Thursday, November 5, 2020

மேஷம் - குரு பெயர்ச்சி பலன் - 2020 - 2021

 

மேஷம் - குரு பெயர்ச்சி பலன் - 2020 - 2021

 

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.

தன்னை நம்பியவர்களை எத்தகைய துன்பத்தில் இருந்தும் காப்பாற்றக்கூடிய பரந்த மனப்பான்மை கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி செவ்வாய்க்கு நட்பு கிரகமான பொன்னவன் எனப்போற்றப் படக்கூடிய குரு பகவான் திருக்கணிதப்படி வரும் 20-11-2020 முதல் 20-11-2021 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 15-11-2020 முதல் 13-11-2021 வரை) தொழில் ஸ்தானமான 10-ல் சஞ்சாரம் செய்ய உள்ளார். அது மட்டுமின்றி ஒரு ராசியில் அதிக காலம் தங்கும் கிரகமான சனியும் உங்கள் ராசிக்கு 10-ல் தற்போது சஞ்சரிக்கிறார். இதனால் தொழில், வியாபார ரீதியாக எதிர் நீச்சல் போட வேண்டி இருக்கும். போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். தொழிலில் மிகவும் மந்தமான நிலைகள் நிலவுவதால் லாபம் குறைந்து பொருள் தேக்கம் ஏற்படும். கூட்டாளிகளிடம் ஒற்றுமையற்ற நிலை நிலவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணியில் பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வேலைபளு அதிகரித்தாலும் உங்களின் தனி திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு சற்று சாதகமாக இருக்கும். இதுமட்டுமின்றி ஜென்ம ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் நிலையில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது சிறப்பு. உடல் அசதி, சோர்வு போன்றவற்றால் எந்தவொரு காரியத்தையும் சரிவர செய்து முடிக்க முடியாமல் மனநிம்மதி குறையும். கணவன்- மனைவி இடையே ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு கூட வீண் வாக்கு வாதங்கள் ஏற்படும். விட்டு கொடுத்து செல்வது மிகவும் நல்லது. உற்றார், உறவினர்கள் தங்கள் பங்கிற்கு வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனத்துடன் பணத்தை கையாள்வது நல்லது. பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். கொடுத்த கடன்களை வசூலிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது உத்தமம். தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. உங்களுக்கு பிரதான கிரகங்கள் சாதகமின்றி சஞ்சரிப்பதால் எதிலும் ஒரு முறைக்குப் பல முறை சிந்தித்து செயல்படுவதும், பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் உத்தமம். குரு தனது விஷேச பார்வையாக 2, 4, 6 ஆம் வீடுகளை பார்ப்பதால் ஒரு புறம் பிரச்சினைகள் இருந்தாலும் நெருங்கியவர்களின் உதவி கிடைக்கும். அசையும் அசையா சொத்து வழியில் நல்லது நடக்கும் வாய்ப்பு, எதையும் எதிர் கொள்ளும் பலம் உண்டாகும்.

உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரிக்கும் குரு வரும் 06-04-2021 முதல் 14-09-2021 வரை அதிசாரமாக லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிக்க இருப்பதால் இக்காலத்தில் பண வரவுகள் மிகவும் சிறப்பாக இருந்து உங்களுக்கு உள்ள அனைத்து பிரச்சினைகளும் விலகி முன்னேற்றங்களை அடைவீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த இடையூறுகள் விலகி நல்லது நடக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் குறைந்து லாபகரமான பலன் கிடைக்கும்.

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி வீண் செலவுகளை ஏற்படுத்தும். நீங்கள் முன்கோபத்தை குறைத்து கொண்டு பொறுமையுடன் இருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகள் நிலவுவதால் மன நிம்மதி குறையும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும் என்பதால் முடிந்த வரை பயணங்களை தவிர்ப்பது, தள்ளி வைப்பது நல்லது. சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை, உடல் சோர்வு, தூக்கமின்மை ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகி மனநிம்மதி குறையும். உற்றார் உறவினர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். பணவரவுகள் ஒரளவுக்கு சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத வீண் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சில தடைகள் இருந்தாலும் வரும் 06-04-2021 முதல் 14-09-2021 வரை குரு 11-ல் சஞ்சரிக்கும் காலத்தில் நல்லது நடக்கும். சிலருக்கு வீடு, வாகனம் பழுது பார்ப்பதற்காக செலவுகள் ஏற்படும். புத்திரர்களால் மனசஞ்சலங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் நிம்மதி குறையும்.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன் ஏஜென்சி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியாமல் போகும். கொடுக்கல்- வாங்கலில் வீண் விரயமும், கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாத சூழ்நிலைகளும் ஏற்படும். பெரிய முதலீடுகளை கடனாக கொடுப்பதை தவிர்த்து விடுவது நல்லது. சிலருக்குக் கொடுத்த பணத்தைத் திரும்ப பெறுவதில் சிக்கல்கள் இருந்தாலும் வரும் 06-04-2021 முதல் 14-09-2021 வரை குரு 11-ல் சஞ்சரிக்கும் காலத்தில் பண வரவுகள் சிறப்பாக இருந்து சகல விதத்திலும் லாபகரமான பலனை அடைவீர்கள்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்கள் அதிக போட்டி பொறாமைகளை சந்திக்க நேரிடும். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களைத் சற்று தள்ளி வைப்பது நல்லது. சிலருக்கு பொருட் தேக்கம் உண்டாகும் என்றாலும் வரும் 06-04-2021 முதல் 14-09-2021 வரை குரு 11-ல் சஞ்சரிக்கும் காலத்தில் லாபகரமான பலனை அடைவீர்கள். எதிர்பார்த்த ஆடர்கள் கைநழுவிப் போகும். தொழிலாளர்களுக்கு சம்பள பட்டுவாடா செய்வதில் நெருக்கடிகளை சந்திப்பீர்கள்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற இடமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். கூடுதல் பொறுப்புகள் ஏற்படுவதால் அதிக நேரம் உழைக்க வேண்டி வரும். உடல்நிலை சோர்வடையும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். எந்தப் பணிகளையும் நீங்கள் சிறப்பாக செய்து முடிப்பீர்கள் என்றாலும் அதற்கான பலன் அடைய இடையூறு ஏற்படும். பிறர் செய்யும் குற்றங்குறைகளை நீங்கள் கண்டு பிடித்துக் கூறுவதால் உடனிருப்பவர்களிடம் வீண் பிரச்சினைகளும் வாக்குவாதங்களும் ஏற்படும். எந்த காரியத்தையும் ஒரு முறைக்கு இரு முறை யோசித்து செய்வது நல்லது.

பெண்கள்

குடும்பத்தில் ஒற்றுமையற்ற நிலைகளால் நிம்மதி குறையும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் வரும் 06-04-2021 முதல் 14-09-2021 வரை குரு 11-ல் சஞ்சரிக்கும் காலத்தில் நல்லது நடக்கும். பணவரவுகளில் பற்றாக்குறை நிலவுவதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நெருக்கடி நிலவும். நினைத்த காரியங்கள் நிறைவேறாமல் மன சஞ்சலங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. சிலருக்கு வீடு மாறக்கூடிய சூழ்நிலை ஏற்படும். பணி புரியும் பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.

அரசியல்

அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள போராட வேண்டிய காலமாகும். புகழ், பெருமை கிடைக்கும் என்றாலும் வீண் செலவுகள் ஏற்படும். உடனிருப்பவர்களே துரோகிகளாக மாறுவார்கள். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் மட்டுமே மக்களின் ஆதரவைப் பெற முடியும். மேடைப் பேச்சுக்களில் சற்று கவனமுடன் செயல்படுவது மிகவும் உத்தமம்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் நன்றாக அடைய கடும் முயற்சியினை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சரியான நேரத்திற்கு வேலையாட்கள் கிடைக்காத சூழ்நிலையால் பயிர் வேலைகள் சரி வர நடக்காமல் போகும். அரசு வழியில் கிடைக்க வேண்டிய மானிய உதவிகள் வரும் 06-04-2021 முதல் 14-09-2021 வரை குரு 11-ல் சஞ்சரிக்கும் காலத்தில் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை.

கலைஞர்கள்

வரவேண்டிய படவாய்ப்புகளை உடன் இருப்பவர்கள் தட்டிச்செல்வார்கள். தனவரவில் தேக்கம் ஏற்படும். சம்பள பாக்கிகள் இழுபறி நிலையில் இருக்கும். வெளியூர், வெளிநாடு செல்லக்கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டு அதன் மூலம் அனுகூலமான பலனை அடைய முடியும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சற்று கவனம் தேவை.

மாணவ- மாணவியர்

நீங்கள் சற்று கஷ்டப்பட்டு படித்தால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியும். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும் போது சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற பொழுது போக்குகளும் நண்பர்களின் சேர்க்கைகளும் வீண் பிரச்சினைகளை உண்டாக்கி விடும் என்பதால் எதிலும் கவனம் தேவை. உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது.

 

குரு பகவான் உத்திராட நட்சத்திரத்தில் 20-11-2020 முதல் 06-01-2021

ஜென்ம ராசிக்கு 9, 12-க்கு அதிபதியான குரு பகவான் சூரியன் நடசத்திரமான உத்திராடத்தில் ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சனி சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே முன்னேற முடியும். ராகு 2-ல், கேது 8-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவுகளில் தடைகள் நிலவுவதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யவே சிரமப்பட வேண்டியிருக்கும். பொருளாதார நெருக்கடியால் சேமிப்பு குறையும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் இழுபறியான நிலையே நீடிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கக்கூடும். நெருங்கியவர் எதிரிகளாக மாறுவார்கள். கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டால் வீண் பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். புதிய வேலை தேடுபவர்கள் தற்போதைக்கு கிடைக்கும் வேலையை பயன்படுத்திக் கொள்வது நல்லது. பணி நிமித்தமாக அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். தொழிலில் கையிலிருக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்துக் கொள்வது உத்தமம்.

குரு பகவான் திருவோண நட்சத்திரத்தில் 07-01-2021 முதல் 04-03-2021

குருபகவான் சந்திரன் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 10-ல் சனி சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதும் 2-ல் ராகு இருப்பதால் குடும்ப உறுப்பினர்களிடம் விட்டு கொடுத்து செல்வதும் நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டி வரும். மனைவி பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். பொருளாதார நிலையில் பற்றாக்குறைகள் நிலவுவதால் எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரித்து லாபங்கள் அடைய இடையூறுகள் ஏற்படும். எதிர்பார்த்துக் காத்திருந்த வாய்ப்புகள் தாமதமாகும். அதிக முதலீடு கொண்ட முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சரள நிலை இருந்தாலும் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் தடைகள் ஏற்படும். பிறரிடம் எந்தப் பொருளையும் இரவல் வாங்குவதைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவிகள் கிடைக்கும் என்றாலும் கூடுதல் பொறுப்புகளும் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும் என்பதால் தூர பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. உணவு விஷயத்ததில் கட்டுப்பாடுடன் இருப்பது சிறப்பு.

குரு பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 05-03-2021 முதல் 05-04-2021

குருபகவான் ராசியதிபதி செவ்வாய் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 10-ல் சனி சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சரிப்பதால் உடல் நலனில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியிருக்கும். மனைவி பிள்ளைகளால் மனக்குழப்பங்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தேவையற்ற இடையூறுகளை சந்திப்பீர்கள். பொருளாதார நிலையில் சில நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். வரவுக்கு மீறிய செலவுகளால் சேமிப்பு குறையும். உற்றார் உறவினர்களால் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டிவரும். திருமண சுபகாரிய முயற்சிகளை சிறிது தள்ளி வைப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை நிலவினாலும் பொருள் தேக்கம் உண்டாகாது. வேலையாட்களை அனுசரித்து செல்வது மூலம் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். அரசு வழியில் வீணான பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். வேலையாட்களையும், கூட்டாளிகளையும் அனுசரித்துச் செல்வது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சலை குறைத்து கொள்ள முடியும். எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும்.

குரு பகவான் அதிசாரமாக கும்ப ராசியில் 06-04-2021 முதல் 20-06-2021

குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் அதிசாரமாக சஞ்சரிப்பதால் உங்களுக்கு தாராள தனவரவு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான பலன்கள் உண்டாகும். எதிரிகளின் பலம் குறைந்து உங்களின் பலம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். எதிர்ப்புகள் இருந்தாலும் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் நிதானமாக செயல்பட்டால் ஓரளவுக்கு லாபத்தினை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிட்டும். வேலைப்பளு அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பைப் பெற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டிகள் மறைந்து பொருட் தேக்கங்கள் விலகும். புதிய ஆடர்கள் கிடைத்து மன மகிழ்ச்சி ஏற்படும். தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் நிறைவேறும். அதிக முதலீடு கொண்ட செயல்களில் சற்று கவனமுடன் செயல்பட்டால் லாபங்களை அடைய முடியும். இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பு மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக உங்களுக்கு இருந்த மன கவலை விலகி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கேது 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களை சற்று அனுசரித்து செல்வது சிறப்பு.

குரு பகவான் வக்ர கதியில் 21-06-2021 முதல் 17-10-2021

குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து உங்கள் தேவைகள் எல்லாம் பூர்த்தியாகும். பண விஷயத்தில் சிக்கனமாக செயல்பட்டால் ஓரளவு மேன்மைகளை அடையலாம். உடல் நிலையில் படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். எடுக்கும் காரியங்களை சுறுசுறுப்புடன் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உற்றார் உறவினர்களின் வருகையால் எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி வெற்றி கிட்டும். சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதால் நீண்ட கால வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். நண்பர்களும் தக்க சமயத்தில் ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கல் மிக சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். மனசஞ்சலங்கள் மறையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். ஆன்மீக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடுகள் அதிகரிக்கும். உடன் பிறப்புகளால் ஓரளவுக்குச் சாதகமான பலனைப் பெறுவீர்கள். கடன்கள் சற்று குறையும். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. 2-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராத இடமாற்றங்களால் சிலருக்கு குடும்பத்தை விட்டுப் பிரிய நேரிடலாம். மாணவர்களின் கல்வி திறன் சிறப்பாகவே இருக்கும்.

குரு பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 18-10-2021 முதல் 20-11-2021

குருபகவான் ஜீவன ஸ்தானத்தில் அவிட்ட நட்சத்திரத்தில் சனி சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதும் ஜென்ம ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல்நிலையில் அதிக கவனம் செலுத்துவது, எந்த செயல் செய்வது என்றாலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உங்களுக்குச் சற்று சோதனைகளை ஏற்படுத்தக் கூடிய காலமாக இருக்கும். பொருளாதார நிலையில் தடைகள், எதிர்பார்க்கும் உதவிகளில் தாமத நிலை உண்டாகக்கூடும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும். நெருங்கியவர்களிடம் வீண் வாக்குவாதங்களை சந்திக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும். மனநிம்மதி குறையும். எதிர்பாராத சில உதவிகள் கிடைத்து குடும்ப தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அதிகரிக்கும். வர வேண்டிய ஆடர்கள் தாமதப்படும். இருந்தாலும் எதையும் சமாளித்து விடுவீர்கள். கூட்டாளிகள் ஆதரவு மூலம் சிக்கல்கள் குறையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடன்களை வசூலிக்க இடையூறுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் உங்கள் தனித்திறமையால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். எதிர்பாராத இடமாற்றங்களால் அடிக்கடி பயணங்களை எதிர்கொள்ள நேரிடும்.

 

பரிகாரம்

மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு 10--ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குரு, தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது. ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்வது, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது நல்லது. புஷ்பராக கல் அணிவது நல்லது.

உங்களுக்கு சனி 10--ல் சஞ்சரிப்பதால் சனிக்கிழமைகளில் விரதமிருந்து நவகிரகங்களில் உள்ள சனி பகவானுக்கு அர்ச்சனை செய்வது, கருப்பு துணியில் எள்ளை மூட்டை கட்டி, அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றுவது நல்லது. கருப்புநிற ஆடை அணிதல், கைக்குட்டை பயன்படுத்துவது நல்லது. எள், கடுகு, தோல் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், குடை, அடுப்பு போன்றவற்றை ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு தானம் செய்யலாம்.

உங்கள் ராசிக்கு 2-ல் ராகு 8-ல் கேது சஞ்சரிப்பதால் ராகுவுக்கு பரிகாரமாக ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது நல்லது. கேதுவுக்கு பரிகாரமாக வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9,                 நிறம் - ஆழ்சிவப்பு                                 கிழமை - செவ்வாய்

கல் - பவளம்               திசை - தெற்கு                           தெய்வம்முருகன்

No comments: