கும்பம் - குரு பெயர்ச்சி பலன் - 2020 - 2021
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33
வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
கும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
உயர்ந்த பண்பும், நிறைந்த பொறுமையும், எல்லோரிடத்திலும் அன்பாகப் பழகக்கூடிய தன்மையும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2, 11-க்கு அதிபதியும் பொன்னவன் எனப் போற்றப்படக்கூடிய குருபகவான் திருக்கணிதப்படி வரும் 20-11-2020 முதல் 20-11-2021 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 15-11-2020 முதல் 13-11-2021 வரை) விரைய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். அது மட்டுமின்றி உங்கள் ராசியாதிபதி சனி 12-ல் சஞ்சரித்து தற்போது ஏழரைச்சனியில் விரயச்சனி நடைபெறுகிறது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். சர்ப்ப கிரகமான ராகு 4-ல் கேது 10-ல் சஞ்சரிப்பதால் அதிகப்படியான வேலைபளுவால் அலைச்சல், உடல் சோர்வு, நேரத்திற்கு சாப்பிட முடியாத நிலை, இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். பண வரவுகள் சற்று சுமாராக இருக்கும் என்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது, ஆடம்பரத்தை குறைத்து கொள்வது நல்லது. பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். குடும்பத்தில் உள்ளவர்களால் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். உற்றார், உறவினர்களிடையே வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மன நிம்மதி குறையும். முடிந்தவரை பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமலும், குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாமலும் இருப்பது உத்தமம்.
ஜென்ம ராசிக்கு 12-ல் சஞ்சரிக்கும் குரு தனது சிறப்பு பார்வையாக உங்கள் ராசிக்கு 4, 6, 8 ஆம் வீடுகளை பார்ப்பதால் அசையும் அசையா சொத்து வழியில் சுப செலவுகள், எதையும் எதிர் கொள்ளும் திறன், உடல் பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனே சரியாகும் யோகம் உண்டாகும்.
தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. மறைமுக எதிர்ப்புகள், தொழில் போட்டி காரணமாக உங்களுக்கு பொருட் தேக்கம் ஏற்படும். அதிக முதலீடு கொண்ட செயல்களில் எச்சரிக்கையுடன் இருப்பது, அப்படி செய்தே ஆக வேண்டும் என்றால் உங்கள் பெயரில் செய்யாமல் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் செய்வது நல்லது. கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதால் ஓரளவுக்கு அனுகூலமான பலனைப் பெறலாம். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் குடும்பத்தை விட்டுப் பிரியக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். வேலைப்பளு காரணமாக பணியில் அதிக நேரம் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும் என்பதால் முடிந்த வரை தூர பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது.
ஜென்ம ராசிக்கு 12-ல் சஞ்சரிக்கும் குரு வரும் 06-04-2021 முதல் 14-09-2021 வரை அதிசாரமாக ஜென்ம ராசியில் சஞ்சரிக்க இருப்பதால் ஒரளவுக்கு அனுகூலப்பலனை அடைய முடியும். திருமண சுபகாரிய முயற்சிகளுக்கான பேச்சு வார்த்தைகளில் தேவையற்ற இடையூறு ஏற்பட்டாலும் ஏப்ரலுக்கு பிறகு சற்று சாதகமான பலனை பெற முடியும்.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டாலும் மருத்துவச் செலவுகளுக்கு பின் உடனே குணமாகும். மனைவி, புத்திரர்களின் உடல்நிலை சுமாராக இருக்கும். தேவையற்ற மருத்துவ செலவுகள் ஏற்படலாம் என்பதால் மருத்துவ காப்பீடு எடுப்பது நல்லது. எதிர்பாராத பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். தேவையற்ற மன சஞ்சலங்களும், வீண் செலவுகளும் ஏற்படக்கூடும் என்றாலும் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும்.
குடும்பம் பொருளாதார நிலை
குடும்ப வாழ்வில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றும் என்பதால் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. பொருளாதார நிலை சற்று சாதகமாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் நற்பலன் உண்டாகும். திருமண சுபகாரியங்களில் ஏப்ரலுக்கு பிறகு நல்லது நடக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் அமையும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். புதிய பொருட் சேர்க்கைகளால் உங்களது கை இருப்பு குறையும்.
கொடுக்கல்- வாங்கல்
கமிஷன் ஏஜென்சி போன்றவற்றில் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே லாபம் காண முடியும். பண விஷயங்களில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்த்து விடுவது உத்தமம். உங்களுக்கு இருக்கும் வம்பு வழக்குகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். கொடுத்த கடன்கள் வசூலாக கால தாமதம் ஏற்படும். அதிக முதலீடு கொண்ட செயல்களில் கவனத்துடன் இருப்பது நல்லது.
தொழில், வியாபாரம்
தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. எதிர்பார்க்கும் லாபங்களைப் பெற இயலாது. தொழிலாளர்களுக்கு சம்பளப் பாக்கிகள் உண்டாவதால் அவர்களால் வீண் பிரச்சினைகளை எதிர் கொள்ள நேரிடும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். எதிலும் நீங்கள் முன் நின்று செயல்பட்டால் மட்டுமே பிரச்சினைகளை சமாளிக்க முடியும்.
உத்தியோகம்
உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் தாமதப்பட்டாலும், கௌரவமான பதவிகளைப் பெற முடியும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது கவனமாக இருப்பது நல்லது. உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பால் உங்களின் வேலைப்பளு சற்று குறையும். பணியில் நிம்மதியான நிலைகள் ஏற்பட்டாலும் சில நேரங்களில் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்கக்கூடிய சூழ்நிலைகளும் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது.
பெண்கள்
எடுக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் செயல்பட்டால் நல்லது கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, தூக்கமின்மை, மன உளைச்சல்கள் ஏற்படக்கூடும். நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பணவரவுகளில் தடைகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் வீண் செலவுகளை குறைப்பது நல்லது. பிறருக்குக் கொடுக்கும் பணத்தையும் எளிதில் வசூலிக்க முடியாத நிலைகள் ஏற்படக்கூடும். திருமண சுபகாரிய முயற்சிகளில் ஏப்ரலுக்கு பிறகு நல்லது நடக்கும். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு சற்றே அதிகரிக்கும்.
அரசியல்
அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை காப்பாற்றிக் கொள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது நல்லது. மக்களின் ஆதரவுகள் ஒரளவுக்கு திருப்தியாக இருப்பதால் எந்த பிரச்சினைகளையும் எதிர்கொள்ள கூடிய ஆற்றல் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அதிக நேரம் உழைக்க நேரிடும். பத்திரிக்கை செய்திகளாலும் தேவையற்ற வதந்திகளாலும் மன நிம்மதி குறையும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் சூழ்நிலை ஏற்படும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சுமாராக தான் இருக்கும். போட்ட முதலீட்டினை எடுக்க அரும்பாடு படவேண்டி வரும். நீர் வரத்து போதிய அளவு இருக்கும் என்றாலும் வேலையாட்கள் சரியான நேரத்திற்கு வேலைக்கு கிடைக்க மாட்டார்கள். வாய்க்காள் வரப்பு பிரச்சினைகளால் வீண் விவாதங்கள் ஏற்படும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.
கலைஞர்கள்
எதிர்பார்த்து காத்திருந்த பட வாய்ப்புகள் ஓரளவுக்கு கிடைக்கும். பொருளாதார நெருக்கடிகளால் சுகவாழ்வு சொகுசு வாழ்வு பாதிப்படையும். வரவேண்டிய பணத் தொகைகளும் சற்று தாமதப்படுவதால் சில நேரங்களில் கடன் வாங்க நேரிடும். உடனிருப்பவர்களிடம் பழகும் போதும், பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுக்கும் போதும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. தேவையற்ற கிசு கிசுக்களால் சற்று மன நிம்மதி குறையும்.
மாணவ- மாணவியர்
கல்வியில் சற்று அதிக கவனம் எடுக்க வேண்டிய காலமாகும். மந்த நிலை, ஞாபக மறதி போன்றவற்றால் மதிப்பெண்கள் குறையும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையால் மனது அலைபாய கூடிய சூழ்நிலை உண்டாகும் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது, பெற்றோர் சொல்படி நடப்பது நல்லது. விளையாட்டில் கவனம் தேவை.
குரு பகவான் உத்திராட நட்சத்திரத்தில் 20-11-2020 முதல் 06-01-2021
உங்கள் ராசிக்கு 12-ல் குருபகவான் சூரியன் நட்சத்திரத்தில் சனி சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள், கை கால் வலி போன்றவை ஏற்படலாம் என்பதால் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அவர்களால் ஓரளவுக்கு அனுகூலங்கள் கிடைத்து உங்களது குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். பணவரவுகளில் ஏற்ற இறக்க நிலை இருக்கும் என்பதால் சிக்கனமாக இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. கொடுக்கல்- வாங்கலில் சுமாரான நிலை இருக்கும். பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் சற்று நெருக்கடிகள் இருந்தாலும் உங்களின் திறமையால் போட்ட முதலீட்டை எடுத்து விடுவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலங்களை அடைய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு சற்று அதிகமாக இருந்தாலும் அதிகாரிகளின் ஆதரவால் மன நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது உத்தமம்.
குரு பகவான் திருவோண நட்சத்திரத்தில் 07-01-2021 முதல் 04-03-2021
குருபகவான் சனி சேர்க்கைப் பெற்று சந்திர நட்சத்திரத்தில் உங்கள் ராசிக்கு 12-ல் சஞ்சரிப்பது அனுகூலமான அமைப்பு என்று கூற முடியாது என்பதால் இக்காலங்களில் ஏற்ற இறக்கமான பலன்களே உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மன அமைதி குறையும். உங்கள் ராசிக்கு 4-ல் ராகு சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க தடை, தேவையற்ற அலைச்சல், டென்ஷன்களும் ஏற்படும். முடிந்த வரை பயணங்களை தவிர்த்து விடுவது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே இருக்ககூடிய பிரச்சினைகளை சமாளிக்க முடியும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய தேவையற்ற வாக்குவாதங்களால் ஒற்றுமை குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. நம்பியவர்களே துரோகம் செய்ய முயற்சிப்பார்கள் என்பதால் உடனிருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.
குரு பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 05-03-2021 முதல் 05-04-2021
குருபகவான் செவ்வாய் நட்சத்திரத்தில் உங்கள் ஜென்ம ராசிக்கு 12-ல் சனி சேர்க்கைப் பெற்று சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்றே சோர்வு மந்தநிலை உண்டாகும். முன்கோபத்தை குறைப்பது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். உங்கள் ராசிக்கு 4-ல் ராகு, 10-ல் கேது சஞ்சரிக்க இருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் அசையும் அசையா சொத்து வகையில் சுபசெலவு, அலைச்சல், எதிலும் நீங்கள் முன் நின்று செயல்பட வேண்டிய நிலை உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும். வேலையாட்களால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் இடையூறுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் அதிகாரிகளிடம் நல்ல பெயரை எடுக்க முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற கடினமாக முயற்சித்தால் மட்டுமே நற்பலன் கிட்டும்.
குரு பகவான் அதிசாரமாக கும்ப ராசியில் 06-04-2021 முதல் 20-06-2021,
உங்கள் ராசியில் குருபகவான் அதிசாரமாக சஞ்சாரம் செய்வதால் உங்களுக்குள்ள வீண் செலவுகள் குறைந்து பொருளாதார ரீதியாக மேன்மைகளை அடைவீர்கள். ஜென்ம ராசிக்கு 12-ல் சனி சஞ்சரிப்பதாலும், 4-ல் ராகு, 10-ல் கேது சஞ்சாரம் செய்வதாலும் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது, கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடப்பது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் மன நிம்மதி உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்கு பின் அனுகூலம் ஏற்படும். மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய யோகம் உண்டு. பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சினைகள் சற்றே விலகும். புத்திர வழியில் சிறுசிறு வீண் செலவுகளை சந்திப்பீர்கள். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதி இல்லை. தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் தோன்றினாலும் எதிர்பார்த்த லாபம் கிட்டும். கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு கடந்த கால நெருக்கடிகள் குறைந்து ஓரளவுக்கு மேன்மைகள் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் நினைத்த மதிப்பெண்களை பெற முடியும்.
குரு பகவான் வக்ர கதியில் 21-06-2021 முதல் 17-10-2021
குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்து பூர்த்தியாகும். சனி பகவானும் இக்காலங்களில் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது உத்தமம். ராகு 4-ல் சஞ்சரிப்பதால் அசையும் அசையா சொத்துகளால் எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குபின் வெற்றி கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் சற்று அதிகரிக்கும் என்றாலும் எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். மாணவர்களுக்கு கல்வியில் மந்தநிலை நிலவும் என்பதால் அதிக அக்கறை எடுத்து கொள்ள வேண்டி வரும்.
குரு பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 18-10-2021 முதல் 20-11-2021
குருபகவான் செவ்வாய் நட்சத்திரத்தில் உங்கள் ராசிக்கு 12-ல் சனி சேர்க்கைப் பெற்று சஞ்சாரம் செய்வது அனுகூலமற்ற அமைப்பு என்பதால் எந்தவொரு முயற்சிகளிலும் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே முன்னேற்றத்தை அடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்த நிலை ஏற்படலாம் என்பதால் நேரத்திற்கு உணவு உண்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் எதிர்பாராத வீண் விரயங்களை சந்திப்பீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதில் இடையூறுகள் ஏற்படும். அசையும் அசையா சொத்துகளை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது கவனமுடன் செயல்படுவது உத்தமம். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சற்று போட்டிகளை எதிர்கொள்ள நேரிடும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். வேலைப்பளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனம் தேவை.
பரிகாரம்
கும்ப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 12-ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குரு, தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது.
உங்களுக்கு சனி பகவான் ஜென்ம ராசிக்கு 12-ல் சஞ்சரித்து ஏழரைச் சனியில் விரய சனி நடப்பதால் சனிக்கிழமை தோறும் சனிபகவானை வழிபடுவது, நல்லெண்ணெய் தீபமேற்றுவது, ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது, சனிப்ரீதியாக அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது போன்றவற்றால் சனியால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறைந்து நன்மைகள் உண்டாகும்.
உங்களுக்கு ராகு 4-லும் கேது 10-லும் சஞ்சரிப்பதால் ராகு-கேதுவுக்கு பரிகாரமாக நவகிரகங்களில ராகுவுக்கு மந்தாரை மலர்களாலும் கேதுவுக்கு செவ்வல்லி மலர்களாலும் அர்ச்சனை செய்வது நல்லது. துர்கையம்மனையும் விநாயகரையும் வழிபடுவது மிகவும் நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 5,6,8 கிழமை - வெள்ளி, சனி திசை - மேற்கு
No comments:
Post a Comment