Thursday, August 27, 2020

தனுசு   - ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2022

 

தனுசு   - ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2022

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்

சுயநலம் இன்றி பிரதிபலன் எதிர்பாராமல் பிறருக்கு உதவி செய்யக்கூடிய ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே, சர்ப கிரகமான கேது ராகு உங்கள் ராசிக்கு 1, 7-ல் சஞ்சரிப்பதால் பல இன்னல்களை சந்தித்து வரும் உங்களுக்கு தற்போது ஏற்பட உள்ள ராகு கேது மாற்றத்தால் திருகணிதப் பஞ்சாங்கப்படி வரும் 23-9-2020 முதல் 12-04-2022 வரை (வாக்கியப் பஞ்சாங்கபடி 01-09-2020 முதல் 21-03-2022 வரை). ராகு ஜென்ம ராசிக்கு 6-ஆம் வீட்டிற்கும் கேது 12-ஆம் வீட்டிற்கும் செல்கின்றனர். இதனால் உங்கள் வாழ்வில் நல்லதொரு மாற்றங்கள் உறுதியாக ஏற்படும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாக குறைந்து கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஏற்படும். குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பவர்களுக்கு குடும்பத்துடன் இனையும் நிலை உண்டாகும். உற்றார் உறவினர்களிடம் இருந்த மன கசப்புகள் விலகி சுமுக நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும்.

             உங்கள் ராசிக்கு சனி 2-ல் சஞ்சரிப்பதால் ஏழரைச் சனியில் பாதச்சனி நடைபெறுவது சாதகமற்ற அமைப்பு என்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. நெருங்கியவர்களிடம் பேசும் போது நிதானமாக இருப்பது, உங்கள் குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது மிகவும் நல்லது.  பணவரவுகள் சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், கார் பங்களா போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனத்துடன் இருந்தால் சாதகப்பலனை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் படிப்படியான வளர்ச்சியை அடைய முடியும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்க்கும் உயர்வினை அடையலாம்.

            தற்போது உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் ராசியாதிபதி குரு பகவான் வரும் 20-11-2020 முதல் 06-04-2021 வரையும் அடுத்து வரும் 14-09-2021 முதல் 20-11-2021 வரையும் உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் சஞ்சரிக்க உள்ளதால் பொருளாதார ரீதியாக மேன்மைகளை அடையும் வாய்ப்பு, கடந்த கால கடன்கள் படிப்படியாக குறையும் நிலை உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் கிட்டும். பல பொதுநல காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு அமையும்.

            குரு வரும் (அதிசாரமாக கும்ப ராசியில் ) 06-04-2021 முதல் 14-09-2021 வரை மற்றும் 20-11-2021 முதல் 13-04-2022 வரை உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிக்க உள்ளதால் இக்காலத்தில் பொருளாதார ரீதியாக சற்று தேக்கங்கள் ஏற்படும் என்பதால் பண விஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது, தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்வது நல்லது.  

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும். கடந்த கால அலைச்சல் டென்ஷன்கள் குறையும். குடும்பத்தில் உள்ளவர்களால் இருந்து வந்த மருத்துவ செலவுகள் மறையும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டு இருப்பவர்களுக்கு படிப்படியாக முன்னேற்றம் உண்டாகும். அனைவரும் சுபிட்சமாக இருப்பதால் மனநிம்மதி உண்டாகும்.

குடும்பம் பொருளாதார நிலை

பண வரவுகள் மிகச் சிறப்பாக இருப்பதால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பேச்சில் நிதானத்துடன் இருப்பது உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்க கூடிய யோகம் அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.

உத்தியோகம்

பணியில் திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்க பெறுவதால் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். எதிர்பார்த்து காத்திருந்த ஊதிய உயர்வுகளும், பதவி உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விரும்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் எதிலும் திறம்பட செயல்பட முடியும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நிலையிருப்பதால் லாபங்கள் பெருகும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கூட்டாளிகளையும் வேலையாட்களையும் அனுசரித்து செல்வது நல்லது. வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் அனுகூலம் உண்டாகும். தொழில் ரீதியாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள்.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தை பெறுவீர்கள் என்றாலும் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். உங்களுக்குள்ள கடன் பிரச்சினைகள் குறையும்.

அரசியல்

பெயர் புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். மக்களின் ஆதரவுகள் பெருகுவதால் அவர்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய கூடிய ஆற்றல் உண்டாகும். உங்கள் பேச்சிற்கு அனைத்து இடங்களிலும் ஆதரவுகள் பெருகும் என்றாலும் கவனத்துடன் பேசுவது நல்லது. கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். பத்திரிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். உடனிருப்பவர்கள் அனுசரித்து செல்வது நல்லது.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கேற்ற விலையும் கிட்டும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் லாபம் பெருகும். நவீன முறைகளை கையாண்டு பயிர் விளைச்சலை பெருக்குவீர்கள். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பொருளாதாரம் மேன்மையடையும். கடன்களும் படிப்படியாக குறையும். உற்றார் உறவினர்களிடம் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது.

கலைஞர்கள்

மக்களின் ஆதரவும், ரசிகர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாகவே இருக்கும். கிடைத்த வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொண்டால் எதிர்காலத்தில் நல்ல நிலையை அடைய முடியும். வர வேண்டிய பணத்தொகைகளில் சற்று இழுபறி நிலை இருந்தாலும் வர வேண்டிய நேரத்தில் கைக்கு கிடைக்கும். படப்பிடிப்பிற்காக செல்லும் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கார் பங்களா போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். சுப காரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களிடம் சற்று அனுசரித்து செல்வது நல்லது. பொன் பொருள் சேரும். தாய் வழி சொத்துக்களால் அனுகூலப்பலன்களை பெற முடியும்.

மாணவ மாணவியர்

கல்வியில் முன்னேற்றமான நிலை உண்டாகும். எதிர்பார்த்தபடி நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டினைப் பெறுவீர்கள். கல்விக்காக சுற்றுலா தலங்களுக்கு செல்வீர்கள். நல்ல நட்புகளால் அனுகூலப்பலன் உண்டாகும். விளையாட்டு போட்டிகளில் பரிசுகளைப் பெறுவார்கள். கடந்த காலங்களில் இருந்த மந்த நிலை, தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை போன்ற யாவும் விலகும். 

 

ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 23-09-2020 முதல் 26-01-2021 வரை

ஜென்ம ராசிக்கு ராகு 6-ல் மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், கேது 12-ல் கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும் வரும் 20-11-2020 முதல் ராசியாதிபதி குரு 2-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடந்த கால கடன் பிரச்சினைகள் குறையும். சனி 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையுடன் செயல்படுவதும் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளை சுறுசுறுப்பாக செய்ய முடியும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுப்பாடுகள் மறந்து அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களும் சுபிட்சமாக இருப்பார்கள். திருமண சுபகாரியங்கள் கைகூடும். உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் லாபம் சிறப்பாக அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிட்டும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க முடியும்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 27-01-2021 முதல் 01-06-2021 வரை

உங்கள் ராசிக்கு 6-ல் ராகு ரோகிணி நட்சத்திரத்திலும், 12-ல் கேது கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், ராசியாதிபதி குரு 2-ல் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் பொருளாதார நிலையானது மிக சிறப்பாக இருக்கும் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பண வரவுகள் சிறப்பாக இருந்து உங்களுக்கு உள்ள நெருக்கடிகள் எல்லாம் குறையும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். உங்கள் ராசிக்கு சனி 2-ல் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வீண் செலவுகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதற்கு முன் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் வர வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி கிடைப்பதால் லாபம் பெருகும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் அமையும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிப்பதால் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 02-06-2021 முதல் 05-10-2021 வரை

ஜென்ம ராசிக்கு 6-ல் ராகு ரோகிணி நட்சத்திரத்திலும், 12-ல் கேது அனுஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எதிலும் எதிர் நீச்சல் போட்டு அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 2-ல் சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பொருளாதார நிலை சுமாராக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபச் செலவுகள் அதிகரிக்கும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. எடுக்கும் காரியங்களில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதிருப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகள் சற்று தாமதத்திற்கு பிறகு கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 06-10-2021 முதல் 08-02-2022 வரை

உங்கள் ராசிக்கு ராகு 6-ல் கிருத்திகை நட்சத்திரத்திலும், கேது 12-ல் அனுஷ நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் ஒரளவுக்கு அனுகூலங்களை அடைய முடியும். உங்கள் ராசிக்கு 2-ல் சனி சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சிந்தித்து செயல்பட வேண்டிய காலமாகும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுக்க வேண்டியிருக்கும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை நன்றாக இருக்கும். உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் அனைவரிடமும் விட்டு கொடுத்து நடந்து கொள்வது, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நற்பலன் ஏற்படும். உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிக்கும் குரு வரும் 20-11-2021 முதல் 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. பூர்வீக சொத்துக்களால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. வேலையாட்கள் ஆதரவாக செயல்படுவதால் தொழில் வியாபாரத்தில் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு சற்றே வேலைபளு அதிகமாக இருக்கும் என்றாலும் நல்ல வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற அதிக பாடுபட வேண்டியிருக்கும்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 09-02-2022 முதல் 12-04-2022 வரை

உங்கள் ராசிக்கு 6-ல் ராகு சூரியன் நட்சத்திரத்திலும், 12-ல் கேது குரு நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த பணவரவுகள் தக்க சமயத்தில் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 3-ல் குரு சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. எதிர்பாராத திடீர் செலவுகளை எதிர் கொள்வீர்கள். கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். உணவு விஷயத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடம் வீண் வாக்கு வாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சை குறைப்பதும், மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சற்று தாமத நிலை உண்டானாலும் குரு 7-ஆம் வீட்டை பார்ப்பதால் அனுகூலமான பலன்கள் கிட்டும். தொழில் ரீதியாக நெருக்கடிகள் நிலவினாலும் எதையும் சமாளித்து முன்னேற்றம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது முலம் வீண் பிரச்சினைகளில் இருந்து தப்பித்து கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது மூலம் திறம்பட செயல்பட முடியும்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9   

நிறம் - மஞ்சள், பச்சை  

கிழமை - வியாழன், திங்கள்

கல் - புஷ்ப ராகம்

திசை - வடகிழக்கு                  

தெய்வம் - தட்சிணா மூர்த்தி

 

பரிகாரம்

தனுசு ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு கேது 12-ல் சஞ்சரிப்பதால் தினமும் விநாயகரை வழிபடுவது, ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ என்ற பிஜ மந்திரத்தை கூறிவருவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை, போன்றவற்றை  ஏழைகளுக்கு தானம் தருவது, சர்ப சாந்தி செய்வதும், விநாயகரை வழிபடுவது நல்லது.

ஏழரை சனியில் பாதசனி நடைபெறுவதால் சனி ப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது, சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் எண்ணெயில் தீப மேற்றுவது நல்லது. திருப்பதி ஏழு மலையில் வீட்றிருக்கும் ஸ்ரீபாலாஜி வெங்கடாசலபதியை வழிபடுவது, சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் கருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்வது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது கருப்பு நிற ஆடை அணிவது நல்லது.

 

No comments: