Thursday, August 27, 2020

விருச்சிகம்   - ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2022

 

விருச்சிகம்   - ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2022

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை

அதிக புத்திக்கூர்மையும், சமூகப் பற்றும் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு இது நாள் வரை 8, 2-ல் சஞ்சரித்த ராகு, கேது, தற்போது ஏற்படும் ராகு கேது பெயர்ச்சியால் திருக்கணிப்படி வரும் 23-9-2020 முதல் 12-04-2022 வரை (வாக்கியப் பஞ்சாங்கபடி 01-09-2020 முதல் 21-03-2022 வரை). சர்ப கிரங்களான கேது ஜென்ம ராசியிலும், ராகு 7-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடப்பது சிறப்பு. அதிலும் குறிப்பாக புதுமண தம்பதிகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. திடீரெண்டு உணர்ச்சி வசப்படும் நிலை ஏற்படும் என்பதால் உங்கள் முன் கோபத்தை குறைத்து கொண்டு குடும்பத்தில் பெரியவர்களிடம் பேச்சில் பொறுமையை கடைபிடிப்பது, வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.  உற்றார், உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் ஒரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அலர்ஜி பிரச்சினை, மனைவிக்கு உடம்பு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது.

            குடும்பத்தில் நிம்மதி இல்லாத நிலையை சர்ப கிரகங்கள் உங்களுக்கு ஏற்படுத்தினாலும் ஒரு ராசியில் நீண்ட நாட்கள் சஞ்சரிக்கும் கிரகமான சனி உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிப்பதால் பண வரவுகள் மிகவும் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு தொழிலை அபிவிருத்தி செய்யும் யோகம் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் எளிதில் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள். கூட்டாளிகளிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம் என்பதால் அவர்களை கலந்து ஆலோசித்து எந்த முடிவுகளையும் எடுப்பது மிகவும் சிறப்பு. பெரிய முதலிடுகளை ஈடுபடுத்தி தொழிலை மேன்மைபடுத்தி கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் தகுதிக்கு ஏற்ற உயர்வுகளை பெறுவார்கள். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும்.

            இக்காலங்களில் குரு சஞ்சாரம் எப்படி இருக்கிறது என பார்த்தால் குரு வரும் 20-11-2020 முடிய உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சாரம் செய்வது மட்டும் தான் சாதகமான அமைப்பு அதன் பின்பு குரு 3 மற்றும் 4-ல் சஞ்சராம் செய்வதால் பண வரவுகள் உங்களுக்கு சாதகமாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பது வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது உத்தமம். சுபகாரிய முயற்சிகளில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படலாம் என்பதால் கடினமாக முயற்சித்தால் தான் ஒரு சிறு செயலையும் செய்து முடிக்க முடியும். பிள்ளைகள் மூலம் சுப செலவுகள் தேவையற்ற மன கவலை உண்டாகும். பல பொதுநல காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

 

உடல் ஆரோக்கியம்

உடல் நிலை சற்று சாதகமாக இருக்கும் கடந்த கால சோர்வுகள் விலகி நீங்கள் சற்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள் என்றாலும் முன் கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. மனைவி பிள்ளைகளுக்கு அடிக்கடி உடல் நிலை பாதிப்புகள் ஏற்படும் என்பதால் அவர்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் உண்டாக கூடிய காலம் என்பதால் பயணங்களில் கவனம் தேவை. தேவையற்ற குழப்பங்களால் மன நிம்மதி குறையும்.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது சிறப்பு. பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்ப சூழ்நிலை மகிழ்ச்சிகரமாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால்  அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். சுப காரிய முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள்.

உத்தியோகம்

பணியில் வேலைபளு அதிகமாக இருந்தாலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் உங்களது நெருக்கடிகளை குறைக்கும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுந்த வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு மனைவி பிள்ளைகளை விட்டு வெளியிடங்களில் தங்க நேரிடும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானம் தேவை.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும். நிறைய போட்டிகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி ஏற்றம் அடைவீர்கள் என்றாலும் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். வேலையாட்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பார்கள்.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதாரநிலை தேவைக்கு ஏற்றபடி இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபங்களை அடைவீர்கள். பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றில் கவனமாக செயல்படுவது நல்லது. கடந்த கால வம்பு வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.  கொடுத்த கடன்கள் வசூலாகும்.

அரசியல்

பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கும் காலமாக இருக்கும். கட்சி பணிகளுக்காக நிறைய வீண் செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களை மேற்கொள்வீர்கள். முன்கோபத்தை குறைத்து கொள்வது, மேடை பேச்சுகளில் கவனமுடன் செயல்படுவது உடன் பழகுபவர்களிடமும் எச்சரிக்கையுடன் இருப்பது, பத்திரிக்கையாளர்களை பகைத்து கொள்ளாது இருப்பது உத்தமம்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். பட்ட பாட்டிற்கான பலனைப் பெறுவீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் மானிய உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். சந்தையில் விளைபொருளுக்கு ஏற்ற விலை கிடைக்கும். பொருளாதார ரீதியாக மேன்மைகள் ஏற்படும் என்றாலும் நெருங்கியவர்களை அனுசரித்து சென்றால் எதையும் சமாளித்து விட முடியும்.

கலைஞர்கள்

தகுந்த கதா பாத்திரங்கள் கிடைத்து சமுதாயத்தில் நல்ல நிலையை அடைவீர்கள். போட்டி, பொறாமைகள் அதிகமாக இருந்தாலும் எதையும் சமாளிக்கும் பலம் உங்களிடம் இருக்கும். பணவரவுகள் சிறப்பாக அமையும். வரவேண்டிய பணத் தொகைகள் கிடைத்து கடன்கள் குறையும். அதிக அலைச்சலால் சுகபோக வாழ்க்கையில் சிறிது பாதிப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும்.

பெண்கள்

உங்களது பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கடந்த கால கடன்களை குறைக்க முடியும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும் காலம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள், கை, கால் மூட்டுகளில் வலி போன்றவை தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.

மாணவ மாணவியர்

கல்வியில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். நல்ல மதிப்பெண் பெற்று நல்ல பெயர் எடுப்பீர்கள். உடல் நிலை மந்தமாக இருக்கும் எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை உங்களை வேறுபாதைக்கு அழைத்து செல்லும் என்பதால் கவனம் தேவை. பெரிய மனிதர்கள் ஆதரவு சிறப்பாக இருக்கும்.

 

ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 23-09-2020 முதல் 26-01-2021 வரை

ஜென்ம ராசியில் கேது கேட்டை நட்சத்திரத்திலும் ராகு 7-ல் மிருகசீரிஷ நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது, கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது சிறப்பு. ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வது நல்லது. உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி வலுவாக சஞ்சரிப்பது சகல விதத்திலும் வெற்றிகளை குவிக்கும் சிறப்பான அமைப்பாகும். பண வரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் நல்ல அனுகூலமான பலன்களை அடைய முடியும். தொழில் வளர்ச்சிக்கான நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற்று மகிழ்ச்சி அடையும் நிலை உண்டாகும். வாகனங்களில் செல்கின்ற போது நிதானத்துடன் இருப்பது நல்லது. முடிந்தவரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைத்துக் கொள்ளலாம்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 27-01-2021 முதல் 01-06-2021 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 7-ல் ரோகிணி நட்சத்திரத்திலும், ஜென்ம ராசியில் கேது கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், குரு 3-ல் சஞ்சாரம் செய்வதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொள்வது, முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். சில நெருக்கடிகள் இருந்தாலும் சனி 3-ல் சஞ்சாரம் செய்வதால் தாராள தன வரவுகள் உண்டாகும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.  எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். சகோதர சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம். இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறைந்து லாபங்களை அடைய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளு சற்று அதிகரிக்கும். பணியில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நிம்மதியுடன் செயல்பட முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதிகளை கொடுக்காமல் இருப்பதும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பதும் நல்லது. மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 02-06-2021 முதல் 05-10-2021 வரை

ஜென்ம ராசியில் கேது அனுஷ நட்சத்திரத்திலும், ராகு 7-ல் ரோகிணி நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள், தேவையற்ற வாக்கு வாதங்கள் உண்டாகும். உடல் நிலையில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் சாதகமான பலனைப் பெற முடியும். பொருளாதார நிலை சுமாராக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். அசையும் அசையா சொத்துகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். சனி 3-ல் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும் இக்காலத்தில் சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்தே எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். கடன்கள் சற்றே குறையும். தேவையில்லாத அலைச்சல்கள் இருக்கும். தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளின் ஆதரவை பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவது உத்தமம்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 06-10-2021 முதல் 08-02-2022 வரை

ஜென்ம ராசியில் கேது அனுஷ நட்சத்திரத்திலும், ராகு 7-ல் கிருத்திகை நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் சனி உங்கள் ராசிக்கு 3-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய சூழ்நிலை ஏற்படும். எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைப்பதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. திருமண சுபகாரியங்கள் கை கூட இடையூறு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு இருந்தாலும் உங்களது அன்றாட செயல்களில் சிறப்பாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்படுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மை ஏற்படும். கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் காலம் என்பதால் எதிலும் அவர்களை கலந்தாலோசித்து செயல்படுவது நல்லது. வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் யாவும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று கல்வியில் உயர்வடைவார்கள்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 09-02-2022 முதல் 12-04-2022 வரை

ஜென்ம ராசியில் கேது விசாக நட்சத்திரத்திலும் ராகு 7-ல் கிருத்திகை நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்பதால் முடிந்தவரை பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியதுவம் கொடுத்தால் ஏற்படும் சிறுசிறு பாதிப்புகளை எதிர்கொள்ள முடியும். உங்கள் ராசிக்கு 3-ல் சனி சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு என்பதால் வலமான வாழ்வை அடைய முடியும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருப்பதால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். புதிய இடம் பொருள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரியும் வாய்ப்பு அமையும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவதோடு பள்ளி கல்லூரிக்கும் பெருமை சேர்ப்பார்கள்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் -1,2,3,9

நிறம் -  ஆழ்சிவப்பு, மஞ்சள்

கிழமை - செவ்வாய், வியாழன்

திசை - தெற்கு

கல் - பவளம்

தெய்வம்- முருகன்

 

பரிகாரம்

விருச்சிக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு கேது ஜென்ம ராசியிலும், ராகு 7-லும் சஞ்சாரம் செய்வதால் விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது நல்லது. ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது. மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, சனிக்கிழமைகளில் தேங்காய், உளுந்து, நாணயங்கள் போன்றவற்றை தொழு நோயாளிகளுக்கு தானம் கொடுப்பது. அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது.

குரு பகவான் உங்கள் ராசிக்கு 20-11-2020 முதல் சாதகமின்ற சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடவும்.

No comments: