Saturday, January 2, 2021

புத்தாண்டு பலன் - 2021 - தனுசு

 புத்தாண்டு பலன் & 2021 - தனுசு

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

 

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1&ஆம் பாதம்.

எதையும் சிந்தித்து சீர்தூக்கி பார்த்து அறியும் திறமை கொண்ட தனுசு ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். வரும் 2021&ஆம் ஆண்டில் ராசியாதிபதி குரு வரும் 06&04&2021 வரை மற்றும் 14&09&2021 முதல் 20&11&2021 வரை தன ஸ்தானமான 2&ல் சஞ்சரிப்பதும், ருண ரோக ஸ்தானமான 6&ல் ராகு வலுவாக சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். உங்களது பொருளாதார நிலை சிறப்பாக இருந்து கடந்த கால கடன்கள் எல்லாம் படிப்படியாக குறையும். கணவன்& மனைவியிடையே மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நிலவும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வருவதால் சிறப்பான மணவாழ்க்கை அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம், இருக்கும் வீட்டை புதுப்பிக்கும் அமைப்பு உண்டாகும். கொடுக்கல்& வாங்கலில் சரளமான நிலை உண்டாகி பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் கடந்த கால தேக்கங்கள் விலகி படிப்படியான முன்னேற்றங்கள் ஏற்படும். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள், வம்பு, வழக்குகள் எல்லாம் குறைந்து எதிலும் நிம்மதியுடன் செயல்பட முடியும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புகள் மூலம் சிறப்பான நற்பலன்களைப் பெற முடியும். உத்தியோகத்தில் இருந்த பணி அழுத்தம் முழுமையாக விலகி பதவி உயர்வுகளை பெற முடியும். நீண்ட நாட்களாக உள்ள பிரச்சினைகள் எல்லாம் விலகி நிம்மதி ஏற்படும். குறிப்பாக உங்கள் தனி திறமைகளை வெளிபடுத்தி சமுதாயத்தில் ஒரு உயர்வான நிலையை அடையும் யோகம் உண்டாகும்.

இந்த ஆண்டு முழுவதும் சனி 2&ல் சஞ்சரித்து உங்களுக்கு ஏழரைச்சனியில் பாதச்சனி நடைபெறுவதால் அலைச்சல் டென்ஷன் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறிது பாதிப்புகள், உடல் சோர்வு ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. நெருங்கியவர்களிடம் விட்டு கொடுத்து செல்வது பேச்சில் நிதானமாக செயல்படுவது நல்லது.

தன ஸ்தானத்தில் தொடக்கத்தில் சஞ்சரிக்கும் குரு வரும் 06&04&2021 முதல் 14&09&2021 வரை மற்றும் 20&11&2021 முதல் முயற்சி ஸ்தானமான 3&ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதும் சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இக்காலத்தில் தொழில், உத்தியோக ரீதியாக நெருக்கடிகள், பணவரவில் இடையூறு, குடும்பத்தில் நிம்மதி குறைவுகள் போன்றவை ஏற்படலாம். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். எதிலும் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்& வாங்கல் போன்றவற்றில் நம்பியவர்களே ஏமாற்ற கூடிய சூழ்நிலைகள் உண்டாக கூடும் என்பதால் எதிலும் கவனம் தேவை. இந்தாண்டு முழுவதும் ராகு உங்கள் ராசிக்கு 6&ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர் கொள்ளும் வலிமை இருக்கும்.

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடந்த கால மருத்துவ செலவுகள் சற்று குறைந்து மன நிம்மதி ஏற்படும். நெருங்கியவர்களால் பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து விடக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் வீண் அலைச்சல் டென்ஷன்களை குறைத்து கொள்ள முடியும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது

குடும்பம் பொருளாதார நிலை

ஆண்டின் தொடக்கத்தில் உங்களது பொருளாதார நிலை சிறப்பாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். நெருங்கியவர்களின் ஆதரவு மனநிம்மதியை உண்டாக்கும். திருமண சுபகாரியங்கள் கை கூடும். ஏப்ரல் மாதத்திற்கு பிறகு குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். முன்கோபத்தைக் குறைத்து கொண்டு எதிலும் நிதானமாக செயல்பட்டால் சாதகப்பலனைப் பெறலாம். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது

கொடுக்கல்& வாங்கல்

கொடுக்கல்& வாங்கல்களில் சரளமான நிலை இருக்கும். பெரிய அளவில் லாபத்தைப் பெற முடியாவிட்டாலும் போட்ட முதலீடுகளுக்கு நஷ்டம் ஏற்படாது. ஏப்ரல் மாதம் முதல் சற்று பணவரவுகளில் நெருக்கடிகள் அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது

தொழில் வியாபாரம்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு புதிய முயற்சிகளிலும் நல்ல லாபம் கிட்டும். பயணங்களால் ஒரளவுக்கு நற்பலனை பெற முடியும். எதிர்பாராத புதிய வாய்ப்புகள் தேடி வந்து லாபம் தரும். ஏப்ரல் மாதத்திற்கு பிறகு முடிந்த வரை கூட்டாளிகளையும் உடன் இருக்கும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் உங்கள் தனி திறமையால் அடைய வேண்டிய லாபத்தை அடைவீர்கள்

உத்தியோகம்

ஆண்டின் தொடக்கத்தில் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளைப் பெற முடியும். உடன் பணிபுரிபவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து வேலைபளு குறையும். உயர் அதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுக்க முடியும் 06&04&2021 முதல் 14&09&2021 வரை உள்ள காலத்தில் உங்களுக்கு பணியில் தேவையற்ற பிரச்சினைகளால் நெருக்கடிகள் ஏற்படலாம் என்பதால் நீங்கள் சற்று பொறுமையுடன் செயல்படுவது நல்லது.

பெண்கள்

ஆண்டின் தொடக்கத்தில் பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஏப்ரல் மாதத்திற்குப் பின் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும். மணமாகாத கன்னியருக்கு சிறப்பான மண வாழ்க்கை அமையும். சிலர் அழகான புத்திர பாக்கியத்தை அடைவர். கணவன்& மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக் கூடிய காலம் என்பதால், விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

அரசியல்

ஆண்டின் தொடக்கத்தில் மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். பணவரவுகள் தாராளமாக இருக்கும் என்றாலும் கட்சிப் பணிக்காக எதிர்பாராத வீண் செலவுகளைச் சந்திக்க நேரிடும். ஆடம்பர செலவுகளை சற்று குறைத்து கொள்வது நல்லது. பிறரின் ஏச்சுப் பேச்சுக்களுக்கு செவி சாய்க்காமல், தங்கள் காரியங்களில் கவனத்துடன் செயல்படுவது நல்லது. ஏப்ரல் மாதத்திற்கு பிறகு நீங்கள் கண்டிப்பாக மேடைப் பேச்சுகளிலும், மற்றவர்களிடமும் பேசும் போது கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்கப் பெறுவதால் உழைப்பிற்கேற்றப் பலனைப் பெறுவீர்கள். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகளில் எதிர்பார்க்கும் கடனுதவிகள் தாமதப்படும். வாய்கால் வரப்பு பிரச்சினைகளால் சிறுசிறு வம்பு வழக்குகளை சந்திப்பீர்கள். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் ஆண்டின் தொடக்கத்தில் அனுகூலப்பலன் உண்டாகும்.

கலைஞர்கள்

உங்களின் திறமைகளுக்கேற்ற கதாபாத்திரங்கள் கிடைக்கும் என்றாலும் கையில் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்வது நல்லது. பணவரவுகள் தாராளமாக இருக்கும். ரசிகர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். ஏப்ரலுக்கு பிறகு பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவக் கூடும் என்பதால் ஆடம்பரமாக செலவுகள் செய்வதைக் குறைத்துக் கொள்வது நல்லது.

மாணவ மாணவியர்

கல்வியில் நல்ல ஈடுபாட்டுடன் செயல்பட்டு சிறப்பான மதிப்பெண்களை பெற முடியும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். நல்ல நண்பர்களின் நட்பு உங்களுக்கு மேலும் உற்சாகத்தை அளிக்கும். சில நேரங்களில் உடல் சோர்வு ஞாபகமறதி ஏற்படலாம் என்பதால் படிப்பில் சற்று கவனம் செலுத்த வேண்டியிருக்கும். பயணங்களில் கவனம் தேவை.

 

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் & 1,2,3,9             நிறம் & மஞ்சள், பச்சை     கிழமை & வியாழன், திங்கள்

கல் & புஷ்ப ராகம்      திசை & வடகிழக்கு      தெய்வம் & தட்சிணா மூர்த்தி

No comments: