Saturday, January 2, 2021

புத்தாண்டு பலன் - 2021 - கும்பம்

 புத்தாண்டு பலன் & 2021 - கும்பம்

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

 

கும்பம்  அவிட்டம் 3,4&ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3&ஆம் பாதங்கள்.

பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாத உயர்ந்த பண்பு கொண்ட கும்ப ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். வரும் வருடத்தில் நீங்கள் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. உங்கள் ராசியாதிபதி சனி விரய ஸ்தானமான 12&ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு ஏழரை சனியில் விரயச்சனி தொடருகிறது. இதுமட்டுமின்றி ஆண்டின் தொடக்கத்தில் விரய ஸ்தானமான 12&ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் குருபகவான் வரும் 06&04&2021 முதல் 14&09&2021 வரை மற்றும் 20&11&2021 முதல் ஜென்ம ராசியிலேயே சஞ்சாரம் செய்ய இருப்பதும் சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாவதால் தேவையற்ற வீண் செலவுகளை எதிர் கொள்வீர்கள். உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. பொருளாதார நிலை சற்று சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. அதிக முதலீடு கொண்ட செயல்களில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் மட்டுமே ஏற்படும் நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க முடியும்.

தொழில் வியாபாரத்தில் கடினமாக உழைத்தால் மட்டுமே அனைத்தையும் சமாளிக்க முடியும். இவ்வருடத்தில் உங்கள் பெயரில் தொழில் ரீதியாக முதலீடு செய்வதை தவிர்ப்பது, அப்படி செய்தே ஆக வேண்டும் என்ற நிலை இருந்தால் உங்கள் பெயரில் செய்யாமல் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் செய்வது நல்லது. வேலையாட்களையும் கூட்டாளிகளையும் அனுசரித்து செல்வது நல்லது.

உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. வேலைபளு காரணமாக உடல் அசதி, தேவையற்ற மன கவலை ஏற்படும். சில நேரங்களில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் நீங்கள் பொறுப்பேற்க கூடிய சூழ்நிலை ஏற்படும். தேவையற்ற இடமாற்றங்கள் அலைச்சலை ஏற்படுத்தினாலும் அதன் மூலம் ஒரு சில ஆதாயங்கள் கிடைக்கும்.

உங்களுக்கு இவ்வாண்டில் சர்ப கிரகமான ராகு 4&ஆம் வீட்டிலும், கேது 10&ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். குரு பகவான் வரும் 06&04&2021 வரை மற்றும் 14&09&2021 முதல் 20&11&2021 வரை ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதன் மூலம் 7&ஆம் வீட்டை பார்ப்பார் என்பதால் மணவயதை அடைந்தவர்களுக்கு சில தடைகளுக்குப் பிறகு சுபகாரியங்கள் கைகூடும். அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் வீண் செலவுகள் உண்டாக கூடும் என்பதால் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கணவன்& மனைவி விட்டு கொடுத்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும்.

 

உடல் ஆரோக்கியம்

தேவையற்ற அலைச்சல், டென்ஷன் போன்றவற்றால் உடல் அசதி ஏற்படும். ஆரோக்கிய பாதிப்புகள் இருந்தாலும் எதிலும் சுறுசுறுப்பாக ஈடுபடக் கூடிய ஆற்றல் உண்டாகும். ஆரோக்கிய ரீதியான செலவுகளை சமாளிக்க மருத்துவ காப்பீடு எடுத்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்கள் ஏற்படுத்தும் பிரச்சினைகளால் நிம்மதி குறைவுகள் ஏற்பட்டாலும் எதையும் எதிர்கொள்ள கூடிய வலிமை உண்டாகும்.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்& மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருந்தாலும் எதிர்பாராத வீண் விரயங்களால் கடன்கள் ஏற்படும். ஆடம்பர செலவுகளை சற்று குறைத்து கொள்வது நல்லது. திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே அனுகூலப் பலனை அடைய முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை.

கொடுக்கல்& வாங்கல்

கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சிறுசிறு பிரச்சினைகளை சந்திப்பீர்கள். கமிஷன், ஏஜென்சி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்பவர்கள் எந்தவொரு புதிய முயற்சியிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உங்களுக்கு இருந்து வந்த வம்பு வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும். பெரிய மனிதர்களின் தொடர்புகள் மகிழ்ச்சியளிக்கும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டி பொறாமைகளை சமாளிக்க வேண்டி இருக்கும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் போன்றவை யாவும் உண்டாகும் என்றாலும் நண்பர்கள் மூலம் ஓரளவுக்கு ஆதாயங்களைப் பெற முடியும். எடுக்கும் புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. புதிய நவீன கருவிகள் வாங்குவதற்காக எதிர்பார்க்கும் கடனுதவிகள் சற்று தாமதமாக கிடைக்கும்

உத்தியோகம்

மேலதிகாரிகளின் கெடுபிடிகளால் வேலைபளு அதிகரிக்கும். நிறைய நேரம் உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள், இடமாற்றங்கள், ஊதிய உயர்வுகள் யாவும் தடை தாமதங்களுக்குப் பின்பே கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவர்கள் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. எதிர்பாராத இட மாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வது மூலம் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களிடம் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். மங்களகரமான சுபகாரியங்கள் சில தடைகளுக்குப்பின் கைகூடி மகிழ்ச்சியை அளிக்கும்.

அரசியல்

கட்சி பணிக்காக நிறைய வீண் செலவுகளை செய்ய நேரிடும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் ஏற்படும் என்பதால் முடிந்தவரை பயணங்களை தவிர்ப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றியை பெற முடியும். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். மக்களின் ஆதரவைப் பெற அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வது நல்லது. எதிர்பார்க்கும் பதவிகள் தாமதப்படும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். அரசு வழியில் எதிர் பார்க்கும் உதவிகள் தாமதமாக கிடைக்கும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகளை சமாளித்து விடுவீர்கள். பூமி மனை வாங்கும் முயற்சிகளில் சற்று கவனம் தேவை. முடிந்த வரை தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. விளைபொருளுக்கேற்ற விலையினை சந்தையில் பெற முடியாமல் போகும்.

கலைஞர்கள்

கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பார்த்து கொள்வது நல்லது. தொழில் ரீதியாக நிறைய பிரச்சினைகளையும் போட்டிகளையும் சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். உங்கள் திறமைகளுக்கு தீனி போடும் வகையில் நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த கதாபாத்திரங்களை பிறர் தட்டி செல்வதால் சற்றே நிம்மதி குறைவு உண்டாகும். பொருளாதார நிலை எற்ற இறக்கமாக இருக்கும்.

மாணவ& மாணவியர்

கல்வி பயிலுபவர்கள் சற்று கடின முயற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி வாகை சூட முடியும். நண்பர்களால் நற்பலன்கள் கிடைக்கும்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் & 5,6,8              கிழமை & வெள்ளி, சனி           திசை & மேற்கு

கல் & நீலக்கல்  நிறம் & வெள்ளை, நீலம்           தெய்வம் & ஐயப்பன்

No comments: