Saturday, January 2, 2021

புத்தாண்டு பலன் - 2021 - விருச்சிகம்

 

புத்தாண்டு பலன் & 2021 - விருச்சிகம்

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

 

விருச்சிகம் விசாகம் 4&ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

பார்ப்பதற்கு வெகுளி போல் இருந்தாலும் எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். வரும் 2021&ஆம் ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3&ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். எதிலும் தெம்புடன் செயல்பட்டு வாழ்வில் முன்னேறுவீர்கள். எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். எல்லா வகையிலும் நற்பலன்களை அடைவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கடந்த கால கடன்கள் குறைந்து மனநிம்மதி ஏற்படும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கொடுக்கல்& வாங்கல் சரளமாக இருக்கும். சிலருக்கு பூமி மனை வாங்க கூடிய வாய்ப்பும் அமையும்.

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபங்கள் கிடைக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலையும் அபிவிருத்தி செய்வீர்கள். கூட்டாளிகளிடம் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். உடன் பணிபுரிபவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு மறையும். கடந்த கால வேலைபளுகள் குறைந்து நிம்மதியுடன் பணி புரிய முடியும். வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து மன மகிழ்ச்சி ஏற்படும்.

இவ்வாண்டு சர்ப்ப கிரகமான கேது ஜென்ம ராசியிலும், ராகு 7&லும் சஞ்சரிப்பதால் கணவன்& மனைவியிடையே உண்டாக கூடிய தேவையற்ற வாக்கு வாதங்களால் குடும்பத்தில் நிம்மதி குறைவு உண்டாகும். முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. அதிலும் குறிப்பாக புது மன தம்பதியர்கள் ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து செல்வது, பெற்றோர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. ஆன்மீக, தெய்வீக காரியங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள்.

குருபகவான் இவ்வாண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு 3, 4&ல் சஞ்சரிக்க இருப்பது அவ்வளவு சிறப்பான அமைப்பு என கூற முடியாது. பண வரவுகள் சாதகமாக இருந்தாலும் ஆடம்பரத்தை சற்று குறைத்து கொள்வது நல்லது. குரு உங்கள் ராசிக்கு 7&ஆம் வீட்டை பார்ப்பார் என்பதால் திருமண வயதை அடைந்தவர்களுக்கு சிறுசிறு தடைகளுடன் சுப காரியங்கள் கைகூடும். அழகான புத்திர பாக்கியம் கிட்டும். குரு சஞ்சாரம் சற்று சாதகமற்று இருந்தாலும் உங்கள் ராசியாதிபதி செவ்வாய்க்கு குரு நட்பு கிரகம் என்பதாலும் சனி உங்கள் ராசிக்கு 3&ல் வலுவாக சஞ்சரிப்பதாலும் எந்தவித நெருக்கடிகளையும் சமாளித்து ஏற்றம் பெற கூடிய ஆற்றல் உண்டாகும்.

 

உடல் ஆரோக்கியம்

சனி பகவான் 3&ஆம் வீட்டில் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் உங்கள் மனநிலையும், உடல் நிலையும் மிகச் சிறப்பாக இருக்கும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஜென்ம ராசியில் கேது, 7&ல் ராகு சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது, உணர்ச்சிவசபடாமல் இருப்பது நல்லது. கடந்த காலங்களில் குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் மற்றும் மருத்துவச் செலவுகள் குறைந்து நிம்மதி நிலவும்.

குடும்பம் பொருளாதார நிலை

சனி 3&ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருக்கும். எல்லா தேவைகளும் தடையின்றிப் பூர்த்தியாகும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. குடும்பத்தில் கணவன்& மனைவியிடையே விட்டு கொடுத்து சென்றால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சிறுசிறு தடைக்கு பின்பு நல்லது நடக்கும். உங்களைப் புரிந்து கொள்ளாமல் விலகிச் சென்றவர்கள் கூட தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். சிலருக்கு பூமி, மனை, வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும்.

கொடுக்கல்& வாங்கல்

இந்த ஆண்டில் குரு பகவான் சற்று சாதகமற்று சஞ்சரித்தாலும், சனி 3&ல் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்& வாங்கல் சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல வருமானம் கிட்டும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபகரமான பலனை அடைய முடியும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்ததைவிட இரட்டிப்பு லாபத்தை அடைய முடியும். போட்டி, பொறாமைகள் மற்றும் மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் மறைவதால் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சொன்ன நேரத்திற்கு ஆர்டர்களையும் சப்ளை செய்வதால் மேலும் மேலும் முன்னேற்றங்களைப் பெற முடியும். புதிய இடங்களில் கிளைகள் நிறுவும் நோக்கங்களும் நிறைவேறும். கூட்டாளிகளை சற்று அனுசரித்து சென்றால் அவர்களின் ஆதரவுகள் உங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் உயர்வடையக் கூடிய காலம் என்று சொன்னால் அது மிகையாகாது. சனி 3&ல் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்க்கும் கௌரவப் பதவிகளும் ஊதிய உயர்வுகளும் தேடி வரும். எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளிடம் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். உங்களிடமுள்ள திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் அமையும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகள் சிறப்பாக அமையும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வது, நேரத்திற்கு உணவு உட்கொள்வது நல்லது. குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் கைகூட நெருங்கியவர்களே தடையாக இருப்பார்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி உண்டாகும். எடுக்கும் காரியங்களை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். நவீன பொருட்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். பணிபுரியக் கூடிய பெண்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும்.

அரசியல்

அரசியல்வாதிகளுக்கு இந்த ஆண்டு ஒரு பொற்காலம் என்று சொன்னால் அது மிகையாகாது. உங்களின் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். மக்கள் செல்வாக்கிற்கு காரகனான சனியே 3&ல் பலமாக சஞ்சரிப்பதால் மக்களின் அமோக ஆதரவும் உங்கள் பக்கமே இருக்கும். மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஆற்றலும் மறைமுக எதிர்ப்புகளை வெல்லும் வலிமையும் உண்டாகும்.

விவசாயிகள்

விவசாயிகளுக்கு மகசூல் சிறப்பாக இருக்கும். நெல் முதல் தானியங்கள் வரை, காய் முதல் பழ வகைகள் வரை சிறப்பான விளைச்சல்களால் சந்தையில் விளைபொருளுக்கேற்ற விலையை பெற முடியும். பொருளாதார நிலையும் மேன்மையடையும். வங்கிக் கடன் பெற்றவர்களுக்கு எதிர்பாராத தன சேர்க்கையால் கடன்களில்லாத கண்ணிய வாழ்க்கை அமையும். பங்காளிகளிடம் உள்ள பிரச்சினைகள் எல்லாம் விலகி நிம்மதி ஏற்படும்.

கலைஞர்கள்

கலைஞர்களுக்கு இந்த ஆண்டு தொட்டதெல்லாம் துலங்கும். நினைத்த கதாபாத்திங்களில் நடிக்க முடியும். உங்களின் திறமைகளுக்கு நல்ல தீனி கிடைப்பதால் ரசிகர்களின் ஆதரவும் பெருகும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் சுகவாழ்வு சொகுசு வாழ்வுக்கு பஞ்சம் இருக்காது. புதிய கார் பங்களா போன்றவற்றையும் வாங்கிக் சேர்ப்பீர்கள்.

மாணவ மாணவியர்

மாணவ& மாணவியர்களின் கல்வித் திறன் மேலோங்கும். நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களுக்குப் பெருமை சேர்ப்பீர்கள். பள்ளி கல்லூரிகளுக்கும் உங்களால் பெருமை ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தேடி வரும். பெரிய மனிதர்களின் ஆதரவும் கிட்டும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டிச் செல்வீர்கள்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் & 1,2,3,9 நிறம் & ஆழ்சிவப்பு, மஞ்சள்,      கிழமை & செவ்வாய், வியாழன்

கல் & பவளம்,          திசை & தெற்கு         தெய்வம் & முருகன்

No comments: