண்டு தொடக்கத்தில் ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே சிறுசிறு மனஸ்தாபம் ஏற்படும் என்றாலும் எதையும் சமாளிக்கும் வலிமை உண்டாகும். வரும் புரட்டாசி 7 (23-09-2020) முதல் ராகு 6-லும் கேது 12-லும் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி, பிரிந்து சென்ற உறவினர்களும் ஒற்றுமை பாராட்டுகின்ற நிலை, சகல விதத்திலும் முன்னேற்றமான பலன்கள் ஏற்படும்.

உடல் ஆரோக்கியம்
உங்களின் உடல் ஆரோக்கியமானது ஒரளவுக்கு சுமாராக இருக்கும். அடிக்கடி சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் சிறு செலவுகளுக்குப்பின் குணமாகும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன், நெருங்கியவர்களிடம் கருத்து வேறுப்பாடுகள் காரணமாக மன உளைச்சல் உண்டாகும். முடிந்த வரை அனைவரையும் அனுசரித்துச் செல்வதும் பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பதும் நல்லது. நேரத்திற்கு உணவு உண்பது நல்லது. ஆண்டின் பிற்பாதியில் சாதகமான பலன்களை அடைவீர்கள்.
குடும்பம் பொருளாதாரம்
இவ்வாண்டில் திருமண சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். புதிய வீடு, வண்டி, வாகனங்கள் வாங்கும் வாய்ப்பும் அதற்காக கடன் ஏற்படும் சூழ்நிலையும் உண்டு. குடும்ப ஒற்றுமை ஆண்டின் பிற்பாதியில் சிறப்பாக இருக்கும். பணவரவுகள் திருப்திகரமாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. பூர்வீகச் சொத்துகளால் சிறுசிறு விரயங்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் ஒரளவுக்கு அனுகூலப் பலன்களைப் பெறுவீர்கள்.
உத்தியோகம்
உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்பதவிகள் தாமதப்பட்டாலும் ஊதிய உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். கொடுத்த பணிகளைக் குறித்த நேரத்தில் செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட்டால் அனுகூலமான நற்பலன்களைப் பெற முடியும். வேலைபளு காரணமாக மன நிம்மதி குறையும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறசிறு போட்டி பெறாமைகளை சமாளிக்க வேண்டி இருந்தாலும் எதிர்பார்த்த லாபத்தைப் பெற முடியும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்பட்டால் அனுகூலமானப் பலன்களை அடையலாம். வெளியூர் வெளிநாடுகள் மூலம் ஆதாயங்களை பெற முடியும். முடிந்த வரை கூட்டாளிகளை அனுசரித்து செல்வது, தொழிலாளர்களிடம் தட்டி கொடுத்து வேலை வாங்குவது நல்லது.
பெண்கள்
திருமண வயதை எட்டியவர்களுக்கு மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமை சுமாராக இருக்கும். பேச்சில் பொறுமையுடன் இருந்தால் தேவையற்ற மன கசப்புகள் குறையும். பண வரவுகள் நன்றாக இருக்கும். பகைமை பாராட்டிய உறவினர்களும் தேடி வந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது.
கொடுக்கல்- வாங்கல்
பணவரவுகள் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். பெரிய தொகைகளை கையாளும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது மூலம் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும்.
அரசியல்
அரசியல்வாதிகள் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, எதிலும் சிந்தித்து செயலாற்றுவது நல்லது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எப்பாடுபட்டாவது காப்பாற்றி அனைவரின் ஆதரவையும் பெறுவீர்கள். எதிர்பார்த்துக் காத்திருக்கும் உயர்பதவிகள் சில தடைகளுக்குப்பின் கிடைக்கப் பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
விவசாயிகள்
மகசூல் சற்று சுமாராக இருந்தாலும் சந்தையில் நல்ல விலை போகும். பங்காளிகளை அனுசரித்துச் செல்வதும் வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளில் கவனமாக கையாள்வதும் நல்லது. தன வரவுகள் ஒரளவிற்கு தாராளமாக இருப்பதால் குடும்பத்தில் தேவைகள் பூர்த்தியாகும். கால் நடைகளால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும். ஆழ்கிணறு போடுவதற்காகவும் புதிய நவீன கருவிகள் வாங்குவதற்காகவும் கடன் வாங்க நேரிடும்.
கலைஞர்கள்
கலைஞர்கள் கையிலிருக்கும் வாய்ப்புகளை நழுவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. பொருளாதார நிலை சாதகமாக இருப்பதால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகள் அமையும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணவரவுகள் தடையின்றி வந்து சேரும்.
மாணவ- மாணவியர்
கல்வியில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் சாதகமான பலனைப் பெற முடியும். உடன் பழகும் நண்பர்களிடம் கவனமுடன் செயல்படுவது, பெற்றோர், ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடப்பதன் மூலம் நற்பலன் உண்டாகும். விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது.

மாதப்பலன்
சித்திரை       
உங்கள் ராசியதிபதி குரு 2-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள்.  நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றல் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவி இடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. 2-ல் சனி 5-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை ஆலோசித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கம். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். முருகப் பெருமானை வழிபாடு செய்வதால் எல்லா நன்மையும் கிட்டும்.
வைகாசி 
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி அடையக்கூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும்-. பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்றே விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை நிலவும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி தரும். ஆன்மீக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது.
ஆனி                
உங்கள் ராசியதிபதி குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும், 7-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதாலும் முடிந்த வரை உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றியினைப் பெற முடியும். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கிய ரீதியாக சிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூட சற்று தாமத நிலை உண்டாகும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்தாலே வீண் பிரச்சினைகள் உண்டாவதை குறைத்து கொள்ள முடியும்.  உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். சிவ வழிபாடு செய்வது உத்தமம்.
ஆடி                   
உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். தூர பயணங்களை தவிர்ப்பது உத்தமம். குடும்பத்தில் உள்ளவர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அஜீரண கோளாறு, உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படும். பண வரவுகள் சுமாராக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து விடுவீர்கள். அசையும் அசையா சொத்துக்களால் தேவையற்ற வீண் விரயங்கள், டென்ஷன்கள் உண்டாக கூடும் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சற்று மந்தமான சூழ்நிலையே இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். சிவ பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.
ஆவணி        
உங்கள் ராசிக்கு 5-ல் செவ்வாய், 9-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக மேன்மைகள் ஏற்பட்டு குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூல பலனை அடைய முடியும். பொன் பொருள் சேரும். சொந்த பூமி மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலனை பெறலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றும். கணவன்- மனைவிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பண வரவுகளில் சரளமான நிலை இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் சற்று நிவர்த்தியாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். தொழில் அபிவிருத்தி ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற முடியும். விஷ்ணு வழிபாடு செய்வது உத்தமம்.
புரட்டாசி      
மாத கோளான சூரியன் 10-ல் சஞ்சரிப்பதும் 7-ஆம் தேதி முதல் ராகு 6-ல் சஞ்சரிக்க இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் குறைந்து வளமான பலன்களை அடைவீர்கள். பண வரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். அனைத்து தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் சற்று குறையும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் நல்ல லாபத்தினை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் நிம்மதியுடன் செயல்பட முடியும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது உத்தமம்.
ஐப்பசி             
உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தொழில் பொருளாதார ரீதியாக ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். உங்கள் பலமும் வலிமையும் கூடும். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாக்கும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலை நாட்ட முடியும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். ஆடம்பரச் செலவுகளை குறைத்தால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். அம்மன் வழிபாடு செய்வது சிறப்பு.
கார்த்திகை                
உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும் என்றாலும் 6-ல் ராகு, வரும் 5-ஆம் தேதி முதல் குரு 2-ல் சஞ்சரிக்க உள்ளதால் எல்லா வகையிலும் சாதகமான பலன்கள் ஏற்படும். எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைய பெற்று சுபகாரியங்கள் கைகூடும். புதிய வீடு, வண்டி, வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன் இல்லா கண்ணிய வாழ்க்கை அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சக நண்பர்களிடம் கவனமுடன் செயல்படுவது நல்லது. சிவ வழிபாடு செய்வது உத்தமம்.
மார்கழி         
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 6-ல் ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிட்டும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விடுவீர்கள். கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்தினால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். முருகப் பெருமானை வழிபாடு செய்வதால் எல்லா நன்மையும் கிட்டும்.
தை                    
உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. குரு 2-ல், ராகு 6-ல் சஞ்சரிப்பதால் உங்களது செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். தாராள தன வரவுகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய நிகழச்சிகள் நடைபெறும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மறையும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சனிப்ரீதியாக விநாயகரை வழிபாடு செய்வது உத்தமம்.
மாசி                  
மாத கோளான சூரியன் 3-ல், குரு 2-ல், ராகு 6-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக நல்ல வரவுகள் ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் உண்டாகும். தாராள தனவரவுகள் உண்டாவதால் கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தேவைகள் பூர்த்தியாவதுடன் ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். கணவன்- மனைவி அனுசரித்து சென்றால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்கள் தடபுடலாக கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்தில் கௌரவமான உயர்வுகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். சனி பகவான் வழிபாடு செய்வது உத்தமம்.
பங்குனி
சூரியன் 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்பட்டாலும் 2-ல் குரு, 6-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் சாதகமான பலன்களை அடைவீர்கள். பணவரவுகளில் சரளமாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளையும் தடையின்றி மேற்கொள்ளலாம். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற சற்றே தாமத நிலை உண்டாகும். முடிந்தவரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைத்துக் கொள்ளலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 1,2,3,9          நிறம் - மஞ்சள், பச்சை               கிழமை - வியாழன், திங்கள்
கல் - புஷ்ப ராகம்    திசை - வடகிழக்கு                       தெய்வம் - தட்சிணா மூர்த்தி


No comments: