Saturday, January 2, 2021

புத்தாண்டு பலன் - 2021 - மிதுனம்

 புத்தாண்டு பலன் & 2021 - மிதுனம்

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

 

மிதுனம் மிருகசீரிஷம் 3,4&ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3&ஆம் பாதங்கள்.

மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும், சமூக பணிகளில் ஆர்வமும் கொண்ட மிதுன ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். வரும் 2021-&ஆம் ஆண்டு தொடக்கத்தில் பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் அஷ்டம ஸ்தானமான 8&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும், சனி பகவான் 8&ல் சஞ்சரிப்பதால் அஷ்டம சனி நடைபெறுவதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்ள வேண்டிய காலமாக வரும் நாட்கள் இருக்கும். பொருளாதார ரீதியாக ஒரு சில உதவிகள் கிடைத்தாலும் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். தேவையற்ற அலைச்சலால் உடல் அசதி, மன நிம்மதி குறைவு ஏற்படும்.

குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் அதனை எதிர் கொள்ளும் பலம் ஏற்படும். அசையும், அசையா சொத்துகள் வழியில் தேவையற்ற வீண் செலவுகள் உண்டாகும். நெருங்கியவர்கள் உங்களுக்கு தக்க நேரத்தில் உதவி செய்வார்கள். கொடுக்கல்& வாங்கலில் பெரிய தொகையை கையாளும் போது சற்று கவனமாக இருப்பது நல்லது. பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முன் கோபத்தை குறைப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் இருப்பது நல்லது.

தொழில் வியாபாரத்தில் தேவையற்ற நெருக்கடிகள் நிலவும் என்பதால் எதிலும் நீங்கள் முன் நின்று செயல்பட்டால் மட்டுமே அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலைபளு சற்று கூடுதலாக இருக்கும். எது எப்படி இருந்தாலும் இவ்வாண்டு சர்ப்ப கிரகமான கேது 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். அஷ்டம சனி நடைபெற்றாலும் சனிபகவான் உங்கள் ராசியாதிபதி புதனுக்கு நட்பு கிரகம் என்பதால் பெரிய கெடுதல்களை செய்ய மாட்டார்.

இவ்வாண்டில் வரும் 06&04&2021 வரை மற்றும் 14&09&2021 முதல் 20&11&2021 வரை பொன்னவன் என போற்றப்படும் குருபகவான் உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. நீங்கள் எதிர்பார்க்கும் பண வரவுகள் தக்க நேரத்தில் கிடைக்காமல் தாமதம் ஏற்படும் காலமாக இருக்கும்.  

குரு பகவான் வரும் 06&04&2021 முதல் 14&09&2021 வரை மற்றும் 20&11&2021 முதல் உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9&ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் வாழ்வில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். திருமணம் போன்ற சுபகாரியங்களில் இருந்த தடைகள் விலகி அனைத்தும் தடபுடலாக நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புத்திர பாக்கியம் உண்டாக கூடிய அமைப்பு கொடுக்கும். உங்களுக்கு இருந்து வந்த வம்பு வழக்குகளில் நல்லதொரு தீர்வு உண்டாகும். கொடுக்கல்& வாங்கலில் இருந்த நெருக்கடிகள் மறைந்து சரளமான நிலை ஏற்படும். தொழில் வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் இடமாற்றங்களை பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். ஆண்டின் தொடக்கத்தில் எதிலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு முன்னேற்றங்களை அடைய முடியும்.

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் ஆண்டின் தொடக்கத்தில் சில பாதிப்புகள் ஏற்பட்டாலும் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு ஒரளவுக்கு மேன்மைகள் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் சற்று பொறுமையுடன் செயல்படுவது, பயணங்கள் மேற்கொள்ளும் போது சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து முன்னேறுவீர்கள்.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்பத்தில் ஆண்டின் முற்பாதியில் தேவையற்ற மனக்கவலைகள், சண்டை சச்சரவுகள் ஏற்பட்டாலும் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு மகிழ்ச்சியும் சுபிட்சமும் அதிகரிக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். பணவரவுகள் ஒரளவுக்கு அமைந்து கடன்கள் படிப்படியாக குறையும். உற்றார் உறவினர்களிடையே நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும்.

கொடுக்கல்& வாங்கல்

காண்ட்ராக்ட் கமிஷன், ஏஜென்ஸி போன்ற துறைகளில் உள்ளவர்கள் ஆண்டின் முற்பாதியில் தேவையற்ற பிரச்சினைகள், பணவரவில் தடைகள் போன்றவற்றை சந்தித்தாலும் ஏப்ரல் மாதம் முதல் தாராள தன வரவுகள் அமைவதால் கொடுக்கல்& வாங்கலில் சரள நிலைகள் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். உங்களுக்கு இருந்து வந்த வம்பு வழக்குகள் பைசலாகும். கடன்களும் தடையின்றி வசூலாகும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் ஆண்டின் முற்பாதியில் நிறைய போட்டி பொறாமைகளும் மறைமுக எதிர்ப்புகளும் நிலவினாலும் ஏப்ரல் மாதம் ஏற்படவுள்ள குரு மாற்றத்திற்கு பிறகு நல்ல வளர்ச்சி உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய நவீன கருவிகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.

பெண்கள்

உடல் ஆரோக்கியம் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் ஆண்டின் முற்பாதியில் தடைகள் நிலவினாலும் ஏப்ரல் மாதம் முதல் தடைகள் விலகும். சுபகாரியங்கள் கைகூடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி நிலவும். பணவரவுகள் ஒரளவுக்கு அமைந்து குடும்பத் தேவைகள் பூர்த்தி ஆகும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் சாதகமானப் பலனை அடைய முடியும்.

உத்தியோகம்

ஆண்டின் தொடக்கத்தில் எதிலும் தடை தாமதங்களையும் வீண் பழிச் சொற்களையும் சந்தித்தாலும் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு அனைத்து பிரச்சினைகளும் பகலவனை கண்ட பனிபோல் விலகி எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்ககும். சிலர் வேண்டிய இடமாற்றங்களைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். உத்தியோக ரீதியாக சிலருக்கு அலைச்சல்கள் சற்று அதிகரிக்க கூடும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடப்பது மிகவும் உத்தமம்.

அரசியல்

இந்த ஆண்டின் முற்பாதியில் நீங்கள் எதிலும் சிந்தித்து செயல்படுவதும், மேலிடத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும் நல்லது. மக்களின் ஆதரவைப் பெற கொஞ்சம் அதிக முயற்சிகளை மேற்கொள்வது மிகவும் உத்தமம். ஏப்ரல் மாதம் முதல் உங்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணவரவுகள் சிறப்பாக அமையும். எதிர்பாராத மாண்புமிகு பதவியும் கிட்டும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்தாலும், புழு பூச்சிகளின் தொல்லைகளால் வீண் விரயங்கள் அதிகரிக்கும். எதிர்பாராமல் ஏற்படக் கூடிய வீண் செலவுகளை சமாளிக்க கடன் வாங்க வேண்டி வரும். ஏப்ரல் மாதம் முதல் எதிர்பார்க்கும் லாபங்களை பெற முடியும். உழைப்பிற்கேற்ற அனுகூலமானப் பலன்கள் கிட்டும். அரசு வழியில் எதிர்பாராத பண உதவிகள் கிடைக்கப் பெற்று கடன்கள் குறையும்.

கலைஞர்கள்

இந்த ஆண்டின் முற்பாதியில் புதிய வாய்ப்புகளில் தடை, தேவையற்ற பிரச்சினைகளில் சிக்கி பத்திரிக்கை மூலம் அவமானங்கள் உண்டாக கூடிய நிலை ஏற்பட்டாலும் ஏப்ரல் மாதம் முதல் உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் படிப்படியாக விலகி முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். இசை, நடனத் துறைகளில் உள்ளவர்களுக்கும் மேன்மையான பலன்கள் உண்டாகும்.

மாணவ& மாணவியர்

கல்வியில் சற்று அதிக ஈடுபாடுடன் செயல்பட்டால் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். உடன் பழகும் மாணவர்களிடம் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தேவையற்ற அலைச்சல்களால் உடல் சோர்வு ஏற்படும். பயணங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது.

 

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் & 5,6,8,       நிறம் & பச்சை, வெள்ளை,    கிழமை & புதன், வெள்ளி

கல் & மரகதம்    திசை & வடக்கு               தெய்வம் & விஷ்ணு

No comments: