Rasi palangal

Saturday, January 2, 2021

புத்தாண்டு பலன் - 2021 - கன்னி

 

புத்தாண்டு பலன் & 2021 - கன்னி

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

 

கன்னி உத்திரம் 2,3,4&ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2&ஆம் பாதங்கள்.

சூழ்நிலைக்குத் தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளக்கூடிய நற்பண்புகளைக் கொண்ட கன்னி ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சர்ப்ப கிரகமான கேது உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3&ல் சஞ்சாரம் செய்வதும், உங்கள் ராசியாதிபதி புதனுக்கு நட்பு கிரகமான சனி பஞ்சம ஸ்தானமான 5&ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பாகும். இதனால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிட்டும். அதுமட்டுமின்றி ஆண்டு கோளான குரு பகவான் வரும் 06&04&2021 வரை மற்றும் 14&09&2021 முதல் 20&11&2021 வரை உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5&ல் சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பான அமைப்பாகும். பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களும் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். கடந்த கால மருத்துவ செலவுகள் குறைந்து நிம்மதி ஏற்படும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாகும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். திருமண சுபகாரியங்கள் தடபுடலாக கைகூடும். கணவன்& மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். அசையா சொத்துகள் வாங்க வேண்டும் என்ற பல நாள் கனவுகளும் நிறைவேறும். பணம் கொடுக்கல்& வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள். 

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து நல்ல முன்னேற்றமான நிலை உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் தொழிலாளர்களின் ஆதரவும் மென்மேலும் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள உதவும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவுகளால் பதவி உயர்வுகள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். ராகு 9&ல் சஞ்சரிப்பதால் வெளியூர் மூலம் அனுகூலங்கள் அடையும் வாய்ப்பு உண்டாகும்.

ஆண்டின் தொடக்கத்தில் பொன்னவன் என போற்றக்கூடிய குருபகவான் சாதகமாக சஞ்சரித்தாலும் வரும் 06&04&2021 முதல் 14&09&2021 வரை மற்றும் 20&11&2021 முதல் உங்கள் ராசிக்கு 6&ல் சஞ்சரிக்க இருப்பதால் இக்காலங்களில் பண விஷயத்தில் சற்று சிக்கனத்துடன் இருப்பது, எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உடன் இருப்பவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் எதையும் எதிர் கொண்டு வளமான பலன்களை அடைய முடியும். குரு சஞ்சாரம் சற்று சாதகமற்று இருந்தாலும் சனி, கேது உங்கள் ராசிக்கு சாதகமாக சஞ்சரிப்பதால் எதையும் எதிர் கொண்டு வலமான பலன்களை பெறும் இனிய ஆண்டாக இவ்வாண்டு இருக்கும்.

 

உடல் ஆரோக்கியம்

உங்களின் உடல் ஆரோக்கியமானது அற்புதமாக இருக்கும். எடுக்கும் எந்தவொரு காரியத்தையும் மிகவும் சுறுசுறுப்பாக செய்து முடிக்க முடியும். கடந்த கால பிரச்சினைகள் குறைந்து நிம்மதியான நிலை ஏற்படும். தேவையற்ற அலைச்சல்கள் சில ஏற்பட்டாலும் அதன் மூலம் நன்மையான பலன்கள் கிடைக்கும். தூர பயணங்களால் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

குடும்பம் பொருளாதார நிலை

பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சிலருக்கு அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கணவன்& மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர பாக்கியம் அமையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கடன்கள் படிப்படியாக குறையும். கடந்த கால அலைச்சல்கள் குறைந்து மன நிம்மதி ஏற்படும்.

கொடுக்கல்& வாங்கல்

கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்பவர்கள் மேன்மையான பலன்களை அடைய முடியும். பணம் கொடுக்கல்& வாங்கல்களில் எந்த பிரச்சினையும் இருக்காது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும் என்றாலும் வரும் 06&04&2021 முதல் 14&09&2021 வரை குரு அதிசாரமாக 6&ல் சஞ்சரிக்கும் காலத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் ஆதரவாக செயல்படுவதால் பல வகையிலும் லாபங்களை பெற முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் அனுகூலமானப் பலன்கள் கிடைக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பானது சிறப்பாக இருப்பதால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் பணியில் திருப்திகரமாக செயல்பட முடியும். வேலைபளு குறைவாக இருக்கும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். உயரதிகாரிகளின் ஆதரவுகளால் கௌரவமான பதவிகள் கிடைக்கும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வானது ஆண்டின் தொடக்கத்திலேயே கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு கிட்டும்.

பெண்கள்

எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் சிறப்பான வெற்றியினை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். கணவன்& மனைவி ஒற்றுமை பலப்படும். சுபகாரியங்களுக்கான முயற்சிகள் கைகூடும். நெருங்கியவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். பணிபுரியும் பெண்களுக்கு உயர்வுகள் உண்டாகும்.

அரசியல்

அரசியல்வாதிகளின் செல்வம், செல்வாக்கு பெயர், புகழ், யாவும் உயரக்கூடிய காலமாக இருக்கும். மக்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். உடனிருப்பவர்கள் மிகவும் ஆதரவாக செயல்படுவார்கள். கட்சியின் வளர்ச்சிக்காக நிறைய பயணங்களை மேற்கொள்ள நேரிடும். எதிர்பார்க்கும் பதவிகளும் தேடி வரும். மறைமுக வருவாய் அதிகரிப்பதால் பொருளாதார நிலை உயரும். 

விவசாயிகள்

பயிர் விளைச்சல்கள் சிறப்பாக இருப்பதால் சந்தையில் விளைப் பொருளுக்கேற்ற விலைப் பெற்று லாபம் உண்டாகும். பட்டபாட்டிற்கான பலனை தடையின்றி பெற முடியும். அரசு வழியில் எதிர்பாராத மானிய உதவிகள் கிடைக்கும். அசையா சொத்து விஷயங்களில் இருந்த தேவையற்ற வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். புதிய நவீன முறைகளை கையாண்டு விளைச்சலை பெருக்கும் ஆற்றல் உண்டாகும்.

கலைஞர்கள்

கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். வரவேண்டிய பணவரவுகளில் சற்று இழுபறி நிலை இருந்தாலும் வரவேண்டிய நேரத்தில் வந்து சேரும். இசை, நாடகம் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கும் மேன்மை ஏற்படும். புதிய கார் பங்களா போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். மறைமுக எதிர்ப்புகள், போட்டிகள் யாவும் மறையும்.

மாணவ& மாணவியர்

கல்வி பயிலுபவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிட்டும். கல்வியில் நல்ல முன்னேற்றமான நிலை இருக்கும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் வெற்றி மேல் வெற்றியினை பெற முடியும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளை வெல்வீர்கள். நல்ல நண்பர்களின் சகவாசத்தால் அனுகூலமான பலன்களைப் பெற முடியும்.

 

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் & 5,6,7,8            நிறம் & பச்சை, நீலம்   கிழமை & புதன், சனி

கல் &  மரகத பச்சை   திசை & வடக்கு        தெய்வம் & ஸ்ரீவிஷ்ணு

No comments: